வெற்றுக்குச்சி அல்ல. வத்திக்குச்சி
அன்புள்ள சிநேகிதியே

இங்கு என் மைத்துனர் வீட்டில் வந்து இருக்கிறேன். தமிழ் ஆர்வம் நிறைய உண்டு. நான் தமிழ் ஆசிரியையாகச் சிறிது காலம் இருந்தேன். 'தென்றல்' எனக்கு இங்கே உண்மையிலேயே ஒரு வரப்பிரசாதம். என் மைத்துனர் மனைவி தமிழ் இல்லை. 'அன்புள்ள சிநேகிதியே' பகுதி மிகவும் பிடித்திருக்கிறது. முதலில் என்னைப் பற்றி எழுத மிகவும் சங்கோஜமாக இருந்தது. நான் யார் என்று யாருக்குத் தெரியப் போகிறது என்ற தைரியத்தில் என் விஷயங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

என் கணவருக்கு 3 தம்பிகள், 1 தங்கை. திருமணத்தின் போது கடைசித் தம்பிக்கு 9 வயது. அப்பா இறந்து போனதால் என் கணவர்தான் எல்லாப் பொறுப்புகளையும் ஏற்றுக் கொண்டார். குடும்பத்தை நிர்வகிக்கவே பணம் போதாத சமயத்தில், குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளக்கூடாது என்று தள்ளிப் போட்டோம். நானும் வேலைக்கு போய்க் கொண்டு, வீட்டில் சமையல் முதல் எல்லாம் செய்து, துவைத்துப் போட்டு, வேறு எந்த சுகத்தையும் அனுபவிக்காமல் குழந்தைகளை முன்னுக்குக் கொண்டு வருவதிலேயே வாழ்க்கையைச் செலவழித்து விட்டேன். எல்லோரும் என்னிடம் மிகவும் ஆசை ஆசையாகத்தான் இருப்பார்கள். மைத்துனர்கள் படித்து வேலைக்குப் போகும் சமயத்தில் சிறிது நிலைமை பரவாயில்லை. எங்களுக்கென்று குடும்பம், குழந்தை என்று நினைத்த போது வயதாகிவிட்டது.

இதற்கு மேல் யாராவது கேலி செய்வார்களோ என்று தோன்றியது. நாத்தனார் கல்யாணம், மைத்துனர் கல்யாணம் என்று ஒவ்வொன்றாக முடித்து வைத்தோம். எல்லோருக்கும் குழந்தைகள், வெளிநாட்டில் வேலை என்று பிய்த்துக் கொண்டு போய்விட்டார்கள். நானும் என் கணவரும் மட்டும்தான். போன வருடம் அவரும் என்னைத் தனியாக விட்டுவிட்டு வேறு உலகத்துக்கே போய்விட்டார். தம்பிகள் வந்து கடமையைச் செய்து விட்டுத்தான் போனார்கள். எனக்கும் இங்கு வந்து தங்க வழி செய்துதான் இருக்கிறார்கள். ஆனால் அவர் இருந்த போது இருந்த அன்னியோன்யம் இப்போது இல்லையோ என்பது போல ஒரு பிரமை. அவருடைய நிழலிலேயே இருந்து, அவர் பின்னாலேயே நான் அந்த நிழலாக மாறி, எனக்கென்று ஒரு அடையாளம் இல்லாததது போல ஒரு உணர்ச்சி.

என் மைத்துனர்கள் தான் என்னுடைய பங்களிப்பையும், செயல்பாட்டையும் புரிந்து கொண்டு இருக்கிறார்கள். அவருடைய மனைவிகள் என்னைப் பரிதாபத்தோடு அணுகுகிறார்களே தவிர, பாசத்தோடு அல்ல. (இரண்டு மைத்துனர்கள்; இங்கே ஒருவர் தொழில்ரீதியாக நாடுவிட்டு நாடு மாறிக் கொண்டே இருக்கிறார்) அந்தக் குழந்தை களும் என்னை ஒரு விருந்தாளி போல மரியாதையாக நடத்துகிறார்கள். அண்ணியம்மாவுக்கு (என்னை எல்லோரும் அண்ணியம்மா என்றுதான் கூப்பிடுகிறார்கள்) யாரும் இல்லை. பாவம் என்று ஒவ்வொரு வரும் 3 மாதம் தங்களுடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்து இருக் கிறார்கள். இந்தப் பரிதாப உணர்ச்சி என்னைக் கொல்லுகிறது. நான் என் கடமையைப் பாசத்தில் கலந்து செய்தேன். அவர்கள் தங்கள் கடமையில் நன்றியைக் கலந்து செய்கிறார்கள். எனக்கு இந்த நன்றி பிடிக்கவில்லை. அங்கே ஒரு அன்னியம் தெரிகிறது. எனக்கென்று யாரும் இல்லை என்ற ஒரு சுயபச்சாதாபமும், நான் இவர்களுக்கு பாரமாக இருக்கிறேன் என்ற நினைப்பும் எனக்கு சதா இருந்து கொண்டே இருக்கிறது. சில சமயம் நான் 'பைத்தியமாகப் போய்' இவர்களுக்கு இன்னும் தொந்தரவு கொடுத்துவிடுவேனோ என்ற பயமும் சேர்ந்து கொண்டு விட்டது. எப்போதும் மனதில் ஒரு விரக்தி. சிந்தனை, குழப்பம். ஏதேனும் வழி உண்டா?

இப்படிக்கு
..............

அன்புள்ள சிநேகிதியே...

கீழே 9 முறையான வழிகளை சொல்லி இருக்கிறேன். எது உங்கள் தன்மைக்கும், வாழ்க்கை முறைக்கும் சரிப்பட்டு வரும் என்று தேர்ந்தெடுத்து முயற்சி செய்து பாருங்கள்.

1. தியானம், காலை மாலை 2 முறை. சிந்தனைகள் கட்டுக்கோப்பில் வந்து, விரக்தி குறைந்து வாழ்க்கையில் நமக்கு என்ன கொடுத்து வைத்திருக்கிறதோ அதை நினைப்பில் வைத்து, மனம் பக்குவம் அடைய வாய்ப்பு உண்டு.

2. உங்களுக்குத் தெரிந்த கலையில் முழு ஈடுபாடு - சங்கீதம், வரைதல், சமைத்தல், புத்தகம் - மனதை முழுதும் அதிலேயே செலுத்துவது

3. தனியாக இருந்து வாழ்ந்து பார்ப்பது - ஒரு குடும்பத்தோடு இருக்கும் போதுதானே நமக்கு வேற்றுமை உணர்ச்சி வருகிறது. தனியாக தைரியமாக இருந்து பாருங்கள்.

4. ஒரு குடும்பத்தைச் சார்ந்து இருக்கும் போது மனதை நெருடும், சம்பவங்களால் மனம் சோர்ந்து போகும். கையை உதறுவது போல Lets Go என்று சொல்லி சிந்தனையை உதறி விட்டு விடுவது

5. நம்மை நடுக்காட்டில் விட்டுவிடாமல் நன்றியுணர்ச்சியுடன் இருக்கிறார்களே என்ற நன்றி உணர்ச்சியில், எந்தக் குடும்பத்துடன் இருந்தாலும் அவர்களுக்கு நம்மால் முடிந்ததைத் தொடர்ந்து செய்வது

6. ஏதேனும் ஒரு புதுக்கலையைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் செலுத்துவது. வேறு மொழியைத் தெரிந்து கொள்ளலாம்.

7. தனக்குத் தெரிந்த அறிவை பிறருக்கு வழங்குவது. நீங்கள் ஒரு தமிழ் டீச்சர். எங்கு சென்றாலும் உங்களுக்கென்று ஆர்வமுள்ள பெற்றோர்கள், குழந்தைகள் தமிழ் கற்றுக்கொள்ள ஆசைப்படுவார்கள்.

8. அந்தந்த தினத்தை அப்படி அப்படியே வாழ்ந்து போவது; நடந்ததை நினைக்க வேண்டாம். நடப்பதை ஆராய வேண்டாம். நடக்கப் போவதை யோசிக்க வேண்டாம்.

9. வேதாந்த ரீதியில் வாழ்க்கை முறையை அணுகி வாழ்வது. உதாரணம்: அவரவர் வினைப்படி வாழ்க்கை அமைகிறது. முடிகிறது. நம்முடைய வாழ்க்கையையே ஒரு நாடகம் போலப் பார்ப்பது; அந்தச் சம்பவங்களை ரசிப்பது; நம்மையே பார்வையாளராக மாற்றிக் கொண்டு சிரிப்பது, அழுவது; மூன்றாவது நபராக நம் வாழ்க்கைக் காட்சிகளையே ஆராய்ச்சி செய்வது. (குழப்புகிறதா!)

ஆங்கிலத்தில் Meditative approach, Skills enhancement approach, Individualistic approach, ‘Let go’ approach, Share knowledge approach, Daily log approach, Philosophical approach என்று நான் எழுதி வைத்திருக்கிறேன்.

எப்படி வாழ்க்கை அமைந்தாலும் இதைவிட இன்னும் நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் எல்லோரும் ஆசைப்படுகிறோம். எதிர்பார்க்கிறோம். ஏமாறுகிறோம். உங்கள் வாழ்க்கை வெற்றுக்குச்சி அல்ல. வத்திக்குச்சி. உங்களை நம்பிய குடும்பங்களில் ஒளி ஏற்றி வைத்திருக்கிறீர்கள். பெருமைப்படுங்கள். சந்தோஷப்படுங்கள். எல்லோரும் பொருளைப் பிறருக்குக் கொடுப்பார்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கையையே விட்டுக் கொடுத்து இருக்கிறீர்கள். எத்தனை பெரிய செயல். கொடுத்துப் பழகிவிட்ட நீங்கள் பாசமோ, பணமோ ஏன் வாங்க நினைக்கிறீர்கள். உங்கள் சிந்தனை முறையை மாற்றுங்கள். சக்தி பெருகும். விரக்தி குறையும்.

வாழ்த்துக்கள்
சித்ரா வைத்தீஸ்வரன்

© TamilOnline.com