எம்.வி. வெங்கட்ராம் (1920-2000)
''வாசகர்களையும் விமரிசகர்களையும் பற்றிச் சிறிதும் கவலைப்படாத இலக் கியப் படைப்பாளி நான். என்னைப் புரிந்து கொண்டு, நான் எங்கு இருக்கிறேன் என்பதைக் கண்டுபிடித்து, என் படைப்பு களைச் சுவைத்துப் போற்றுகிற ரசிகர் களை நான் போற்றுகிறேன். ஒரு லட்சம் பேர் கை தட்டியதால் என் இலக்கியப் பணி வளரவில்லை. ஒரு சில ரசிகர்களால் என் படைப்பாற்றல் வலுப்பெறுகிறது'' என திடமாகவே நம்பி வாழ்ந்து மறைந்தவர் தான் எழுத்தாளர் எம்.வி. வெங்கட்ராம்.

தமிழ் எழுத்தாளர்களான கு.பா. ராஜகோபாலன், தி. ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு இவர்களுடன் எம்.வி.வி. யும் உற்ற நண்பராய், இலக்கிய தேடல் மிக்கவராய் வெளிப்பட்டார். தொடர்ந்து மணிக்கொடி இதழில் இலக்கிய வேள்வியை நடத்தத் தொடங்கி தனது இறுதிக்காலம் வரை இலக்கியம் பற்றிய கரிசனையாகவே இருந்தார்.

பட்டு ஜவுளி வியாபாரம் செய்து செல்வந்தரான செளராஷ்டிர குடும்பத்தில் 18.5.1920 ல் பிறந்தவர் எம்.வி.வி. தனது மாணவப் பருவத்திலேயே இலக்கியத் தாகம் கொண்டு தன்னை பண்படுத்தி வெளிப் படுத்தத் தொடங்கினார்.

தான் எழுத்தாளார் ஆனவிதம் பற்றி எம்.வி.வி கூறும் போது ''எங்கள் குடும்பத்தில் படித்தவர்கள் யாரும் கிடையாது. நான் ஒருவன்தான் படித்தேன். பி.ஏ. பொருளா தாரம் கல்லூரியில் படித்தேன். வரலாறு எனக்கு விருப்பப்பாடமாக இருந்ததால் வரலாற்றில் சற்று ஆர்வம் வந்தது உண்மை. கதைகள் படிக்கிற ஆர்வம் முதலில் இருந்தது. அப்பொழுது பத்திரிகைள் எல்லாம் ரொம்பக் குறைவு. ஆனந்தவிகடன், கலைமகள், வினோதன் என்று எல்லாப் பத்திரிகைகளையும் நான் நிறையப் படிப் பேன். துப்பறியும் நாவல்கள் எல்லாம் படிப்பேன். படித்துப் படித்து 13, 14 வயதிலேயே நானும் இதைப்போல் எழுத வேண்டும் என்று ஆர்வம் தோன்றிற்று. அப்பதான் எழுதிப் பார்த்தேன். எழுதியதை எல்லாம் தெரிந்த பத்திரிகைகளுக்கு அனுப்புவேன். அவர்கள் திருப்பி அனுப்பு வார்கள். சமயத்தில் அனுப்ப மாட்டார்கள். இதுதான் நான் எழுத்தாளன் ஆன விதம்.''

இவர் எழுத்தின் மீது கொண்ட தீவிர வேட்கை காரணமாக வெற்றிகரமான ஒரு வியாபாரியாக இருக்க இயலவில்லை. ஆனால் எழுத்தையே நம்பி வாழும் வாழ்க்கைக்கு தன்னை தயார்ப்படுத்திக் கொண்டார். சுமார் இருநூறு புத்தகங்களுக்கு மேல் எழுதியிருக்கிறார்.

தேனி என்ற இலக்கியப் பத்திரிகையைத் தொடங்கி மணிக்கொடி மரபு உருவாக்கியது போல் பல புதிய எழுத்தாளர்களை தமிழுக்கு அறிமுகப்படுத்தினார். மெளனியின் சிறுகதை களை வெளியிட்டு மெளனியை தமிழ் இலக்கிய உலகில் இனம் காணவும் காரணமாக இருந்தவர் எம்.வி.வி.

1930 களுக்கு பின்னர் வெளிவந்த நவீன இலக்கியப் பயில்வுக்கான அனைத்து இதழ் களிலும் விடாது எழுதி வந்தார். 1939களில் 'நித்ய கன்னி', 1965 களில் 'அரும்பு', 1975களில் 'வேள்வித்தீ', 1980 களில் ‘ஒரு பெண் போராடுகிறாள்’ போன்ற நாவல்களை எழுதி நாவல் இலக்கியத்துக்கு புதுவளம் சேர்த்தார். இதில் ஒவ்வொரு நாவலும் ஒவ்வொருவிதமாக எழுதப்பட்டவை. ஒரே மாதிரியாக இருக்கக் கூடாது என்பதற்காக திட்டமிட்டு எழுதப் பட்டவை.

'வேள்வித்தீ' நாவல் செளராஷ்டிர சமூகத்தை முன் நிறுத்தி எழுதப்பட்டது. இந்த நாவல் தமிழுக்கு செளராஷ்டிர சமூகம் பற்றிய புலப் பதிவை இலக்கியமாக்கி உள்ளது.

பதினாறு வயதில் எழுத தொடங்கிய எம்.வி.வி. மனித வாழ்க்கையை ஒரு போராட்டமாகவே கருதி வந்தார். இந்த போராட்டங்களுக்கு இடையில் புதைந்து கிடக்கும் அமைதியை தேடுவதாகவே எம்.வி.வி. யின் இலக்கிய படைப்பு முயற்சிகள் அமைந்திருந்தது.

இவர் படைப்புமுயற்சிகளில் மட்டு மல்லாது பல மொழிபெயர்ப்பு நூல் களையும் தமிழுக்கு கொடுத்துள்ளார். குறிப்பாக ரஜினி பாமிதத்தின் 'India Today' என்ற நூலையும் தமிழில் மொழிபெயர்த் துள்ளார். மேலும் 'நேஷனல் புக் டிரஸ்ட்' நிறுவனத்துக்காகவும் பத்துக்கும் மேற் பட்ட நூல்களை மொழி பெயர்த் துள்ளார்.

எம்.வி.வி. க்கு திடீரென்று ஒரு காது கேட்கும் திறனை இழந்துவிட்டது. இவர் ஒரு காதுக்காரர். இந்நிலை பல்லாண்டு களாகவே இருந்தது. இந்த அனுபவம் அவருக்குள் இலக்கிய நயமும், தத்துவ ஆழமும், ஆன்மீகத் தேடலும் நிரம்பிய படைப்பாக 'காதுகள்' எனும் நாவலை எழுதும் திறனைக் கொடுத்தது. இந்த நாவலுக்கு 1993ம் ஆண்டுக்குரிய சாகித்திய அக்காதெமி பரிசு கிடைத்தது.

எம்.வி.வி. யின் நாவல்களாகட்டும், சிறுகதைகளாகட்டும் மனித மனங்களின் சூட்சுமமான உட்பகுதிகளை தொட்டுப் பார்க்கும் குணம் கொண்டது. இவர் மனித உணர்ச்சிகளை அப்படியே பதிவு செய்ப வரல்ல. மாறாக உணர்ச்சிகளை நின்று நிதானித்து தான் தொட்டுக் காட்ட விரும்பும் உணர்ச்சிகளின் ஏற்ற இறக்கத்துக்கேற்ப வாசகரை அழைக்கும் தன்மையும் நிதானமும், ஆத்மத் தேடலும் கொண்டது. இதுவே இவரிடம் இலக்கியமாக பரிணமிக்கிறது. இதுவே எம்.வி.வி. யின் தனிச் சிறப்பு.

தொடர்ந்து சிந்தனையும் வாசிப்பும் எழுத்தும் என்று தீவிரமாக இயங்கியவர் கடைசி வருடங்களில் ஒரு சில வரிகளைக் கூட எழுத முடியாமல் தவித்தார். கையெழுத்துப் போடக் கூட முடியாமல் இருந்தார். ஆனால் தனக்குள் ஆன்மீக விசாரணையை நடத்திக் கொண்டே இருந்தார். அத்தகையவர் 14.1.2000 ல் தனது விசாரணையை முடித்துக் கொண்டார்.

ஆனால் எம்.வி.வி. தமிழுக்கு வழங்கியுள்ள படைப்புகள் அதிகம். எம்.வி.வி. யின் படைப்புலகம் தீவிர கவனிப்புக்குரியது. இது மனித ஆன்மீகத் தேடலின் இலக்கியத் துவமான பரிணமிப்பு என்றால் மிகையாகாது.

© TamilOnline.com