சுத்த சக்தியின் சங்கடம் - பாகம் 1
Silicon Valley-இல் தொழில்நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழு நேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் அவரது துப்பறியும் தொழிலில் மிக ஆர்வம் கொண்டு அவருக்கு உதவி புரிகின்றனர். கிரண், வேகமான, தமாஷான இளைஞன். தொழில் பங்கு வர்த்தகமானாலும், சூர்யா வுடனேயே நிறைய நேரம் செலவிடுகிறான். ஷாலினி Stanford மருத்துவ மனையில் மருத்துவராகவும், Bio-Medical ஆராய்ச்சி நிபுணராகவும் பணி புரிபவள். மூவரும் சேர்ந்து துப்பறிந்து பல பிரச்னைகளைத் தீர்த்து வைத்துள்ளனர்.

*****


சூர்யாவின் வீட்டுக்குள் படுவேகமாக நுழைந்த கிரண் கதவைப் படாலென்று அடித்து மூடிவிட்டு, 'பேராசை பிடித்த பிசாசுகள்! இவனுங்களையெல்லாம்... அப்படியே... ஆஆஆஆ...ர்ர்ர்ர்...க்க்க்க்' என்று யாரின் மென்னியையோப் பிடித்துத் திருகிவிடுவது போல் கைகளைப் பிசைந்து கொண்டே சூர்யாவின் அலுவலக அறைக்குள் புயல்போல் புகுந்தான்.

ஆனால், அவனுடைய கடுகடு முகமும் சேஷ்டைகளும் சூர்யாவுக்கு நகைப்பைத்தான் வரவழைத்தன. அவர் சிரிப்பைக் கண்ட கிரண் இன்னும் கொந்தளித்தான். 'என்ன சிரிக்கறீங்க? என் நிலைமையைக் கண்டா உங்களுக்கு சிரிப்பா வருது?' என்றான்.

சூர்யா இரு கைகளையும் உயர்த்தி சமாதானக் கொடி காட்டி, 'துர்வாசரே, சாந்தம், சாந்தம்! இப்போது என்ன நடந்துவிட்டதென்று இப்படி சரவெடி வெடிக்கறீர்?' என்றார்.

கிரண் மேலும் கொந்தளித்தான். 'இந்த ஆயில் கம்பனிக்காரங்களைத்தான் சொல்றேன். என்னோட போர்ஷாகயேன் SUV வண்டிக்கு கேஸ் போட்டேன். என் வாலட்டுல ஒரு பெரிய ஓட்டையே போட்டுடுச்சு. கிட்டத்தட்ட எழுபது டாலர்-ஒரே ஒரு டேங்க் ரொப்பறத்துக்கு. மாசத்துக்கு முன்னூறு டாலருக்கும் மேலே. பகல் கொள்ளை அடிக்கறானுங்க, பகல் கொள்ளை.'

சூர்யாவின் புன்னகை மேலும் விரிந்தது. 'எழுபது டாலர்தானா! உன் கேஸ் கஸ்லர் வண்டிக்கா! ரொம்ப குறைச்சலா இருக்கே. இன்னும் சில மாசம் கழிச்சுப் பாரு. நூறு டாலர்தானா? இவ்வளோ சீப்பா இருக்கே அப்படீங்கப் போறே.'

கிரண் வெடிப்பது போல் ஆகிவிட்டான். 'உங்களுக்கு சிரிப்பா இருக்கில்லே? இருக்கட்டும், இருக்கட்டும். நீங்களுந்தான் கஷ்டப்படப் போறீங்க' என்றான்.

சூர்யா வாய்விட்டுச் சிரித்தார். 'கிரண், உன்னோட எக்ஸான் பங்குகளின் விலையை ஏத்தறதா நினைச்சுக்கயேன், கொஞ்சம் எரிச்சல் தணியும். ஆனா நான் கஷ்டப்படப் போறேன்னு நினைச்சுக்காதே. என்னொட பெரிய காரை வித்துட்டு, ஒரு டொயோட்டா ப்ரியஸ் வாங்கியிருக்கேன். அது ஒரு கேலன் கேஸ¤க்கு கிட்டத்தட்ட ஐம்பது மைல் தருது. உன் வண்டி மாதிரி ஒரு மைலுக்கு எத்தனை கேலன்னுன்னு கணக்கில்லை.'

கிரண் பழித்துக் காட்டினான். 'ஆமாம், கேலனுக்கு ஐம்பது மைல். ஆனா போறதென்னவோ மணிக்கு அஞ்சு மைல் வேகந்தான். உங்க மாதிரி ப்ரியஸ் ஆளுங்க தான் என் முன்னால லேன்ல உக்காந்து உசிரை வாங்கறாங்க' என்றான்.

சூர்யா முறுவலித்தார். 'உலக வெப்பமேறு வதைக் குறைக்க எங்க பங்கைச் செய்யறோம்னு வச்சுக்கயேன்' என்றார்.

கிரண் பெருமூச்சு விட்டான். 'அது என்னமோ சரிதான். அதுக்காக ஒரேயடியா ஆமை மாதிரி போகணுமா என்ன? வேகமா போய்க்கிட்டே வெப்பத்தை குறைக்கறா மாதிரியா எதையாவது கண்டுபிடிச்சுத் தொலைக்க வேண்டியதுதானே.'

சூர்யா விரிந்த புன்னகையுடன் தலை யாட்டினார். 'கரெக்ட். உன் கனவு பலித்து விட்டது. மாசை வெளிவிடாம, ஆனா படுவேகமாப் போறத்துக்கு ஏற்கனவே கண்டு பிடிச்சிருக்காங்க.'

கிரண் ஆச்சர்யத்தோடு 'என்ன! மாயா ஜாலமா இருக்கே. மாசில்லாம ஆனா அதிவேகமாவா! அது எப்படி?'

சூர்யா விளக்கினார். 'டெஸ்லான்னு ஒரு கார் கம்பனி ஆரம்பிச்சிருக்காங்களே அதைப் பத்திக் கேள்விப் பட்டிருக்கயா?'

கிரண் யோசனையோடு மெள்ளத் தலையாட்டினான். 'ஆமாம், எங்கயோ அதைப் பத்தி ஒரு துண்டு செய்தி படிச்சேன். ஆனா விவரமாத் தெரியாது.'

சூர்யா மேலும் விவரித்தார். 'டெஸ்லாவின் குறிக்கோள் நீ சொன்ன பிரச்சனையைத் தீர்க்கறதுதான். மாசில்லாம, ஆனா வேகத்தை யும், அது மட்டுமல்லாம சொகுசையும் கூட விட்டுக் கொடுக்காம வண்டிகள் செய்ய முடியும்னு காட்ட முயற்சி செய்யறாங்க.'

கிரண் பரபரத்தான். 'வாவ். கேட்க ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கா இருக்கு! அதை எப்படி செய்யறாங்க? மேல சொல்லுங்க!'

சூர்யா தொடர்ந்தார். 'டொயோட்டாவே, ஷாலினி வச்சிருக்கற லெக்ஸஸ் RX400H-ங்கற SUV வண்டி வேகமாப் போறா மாதிரி பண்ணியிருக்காங்க இல்லயா? மெய்நிகர் விளையாட்டு நிறுவனப் பிரச்னை ஆரம்பத் துல அதைப் பத்திப் பேசினோமே, ஞாபகம் இருக்கா? நீகூட வண்டிக்கடில போயி சோதிச்சுக்கிட்டிருந்தயே? பேட்டரில ஓடற இரண்டு மின் மோட்டர்களைச் சேத்து 250 குதிரை சக்தியோட வேகமா ஓடறா மாதிரின்னு...'

கிரண் இகழ்ச்சியாக முகத்தைச் சுளித்தான். 'சே! அவ்வளவுதானா... அது ஒண்ணும் அவ்வளவு வேகமில்லையே. என்னோட கயேன்-எஸ் அதைப் போல ரெண்டு மடங்குக்கும் மேல வேகம் அதிகம் தெரியுமா?'

சூர்யா அவசரமாகத் தலையசைத்து மறுத்தார். 'அதே அளவுதான்னு சொல்ல வரலை கிரண். அதை ஒரு மட்டமா வச்சு மேல விளக்கலாம்னு வந்தேன். லெக்ஸஸ்ல மின் மோட்டார்களை வச்சு வேகம் அதிகரிச்சாங்க. டெஸ்லால, கேஸலினே இல்லாம, வெறும் மின்மோட்டார்களை மட்டும் வச்சிருக்காங்க.'

கிரண் இடை புகுந்தான். 'யக்! அப்ப அது லெக்ஸஸை விட நிதானமா போகுமே.'

சூர்யா இன்னும் பலமாகத் தலையசைத்தார். 'அதுதான் இல்லை. லெக்ஸஸ்ல வெறுமே மைலேஜ் ஏத்தறத்துக்கான அளவுதான் பேட்டரிகளும், மின்மோட்டர்களும் வச்சிருக் காங்க. டெஸ்லால, வேகத்துக்கான அளவு பலமுள்ள மோட்டர்கள் இருக்கு. உலகத்துலயே மிகவேகமான ரயில் வண்டிகள் மின் மோட்டர்கள்ளதான் ஓடுது தெரியும் இல்லயா? அதே மாதிரிதான்.'

'ஓ! ·ப்ரான்ஸல புதுசா ஓட விட்டிருக் காங்களே TGV ரயில் வண்டிகள். அந்த மாதிரியா? ஓகே, ஓகே! டெஸ்லா எவ்வளவு வேகமா ஓடுது? 120 மைல் வேகம் ஓட முடியுமா?'

சூர்யா வாய்விட்டுச் சிரித்தார். 'கிரண், நம்ப ·ப்ரீவேயிலேயே 75 மைல் வேகத்துக்கு மேல மான்ட்டேனா ஸ்டேட்ல கூட போக முடியாது. நீ எங்கே 120 மைல் வேகத்துல ஓட்டி எவ்வளவு டிக்கட் வாங்கப் போறே? அது மட்டுமில்லை, அது அதிக பட்சம் எவ்வளவு மைல் வேக அளவு வரைக்கும் போகலாங்கறது பிரச்னையே இல்லையே? எவ்வளவு சீக்கிரமா 0-லேந்து மணிக்கு 60-மைல் வேகத்துக்கு அதிகரிக்க முடியுங்கறதுதானே ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு அளவுகோல்.'

கிரண் உற்சாகமாகத் தலையாட்டி ஆமோதித்தான். 'ஆமாமாம். அதுக்குத்தான் நான் என் போர்ஷாவையே வாங்கினேன். வாவ், ஒரு மிதி மிதிச்சா என்ன ரஷ் தெரியுமா! டெஸ்லா எப்படிப் போகும்? என்ன 0 டு 60 ஏழு செகண்ட் ஆகுமா?'

சூர்யா வெற்றிப் புன்னகை புரிந்தார். 'ஏழா! இல்லைப்பா, 0 டு 60 நாலே நொடிதான். இன்னும் கூட வேகமா போகவைக்க முடியுங்கறாங்க, ஆனா இந்த அளவோட வச்சிருக்காங்க!'

ஆச்சர்யத்தால் கிரணின் வாய் அகில உலகையும் விழுங்கி விடுவது போல் பிளந்தது! 'என்ன நாலே ஸெகண்டா! அடேங்கப்பா. போர்ஷா, ·பெர்ராரில கூட அதி உச்ச விலை மாடல்கள்தான் அதைவிட வேகம். பிரமாதம்! நான் என் கயேனைத் தள்ளிட்டு அதை வாங்கிடறேன். யார் கிட்ட கேக்கணும்? சொல்லுங்க...' என்று பரபரத்தான்.

சூர்யா சிரித்தார். 'பொறுமை, பொறுமை! பொறுத்தார் டெஸ்லா பெறுவார் அன்பனே. நின்டெண்டோ 'வீ' வீடியோ கேம் கான்ஸோல் வாங்கவே நாலு மாசம் தவம் பண்ணினேயே, இதுக்கு இன்னும் நிறையவே ததிங்கணத்தோம் தான். சரி, சரி, எனக்குத் தெரிஞ்சவர் ஒருத்தர் டெஸ்லாவில மூலதனமிட்டிருக்கார். அவர்கிட்ட அறிமுகம் செஞ்சு குடுக்கறேன். அப்புறம் கெஞ்சுவயோ கூத்தாடுவயோ காலிலயே விழுவயோ தெரியாதுப்பா, உன் பாடு அவர் பாடு.'

அப்போது வாசல் மணி ஒலித்தது. கிரண் போய்த் திறந்தான். அங்கு வந்திருந்தவரைக் கண்டதும் மீண்டும் வியப்பால் வாய் பிளந்தான். 'அப்பா! இங்க எங்கே வந்தீங்க? என்னை இழுத்துட்டு வரச் சொல்லி அம்மா அனுப்பிச்சாங்களா? ஸெல் ·போன்ல கூப்பிடறது தானே? அதுக்காக இவ்ளோ தூரம் வரணுமா என்ன?' என்று பொரிந்து தள்ளினான்.

அவனது தந்தை அவனைத் தட்டிக் கொடுத்து கையைத் தூக்கிக் காட்டி நிறுத்தினார். 'ஏய் கிரண், என்னைக் கொஞ்சம் பேச விடு! நான் ஒண்ணும் உன்னைத் தேடிக்கிட்டு வரலை. சூர்யா கிட்ட கொஞ்சம் பேசணும்' என்றார்.

அவர்கள் பேச்சைக் கேட்ட சூர்யா வெளிவந்து, 'ஹே! முரளி! வாங்க வாங்க! நீங்க இங்க வரது ரொம்ப அபூர்வமாச்சே! என்ன விஷயம்? உள்ள வாங்க... எதானாலும் நிதானமா பேசலாம்' என்று அழைத்துச் சென்று வரவேற்பறையில் அமர்த்தி ஒரு குளிர்பானமும் கொடுத்து விட்டு, அமர்ந்தார். பிறகு, 'எப்படி இருக்கீங்க? பத்மா சௌக்யமா? கிரணும் சரி, ஷாலினியும் சரி அடிக்கடி பார்த்துப் பேசினாலும் உங்களைப் பத்தி ஒரு வார்த்தை கூடச் சொல்றதில்லை' என்றார்.

சூர்யா, ஷாலினி இருவரின் தனிப்பட்ட சரித்திரத்தை நன்றாகவே அறிந்திருந்த அவர், 'ஆஹா, ஷாலினியை அடிக்கடி சந்தித்துப் பேசறீங்களா? நல்லதுதான், எப்ப நல்ல காரியம் வச்சுக்கலாம்?' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார், சொல்லவில்லை. ஆனால் அவர் முகத்தில் மலர்ந்த மந்தஹாசத்தைக் கண்டுகொண்ட கிரண் தானும் புன்னகைத்தான். தந்தையும் தனயனும் ஒருவரை ஒருவர் பார்த்து ஓரமாகக் கண்ணடித்துக் கொண்டு தலையாட்டினர். இந்த நாடகத்தை சூர்யா கண்டும் காணாதது போல் புறக்கணித்து விட்டு, 'ஹ¥ம், மேல சொல்லுங்க, என்ன விஷயம்?' என்றார்.

முரளி, 'சொல்றேன். கொஞ்சம் ஹெவியான விஷயம். அதுக்குப் போறதுக்கு முன்னால சும்மா சொல்லுங்க நீங்க ரெண்டு பேரும் என்ன பேசிக்கிட்டிருந்தீங்க?' கிரண் முந்திரிக் கொட்டையாகக் குதித்தான். 'சூர்யா, சுத்த சக்தில இறங்கிட்டாரு. எதோ டெஸ்லான்னு ஒரு மின்சாரத்துலயே ஓடற அதிவேக வண்டியாமே, அதைப் பத்திச் சொல்லிக் கிட்டிருந்தார், நடுவில நீங்க வந்துட்டீங்க' என்றான்.

அதைக் கேட்டு முரளி மலைத்தே போனார். வியப்பால் அவர் மேலும் பேசாமல் திறந்த வாய் மேல் கை வைத்துக் கொண்டு சாய்ந்து அமர்ந்து விடவே, கிரண் 'என்ன, அப்படியே மலைச்சுப் போய் உக்காந்துட்டீங்க?' என்றான்.

முரளி சுதாரித்துக் கொண்டு தன் வியப்பின் காரணத்தை விளக்கினார். 'இது ரொம்ப ஸ்பூக்கி. நான் பேச வந்ததே சுத்த சக்தி பத்திதான். அதுனாலதான் நீங்களும் அதைப் பத்தியே பேசிக்கிட்டிருக்கீங்கன்னு தெரிஞ் சதும் அசந்து போயிட்டேன். ஆனா கிரண், இது ரொம்ப ஸீரியஸ் மேட்டர். ஒரு நிறுவனமே முழுகிவிடக் கூடிய நிலைமையில இருக்கு. மேலும், ஒரு விஞ்ஞானி தாக்கப் பட்டதுல பெரிய காயமாகி ஸ்டேன்·போர்ட் மருத்துவ மனையில ரொம்ப கவலைக் கிடமான நிலைமைல கிடக்கிறார். ஷாலினி தான் பாத்துக்கிட்டிருக்கா. அவதான் என்னை இங்க விரட்டினா.'

முரளி தொடர்ந்தார். 'வெர்டியான் (Verdeon) அப்படின்னு ஒரு சுத்த சக்தித் தொழில்நுட்ப நிறுவனம் இருக்கு. என்னோட நண்பர் ஒருத்தர் ஆரம்பிச்சது. சில மாசத்துக்கு முன்னால அவங்க ஒரு மிகப் பிரமாதமான சுத்த சக்தி நுட்பத்தைக் கண்டு பிடிச்சிருக்கற தாகவும் அதுனால அவங்களோட தலைமை விஞ்ஞானிக்கு நோபல் பரிசு கூடக் கிடைக்கலாம்னும் சொல்லிக்கிட்டிருந்தார். நான்கூட ஷாலினி கிட்ட அதைப்பத்தி பேசிக்கிட்டிருந்தேன். திடீர்னு இன்னைக்குக் காலையில ஷாலினி ·போன் பண்ணினா. நீங்க சொன்ன தலைமை விஞ்ஞானி எங்க மருத்தவமனையிலதான் அடிபட்டு அட்மிட் ஆயிருக்கிறார்னு. எனக்கு ஒரே அதிர்ச்சியா யிடுச்சு. உடனே நண்பருக்கு ·போன் பண்ணி விசாரிச்சேன்.'

'அவங்க நிறுவனத்துல அந்த புது சுத்த சக்தித் தொழில்நுட்பம் ரொம்ப நல்லா முன்னேறிக்கிட்டு வந்ததாம். ஆனா திடீர்னு அப்பப்போ வேறவேற சின்ன தடங்கல்களும் பிரச்னைகளும் ஏற்பட ஆரம்பிச்சதாம். அதையெல்லாம் சமாளிச்சு இன்னும் நல்ல நிலைமைக்குக் கொண்டு வந்தாராம் அவங்களோட தலைமை விஞ்ஞானி. அந்த சமயத்துல திடீர்னு, அவர் காலையில ஜாகிங் போறச்சே தாக்கப்பட்டு படுகாயமடைஞ் சுட்டாராம். அவர் இல்லாம இந்தத் தொழில்நுட்பம் படுத்துடும், தன்னோட நிறுவனமும் ரொம்ப ஆபத்தான நிலைக்கு வந்துடும். நிறுவனத்தையே மூட வேண்டிய கதிக்குக் கூட போயிடலாம்னு அழாத குறையா குமுறினார். என்ன செய்யறதுன்னே தெரியலைன்னார். அப்பதான் எனக்கு நீங்க இதே மாதிரி நேனோடெக், ரோபாட் நிறுவனங்களில கூட பிரச்சனைகளைத் தீத்து வச்சது ஞாபகம் வந்தது. அதைப்பத்தி என் நண்பர் கிட்ட சொன்னேன். அவர் உடனே உங்களை அறிமுகம் செஞ்சு வக்கச் சொல்லி ரொம்ப வேண்டிக்கிட்டார். ஷாலினிகிட்ட கேட்டேன். அவதான் உடனே போங்கன்னு துரத்தினா. இதோ வந்துட்டேன். என்ன நினைக்கறீங்க?'

சூர்யா 'இப்ப சில வேலைகள் இருக்கு... அதான் யோசிக்கறேன்...' என்றார் யோசித்த படியே.

ஆனால் கிரண் குதித்தான். 'இது ரொம்ப சுவாரஸ்யமான கேஸா இருக்கே. சுத்த சக்தி ரொம்ப முக்கியமான விஷயம். ஷாலினி வேற சொல்லியனுப்பிச்சிருக்கா. சரின்னு சொல்லுங்க. இப்பவே கிளம்பிப் போய் பாக்கலாம்!'

முரளி அவனை அடக்கினார். 'கொஞ்சம் சும்மா இருக்கறயா கிரண். சுவாரஸ்யமா இருக்குங்கற விஷயத்துக்கெல்லாம் சூர்யாவை டிஸ்டர்ப் பண்ண விரும்பலை. சூர்யா நீங்க கொஞ்சம் யோசிச்சு நிதானமாவே சொல்லுங்க. ஆனாலும் என்ன, பாவம் என் நண்பன் தவிப்பைத்தான் பார்க்க சகிக்கலை...' என்று இழுத்தார்.

இதைக் கேட்டு மனம் கனிந்துவிட்ட சூர்யா ஒரு முடிவுக்கு வந்தது போல் நிமிர்ந்து உட்கார்ந்தார். 'சரி, நான் என் மத்த வேலைகளை அட்ஜஸ்ட் பண்ணிக்கறேன். தலைபோற அவசரமோ முக்கியமோ இல்லை. கிரண் சொல்றது சரிதான். சுத்த சக்தி ரொம்ப முக்கியமானது...'

கிரண் இடைமறித்தான். 'அது மட்டுமில்லை, இந்த கேஸ்ல நிஜமாவே தலைபோற மாதிரி அவசரம் இருக்கு போலிருக்கு. அவங்க தலைமை விஞ்ஞானியை அடிச்சுப் போட்டிருக்காங்களே, அடுத்தது என்ன நடக்குமோ!'

சூர்யா ஆமோதித்தார். 'ரைட். இந்த விஷயத்துல அந்த அவசரம் வேற இருக்கு. சரி சொல்லுங்க முரளி, உங்க நண்பர் எங்கே இருக்கார்?'

முரளி மகிழ்ச்சி கலந்த நிம்மதிப் பெருமூச்சுவிட்டார். 'அப்பாடா! எங்கே முடியாதுன்னு சொல்லிடுவீங்களோன்னு ஒரு நிமிஷம் கலங்கிட்டேன். என் நண்பனுக்கு உங்களை எப்படியாவது அழைச்சிக்கிட்டு வறேன்னு வேற வாக்களிச்சுட்டேன். சரி வாங்க, போய்க்கிட்டே பேசலாம்.'

மூவரும் முரளியின் வண்டிக்குச் சென்றனர். கிரண் வண்டியைக் காட்டி, 'இந்தக் கேஸ¤க்கு சரியா இருக்கு அப்பாவோட புது ஹைப்ரிட் டொயோட்டா கேம்ரி' என்றான். முரளி மகிழ்ச்சியுடன் தலையாட்டினார். 'கேலனுக்கு கிட்டத்தட்ட முப்பத்தஞ்சு மைல் குடுக்குது தெரியுமா' என்று கூறிவிட்டு வண்டியைக் கிளப்பினார்.

( தொடரும் )

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com