முன்செல்பவர்
மரகதம் காரின் வேகத்தை அதிகப்படுத்த முயன்றாள். இருபது நிமிடத்தில் போக வேண்டிய தொலைவு. நாற்பது நிமிடங்கள் ஆகி விட்டது. இன்னும் பாதித் தூரம் கூடத் தாண்ட முடியவில்லை. முன்னால் சென்ற வண்டி மேலும் மெதுவாகி விட்டதுப் போல் தோன்றியது. அடுத்த பத்திக்கு மாறினாள். வேறு ஒருவன் அவளுக்கு முன்னே வந்து மெதுவாகச் செல்ல ஆரம்பித்தான்.

"இவனுக்கு என்ன வந்தது? மெதுவாகச் செல்வதற்கு என்று தானே முதல் பத்தி இருக்கிறது? இங்கே வந்து ஏன் மெதுவாகச் செல்ல வேண்டும்?"

மீண்டும் பழைய பத்திக்கே வந்தாள். முன்னால் செல்பவன் மீது எரிச்சல் வந்தது.

"நகர்ந்து தொலைத்தால் என்ன?" மரகதம் முணுமுணுத்தாள்.

பக்கத்தில் இருந்த அரசி பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தாள்.

"மரகதம், இந்த பாட்டு நன்றாக இருக்கிறது இல்லையா? நீ இந்த படம் பார்த்திருக்கிறாயா?"

ஏதோ வானொலியில் வந்து கொண்டிருந்த பாட்டைப் பற்றி கேட்டாள். மரகதம் அசிரத்தையாக "ம்" கொட்டினாள்.

ஒரு நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து மற்றொரு நெடுஞ்சாலைக்கு வந்தார்கள். ஒருவன் வேகமாக வந்து முன்னே நுழைந்து அடுத்த புறமாக வெளியே வந்து அதற்கடுத்த பத்திக்குத் தாவிக் கொண்டி ருந்தான்.

"என்ன அவசரம் இவனுக்கு? கொஞ்சம் பார்த்துத் தான் போனால் என்ன? உயிர் மேல் ஆசை இல்லை போல் இருக்கிறது."

"மரகதம், மெதுவாப் போனால், கட்டை வண்டி மாதிரி போகிறான் என்று எரிச்சற் படுகிறாய். வேகமாப் போனால், மெதுவாகப் போகவில்லை என்று திட்டுகிறாய். மற்றவர்கள் எப்படித்தான் போக வேண்டும்?"

"அவர்கள் ஏன் எனக்கு முன்னால் போய்க் கொண்டு இருக்கிறார்கள்? எனக்கு பின்னால் வரச்சொல். அப்புறம் பிரச்சனையே கிடையாது!" மரகதம் தீர்மானமாகச் சொன்னாள். இருவரும் சிரித்தார்கள்.

மாலை திரும்பும் பொழுது அரசி வண்டி ஓட்டினாள். மரகதம் அருகில் அமர்ந்து இருந்தாள். கிளம்பும் பொழுதே மரகதம் அரசிக்குக் கட்டளை இடப் பார்த்தாள்.

"இதோ பார். நீ முன்னாடி போறவங்களைத் திட்டக் கூடாது. வேண்டுமானால் பின்னாடி வரவங்களைத் திட்டிக் கொள். நமக்கு முன்னால் போறவங்களே திட்டு வாங்கிக் கொண்டிருக் காங்க. எனக்கு பாவமா இருக்கிறது."

அரசி பதில் ஒன்றும் சொல்லவில்லை. கொஞ்ச தூரம் போனார்கள். முன்னால் ஒரு தாத்தா கப்பல் போன்ற ஒரு காரை மிகவும் மெதுவாக ஓட்டிக் கொண்டு சென்று கொண்டிருந்தார்.

"தாத்தாவுக்கு பொழுது போகவில்லை. ஊர்வலம் போல் மெதுவாகப் போகிறார். நான் அடுத்த பத்திக்கு மாறிக் கொள்கிறேன்" என்றாள் அரசி.

"நம்மோட தீர்மானம் என்ன ஆச்சு? முன்னாடி போறவங்களை திட்டக் கூடாதுனு சொன்னது மறந்து போச்சா?" என்றாள் மரகதம்.

"சரியாப் போச்சு! முன்னாடி போறவங்க தானே நேராக் கண்ணுல படராங்க! பின்னாடி வரவங்களை நான் எட்டி எட்டிக் கண்ணாடியில பார்த்தா குத்தம் சொல்ல முடியும்?"

அரசியின் கேள்வியில் நியாயம் இருந்தது. முன்னால் போகிறவர்களைத் திட்டுவதில்லை என்று முடிவாகியது. பின்னால் வருகிறவர்களைத் திட்டுவது சுலபமாக இல்லை.

இனி பக்கத்தில் வருபவர்களைத் திட்டுவது என்று ஒற்றுமையாக ஓட்டுப் போட்டார்கள்.

வலது பக்கத்தில் ஒருவன் சிவப்புக் காரில் ஜன்னல்களைத் திறந்து வைத்துக் கொண்டு மிகவும் சத்தமாக வானொலியை அலர விட்டுக் கொண்டு போனான். அவன் வேகமாக நகர,

அவனைத் திட்டிக் கொண்டே பின்னால் ஒரு பச்சைக் கார்க்காரன் சென்று கொண்டிருந் தான்.

சிவப்புக் கார்க்காரன் ஏற்கனவே திட்டு வாங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் தோழிகள் இருவரும் சிரித்தார்கள்.

பாகிரதி சேஷப்பன்

© TamilOnline.com