ஸ்ரீ கிருஷ்ணாவதாரம்
பலராமர் அவதாரத்திற்குப் பின்னும் கடைசி அவதாரமாகிய கல்கி அவதாரத்திற்கு முன்னும் நிகழ்ந்த ஒன்பதாவது அவதாரம் கிருஷ்ணவதாரம். ஐயதேவரோ பலராமாவதாரத்தைக் குறிப்பிடாமல் கிருஷ்ணாவதாரத்தையே எட்டாவது அவதாரமாகப் பாடியிருக்கிறார். இவர் புத்தர் பெருமானை ஒன்பதாவது அவதாரமாக்கி இனிவரப்போகும் கல்கி அவதாரத்தைக் கடைசி அவதாரமாகக் குறிப்பிடு கிறார்.

பெருமையே எளிமைதான்!

இறைவன் துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபானம் செய்வதற்காகப் பல்வகை அவதாரங்களும் செய் கிறான். இவற்றில் பத்து முக்கியமானவை; இந்தப் பத்து அவதாரங்களைத் தசாவதாரம் என்கிறோம். அவதார மூர்த்திகளான ராமனும் கிருஷ்ணனும் மக்களுடன் கலந்து அவர்களைத் திருத்தி பணி கொண்டதைப் போன்ற நிகழ்ச்சிச் சிறப்பை வேறு அவதாரங்களில் காண்பது அரிது. கிருஷ்ணாவ தாரத்தின் தனிப்பெருஞ் சிறப்பை இராமாவ தாரத்திலும் பார்க்க முடியாது என்பது பக்தர்களின் கருத்து.

அடியவர்க்கு எளிமை கிருஷ்ணாவதாரத்தில் வெளிப்படுவது போல் வேறு எந்த அவதாரத்திலும் வெளிப்படுவதில்லை. தூதுபோன கண்ணனின் எளிமையை இராமபிரானிடத்திலும் காண முடிய வில்லை. எனவே, சிறையிருந்தவள் ஏற்றம் சொல்வது இராமாணம் என்றும் கழுத்திலே ஓலை கட்டிக் கொண்டு தூதுபோன வைபவம் சொல்வது மகாபாரதம் என்றும் ஸ்ரீவைஷ்ணவப் பேரறிஞர்கள் கூறுகிறார்கள்.

ஸ்ரீ வைஷ்ணவத்தை வசிஷ்டாத்வைதம் என்றும், ஸ்ரீ சங்கராச்சாரியரின் வேதாந்தக் கொள்கையை அத்வைதம் என்றும் கூறுவதுண்டு. கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் வங்காள தேசத்தைச் சேர்ந்த மதுசூதன சரஸ்வதி என்ற அத்வைத ஞானி ஒருவர் இருந்தார். இவர் சங்கர வேதாந்தத்தைப் பின்பற்றிய பெரியாராக இருந்தும், தமக்குக் கண்ணன்தான் இஷ்டதெய்வம் என்கிறார். 'நாமரூபம்' (பெயரும் உருவமும்) இல்லாத பரப்பிரமத்தை நாடுகிறவர்கள் நாடி போகட்டும்; எனக்கு கண்ணனின் எளிமை போதும்' என்று பொருள்படப் பேசுகிறார்.

ஸ்ரீ கிருஷ்ணோபநிஷத் என்ற பெயருள்ள உபநிஷதம் ஒன்றும் இருக்கிறது. இது கிருஷ்ணாவதாரத்தின் சிறப்பை வெளியிடுகிறது. பிரதான உபநிஷதங் களுக்குப் பின் தோன்றிய உபநிஷதங்களில் ஒன்றுதான் இது. இந்த உபநிஷதத்தில், ஆண்டவன் மனிதனாகப் பிறக்க இசைந்ததும், முக்தி தேவியே யசோத¨யாகப் பிறந்தாள் என்ற ஒரு செய்தி காணப்படுகிறது.

தேவகியாகப் 'பிரமவித்யா மாயை' பிறந்ததாகவும், வேதம் வசுதேவ ரூபத்தில் வந்ததாகவும் இந்த உபநிஷதம் தெரிவிக்கிறது. வேதத்தின் உட் பொருளே வசுதேவபுத்திரனான வாசுதேவன் என்கிறது ருத்திர மூர்த்தியே கண்ணனது புல்லாங் குழலாக அமைந்ததாகவும் இந்த உபநிஷதம் தெரிவிக்கிறது.

கோகுலம் என்ற ஆய்ப்பாடி வைகுந்தமே இறங்கி வந்ததுதானாம். கோகுலத்திலுள்ள மரங்கள் எல்லாம் கண்ணன் இருக்கும் இடத்திலே தவம் புரிந்து பேறு பெற வந்த தவசிகளாம். கோகுலத்தில் அசுரர்களும் வந்தார்களே, அந்த இரகசியம் என்ன? தெரிய வேண்டாமா? எவ்வளவு இரசமாக ஸ்ரீகிருஷ்ணோப நிஷதம் இதற்கு விடை தருகிறது. தவவாழ்க்கைக்கு இடையூறான கோபம் பேராசை முதலான துர்குணங்களே அசுர உருவங்கள் கொண்டனவாம். இடையூறு ஏன்? இடையூற்றுக்கு இடையூறாக நல்வாழ்வு சோபிக்கத்தானே.

ஆதிசேஷன் பலராமனாகத் தோன்றினான் என்றும் இந்த உபநிஷதம் சொல்கிறது. பூமிதேவி சத்திய பாமையாக வந்தாள் என்றும், வேதங்களின் ரிக்குகள் ருக்குமணி முதலான தேவிமாராகத் தோன்றினர் என்றும் இதே உபநிஷதம் தெரிவிக்கிறது. கலி புருஷனே கம்சனாக வந்து வதம் செய்யப்பட்டானாம். ஏற்கெனவே வதமாகிவிட்டதால் கிருஷ்ண பக்தர்களுக்குக் கலியுகம் இல்லை.

பாற்கடலில் துயிலும் பரம்பொருளே கண்ணனாக வந்தான் என்பதற்கு ஓர் இரசமான சான்றையும் இந்த உபநிஷதம் காட்டுகிறது. உறியிலுள்ள கலயங்களைக் குழந்தைக் கண்ணன் உடைத்தபோது சில கலயங்களில் உள்ள பால் வெள்ளமிட்டு ஓடியதாம். பாற்கடல் வெள்ளத்தில் அறிதுயில் கலைந்து வந்தவன் இவன் என்பதற்கு இப்படிப் பாலை வெள்ளமாக ஓடவிட்டுப் பார்ப்பதும் ஒரு சான்று தானே?- என்கிறது ஸ்ரீகிருஷ்ணோபநிஷதம்.

பாற்கடலில் இப்பெருமான் அறிதுயில் அமர்ந்திருக் கிறான் என்பது மட்டுமில்லை; ஒரு குழந்தையாக அங்கே விளையாடிக் கொண்டிருக்கிறான், எப்போதும் விளையாடிக் கொண்டிருக்கிறான் என்றும் தெரிவிக்கிறது ஸ்ரீ கிருஷ்ணோப நிஷதம். பக்தியே கிருஷ்ணலீலை என்கிற விளையாட்டின் களமாம் பிருந்தாவனம். புத்தியே கிருஷ்ணனது விளையாட்டுச் செயல் திறன் என்ற கிரியா சக்தியாம்.

கீதகோவிந்தம்

ஜயதேவருடைய கீத கோவிந்தமும் கண்ணனின் எளிமையாகிய தனிப் பெருஞ் சிறப்புக்குச் சான்று தருகிறது. கண்ணன், ராதை, சகி (தோழி) என்ற மூவரையே கதாபாத்திரங்களாகக் கொண்டிருக் கிறது. கீதகோவிந்தம். இந்தப் பாத்திரங்களில் கண்ணன் பரமாத்மா, ராதை ஜீவாத்மா, தோழி ஆசாரியன்.

புருஷோத்தமனாகிய கண்ணனே புருஷன், ஜீவாத்மாக்கள் எல்லாம் பெண்கள், பிருஷோத்த மனுக்குரிய காதலிமார் என்பது கீதகோவிந்தத்தின் அடிப்படைக் கொள்கை. இந்தக் கொள்கையுடன் அதிதீவிர பக்தியை விளக்கத் தோன்றியது கீத கோவிந்தம். ஆழ்வார்களின் பாசுரங்களில் காணப் படும் நாயக நாயகி பாவத்தையும் உட்கருத்தையும் கி.பி. பதினோராம் நூற்றாண்டில் தோன்றிய கீதகோவிந்தத்திலும் காண்கிறோம்.

கர்ணாமிர்தமும் கோபிகாகீதமும்

கிருஷ்ண கர்ணாமிர்தத்திலும் ஸ்ரீகிருஷ்ணாவ தாரத்தின் தனிச் சிறப்பு வற்புறுத்தப்படுகிறது. இதை இயற்றியவர் லீலாசுகர். அழகிற்கு எல்லையான கண்ணன் திருமேனி இவரைத் திருத்திப் பணி கொண்டதாம். ஸ்ரீபாகவதம் - பத்தாம் ஸ்கந்தத்தில் வரும் கோபிகாகீதமும் கண்ணனின் எளிமையாகிய பெருஞ்சிறப்பைப் பேசுகிறது.

கண்ணன் தங்களிடம் காட்டும் காதலுக்குத் தங்கள் அழகே காரணம் என்று கோபிகைகள் செருக் குற்றிருந்தார்களாம். அந்தச் செருக்கைப் போக்கி அவர்களுக்கு அருள் புரிய வேண்டுமென்று கண்ணன் மறைந்தருளினான். கோபிகைகள் அவனைத் தேடிக் காணாமல் வருந்தினார்கள். அவனது அழகிய மங்கள குணங்களைப் பாடினார்கள். இப்படிக் கானம் செய்ததுதான் கோபிகாகீதம். இதில் கண்ணனைத் தங்கள் உறவினர்கள் என்கிறார்கள் இவர்கள்.

சகஸ்ரநாமம்

விஷ்ணு சகஸ்ரநாமம் மகாபாரதத்தின் ஒரு பகுதியாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது. இது பிற்காலச் சேர்க்கை என்று ஆராய்ச்சியாளர்கள் கருதிய போதிலும், இதுவும் மகாபாரத ஆசிரியரான வியாச முனிவர் வாக்கே என்பது நம் மக்களின் நம்பிக்கை. இது (சகஸ்ர நாமம்) கிருஷ்ணாவதரத்தின் பெருமையையும் எளிமையையும் சிறப்பாக வெளி யிடுகிறது என்கிறார்கள். ஆயிரம் திருப்பெயர் களுக்கும் ஆயர் திலகமான கண்ணனே உரிய தெய்வம் என்று பீஷ்மாச்சாரியன் சொன்னதாகப் பாரதம் தெரிவிக்கிறது.

கீதையும் முகுந்தமாலையும்

சகஸ்ரநாமத்தின் பலச்ருதி வாசுதேவ கிருஷ்ணனையே சிறப்பித்துப் பேசுகிறது. இந்த வாசுதேவ கிருஷ்ணனின் பெருமைதான் என்ன? வசுதேவ புத்திரனாகப் பரம்பொருள் வந்தது என்ற எளிமைதான் இதன் சிறப்பான பெருமை.

கடவுளிடத்தில் எல்லா உயிர்களும் அடங்கி உள்ளன என்பது பிரசித்தம் அல்லவா? அற்ப உயிர்களையும் அற்பம் என்று ஒதுக்கிவிடாமல் இறைவன் தன்னிடம் தங்க இடம் கொடுத்திருப்பதே எளிமைக்குச் சான்றுதான். அத்தகைய இறைவன் வசுதேவனுக்கும் தேவகிக்கும் குழந்தையாகப் பிறந்தான் என்ற அவதார நிகழ்ச்சி எத்தகைய மகத்தான எளிமைக்குச் சான்றாகிறது பாருங்கள்!

கண்ணன் கீதாசாரியனாக காட்சியளிப்பதும் மகத்தான எளிமைக்குச் சான்றுதான். ஜகத்குருவாகிய கீதாசாரிய ஸ்தானம் மகத்தானது. சகல வேத சாஸ்திரங்களின் சாரமான கீதையும் மகத்தான சாஸ்திரம்தான்; ஆனால், பகவத் கீதையும் பரம் பொருளின் மகத்தான கருணைக்குச் சான்றுதானே.

கீதா சாஸ்திரம் பரம ஞான சாஸ்திரமாகப் போற்றப்படுவதும் பக்தியோகப் பெரு நூலாக மதிக்கப்படுவதும் உண்மைதான். எனினும் சரணாகதி தருமத்தைப் பரம் தாத்பரியமாக வெளியிடும் பகவத் கீதை தேர்த்தட்டு வார்த்தை என்று எளிமையாகக் குறிக்கப்படும் நிலையில் அர்ச்சுனனுக்குப் போர்க் களத்தில் சொல்லப்பட்டதுதானே.

வடமொழியில் முகுந்தமாலை என்ற ஒரு பிரபந்தம் இருக்கிறது. இதன் ஆசிரியர் குலசேகரப் பெருமாள் என்பர். இவர் ஆழ்வார் குலசேகரர் தாமா என்பதில் ஐயப்பாடு உண்டு. இந்தப் பிரபந்தத்திலே கண்ணன் மூவுலகையும் காப்பதற்காக வந்த ரட்சகமணி என்று வர்ணிக்கப்பட்ட போதிலும் கோபிகைகளின் கண்களுக்கு மேகமணி என்று சிறப்பாகக் குறிக்கப் பெறுகின்றான்.

அமரர்களுக்குச் சிரோபூஷண மணியாகிய தேவதேவன் ஆயர்களுக்குச் சூடாமணி என்றும் சிறப்பிக்கப் பெறுகின்றான். ஸ்ரீ முகுந்தமாலையில் இந்தப் பிரபந்தம் கண்ணனைப் பொதுவாக அழகுக்கு முத்திராமணி என்கிறது. ருக்மணிக்கு அலங்கார மணி என்கிறது. இத்தகைய எளிமை வாய்ந்த கண்ணனிடமிருந்தே உலகம் தோன்றுகிறது என்றும் முகுந்தமாலை ஆசிரியர் கூறுகிறார்.

கண்ணனும் பாகவதமும்

கண்ணன் கதைகள் சிறப்பாகப் பாகவதத்தில் காணப்படுகின்றன என்பது பிரசித்தம். மகாபாரதம், விஷ்ணுபுராணம், ஹரிவம்சம் முதலான நூல்களிலும் கண்ணன் கதைகளைக் காண்கிறோம். எனினும் ஸ்ரீமத் பாகவதம் என்று சொல்லப்படும் புராணத்திற்குக் கண்ணனுடன் விசேஷமான தொடர்பு உண்டு.

ஸ்ரீமத் பாகவதம் பதினெட்டுப் புராணங்களில் ஒன்றாகும் என்பர். இதையும் வியாச முனிவர் (மகாபாரதம் சொன்ன வியாசமுனிவர்) சொன்னார் என்பர். வியாச புத்திரரான சுகப்பிரமம் என்ற முனிவர் பரீட்சித்து மன்னனுக்குச் சொல்லும் முறையில் அமைந்திருக்கிறது பாகவதம். இதைச் சிலர் இதிகாச பாகவதம் என்றும் சொல்வதுண்டு.

மகாபாகவதம் என்ற புராண பாகதவதம் நாரத முனிவர் சொல்ல ருக்மணி கேட்டதாக அமைந் திருக்கிறது. ஸம்ஹிதா பாகவதம் என்ற ஒன்று வைசம்பாயன முனிவர் சொல்ல ஜனமேஜய மன்னன் கேட்டதாக அமைந்திருக்கிறது. உபஸம்ஹிதா பாகவதம் என்ற நூல் ஒன்று திருமாலின் முப்பத்திரண்டு அவதார சரித்திரங்கள் கொண்டதாய் அகஸ்திய முனிவர் சுதர்சனருக்குச் சொன்ன முறையில் அமைந்திருக்கிறது. விஷ்ணு ரகசிய பாகவதம் என்ற நூல் ஹாரீத முனிவர் காசியபருக்குச் சொன்ன ரீதியில் காணப்படுகிறது. விஷ்ணு யாமள பாகவதம் பராசர முனிவர் மைத்திரேயருக்குக் கூறிய பாணியில் காணப்படுகிறது. கெளதம ஸம்ஹிதா பாகவதம் கெளதம முனிவருக்குச் சொன்ன முறையில் அமைந்திருக்கிறது.

இப்படி வடமொழியில் ஏழு பாகவதங்கள் இருக் கின்றன என்ற செய்தி கெளதம ஹம்ஹிதை என்ற நூலில் பாகவத லட்சணம் என்ற ஓர் அத்தியாயத்தில் பிரஸ்தாபிக்கப்படுகிறது. இவற்றுள் ஸ்ரீமத் பாகவதம் பல இந்திய மொழிகளிலும் பெயர்த்து எழுதப்பெற்று நாடெங்கும் பரவியிருக்கிறது.

பதினெட்டுப் புராணங்களில் ஸ்ரீமத் பாகவதத்தின் ஸ்தானத்தைத் தேவி பாகவதத்திற்கு அளிப்பவர்களும் உண்டு. எனவே, தேவி பாகவதம் என்றதும் 'எந்தப் பாகவதம்?' என்று கேட்பவர்களும் உண்டு. ஸ்ரீமத் பாகவதம் பிற்காலத்தில் தோன்றியதே என்று கருதுவோரும் உண்டு. பாகவதம் தேவி பக்தர் ஒருவரால் எழுதப்பட்டுப் பதினெண் புராணங்களுடன் சேர்க்கப் பெற்றதுதான் என்று கருதுவோரும் இருக்கிறார்கள்.

கிளி கொத்த விழுந்தது!

நன்மை தரும் பல நூல்கள் உலகத்திற்கு அளித்தும் வியாச முனிவர் தம் உள்ளத்தில் அமைதி பெறாமல் இருந்தாராம். அந்நிலையில் நாதர முனிவரைக் கண்டார். வியாசரின் உள்ளக் கலக்கத்தை உணர்ந்து கொண்ட நாரதர், ''வியாசரே! இதய சாந்தி அளிக்கும் ஆற்றல் பக்திக்குத் தான் உண்டு. அந்தப் பக்தியைத் தாங்கள் எந்த நூலிலும் சிறப்பாக எடுத்துக் காட்டவில்லையே!'' என்றார்.

இப்படிச் சொன்ன நாரதரே பாகவதத்தை இயற்றுமாறு வியாசரைத் தூண்டினார். எனவே, முழுக்க முழுக்கப் பக்தி புலப்பட வியாசர் பாகவதத்தை இயற்றினாராம். பிறகு இந்த நூலைத் தம் அருமைப் புதல்வரான சுகரிடம் கொடுத்தார். சுகர் இதைப் பிரசாரம் செய்தார். இது பாகவதத்தின் வரலாறு என்பர்.

சுகமுனிவர் தந்தையான வியாசரைக் காட்டிலும் சிறந்த ஞானியாகவும் கடுந்துறவியாகவும் வாழ்ந்தார். இத்தகைய துறவியே கண்ணன் கதைகளை ஞான சிகரமான தத்துவமாகக் காட்டுவதால் இக்கதை களுக்குத் தனிப் பெருஞ் சிறப்பு உண்டு என்பர்.

வேதமாகிய கற்பக விருட்சத்தில் உச்சிக் கொம்பிலே கனிந்த கனியாகக் காணப்பட்டதாம் ஒரு பழம். அது கிளி கொத்தக் கீழே விழுந்தது. அதுதான் பாகவதம் என்கிறார்கள். கிளிக்குச் 'சுகம்' என்ற ஒரு பெயரும் உண்டு. இந்தக் கிளிதான் சுகர் என்ற முனிவர்.

என்ன அழகான கதை! எவ்வளவு அழகாய்ப் பாகவதத்தின் தோற்றத்தை வர்ணிக்கிறது! வேதத்தின் கொம்பிலே கனிந்த கனியாகப் பாகவதம் கிருஷ்ண பக்தியை நமக்குப் புலப்படுத்துகிறதாம். இந்தப் பக்தி நூலைச் சுகர் ஏழு நாளில் மரணமடையப் போகும் மன்னனுக்க ஆறுதல் அளிக்க உபதேசித் தாராம்.

ஸ்ரீமத் பாகவதத்தில் பன்னிரண்டு ஸ்கந்தங்கள் என்ற பிரிவுகள் உண்டு. வசுதேவ புத்திரனாகக் கண்ணன் அவதரித்துத் திருவிளையாடல்கள் புரிந்து உலகத்தை உய்வித்த கதை பத்தாவது ஸ்கந்தத்தில் விரிவாகச் சொல்லப்படுகிறது. கிருஷ்ண கர்ணாமிர்தத்தை லீலாசுகர் என்ற பக்தர் இயற்றியதும் சுகமுனிவர் சொன்ன கண்ணன் கதையை ஒட்டித்தான்.

நாராயணீயம் முதலியன

நாராயணீயம் என்ற பிரசித்தமான பக்த காவியம் ஒன்று, இன்றும் பிரசாரத்தில் இருக்கிறது. இதனை நாராயண பட்டதிரி நம்பூதிரி இயற்றினார். இது குருவாயூரப்பன் என்ற கண்ணபிரானைப் போற்று வதாக அமைந்திருக்கிறது. இந்த அருமையான பக்தி நூலும் ஸ்ரீமத் பாகவதக் கதையைத் தழுவியதுதான். வேதாந்த தேசிகர் இயற்றிய ''யாதவாப்யுதயம்'' என்ற நூலிலும் பாகவத வாடை வீசுகிறது.

இவையெல்லாம் பக்தியின் தனிச்சிறப்பை புலப் படுத்துகின்றன. எளிதில் உள்ளத்தைப் புனிதமாக்கிக் கொண்டு பேறுபெறும் வழியைக் காட்டுவது பக்திதான் என்ற கொள்கையை வெளியிடும் பிற்காலப் பிரபந்தங்களெல்லாம் ஸ்ரீமத் பாகவதத்தைத் தழுவியனவே என்பர். இந்த நிலையில் பாகவதம் தோன்றியது பக்தியை ராஜ வழியாக மக்கள் அனைவர்க்கும் காட்டுவதற்குத்தான் என்று கருதுவது பொருந்துமல்லவா?

தமிழரும் பாகவதக் கதைகளும்

பாகவத காலத்திற்கு முன்பே கண்ணன் கதைகள் நம் தமிழகத்திலும் இடம் பெற்றிருந்தன. பாகவதத்தில் காணப்படாத (கண்ணனைப் பற்றிய) செய்திகளும் பழைய தமிழ் நூல்களில் காணப்படுகின்றன. கண்ணனும் பலராமனும் விளையாடிய இளம் பருவ விளையாடல்கள் தமிழகத்திலும் நாடக ரூபமாக ஆடப்பெற்று வந்தன. கண்ணனைக் கறுப்பன் என்றும், பலராமனை வெள்ளையன் என்றும் பாமர மக்களும் நீண்ட காலமாக நம் தமிழ்நாட்டில் அறிந்ததிருந்த னர்.

இப்படி வழிவழியாகக் கண்ணனையும் ஒருவாறு கண்ணன் கதைகளையும் அறிந்திருந்த தமிழ் மக்களுக்கு வடமொழிப் பாகவததைத் தமிழில் முதல் முதல் மொழி பெயர்த்தளித்த புலவர் மாதவ பண்டிதர் என்ற செவ்வைச் சூடுவார். இவர் வேம்பத்தூரர் என்று பிரசித்தி பெற்றிருக்கும் தமிழறிஞர் கூட்டத்தைச் சார்ந்தவர்.

வேறொரு பாகவதமும் தமிழில் உண்டு. செவ்வைச் சூடுவார் பாகவதத்தைப் பாகவத புராணம் என்று வழங்குகிறார்கள். 'மகாபாகவதம்' என்று சொல்லப் படும் மற்றொரு பாகவததை 'ஐயங்கார் பாகவதம்' என்றும் கூறுவதுண்டு. இந்த ஐயங்கார் வரதராஜ ஐயங்கார் என்ற அருளாளதாசர். இந்தப் பாகவதம் பதினாறாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன் றியது.

ஐயங்கார் பாகவதம் ஸ்ரீமத் பாகவதத்தின் மொழி பெயர்ப்பு அன்று. நாரதர் ருக்மிணிக்குச் சொன்னதாக மகாபாகவதம் என்ற ஒரு நூலைக் குறித்துப் பிரஸ்தாபித்தோமல்லவா? அதன் மொழி பெயர்ப்பே ஐயங்கார் பாகவதம். இக்குறிப்பை இந்தத் தமிழ்ப் பாகவதத்திலேயே காண்கிறோம். ஐயங்கார் பாகவதத்துப் பாடல்களின் தொகை 9147. வடமொழி மகாபாகவதத்தின் சுலோகங்கள் பதினெண்ணாயிரம்.

ஐயங்கார் பாகவதத்தில் ஸ்ரீரங்கநாதன் ஸ்ரீரங்கநாயகி முதலானவர்களுக்கு வாழ்த்துக்கள் காணப்படுகின்றன. இப்புலவர் ஆழ்வார், ஆசாரியர் களையும் வாழ்த்திச் செல்லுகிறார். இப்புலவருக்கு கம்பராமாயணத்தில் பற்று அதிகம். 'கம்பன் மொழி செந்தமிழின் கவித் திறத்தின் காட்சி' என்று இவர் தம் அவையடக்கச் செய்யுளில் கூறுவது நோக்கத் தக்கது.

இராம கதைக்குக் கம்பன் கிடைத்தது போல் கண்ணன் கதைக்கு மகாகவி ஒருவரும் கிடைக்க வில்லை என்றாலும், கண்ணன் கதைகள் தமிழ் மக்கள் உள்ளத்தில் சாதாரண நூல்கள் வாயிலாகவும் நிலைபெற்றுவிட்டன என்பதற்கு குசேலோ பாக்கியானம். கஜேந்திர மோட்சம் முதலான நூல்கள் சான்றாகும். கண்ணன் திருவிளையாடல்களைக் குறிப்பிடும் கீர்த்தனங்களும் தமிழர்களிடையே கண்ணனது தனிச்சிறப்பு என்று கருதப்படும் எளிமையாகிய பெருமையை நிலை நிறுத்தி யிருக்கின்றன என்று கருதலாம்.

நம் தேசிய கவியாகிய பாரதியாரும் இன்றைய தமிழிலக்கியத்தில் கிருஷ்ண பக்தியை வேரூன்றச் செய்திருக்கிறார். இவரது கண்ணன் பாட்டை அறியாத இன்றைய தமிழர் இல்லை. பாரதியாருக் குக் கண்ணனே பராசக்தியாகவும் காட்சியளித்தான்; பிற தெய்வங்களாகவும் காட்சியளித்தான். பாரதியார் வாக்கிலும் கிருஷ்ணாவதராத்தின் தனிசிறப்பு இனிது புலனாகிறது.

பி.ஸ்ரீ

© TamilOnline.com