மனிதருக்குச் சேவை செய்வதே மருத்துவர் தொழில்: டாக்டர் வி.சாந்தா
புற்றுநோய்க்கு எனத் தனியாக ஒரு சிகிச்சை மையம் 1954-ல் சென்னையில் தொடங்கப் பட்டது. அடையாறு கேன்ஸர் இன்ஸ்டிட்யூட் ஆக வளர்ச்சியடைந்த இந்த மையம் இதுநாள் வரை சுமார் 14 லட்சம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளது. ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் இதன் செயல்பாடுகள் தொடர வேண்டும் என்றால் இதன் நிதி அடித்தளத்தை வலுப்படுத்தியாக வேண்டும். அதற்காக செப்டம்பர் 1-2 தேதிகளில் கலி·போர்னியா வில் தில்லானாவின் 'சுவாசமே' என்ற மெல்லிசை நிகழ்ச்சி, நகைச்சுவை நடிகர் விவேக்குடன் சிற்றுண்டி உட்பட்ட விசேட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. (முழு விவரங்களுக்கு www.cifwia.org)

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அமெரிக்கா வருகிறார் பத்மபூஷண் டாக்டர் வி. சாந்தா. இவர் சென்னை அடையாறு கேன்ஸர் இன்ஸ்டிட்யூட்டின் தலைவர். புற்றுநோயாளிகளின் மறுவாழ்வுக்காகவே ஐம்பதாண்டுகளுக்கும் மேலாகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். ஆசியாவின் நோபல் பரிசு எனப்படும் மக்சேசே விருது பெற்றவர். இவருடனும் ஒரு சிறப்பு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 80 வயதிலும் சுறுசுறுப்பாகப் பணியாற்றும் டாக்டர் சாந்தா அவர்களைச் சந்தித்து உரையாடினோம். அவர் கூறியவற்றில் இருந்து...

கே: புற்றுநோய் பற்றிச் சொல்லுங்கள் டாக்டர்?

ப: நமது உடலில் உள்ள அணுக்களின் கட்டுப்படுத்த முடியாத, விபரீதமான வளர்ச்சியே புற்றுநோய். பொதுவாக 40 சதவிகிதத்துக்கும் அதிகமான புற்றுநோய்கள் புகையிலைப் பழக்கத்தினால் ஏற்படுகிறது. பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்று, கர்ப்பப்பைப் புற்று போன்றவை கிருமித் தொற்றினாலும், உறுப்புகள் சுத்தமாகப் பராமரிக்கப் படாததினாலும், தொடர்ந்து வெள்ளைப்படுதல், இரத்தப்போக்கு முதலியன நிகழ்ந்தும் அதுபற்றி அக்கறை கொள்ளாது, சரியான மருத்துவ ஆலோசனைகளைப் பெறாமல் அலட்சியமாகச் செயல்படுவதினா லும் ஏற்படுகின்றது. சில சமயங்களில் மரபு ரீதியாகவும் பெண்கள் இவ்வகை நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். நெருங்கிய உறவினர் களில், தலைமுறைகளில் யாருக்கேனும் மார்பகப் புற்று இருப்பின், மற்ற பெண்களும் தமக்கு இந்நோய் பாதிப்பு இருக்கிறதா என்பதைச் சோதனை செய்துகொள்வது மிக அவசியம்.

புகையிலையை சிகரெட், பீடி, சிட்டா, ஹ¥க்கா, மூக்குப்பொடி என எந்தவகையில் பயன்படுத்தினாலும், அவர்களுக்குப் புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம். வாய்ப் புற்று, தொண்டைப் புற்று, தாடைப் புற்று போன்றவற்றால் புகையிலையைப் பயன்படுத்து பவர்கள் பாதிக்கப்படுவார்கள். மேலும் இரைப்பைப் புற்று, இரத்தப் புற்று, நுரையீரல் புற்று எனப் பலவகைகள் உள்ளன. நோயின் பாதிப்புக்கு ஏற்றவாறு அறிகுறிகள் காணப்படும்.

புற்றுநோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம், குழந்தைகள், நடுத்தர வயதினர், முதியோர், இளைஞர் என யாரும் இதற்கு விலக்கல்ல. ஆனாலும் பொதுவாக பெண்கள் மார்பகப் புற்று மற்றும் கர்ப்பப்பைப் புற்று போன்றவற்றால் அதிகம் பாதிக்கப் படுகிறார்கள். ஆண்களை விடப் பெண்களை இந்நோய் அதிகம் தாக்குகிறது.

கே: 'புற்றுநோய் வந்தால் மரணம் நிச்சயம்; அதற்கு மருந்தே இல்லை' என்றெல்லாம் பொதுவாகக் கருத்து நிலவுகிறதே, அது சரியா?

ப: இல்லை. புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து விட்டால், அதாவது புற்றுநோய் ஆரம்பிப்பதற்கு முந்தைய Pre Cancer நிலையில் அதைக் கண்டறிந்து விட்டால், அது மேலும் பரவாதவாறு தடுத்து, முழுமையாகக் குணப்படுத்த இயலும். புற்றுநோயைக் குணப்படுத்த முடியும் என்பது மட்டுமல்ல, அதைத் தடுக்கவும் முடியும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். முறையான கவனிப்பும், பராமரிப்பும், தொடர்ந்த சிகிச்சையுமே புற்றுநோயைக் குணப்படுத்தப் போதுமானதாகும்.

புற்றுநோயின் ஆரம்பநிலையிலேயே சிகிச்சைக்கு வந்தால் நோயின் தன்மைக்கேற்ற சிகிச்சை அளித்து குணப்படுத்தலாம். 88% முதல் 90% வரை நோய் குணமாகும் வாய்ப்பும் உள்ளது. ஆனால் மக்கள் இது பற்றிய அறியாமையில் மூழ்கி இருக்கின்றனர். நோய் முற்றிய இறுதிக்கட்டத்தில் தான் பலரும் சிகிச்சைக்கு வருகின்றனர். அதனாலேயே தான் இந்நோயை முற்றிலுமாகக் குணப் படுத்துதல் என்பது இயலாமல் உள்ளது. புற்று நோய் என்பது தொற்று நோய் அல்ல என்பதையும், மரணம் பற்றிய பயம் தேவையில்லை என்பதையும் ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

கே: எய்ட்ஸ் போன்ற நோய்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் அரசாங் கத்தாலும் பிற நிறுவனங்களாலும் புற்று நோய் பற்றிய விழிப்புணர்ச்சிக்கு அளிக்கப்படுவதில்லை. இதற்கு என்ன காரணம்? மக்களிடையே விழிப்புணர்ச்சி அதிகரிக்க என்ன நீங்கள் எந்த விதமான நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறீர்கள்?

ப: எப்படி மலேரியா, போலியோ போன்ற பல நோய்களுக்கு நாடு தழுவிய மருத்துவ முகாம்களையும், சிறப்புச் சிகிச்சைகளையும் அளிக்க அரசாங்கம் முன்வருகிறதோ, அது போன்று புற்றுநோய் பற்றியும் சிறப்பு முகாம்கள் அமைத்து மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும். Total Commitment by the Government is very important in this respect. அரசு இதில் முனைப்புடன் செயலாற்ற வேண்டும். நாட்டின் பிற பெரிய நிறுவனங்கள், அமைப்புகள் இந்த விஷயத்தில் முழுமையான ஈடுபாட்டுடன் உழைக்க வேண்டும்.

நாங்கள் விளம்பரங்கள், விழிப்புணர்ச்சி முகாம்கள் மூலம் புற்றுநோய் பற்றிய அறியாமையை அகற்ற முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். கிராமங்களுக்குச் செல்வது, அங்குள்ள மக்களைச் சந்தித்து, உரையாடி புற்றுநோய் பற்றிய உண்மைகளை அவர்களுக்கு எடுத்துரைப்பது எனத் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனாலும் மக்களிடையே போதுமான வரவேற்பு இல்லை. அதற்கு முக்கியக் காரணம் கல்வியறிவின்மைதான். கிராமப்புறப் பெண்கள் போதிய கல்வியறிவு அற்றவர்களாக இருக்கிறார்கள். அவர் களுக்குக் கல்வி புகப்பட்டப்பட வேண்டும். இதற்குப் பலரும் ஒன்று சேர்ந்து உழைக்க முன்வர வேண்டும். அர்ப்பணிப்பு உணர் வோடு செயல்படுவோர் இதற்குத் தேவை.

கே: இந்தியாவில் எவ்வளவு பேர் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், புற்று நோய் வராமல் அல்லது அது பரவாமல் தடுக்க நாம் செய்ய வேண்டியது என்ன?

ப: ஓர் ஆண்டில் சுமார் 8 லட்சம் மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்று புள்ளிவிவரம் கூறுகிறது. 2007-2012-க்குள் இது 9 லட்சத்துக்கும் அதிகமாகிவிடும். மருத்துவ வசதிகள் இருந்தாலும் நோயாளி களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால் இது போதாது. கல்வியறிவின்மை, அதிக மக்கள் தொகை போன்ற பல்வேறு பிரச்னைகளும் உள்ளன. எனவே அதிக கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியமாகிறது.

இந்தப் பணியில் ஊடகங்கள் உதவலாம். புற்றுநோயின் 7 அபாயக் குறிகளை மக்களிடையே விளம்பரம் செய்யலாம். இந்தக் குறிகள் இருந்தால் புற்று இருக்கிறது என்பது பொருளல்ல. புற்றுநோயாக இருக்கலாம் என்கிற ஐயப்பாட்டுக்காகவே சோதனை மேற்கொள்ளப்பட வேண்டியதாகிறது. அச்சமோ தயக்கமோ இன்றி, பரிசோதனை செய்துகொள்ள முன்வர வேண்டும். இதுவே வெளிநாடாக இருந்தால், மக்கள் தங்கள் உடல் நலனில் சிறு சந்தேகம் ஏற்பட்டால் கூட உடனடியாக மருத்துவர்களை அணுகிச் சோதனைகளை மேற்கொள்வர். இங்கு அப்படியல்ல. அச்சத்தால் பலர் சிகிச்சை செய்து கொள்ள முன்வருவதில்லை. வலி போன்ற தவறான கற்பனைகளால் முறையான மருத்துவ சிகிச்சையை நிராகரிக்கும் அவல நிலையும் உள்ளது. இந்த நிலைமை மாற மக்களிடையே போதிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியம்.

அரசாங்கம் இந்நோய் ஒழிப்பில் தடை களுக்கு அஞ்சாமல் தீவிரமாக ஈடுபட வேண்டும். புகையிலை மீது அரசாங்கம் தடை கொண்டு வந்தபோது அதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. சிகரெட் அட்டையின் மீது மண்டை ஓடு சின்னம் பொறித்து எச்சரிக்கை தெரிவிக்கவும் எதிர்ப்பு. காரணம், அதன் பின்னணியில் இருக்கும் பெரிய நிறுவனங்கள் தாம். எந்த ஒரு நல்ல விஷயத்துக்கும் எதிர்ப்புத்தான். வெளிநாடுகளில் பல வருடங்களாகப் போராடி Anti Tobaccoo Cell கொண்டு வந்துள்ளனர். அவர்களது கல்வியறிவு அவர்களுக்கு உதவுகிறது. ஆனால் இங்கோ படிக்காதவர்கள் மட்டுமல்ல, படித்தவர்கள் கூட சிகரெட் புகைக்கின்றனர். ஏதோ ஒரு விதத்தில் புகையிலையைப் பயன்படுத்துகின்றனர். புகையிலை போன்ற தீய போதைப் பொருட்கள் பயன்படுத்துவது பற்றி விழிப்புணர்ச்சி ஏற்பட வேண்டும். இதுவே நமக்கான முதல் வேலையாகும்.

கே: 'கேன்ஸர் இன்ஸ்டிட்யூட்'டின் பணிகள் பற்றிச் சொல்லுங்களேன்...

ப: புற்றுநோயை குணப்படுத்த அறுவை சிகிச்சை முறை, கதிர்வீச்சு சிகிச்சை முறை, மருந்துகளைப் பயன்படுத்தும் கீமோதெரபி முறை என மூன்று வித சிகிச்சை முறைகள் உள்ளன. இதில் மிகவும் நவீனமானது கீமோதெரபி தான். இது 1976-க்குப் பின்தான் புழக்கத்துக்கு வந்தது. தற்போது ஒருங் கிணைந்த அணுகுமுறை, அதாவது பல்வழிச் சிகிச்சை அணுகுமுறைதான் புற்றுநோய்க்குத் தரப்படுகிறது. அதாவது சில நோய்களுக்கு முதலில் கதிர்வீச்சு சிகிச்சையும் அதன் பின் ரண சிகிச்சையும் தரப் படலாம். சிலவற்றுக்கு முதலில் ரணசிகிச்சை, அதன் பின் கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்பட வேண்டி வரலாம். இதற்கேற்ற நவீன வகைக் கருவிகள் அனைத்தும் எங்களிடம் உள்ளன.

முன்பு புற்றுநோய்க்கான இச்சிகிச்சையை நாங்கள் இலவசமாகத்தான் செய்து கொண்டிருந்தோம். ஆனால் தற்போது முழுமையாக அவ்வாறு செய்ய இயலவில்லை. காரணம் தேவை பெருகிவிட்டது தான். எங்களிடம் 428 படுக்கைகள் உள்ளன. ஆனால் நோயாளிகளின் எண்ணிக்கையோ மிக அதிகம். ஆனாலும் சுமார் 25% பேருக்கு, குறிப்பாக ஏழைகளுக்கு இலவசமாகத் தான் சிகிச்சை அளித்து வருகிறோம். கிட்டத்தட்ட 40 சதவிகிதத்தினருக்கு முழுத்தொகையும் கட்டணமாக வசூலிக்காமல், அதில் குறிப்பிட்ட சதவிகிதம் மட்டும் செலுத்த வேண்டுகிறோம். அதாவது சுமார் 1 இலட்சம் ரூபாய் செலவானால் அதில் 15,000 ரூபாய் மட்டும் கட்டினால் போதும் என்கிறோம். அனை வருக்கும் இலவச சிகிச்சை செய்வதற்கான நிதி ஆதாரங்கள் மிகக் குறைவு. எங்களைத் தவிர வேறு எந்த மருத்துவமனையும் முழுமையான இலவச சிகிச்சையை அளிப்ப தில்லை என்பதால், மக்கள் பலரும் எங்களையே நாடி வருகின்றனர். நோயாளி களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் இங்கு உண்டு. சில சமயம் உதவி செய்யும் பணியாளர்களுக்குச் சிறிய தொகை ஏதேனும் தர வேண்டி இருக்கலாம். மற்றபடி ஏழை களுக்கு அனைத்துமே இலவசம் தான்.

கே: புற்றுநோய் வந்தால் வாழ்நாள் முழுக்க சிகிச்சை பெற வேண்டுமா?

ப: சர்க்கரை நோய், இரத்தக் கொதிப்பு (BP) வந்தால் தொடர்ந்து மருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் புற்றுநோய் அப்படியல்ல; ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் உடனடியாகச் சிகிச்சை செய்து முழுமையாகத் திரும்ப வரவே வராது செய்துவிடலாம். ஆனாலும் சிலவகைப் புற்றுகளுக்குத் தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டியதும், மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டியதும் மிக அவசியம். இது எந்த வகைப் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக் கிறார் என்பதைப் பொறுத்ததே.

கே: புற்றுநோய் சிகிச்சை தவிர நீங்கள் வேறு என்னென்ன பணிகளை மேற் கொண்டு வருகிறீர்கள்?

ப: புற்றுநோய் சிகிச்சை தவிர, மருத்துவர்கள், தொழில்நுணுக்கப் பணியாளர்கள் எனப் பலருக்கும் பயிற்சிகள் அளித்து வருகின்றோம். செவிலியர் பயிற்சியை விரைவில் உமையாள் ஆச்சி கல்லூரியுடன் இணைந்து அளிக்க இருக்கிறோம். செவிலியர், தொழில்நுணுக்கப் பணியாளர்கள் எனப் பலருக்கும் Para Medical Training கொடுக்கிறோம். நோய் முற்றிய நிலையில் வருபவர்களை ஆற்றுப்படுத்துவது, அவர்கள் எஞ்சியுள்ள வாழ்நாளை மகிழ்ச்சியாக வலியின்றிக் கழிக்க உதவுவது, அதற்கான வழிகாட்டல் போன்றவற்றைச் செய்து வருகிறோம். 'ஜீவோதயா' என்ற அமைப்பு மணலியில் உள்ளது. அவர்கள் நோய் முற்றிய நிலையில் உள்ள நோயாளி களைப் பராமரித்து வருகிறார்கள். கீழ்ப்பாக்கத்திலும் ஓர் அமைப்பு இயங்கி வருகிறது. அவர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். தவிர, எங்கள் மருத்துவக் குழுவினர் வேன் மூலம் சென்று பலருக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றனர். நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்குவதற்காக Support Group ஒன்று இயங்கி வருகிறது. முன்தடுப்பு, அறிவுபுகட்டல் போன்றவற்றையும் செய்து வருகிறோம். இன்னும் செய்ய வேண்டியது எவ்வளவோ உள்ளது என்பதுதான் உண்மை.

கே: இந்த மருத்துவமனையின் தோற்றம், வளர்ச்சி பற்றிச் சற்று விரிவாகக் கூற முடியுமா?

ப: இந்த மருத்துவமனையை ஆரம்பிக்க முழுக் காரணமாக இருந்தவர் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அவர்கள். அவர் இந்தியாவின் முதல் பெண் மருத்துவர். 1923-ல் அவருடைய சகோதரி புற்றுநோயால் மரணமடைந்தார். அப்போது இந்தியா பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்த நேரம். அதனால் போதிய சிகிச்சை வசதிகள் புற்றுநோயாளிகளுக்குக் கிடைக்கவில்லை. பின்னர் முத்துலெட்சுமி ரெட்டி இங்கிலாந்து சென்ற போது அதே வகை நோயாளிகளுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்படுவதையும், அவர்கள் குணமானதையும் கண்டார். அதுவே அவருக்கு இந்தியாவிலும் ஒரு புற்றுநோய் சிகிச்சை மையம் ஆரம்பிக்க வேண்டும் என்ற உத்வேகத்தைத் தந்தது. இந்தியா திரும்பியதும் தன் மகன் கிருஷ்ணமூர்த்தியை வெளிநாட்டுக்கு அனுப்பி, புற்றுநோய் பற்றிய மேல்படிப்பைப் படித்து வரச் செய்தார். அவர் இந்தியா திரும்பிய பின், பல்வேறு கடின முயற்சிகளால் நிதி திரட்டப்பட்டது. 1954-ல் இந்த மையம் ஆரம்பிக்கப்பட்டது. இதில் சேர்ந்து நான் திரு. கிருஷ்ணமூர்த்தியுடன் இணைந்து பணியாற்றி னேன். ஆரம்பத்தில் 12 படுக்கைகள் மட்டுமே இருந்தன. படிப்படியாக உயர்ந்து இன்று 428 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையாக மாறி உள்ளது.

1980-ல் முதன் முதலாக நாங்கள் சிறப்பு சிகிச்சைகளை ஆரம்பித்தோம். இதுவரை கிட்டத்தட்ட 150 பேருக்கு நாங்கள் பயிற்சி அளித்துள்ளோம். மேலும் 1984-முதல் புற்றுநோய் தொடர்பான சிறப்பு மருத்துவப் படிப்பைத் தொடங்கி இந்தியா முழுவதுமுள்ள மருத்துவ மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறோம். மருத்துவமனையாக ஆரம்பிக்கப் பட்ட இது ஆராய்ச்சி மையமாகவும், கல்விக் கூடமாகவும் படிப்படியாக வளர்ந்திருக்கிறது.

கே: சர். சி.வி. ராமன், டாக்டர் சந்திர சேகர் போன்ற நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர் நீங்கள். எந்த அளவுக்கு அவர்களின் பாதிப்பு உங்கள் மீது இருந்தது?

ப: அவர்களது வாழ்க்கை முறை, சாதனைகள் போன்றவை எனக்குப் பல விதங்களில் inspiration ஆக இருந்தது உண்மைதான். ஆனாலும் நான் அப்போது சிறு பெண்ணாக இருந்தேன். அவர்களது சாதனை பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளும் அளவுக்கு வளர்ந்திருக்கவில்லை. பிற்காலத்தில் வளர வளர அவர்கள் மீது மிகுந்த மதிப்பு ஏற்பட்டது. இருந்தாலும் அவர்கள் பாதை வேறு என் பாதை வேறு. நான் அவர்களைப் போல் ஒரு விஞ்ஞானியாக என்னை வளர்த்துக் கொள்ளவில்லை. எனக்குப் பிடித்த மருத்துவத் தொழிலிலேயே ஈடுபாடு காட்டினேன்.

கே: உங்களுக்கு முன்மாதிரி அல்லது வழி காட்டி என்று யாரைக் கருதுகிறீர்கள்?

ப: எனக்கு முன்மாதிரி என்று சொன்னால் அது டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டிதான். மிகவும் தீரம் உள்ள இலட்சியப் பெண்மணி. புற்றுநோயை அறவே ஒழிக்க வேண்டும் என்ப திலும் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதிலும் மிக உறுதியாக இருந்தவர். அவருடைய உயர்ந்த இலட்சியமும் சேவை மனப்பான்மையும்தான் எங்களைப் போன்ற வர்களுக்கு முன்மாதிரி.

கே: உங்கள் மையத்தின் செலவுகளை எப்படி சமாளிக்கிறீர்கள்?

ப: மருந்துகளின் விலை, உபகரணங்கள் மற்றும் நோயின் தன்மை ஆகியவற்றன் காரணமாக இது மிக அதிகம் செலவாகும் சிகிச்சைத் துறையாகும். என்றாலும் எங்களுக் கான நிதி ஆதாரங்களை நாங்களேதான் சமாளித்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. சேவை அமைப்புகள் அளிக்கும் நிதி உதவி, திட்டங்கள் மூலம் நிதி திரட்டுதல், நன் கொடைகள் ஆகியவை மூலம் நிதி திரட்டப்படுகிறது. அரசாங்கத்தின் உதவி எங்களது மொத்தச் செலவில் சுமார் 3 முதல் 5 சதவிகிதம்தான் இருக்கும். தற்போது பல கோடி ரூபாய்க்கு மேல் நிதி தேவைப்படுகிறது.
அதற்காகத் தான் ஒவ்வொரு மனிதனும் இந்தப் புனித சேவையில் ஈடுபட வேண்டும் என்ற நோக்கத்துடன் '20 to 20' என்றொரு திட்டத்தைக் கொண்டு வந்தோம். அதாவது மாணவர்கள், பணி செய்பவர்கள், தொழி லாளர்கள், குடும்பத்தில் உள்ள உறுப்பினர் கள் என ஒவ்வொருவரும் 20 ரூபாயை எங்கள் நிறுவனத்துக்கு நிதி அளிப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட திட்டம். தமிழ்நாட்டில் லட்சக் கணக்கான அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள், குடும்பங்கள் உள்ளன. ஒவ்வொருவரும் 20 ரூபாய் நன்கொடையாகத் தருவதன் மூலம் 20 கோடி ரூபாய் வரை நிதி திரட்டலாம் என்ற நல்ல நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் இது. ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை. சுமார் 1 1/2 கோடி வரை கூட நிதி சேரவில்லை.

ஜெர்மனி உட்பட பல வெளிநாடுகள், நோய், போர் முதலியவற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக, ஒருவேளை மதிய உணவுக்கான பணத்தைத் திரட்டி அனுப்பு கிறார்கள். நாங்களும் அதுபோன்ற நோக்கத்தில் தான் இந்தத் திட்டத்தை ஆரம்பித்தோம்.

கே: உங்களது சாதனை என்று நீங்கள் எதனைக் குறிப்பிட விரும்புகிறீர்கள்?

ப: எதுவுமே இல்லை. நான் எந்தச் சாதனையும் செய்யவில்லை. நான் என்னுடைய கடமையைத்தான் இதுவரை செய்து கொண்டிருக்கிறேன். எனக்குப் பிடித்த பணியை, மன நிறைவோடு செய்கிறேன். அவ்வளவுதான். அது பிறர் கண்களுக்குச் சாதனையாகத் தெரியலாம்.

கே: மக்சேசே விருது பற்றி உங்களுடைய எதிர்வினை என்ன?

ப: அந்த விருது பெற்றது மனதுக்கு மகிழ்ச்சியையும் நிறைவையும் தந்தது. ஆனால் அது தனிப்பட்ட எனக்குத் தரப்பட்டதாகக் கருதவில்லை; எங்கள் நிறுவனத்திற்குக் கிடைத்த விருது அது. எங்களது பணிக்கான ஓர் உலகளாவிய அங்கீகாரம் என்று கூறலாம். பலரது பார்வையும் எங்கள் மீது திரும்பு வதற்கு அந்த விருது காரணமாக அமைந்தது. அதன் மூலம் எங்களின் வளர்ச்சிக்கும் பலவகையில் அது உதவுவதாய் அமைந்தது. அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் எங்களுக்குக் கிடைத்தது கடவுளின் கருணை என்றுதான் நினைக்கிறேன். இது போன்ற அங்கீகாரங்கள் முன்னமே கிடைத்திருக்க வேண்டும் என்றும் சிலர் சொன்னார்கள். மொத்தத்தில் இந்த விருது கிடைத்ததற்காக கடவுளுக்கும் பிலிப்பைன்ஸ் அரசுக்கும் நாங்கள் நன்றி சொல்கிறோம். விருது, அங்கீகாரம் எல்லாமே இன்ஸ்டிட்யூட்டுக்குத்தான். இன்ஸ்டிட்யூட் இல்லாமல் நான் இல்லை.

கே: எதிர்காலத் திட்டங்கள் என்ன?

ப: இந்த மையத்தை உயர்நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும். இந்தப் பணியைத் தொடர நன்கு பயிற்சி பெற்ற, திறமையான நபர்கள் மிகவும் தேவை. ஆனால் அதில் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. பலருக்கு நாங்கள் பயிற்சி கொடுக்கிறோம். இங்கு பயிற்சி பெற்றால் அதற்குத் தனி அங்கீகாரமும் மதிப்பும் உண்டு. எனவே அவர்கள் சிலகாலம் இங்கே இருந்து விட்டு, பின்னர் வேறு இடங்களுக்கு வேலைகளுக்குச் சென்று விடுகின்றனர். எங்களிடம் பணியாற்றுபவர்களைத் தக்க வைத்துக் கொள்வது மிகவும் கடினமாக இருக்கிறது. காலம், பொருளாதாரத் தேவை, சம்பளம் என்று பல காரணங்கள் கூறப் படுகின்றன. உதாரணமாக நாங்கள் பயிற்சி கொடுத்த சுமார் 150 பேர்களில் தற்போது மூன்று, நான்கு பேர்கள் மட்டும் தான் எங்களுடன் இருக்கின்றனர். அவர்கள் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள். சேவை மனப்பான்மை கொண்டவர்கள். எங்களிடம் பணபலம் இல்லாமையால் நாங்கள் பயிற்சி கொடுத்தவர்களையே எங்களால் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை.

பணத்தேவை தற்போது மிக அதிகமாக உள்ளது. சேவை உள்ளம் கொண்ட பலர் எங்களுக்கு உதவி வந்தாலும், மருத்துவம் என்பதில் சேவை குறைந்து விட்டது போல் தோன்றுகிறது. எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் என்ற எண்ணத்தை விட, நம்மை நாடி வருபவர்களுக்கு நம்மால் எவ்வளவு சேவை செய்ய முடியும் என்ற எண்ணம் அனைவருக்கும் தோன்ற வேண்டும். 'மனிதருக்குச் சேவை செய்யவே மருத்துவ சேவை' என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். நாங்கள் முன்பு வேலைக்கு வரும்போது எவ்வளவு சேவை செய்ய முடியுமோ அவ்வளவு செய்வோம் என்ற எண்ணத்தில் வந்தோம். ஆனால் தற்போது எல்லாமே பணம் என்றாகி விட்டது. இந்நிலை மாற வேண்டும்.

கே: நீங்கள் மேற்கொள்ள இருக்கும் அமெரிக்கப் பயணம் பற்றி விரிவாகக் கூற முடியுமா?

ப: அமெரிக்காவில் வாழும் இந்திய அன்பர்கள், நமது மையத்துக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் Friends of Cancer Institute என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். அதன் மூலம் பல்வேறு நலப் பணிகளை ஆற்றி வருகின்றனர். அவர்களது அழைப்பை ஏற்று நான் அமெரிக்கா செல்ல உள்ளேன். FCI-யில் உள்ளவர்களுடன் அங்குள்ள பல்வேறு தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகள் இணைந்து சுமார் 1 கோடி ரூபாய் வரை நிதி திரட்டித் தர இருக்கிறார்கள். செப்டம்பர் முதல் மற்றும் இரண்டாம் தேதியில் அங்கு நடைபெறும் கலந்துரையாடல், விருந்து நிகழ்ச்சியிலும் 'சுவாசமே' என்னும் இசை நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறேன். (முழு விவரங்களுக்கு: www.cifwia.org).
ஒரு கோடி என்பது பெரிதாகத் தோன்றலாம். இன்றைக்கு உள்ள செலவை ஒப்பிட்டுப் பார்த்தால் அந்தத் தொகை மிகச் சிறியது. தற்போது இருக்கும் நிலையில் செலவுகளைச் சமாளிக்க மிக அதிக அளவில் நிதி தேவைப்படுகிறது. ஆனாலும் அமெரிக்க நண்பர்கள் தம்மால் இயன்றதைச் செய்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சிதான்.

இம்மையத்தை நாடி வரும் அனைத்து நோயாளிகளும், நோய் நீங்கி குணம் பெற்றுச் செல்ல வேண்டும். அவர்களுக்கு உதவுவதற் காக தொண்டுள்ளம் படைத்த அனைவரும் முன்வர வேண்டும். புற்று நோயற்ற சமுதாயம் உருவாக வேண்டும். அதற்காக அனைவரும் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும். இந்தப் பணிக்கு எல்லா இந்தியர்களும் உதவ வேண்டும். இதுவே எனது ஆசை, இலட்சியம், கனவு. இது நிறைவேறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

மேலும் விவரங்களுக்கு:
Cancer Institute (WIA)
Adyar
Chennai 600020
Tamil Nadu, India.
தொலைபேசி: + 9144 2491 1526, 2491 0754,
தொலைநகல்: 91-44-2491 2085
இணையதளம்: http://www.cancerinstitutewia.org
மின்னஞ்சல்: caninst@md2.vsnl.net.in

சந்திப்பு: அரவிந்த் சுவாமிநாதன்

*****


எப்படி உதவலாம்?

Cancer Institute Foundation உடன் இணைந்து எங்களுக்கு நிதி தந்து உதவலாம். இதற்கு அமெரிக்க அரசாங்கத் தின் வரி விலக்கு உண்டு. அல்லது நேரடியாக சென்னையில் உள்ள எங்கள் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு உதவலாம். நிதி என்பது எங்களுக்கு அதி முக்கியமான தேவைதான்.

இருந்தாலும் வேறு ஒரு முக்கியமான வேண்டுகோள் ஒன்றும் உண்டு. அமெரிக்காவில் திறமை வாய்ந்த இந்திய மருத்துவர்கள் இருக்கிறார்கள். புத்திசாலி கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் அறிவுத் திறனை, உழைப்பை இந்த அடையாறு கேன்சர் மருத்துவமனையின் வளர்ச்சிக்குத் தர முன்வர வேண்டும். எனக்கு 80 வயதாகிறது. தொடர்ந்து இந்தப் பணி தொய்வில்லாமல் நடைபெற வேண்டும். அதற்காக ஊக்கமுள்ள, சேவை மனப்பான்மை உள்ள, அர்ப் பணிப்பு உள்ள, பணத்தை எதிர்பாராமல் சேவை செய்யும் மருத்துவர்கள் எங்களுடன் பணியாற்ற முன்வர வேண்டும். தென்றல் வாசகர்கள் இந்தச் செய்தியை அமெரிக்கா முழுவதும் பரப்ப வேண்டும். அதன் மூலம் ஒரு சிலராவது இம்மருத்துவனைக்குப் பணியாற்ற முன்வர வேண்டும். இதுவே எனது வேண்டுகோள்.

© TamilOnline.com