தென்றல் பேசுகிறது...
இராக்கிகள் கொண்டாடுமளவுக்கு ஒன்று நிகழ்ந்தே விட்டது. அவர்கள் கால்பந்தாட்டத் தில் ஆசியா கோப்பையை வென்றதைத் தான் சொல்கிறோம். எந்த நம்பிக்கையும் இல்லாமல் போட்டியில் புகுந்த இராக், இறுதியாட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை வென்றது. 'விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு' நிற்கும் அந்தத் தேசமே ஒன்றாகி இந்த வெற்றியை வரவேற்றது. சமயப் பிரிவுகளுக்குள் நல்லிணக்கம், ஜனநாயகம் இவற்றிலும் அந்த நாடு ஒன்றுபட்டு வெற்றி கண்டு முன்னேற வேண்டும்.

*****


அமிர்தசரஸில் உள்ள சீக்கியர்களின் முக்கியக் கோவிலான பொற்கோவிலை போர்க்கோவிலாக மாற்றி வைத்திருந்த சீக்கியர்களை வழிக்குக் கொண்டுவர ஒரே வழி அதன்மீது ராணுவத் தாக்குதல் நடத்துவதுதான் என்று இந்திராகாந்தி தீர்மானித்தார். 'ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்' மூலம் அதனைச் செய்தார். அதற்கு விலையாகத் தன் உயிரைத் தரவேண்டிய தாயிற்று. பாகிஸ்தானில் லால் மசூதியை முஷார·ப் ராணுவத்தைக் கொண்டே தூய்மைப்படுத்த வேண்டியதாயிற்று. வழிபடு மிடம் ஆயுதக் கிடங்காகவும், வன்முறை பயிற்சிக் கூடமாகவும், மூளைச் சலவைப் பள்ளியாகவும் மாறக்கூடாது. தத்தம் கடவுளை நேசிக்கும் ஒவ்வொருவரும் இதை எதிர்க்க வேண்டும், அவர் எந்த மதத்தவராக இருந்தாலும்.

*****


கணினி ஏதோ ஒரு ஹைடெக் அலுவலகக் கருவி என்பது மாறி அது இல்லாமல் வாழமுடியாது என்று ஆகிவிட்டது. இந்த அறிவு சாம்ராஜ்யத்தில் இந்தியா ஒரு வல்லரசாக மாறிவருகிறது என்பது உண்மைதான். கணினி மென்பொருள் திறன் ஒரு சிறப்புத் திறனாக இருந்த காலமும் மாறிவிட்டது. உலகெங்கிலும் இளைய தலைமுறையினர் அதில் தேர்ச்சி காண்பிக்கின்றனர். இன்·போசிஸ், டி.சி.எஸ்., விப்ரோ போன்ற சேவை நிறுவனங்கள் சரியாகத் திட்டமிட்டு உழைத்தால் உலக அளவில் முன்னணி நிறுவனங்கள் ஐந்துக்குள் வரலாம். கொஞ்சம் தயங்கினாலும் சீன நிறுவனங்கள் நம் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு முன்னே சென்றுவிடும் அபாயம் இருந்துகொண்டேதான் உள்ளது. சீனாவின் வளர்ச்சி வியக்கத் தக்கது. முந்தைய நாட்களின் விலங்குகளை அவிழ்த்துவிட்டு, உள்கட்டமைப்பு, வணிக சாதுர்யம், போட்டி மனப்பான்மை இவற்றோடு அவர்கள் அனல் பறக்கும் வேகத்தில் முன்னேறுகிறார்கள். இந்த உண்மையை இந்தியக் கணினி சேவை நிறுவனங்கள் புரிந்துகொள்வது நல்லது.

*****


அரசாங்கம் என்ன செய்தாலும் வாயை மூடிக் கொண்டிருந்த காலம் ஒன்று உண்டு. அது மாறிவிட்டது. இப்போது அரசாங்கம் எதைச் செய்தாலும் அதைக் கருப்புக் கொடி காட்டி, கோஷமிட்டு, பதாகை தூக்கி எதிர்க்க ஒரு கும்பல் கிளம்பிவிடுகிறது. தொழில் ரீதியாக வளர்ச்சியே அடையாத மேற்கு வங்கத்தில் டாடா நிறுவனம் கார் தொழிற்சாலை தொடங்க முயல்கிறது. அதற்கு எதிர்ப்பு. சென்னையில் விமான தள விஸ்தரிப்புக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு. எல்லா இடத்திலும் விளைநிலம் போய் விடுவதாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் கூக்குரல். அணை கட்டக் கூடாது, அணுமின் நிலையம் கூடாது என்று 'கூடாது கோஷம்' வலுத்து வருகிறது. குணம் நாடிக் குற்றம் நாடி அவற்றுள் மிகை நாடி அதைச் செய்வதற்கு பதிலாக, எல்லாவற்றையும் அரசியல் மயமாக்கி அதில் ஆதாயம் தேடுவதே இதற்குக் காரணம். இது நாட்டின் பன்முக வளர்ச்சிக்கு நல்லதல்ல.

*****


புற்றுநோய் ஒரு கொடிய நோய். அதற்கான சிகிச்சை மிகுந்த செலவு பிடிப்பது. அந்தச் சிகிச்சை வசதி எல்லோருக்கும் எட்டும் படியாக வைப்பதற்காகத் தமது வாழ்நாளை அர்ப்பணித்திருப்பவர் பத்மபூஷண் டாக்டர் வி. சாந்தா. சென்னை புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர். அவருடனான நேர்காணல் இந்த இதழில் வெளியாகி உள்ளது. இந்த இதழின் அட்டையைப் பார்ப்பவர்களுக்கு கல்கியின் மறக்கவொண்ணாத படைப்பான மாமல்லபுரமும் சிவகாமியும் நினைவுக்கு வரலாம். பூஜா சிராலாவின் நேர்த்தியான புகைப்படம் நமது வடிவமைப் பாளர் ஜீவமணியின் கைவண்ணத்தில் இந்த விந்தையைச் செய்கிறது.

*****


தென்றல் வாசகர்களுக்கு
பாரத சுதந்திர தின வாழ்த்துக்கள்!


ஆகஸ்டு 2007

© TamilOnline.com