இசை எல்லோர்க்கும் பொதுவானது தானே!
‘நெய்வேலி நாராயணனனின் தனித்துவமான பாணி அதி அற்புதமாக அமைந்திருக்கிறது. கைதேர்ந்த பக்கவாத்தியக் கலைஞராகத் திகழ்கிறார். இவருடைய வாசிப்பிலிருந்து மிக உயர்ந்த தரமான இசை எழும்புகிறது. தேர்ந்த நயத்தையும் தரமான லயத்தையும் கற்பனா சக்திக்கூடாக இவர் எழுப்பி சொக்க வைக்கிறார்.

பாடகர்களோடு ஒத்து ஆழ்ந்த ஈடுபாட்டோடு வாசிக்கிற அதே சமயத்தில் தனது தனித் துவத்தையும் இழந்து விடாமல் காப்பாற்றி வருகிறார். தாளத்தைக் குலைக்காமல் ரசிகர் களைக் கட்டிப் போடுகிற வித்தை இவருக்குக் கைவந்திருக்கிறது. பாடகர் ஒருவர் பக்க வாத்தியக்காரரிடமிருந்து என்ன எதிர்பார்க் கிறாரோ? அதைவிட ஒருபடி மேலாகச் சரியாக வெளிப்படுத்தி பாடகர்களுக்குத் துணை புரிகிறார் நெய்வேலி நாராயணன்" என்று பிரபல நாளிதழனான இந்து பத்திரிகை பாராட்டும் நெய்வேலி ஆர்.நாராயணன் தற்போது கர்நாடக இசையுலகில் குறிப்பிடத்தகுந்த ஒருவர்.

நெய்வேலியைச் சொந்த ஊராகக் கொண்ட இவர் ஏழு வயதிலேயே மிருதங்கத்தைக் கையிலெடுத்தவர். எஸ்.கே.கணேஷப் பிள்ளை இவரின் ஆரம்ப கால இசையார்வத்துக்கு நீரூற்றி முதல் குருவாகத் திகழ்ந்தவர். நெய்வேலி ஆர். நாராயணன் தன்னுடைய பதினோராவது வயதில் பரவலாக கச்சேரிகள் செய்ய ஆரம்பித்து விட்டார்.

தஞ்சாவூர் உபேந்திரனிடம் இவர் பெற்ற குருகுல வாசம் இன்றளவும் இவருக்குக் கைகொடுத்து வருவதாகக் குறிப்பிடுகிறார். உபேந்திரரின் மறைவு வரைக்கும் அவருடனே இருந்து மிருதங்கத்தின் அத்தனை நுணுக்கங் களையும் கற்றுக் கொண்டார். தஞ்சாவூர் பாணி மிருதங்க வாசிப்பை குரு உபேந்திரனிடமிருந்து கற்றுக் கொண்டார்.

தனியாக வாசிக்கப் போதுமான புலமை யிருந்தும், 'கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு' என்கிறதன்படி மீண்டும் குருவை நாடிப் போனார்.

உமையாள்புரம் K.சிவராமனிடம் மாணவனா கச் சேர்ந்து இன்றளவும் அதைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். உமையாள்புரத்தின் பாணி நாராயணனிடமும் வந்து ஒட்டிக் கொண்டதாக விமர்சகர்கள் பலரும் பாராட்டியதைப் பெருமை யாகச் சொல்கிறார் நெய்வேலி ஆர்.நாராயணன்.

கர்நாடக இசையுலகில் பெயர் பெற்ற பாடகர்கள் பெரும்பாலானவர்களுக்கு இவர் பக்கவாத்தியக் கலைஞராகத் துணை யிருந்திருக்கிறார். மதுரை டி.என்.சேஷ கோபாலன், டி.வி.சங்கரநாராயணன், டி.ஆர். சுப்பிரமணியன், கே.வி.நாராயணசாமி, திருச்சூர் வி.ராமச்சந்திரன், ஓ.எஸ்.தியாகராஜன், மாண்டலின் ஸ்ரீநிவாஸ், என்.ரமணி... எனப் பலருக்கு இவர் மிருதங்கம் வாசித்ததைச் சுட்டிக் காட்டலாம்.

சங்கீதா, எச்.எம்.வி, ஏ.வி.எம் மியூசிக் வேர்ல்ட் போன்ற நிறுவனங்கள் தயாரித்து வெளியிட்ட ஒலிப் பேழைகளிலும் இவருடைய பங்கு இருந்திருக்கிறது. இந்தியாவின் முதன்மையான சபாக்கள் பலவற்றிலும் இவரின் மிருதங்க இசை ஒலித்திருக்கிறது.

அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், இலண்டன், ஜெர்மனி, துபாய், மஸ்கட், மலேசியா, சுவிட்சர்லாந்து, ஹாலந்து, ஹாங்காங் போன்ற நாடுகளுக்கும் பயணம் செய்து அங்குள்ள ரசிகர்களைத் தன்னுடைய மிருதங்க இசை மழையால் நனைத்துள்ளார்.

தேசிய மற்றும் உலக இசைவிழாக்கள் பலவற்றிலும் பங்கு பெற்றுள்ளார். Festival of Asia (Londan), National arts council (Singapore) ஆகியவற்றை இவர் கலந்து கொண்டதினுள் குறிப்பிட்ட நிகழ்ச்சியாகச் சொல்லலாம். ஆல் இண்டிய ரேடியோ மற்றும் தனியார் தொலைக் காட்சிகள் பலவற்றிலும் பங்கு பெற்று நிகழ்ச்சிகள் பல வழங்கியுள்ளார்.

'Award for excelence' (1995) விருதை மஹாராஜபுரம் விஸ்வநாத ஐயர் டிரஸ்டிடம் இருந்து பெற்றுள்ளார். 'Best mridangam player' (1995) விருதை மியூசிக் அகாதெமியிட மிருந்தும் 'யுவகலாபாரதி'(1997) விருதை பாரத் கலாச்சார் தியாக பிரம்ம கான சபாவிடமிருந்தும் பெற்றுள்ளார்.

தற்போது இளம் இசையார்வலர்களுக்குப் பயன்தரக்கூடிய வகையில் இசைப் பள்ளி ஒன்றை நடத்தத் திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வரும் நெய்வேலி ஆர்.நாராயணன் தென்றலுக்கு அளித்த பேட்டி...

நீங்கள் இந்தத் துறைக்கு வந்தது பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்...?

எனக்குச் சொந்த ஊர் நெய்வேலி. அப்பாவும் அம்மாவும் என்.எல்.சியில் வேலை பார்த்தார்கள். நானும்கூட கல்லூரிப் படிப்பை முடித்தபிறகு நான்கு மாதங்கள் என்.எல்.சியில் வேலை பார்த்தவன்தான். எங்கள் வீட்டில் நான் தான் இசைத் துறைக்கு முதன்முதலாக வந்தவன். சின்ன வயதிலேயே இசை கேட்பதில் விருப்பம் உண்டு. இசையைக் கேட்டுவிட்டு அதை என் போக்கில் விமர்சித்துப் புரிந்து கொள்வேன். அப்போது நெய்வேலி சங்கீத சபாவினுடைய செயலாளராக என் அப்பா இருந்ததால், அடிக்கடி நிகழ்ச்சிகள் பார்க்கப் போவேன். சென்னையிலிருந்து பெரிய ஆட்களெல்லாம் வந்து கச்சேரிகள் செய்வதைப் பார்க்கும் போது நாமும் ஒருநாள் இது போல் ஆகவேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக் கொள்வேன்.

அப்போது எனக்கு ஏழு வயதிருக்கும். எஸ்.கே. கணேஷன் அவர்களிடம் மாணாக்கனாகச் சேர்ந்தேன். என்னுடைய முதல் குரு அவர்தான். அவரிடமிருந்து மிருதங்கத்தின் பாலபாடங் களைக் கற்றுத் தந்து மிருதங்கத்தின் அத்தனை நுணுக்கங்களையும் கற்றுத் தந்தார்.

நான் ஒன்பதாவது படிக்கும் போது திருவை யாறு தியாகராஜ சுவாமிகள் உற்சவத்தில் கலந்து கொள்ளச் சென்றேன். அந்த உற்சவம்தான் என்னுடைய வாழ்வில் திருப்பு முனையாக அமைந்தது. அந்த உற்சவத்தில் என்னுடைய மற்றொரு குருவான தஞ்சாவூர் உபேந்திரன் என்னை வாசிக்கச் சொன்னார். நான் வாசிக்கத் தயங்கினேன். உபேந்திரன் உன்னால் முடியும் என்று சொல்லி என்னை வாசிக்கச் சொல்லி வற்புறுத்தியதால், நானும் வாசித்தேன். எனது வாசிப்புக்கு பெரியவர்களின் ஆசிர்வாதங்களும் வரவேற்பும் கிடைத்தது. அதற்கு முன்னரே நான் மேடையேறி யிருந்தாலும், முதன்முதலில் வெளியூரில் மேடை யேறியது அப்போதுதான்.

நான் அந்த உற்சவத்தில் வாசித்ததைக் கேட்டு விட்டு உபேந்திரன் என்னை சென்னைக்கு வரச் சொல்லி, மிருதங்கத்தை இன்னும் கற்றுக் கொண்டு தொழிலாக மாற்றிக் கொள்ளச் சொன்னார். அவரின் தூண்டுதலின்படி நான் பட்ட மேற்படிப்புக்காகச் சென்னை வந்தேன். வேறு கல்லூரிகளில் சேர்ந்தால் தினந்தோறும் வகுப்புக்குப் போக வேண்டும் என்பதால், வருகைப் பதிவேட்டுப் பிரச்சனைகளில்லாத மாநிலக் கல்லூரியில் சேர்ந்தேன். உபேந்திரன் சாரிடம் குருகுலவாசம் இருந்து மிருதங்கம் கற்றுக் கொண்டேன்.

குருகுல வாசம் என்றால் நீங்கள் நினைக் கிறபடி அந்தக் காலத்தைப் போல, துணி யெல்லாம் துவைத்துப் போடுவது போன்றதல்ல! என்னை அவர் மிகவும் கௌரவமாக நடத்தினார். அவருக்கு வேண்டிய வேலைகளைச் செய்து தந்து கொண்டு, அவர் வீட்டிலேயே சாப்பிட்டு, அவருடன் வெளியூர் கச்சேரிகளுக்குப் பயணம் செய்து... என நான் அவருடன் வாழ்ந்தேன் என்றுகூடச் சொல்லலாம்.

1990-இல் அவர் எங்களை விட்டு மறைந்தார். எனக்கு இது பேரிழப்பாக இருந்தது. அதற்கடுத்து திருச்சி வானொலி, சென்னை வானொலி முதலியவற்றில் வாசிக்க ஆரம் பித்தேன். 'ஏ கிரேடு ஆர்டிஸ்டாக' என்னை அங்கீகரித்தார்கள்.

உமையாள்புரம் சிவராமன் சார் என்றால் எனக்கு உயிர் என்றுதான் சொல்ல வேண்டும். அவரிடம் மாணவனாகச் சேர வேண்டும் என்பது என்னுடைய நீண்ட கால ஆசையாக இருந்தது. ஒருநாளாவது அவரின் மாணாக்கனாக இருந்து விட வேண்டும் என்று கனவுகள் கண்டு கொண்டிருந்தேன். ஒருமுறை அவரைச் சந்தித்த போது என்னுடைய ஆசையை வெளிப்படுத்தினேன். அவரும் மனமகிழ்ந்து என்னை தன்னுடைய சிஷ்யனாக ஏற்றுக் கொண்டு இப்போது வரை எனக்கு அத்தனை நுணுக்கங்களையும் கற்பித்து வருகிறார்.

வெளிநாட்டுப் பயணங்களை எப்போதிருந்து மேற்கொள்ள ஆரம்பித்தீர்கள்?

சரியாகச் சொல்வதென்றால், 1992-இலிருந்து என்பதைச் சொல்ல வேண்டும். முதன் முதலில் பெரியவர் மதுரை டி.என்.சேஷகோபால் அவர்களுடன் அமெரிக்கா சென்றேன். அங்கு எனக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. அப்புறம் எல்லோரும் கூப்பிட ஆரம்பித்தார்கள். வெளிநாடுகளில் வாசிப்பது சுவையான அனுபவம். தனி ஆவர்த்தனைகளின் போது அவர்கள் காட்டுகின்ற உற்சாகம் என்னைப் பலமுறை மெய்சிலிருக்க வைத்திருக்கிறது. இன்றுவரை பயணம் செய்து கொண்டேயிருக்கிறேன்.

இவ்வளவு பிரபலமானவர்களாக இருந்தும் ஏன் சினிமாவில் நீங்கள் வாசிக்கவில்லை?

உண்மை என்னவென்றால் யாரும் கூப்பிட வில்லை என்பதுதான். தற்போது சினிமாவைப் பொருத்தவரை மிருதங்கத்தை குறைவாகத்தான் பயன்படுத்துகிறார்கள். பயன்படுத்தினாலும் இரண்டு நிமிடங்கள்தான் பயன்படுத்துகிறார்கள். இரண்டு நிமிடத்திற்காக அவர்கள் வெளி யிலிருந்து யாரையும் அழைக்கத் தயாராக யில்லை. ஏற்கனவே அதற்கென்று ஆட்கள் வைத்திருக்கிறார்கள். அவர்களைக் கொண்டே முடித்துக் கொள்கிறார்கள். மேலும் தபேலா, டிரம்ஸ் வாசிப்பவர்களைக் கொண்டுகூட மிருதங்கத்தை வாசிக்கச் சொல்லி விடு கிறார்கள். இல்லை இருக்கவே இருக்கிறது கீபோர்டு.

அப்படியானால் சினிமாவில் வாசிக்கப் போவதில்லை...?

அப்படிச் சொல்லவில்லை. இருக்கிற நிலை மையைச் சொன்னேன். கூப்பிட்டால் வாசிப் பேன். மிருதங்கம் வாசிப்பதையே தொழிலாகக் கொண்டுள்ள எனக்கு யார் கூப்பிட்டால் என்ன? வாசிக்கத்தான் செய்யப் போகிறேன். தொழில் என்று வந்து விட்டு அதையெல்லாம் பார்க்க முடியாது. நல்ல வாய்ப்பு வரும்போது வாசிப்பதில் என்ன தவறிருக்கப் போகிறது?

இப்போதுகூட தொடர்ந்து ஒவ்வொரு நவ ராத்திரி விழாவின் போதும் இளையராஜா அவர்களின் வீட்டில் நடக்கும் கச்சேரியில் வாசித்துக் கொண்டுதானிருக்கின்றேன். அத னால் சினிமா இசைக்கு நான் எதிரி இல்லை.

பெரும்பாலும் பக்க வாத்தியக் காரர்களுக்கு மீடியாவில் பாப்புலாரிட்டி கிடைப்பதில்லை என்பது பற்றி...?

ஏன் நீங்கள் இப்போது வந்து பேட்டி எடுக்கவில்லையா? விவரம் தெரிந்தவர்கள் தேடி வந்து கொண்டுதான் இருக்கின்றனர். பாடு கிறவர்களுக்கே தெரியும் பக்கவாத்தியக் காரர்களின் துணை எவ்வளவு அவசியமென்று. சிவராமன் சாரையே எடுத்துக் கொள்ளுங் களேன், அவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அவர் வாசிக்கிறார் என்றால், யார் பாடுகிறார்கள் என்பதைப் பார்க்காமலே வருவதற்கு ஒருகூட்டம் இருக்கத்தான் செய் கிறது.

விவரம் தெரிந்தவர்கள் ஒரு கேசட் வாங்கினால் அதை உடனடியாகத் திருப்பிப் பார்த்து யாரெல்லாம் பக்கவாத்தியம் வாசித்திருக் கிறார்கள் என்பதைப் பார்ப்பார்கள். நீங்கள் சொல்வதில் உண்மையும் இருக்கத்தான் செய்கிறது. இருந்தாலும் இதெல்லாம் Part of the Game என்று எடுத்துக் கொண்டு போக வேண்டியதுதான்!

சில மூத்த கலைஞர்கள் இளைய கலைஞர்கள் சினிமா பிரவேசங் கள் குறித்துக் கடுமையான விமர்ச னங்களை முன்வைத்து வருகின்றனரே! அதைப் பற்றி...?

சினிமாவில் வாசிக்கப் போவதில் என்ன தப்பிருக்கிறது. முன்பெல்லாம் நிறைய பெரிய மனிதர்கள் சினிமாவில் வாசித்தனரே. இப்போது சினிமாத் துறையில் பங்கெடுத்துக் கொண் டிருப்பவர்கள், கர்நாடக சங்கீதக் கச்சேரிக்கு வந்தாலும் நன்றாகத்தான் பாடுகிறார்கள். அதையும் இதையும் போட்டு அவர்கள் குழப்புவதில்லை. நன்றாக உழைத்து சுத்தமான, குறையில்லாத கர்நாடக இசையைத்தான் தருகிறார்கள். அதனால் சினிமாவுக்குப் போவதால், கர்நாடக சாஸ்திரிய இசையின் தன்மைகள் நம்மிடமிருந்து தொலைந்து போகும் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. சினிமா என்பது தொழில். இசைக் கச்சேரிகள் என்பது ஆத்மார்த்தம். இரண்டுக்குமிடை யிலுள்ள இடைவெளியை இப்போ துள்ள கலைஞர்கள் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

விருதுகள் விஷயத் தில்கூட ஏகப்பட்ட சிபாரிசுகள், இழுத் தடிப்புகள் இருப்பதாகச் சில குற்றச்சாட்டுகள் வருகின் றனவே...?

இல்லை. இதைப் பற்றி எனக்குத் தெரியவில்லை. நான் இன்னும் பெரிய விருதுகளெல்லாம் வாங்க வில்லையென்பதால் இதைப் பற்றி இப்போதைக்கு என்னால் ஒன்றும் சொல்ல இயலாது. அப்படி நீங்கள் குறிப்பிடுகிறபடியாக எந்த அரசி யலும் இருக்காது என்று உறுதியாக நம்புகிறேன்.

கர்நாடக சங்கீதம் அதன் வரவேற்பை மெல்ல மெல்ல இழந்து கொண்டிருக்கிறது என்று சிலரும் சொல்லி வருகின்றனரே! அதைப் பற்றி...!

அது மிக மிக தவறான கருத்து. இப்போது முன்பைவிட நல்ல வரவேற்பிருக்கிறது. ஒரு எடுத்துக்காட்டுக்குச் சொல்வதென்றால், முழு நேர இசைக் கலைஞனான நான் கார், வீடு போன்ற வசதிகளோடு நன்றாகத்தான் இருந்து கொண்டிருக்கிறேன். நான் நன்றாகயிருக் கிறேன் என்று சொன்னால் என்ன அர்த்தம்? எனக்கு நிறையக் கச்சேரிகள் கிடைக்கிறது என்றுதானே அர்த்தம்.

நல்ல திறமையும் அதை மெருகேற்றத் தேவையான உழைப்பும் இருந்தால், இந்தத் துறையில் பிரகாசிக்கலாம். பொருளாதர ரீதியாகவும் மேம்படலாம். அதே மாதிரி நம்முடைய திறமையை வெளிக்காட்டுவது எப்படி என்பதும் தெரிந்திருக்க வேண்டும்.

மறக்க முடியாத கச்சேரிகள் என்னென்ன?

டி.என்.சேஷகோபால் அவர்களுடன் அமெரிக் கா சென்ற போது வாசித்த அத்தனை கச்சேரிகளும் மறக்க முடியாதவைகள். அங்கு நாலரை மணி நேரம் கச்சேரி நடக்கும். அவருக்கு வாசித்த போதுதான் மனதில் ஒரு தைரியமே வந்தது என்று சொல்லலாம்.

அவர் கச்சேரியில் என்ன பாடப் போகிறார் என்பதைப் பக்கவாத்தியக்காரர்களுக்குச் சொல்லவே மாட்டார். எனவே அவர் பாடுவதைக் கேட்டு விட்டு அதற்குத் தகுந்தாற்போல உடனடியாக On the Spot-இல் வாசிக்க வேண்டும். அப்படி வாசிக்க நல்ல தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அப்படி அவருக்கு நான் வாசித்த ஒவ்வொரு கச்சேரியும் எனக்கு ஒரு தேர்வு போலத்தான் இருந்தது. அது இன்றளவும் நான் நன்றாகச் செய்து கொண்டு வருவதற்கு, எனக்கு நல்ல அடித்தளத்தைப் போட்டுக் கொடுத்திருக்கிறது.

வகுப்புகள் எடுப்பது திருப்திகரமாக இருக்கிறதா?

இல்லாமலா போகும்? நிறையப் புதுமுகங் களைப் பார்க்கிறேன். அவர்களுடைய ஆர்வமும் இடைவிடாத முயற்சியும் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. அமெரிக்காவிலிருந்து கூட என்னிடம் படிப்பதற்கு மாணவர்கள் இங்கு வருகிறார்கள். நானும் அங்கு போய் அவர் களுக்குப் பாடம் எடுக்கிறேன். இங்கு ஒரு இசைப் பள்ளியை நடத்தலாமென்று திட்டமிட்டுள்ளேன். நிறைய இசைப் பள்ளிகள் இருக்கின்றன. இருந்தாலும் பெயர்பெற்ற ஒருவர் நடத்தும் போது பலர் ஆர்வமாக வந்து கலந்து கொள்வார்கள் என்பதனாலேயே நானும் துவக்குகிறேன். அதற்கான பணிகளில் தற்போது முழுமூச்சுடன் ஈடுபட்டு வருகிறேன்.

கர்நாடக இசை என்பது தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட வர்களின் கைகளிலேயே இருந்து வருகிறது! அதை மக்கள் மயப்படுத்த அவர்கள் விரும்புவதில்லை! என்பது போன்ற குற்றச்சாட்டுகள் பற்றி...?

தவறான குற்றச்சாட்டு இது. இப் போது எல்லோரும் கர்நாடக இசையைக் கற்று வருகிறார்கள். இசைக்கல்லூரியில் போய் நீங்கள் பார்த்தால் புரிந்து கொள்வீர்கள். எல்லா இன/மதத்தவர்களும் ஒருங் கிணைத்து படிக்கிறார்கள். இந்தத் துறைக்கு வர விரும்புவர்களுக்கு ஆர்வமும் உழைப்பும் மட்டும் இருந் தால் மட்டும் போதும். மற்றபடி எதுவும் தேவையில்லை.

ஆர்வமுள்ள மாணவர்கள் யாராகயிருந்தாலும், நீங்கள் கற்றுக் கொடுப் பீர்களா?

ஆர்வமுள்ள மாணவர்கள் யாராக யிருந்தாலும் அவர்களுக்கு நான் கற்றுக் கொடுக்கத் தயாராக இருக்கிறேன். அதற்காகத்தானே நான் ஆரம்பிக்கப் போகும் இசைப் பள்ளி இருக்கப் போகிறது.

இசையும் எல்லோருக்கும் பொது வானது தானே!

சந்திப்பு, படங்கள்: சரவணன்

© TamilOnline.com