கிருஷ்ண ஜெயந்தி பட்சணங்கள்
கை முறுக்கு

தேவையான பொருட்கள்
பச்சரிசி - 3 ஆழாக்கு
பருப்பு - 1/2 கரண்டி
எள்ளு - 2 ஸ்பூன்
பெருங்காயம்- சிறிய கட்டி
வெந்தயம் - 3/4 கரண்டி
எண்ணெய் - 3 ஆழாக்கு
உப்பு - தேவையானது

செய்முறை

பெருங்காயத்தை தண்ணீரில் ஊற வைக்கவும். எள்ளை களைந்து கல், மண் வடிகட்டவும். வாணலியை அடுப்பில் போட்டு சூடானதும் அரிசியை லேசாக வறுத்து சூடு ஆறியதும் தண்ணீரில் ஊறவைக்கவும்.

1 மணி நேரம் ஊறியதும் தண்ணீரை வடிகட்டி துணியில் காய வைத்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.

உளுத்தம்பருப்பையும் லேசாக வறுத்து மிக்ஸியில் வழவழப்பாக அரைக்கவும். வாயகன்ற பேஸினில் அரிசி மாவு, உளுத்த மாவு, வெந்தயம், எள்ளு, உப்பு, பெருங்காய தண்ணீர் இவற்றை சேர்த்து தேவையான நீர் விட்டு பிசையவும் (சப்பாத்தி மாவு போல) சிறு கிண்ணத்தில் 1/4 கரண்டி எண்ணெய் விட்டு விரல்களில் எண்ணெய் தடவி மாவை சிறு உருண்டையாக உருட்டி உள்ளங்கையில் வைத்து ஆள்காட்டி விரல், நடுவிரல், கட்டை விரல் இவற்றுக்கு நடுவில் மாவை மெல்லிய இழை போல் கொண்டு வந்து பேப்பரில் அல்லது வெள்ளை துணியில் சுற்றவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சுற்றிய முறுக்குகளை தோசை திருப்பியால் உடையாமல் எடுத்து காய்ந்த எண்ணெயில் போட்டு ஓசை அடங்கியதும் எடுக்கவும்.

இந்திரா காசிநாதன்

© TamilOnline.com