தமிழீழத்துக்கு அங்கீகாரம் கோரி வாஷிங்டனில் பேரணி
ஜூலை 23, 2007 அன்று தமிழீழத் தமிழர்களின் தன்னாட்சி உரிமையை வலியுறுத்தி வாஷிங்டன் டி.சி.யில் பேரெழுச்சியான அமைதிப் பேரணி நடத்தப்பட்டது. இந்தப் பேரணியில் அமெரிக்கா முழுவதிலிருந்தும் ஆயிரக் கணக்கில் புலம்பெயர் தமிழர்கள் பங்கேற்றனர். ஏராளமான இரண்டாம் தலைமுறைத் தமிழர்களும் இந்தப் பேரணியில் கலந்து கொண்டனர்.

'தன்னாட்சி உரிமையின் அடிப்படை யில் தமக்கென ஒரு சுய ஆட்சியை நிறுவி தம்மைத் தாமே ஆளுவதைத் தவிர, சுதந்திரத்தோடும் நிம்மதியோடும் வாழ ஈழத் தமிழர்களுக்கு வேறு வழியில்லை' என்று இந்தப் பேரணியில் வலியுறுத்தப் பட்டது. தமிழர்களின் தன்னாட்சியையும் சுயநிர்ணய உரிமையையும் வலியுறுத்தும் மேலாடைகளை அணிந்து பேரணியில் பங்கேற்றோர் உரிமை முழக்கங்களை எழுப்பினர்.

இந்நிகழ்வில் அனைத்துலக மனித உரிமைகள் சட்டத்தரணி கரேன் பார்க்கர், நியூயார்க் சட்டத்தரணி விசுவநாதன் ருத்ரகுமாரன், ஆழிப் பேரலையால் பாதிக்கப்பட்ட தமிழர் களுக்கு மனவள ஆலோசனை அளிக்கத் தமிழீழத்துக்குச் சென்று திரும்பிய மருத்துவர் எலின் சேண்டர் உள்ளிட் டோர் உரையாற்றினர். நியூ ஜெர்சியைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர் ருஸ் ஹோல்ட்டின் மூத்த உதவியாளர் கீரிஸ் காஸ்ரன் இப்பேரணியில் பங்கேற்றார்.

'சுயநிர்ணய உரிமையின் அடிப்படை யில் தமிழர்களின் தாயகப் பிரதேசம் தமிழர்களுக்கானது. அங்கே ஓர் குடிசார் அரசாங்கமும் இராணுவமும் இயங்கி வருகிறது. தமிழீழம் அவர்களின் சொந்த மண். அங்குள்ள அவர்களின் அரசாங்கம் நிழல் அரசாங்கம் அல்ல. பாரம்பரியமான வரலாற்று ரீதியான தமிழர் தாயகத்தைச் சீறீலங்காதான் ஆக்கிரமித்துள்ளது. தமிழீழ நிலத்தில் எதுவித சட்ட உரிமையுமே சீறீலங்காவினருக்கு இல்லை' என்று கரேன் பார்க்கர் உரையாற்றினார்.

பேரணியின் முடிவில் வெளியிடப்பட்ட பிரகடனத்தில் 'தமது சுதந்திரத்திற்காகப் போராடி வென்ற அமெரிக்க மக்களும், அமெரிக்க ஆட்சியாளர்களும், சிங்கள அடக்குமுறையிலிருந்து விடுபட முனையும் தமிழ் மக்களின் சுதந்திர வேட்கையை உணர்ந்து கொண்டு, தமிழர்கள் சுய ஆட்சியை நிறுவ அமெரிக்காவும் உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்ளு கின்றோம்' என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

திருமதி கந்தசாமி என்ற 80 வயது மூதாட்டி, நியூ ஜெர்சியிலிருந்து 300 மைல் தூரம் பேருந்தில் பயணம் செய்து இந்தப் பேரணியில் கலந்து கொண்டார். தான் 2003ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் கான்பெர்ரா நாடாளுமன்றக் கூட்டம் முன்பான ஆர்ப்பாட்டத்திலும், 2005ஆம் ஆண்டு பிரிட்டிஷ் நாடாளுமன்றக் கட்டடம் முன்பான ஆர்ப்பாட்டத்திலும் பங்கேற்றதாகவும் தற்போது அமெரிக்கத் தலைநகர் கட்டட முன்றலில் எமது தாயக உரிமைக்காகக் குரல் கொடுக்க நிற்பதாகவும் பெருமிதம் பொங்கத் தெரிவித்தார்.

இந்தப் பேரணியில் முதல் முறையாக ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் பங்கேற்றுத் தமது தாயகத்துக்கான அங்கீகாரத்தை வலியுறுத்தி உரத்துக் குரல் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது. அண்மையில் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் ஈழத்தமிழ் செயற்பாட்டாளர் கள் மீது அரசாங்கங்கள் சட்ட நடவடிக்கைகளையும், கைதுகளையும் மேற்கொண்ட சூழ்நிலையில் பெருந் தொகையானோர் இதில் கலந்து கொண்டது அமெரிக்கா தலைமையிலான மேற்குலகுக்கு ஒரு முக்கியமான செய்தியைச் சொல்கின்றது என்று இதில் கலந்து கொண்ட ஒருவர் தெரிவித்தார்.

நளாயினி குணநாயகம்

© TamilOnline.com