இரவில் மலர்ந்த தாமரை
என் தோழி சாந்தா வீட்டுக்கு மூன்று வருடங்களுக்கு முன்பு இரவு விருந்துக்குப் போனபோது ஒரு சின்னத் தொட்டியில் நாலு இலைகளை நட்டு பரிசாகத் தந்தாள். மூன்று வருடங்களுக்குப் பிறகு போன மாதம் நான்கு பூக்கள் பூத்தது அந்த 'பிரம்ம கமலம்' என்ற செடி. இது இந்தியாவில் கர்நாடகத்திலும் நேபாளத்திலும் உள்ளது.

இதன் சிறப்பு இதன் பூ தண்டில் வராமல் இலையிலேயே தோன்றுவதுதான். மாவிலை சிறிது நீளமாக இருப்பதுபோல பச்சை நிற இலைகள். நட்ட நடு இலையின் ஓரத்திலிருந்து இளம் ரோஜாநிறத் தண்டு ஓரடி நீளத்துக்கு வந்து அதன் முடிவில் தாமரை மொட்டுப்போல சிறு குருத்து.

இரவில் சூரிய ஒளி மங்கியபின் மலரும் அதிசயத் தாமரை இது. அது மட்டும் அல்ல. மலர்ந்து சிறிது நேரத்தில், சூரியன் மறுபடி உதிப்பதற்குள் கூம்பிவிடும் இயல்பு கொண்டது. நீரில் அல்லாமல் நிலத்தில் முகிழ்ப்பதில் வெட்கமோ! இந்தச் செடியில் 14 வருடங்களுக்கு ஒரு முறைதான் பூ மலரும் என்ற நியதி இருந்தாலும் சில இடங்களில் ஒவ்வொரு வருடமும் பூப்பது உண்டு.

பூத்திருப்பதைக் கேள்விப்பட்டதும் நண்பர்களும் அண்டை வீட்டுக்காரர்களுமாகப் பத்துப் பன்னிரண்டு பேர் எங்கள் தோட்டத்தில் கூடிவிட்டார்கள். அதன் மொட்டு மலர்ந்தவுடன் ஒரு இந்திய மூதாட்டி தரையில் விழுந்து வணங்கினார். பிறகு விளக்கம் சொன்னார். 'பாற்கடலில் மகாவிஷ்ணுவின் தொப்புளிலிருந்து தண்டு கிளம்பி அதில் தாமரை மலர, அதில் பிரம்மா பிறந்தார். அதைப்போல அரிய செடி என்பதால் இதற்கு 'பிரம்ம கமலம்' என்று பெயர். இந்தியாவில் காணக்கிடைக்காத மலரை கானடாவின் டொராண்டோவில் காணும் போது உள்ளம் மகிழ்கிறது' என்றார்.

கிறிஸ்தவரான லைலா செரியன் 'இந்தச் செடியை 'ஜெரூசலம் செடி' என்று அழைப்போம். ஏசுநாதர் பிறப்பை இந்தச்செடி மலருடன் ஒப்பிடுவோம். அதனால்தான் இதைக்காணவந்தேன்' என்று உணர்ச்சியுடன் கூறினார். உடனே மிசிசாகாவிலிருந்து வந்த டோரத்தி 'நாங்கள் இதை 'ஏசுவின் தொட்டில்' என்று அழைப்போம். ஏசுவின் பிறப்பைப் போல தூய்மையான நேரத்தில் இந்தப் பூ மலர்வதைக் கொண்டாடுவோம். இந்தப்பூ மலர்வதைப் பார்த்தால் நல்ல அதிசயம் நடக்கும் என்று என் தாயார் கூறுவார். அதனால் தான் நானும் வந்தேன்' என்றார்.

ஒரே மலர் எல்லாமதங்களைச் சேர்ந்தவர்களையும் வசீகரிப்பதை நினைத்து ஆச்சரியம் அடைந்தோம். இன்னும் நான்கு குட்டி மொட்டுக்கள் உள்ளன. டோரத்தியின் ந்ம்பிக்கையின்படி அதிசயங்கள் நடக்கட்டும்.

அலமேலு மணி,
கனடா

© TamilOnline.com