ஆர். சண்முகசுந்தரம்
நவீன தமிழிலக்கிய வரலாற்றில் மணிக்கொடி எழுத்தாளர் பரம்பரைக்கு முக்கியமான இடமுண்டு. இந்தப் பரம்பரையில் வந்தவர் ஆர். சண்முக சுந்தரம். மணிக்கொடியில் சிறுகதை எழுத ஆரம்பித்தவர், பின்னர் நாவல் எழுத்தாளராக மாறினார். மணிக்கொடி எழுத்தாளர்களில் நாவல் எழுதியவர் ஆர். சண்முகசுந்தரமாகத்தான் இருப்பார்.

ஆர். சண்முகசுந்தரம் பழைய கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தற்போது ஈரோடு மாவட்டத்திலுள்ள தாராபுரம் வட்டம், கீரனூர் என்னும் சிற்றூரில் 1917ஆம் ஆண்டு பிறந்தவர். சிறுவயதிலேயே தாயார் இறந்துவிட்டார். பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தவர். பாட்டியிடம் கதைகள் கேட்பது அவருக்கு இலக்கிய ஆர்வம் வளர ஒரு காரணமாயிற்று.

ஆர். சண்முகசுந்தரத்தின் தம்பி திருஞான சம்பந்தம். இவர்கள் இருவரும் இணைபிரியாமல் இறுதிவரை கூட்டுக்குடும்பமாகவே வாழ்ந்து வந்தவர்கள். இலக்கிய ஆர்வத்திலும் ஒத்தகருத்து உடையவர்களாகவே இருந்து வந்தனர்.

ஆர். சண்முகசுந்தரம் பள்ளிப்படிப்பை முடித் திருந்தார். இந்தி, உருது, ஆங்கிலம் ஆகிய மொழிகளையும் கற்றிருந்தார். இலக்கிய ஆர்வமிக்க ஒருவராகவே வளர்ந்து வந்தார். சிறுகதை, நாவல் ஆகிய இலக்கிய வகை மைகளுடனான பரிசசயம் அவருக்குள் தீவிர இலக்கியவாதியை அடையாளம் காட்டியது.

சிறுகதை எழுதத் தொடங்கியவர் நாவல் எழுத்தாளராக நிலைபெறத் தொடங்கினார். நாகம்மாள் என்ற நாவலை 1939இல் எழுதி 1942ல் வெளியிட்டார். இந்த நாவல் கொங்குநாட்டு மக்களின் பழக்கவழக்கங்கள், பண்பாடுகள், வாழ்வியல் முறை யாவற்றிலும் உள்ள தனித்தன்மைகளை அடையாளம் காட்டும் எழுத்தாக நாகம்மாள் வெளிவந்தது.

கொங்கு நாடு மலைகள சூழ்ந்த, பெரும் பகுதியும் வறட்சியான நிலப்பகுதியைக் கொண்டதாகும். கொங்குவாழ் மக்களின் பழக்கவழக்கங்கள், பண்பாடுகள், வாழ்வியல் முறைகள் யாவற்றிலும் பலத்த வேறுபாடுகள் உண்டு. அதற்கேற்ப இம்மக்களின் உளப்பாங்கும் சிக்கல்களும் முரண்களும் உள்ளன.

சிறுவிவசாயிகளின் வாழ்க்கை பற்றிய அந்த மக்களிடையேயான உறவுகள், முரண்கள் மிக இயல்பாக நாவலில் வெளிப்பட்டது.

நாகம்மாள் எழுதுவதற்கான பின்னணி குறித்து அவரே ''அப்போது பாகிஸ்தான் பிரிவினையைப் பற்றிய பேச்சு அடிபட்ட நேரம். மகாத்மா போன்ற தலைவர்கள் ஒற்றுமையை வற்புறுத்திக் கொண்டிருந்தனர். இந்திய கிராமங்களிலும் நாட்டுப் பிரிவினையைப் போல குடும்பங்களில் பாகப் பிரிவினைகள் அதிகமாயின. இதனால் பிரிவினையைப் பற்றிய எண்ணத்தை மக்களின் மனத்தினின்றும் அகற்ற கிராம சமூகத்தில் நடக்கும் ஒரு வீட்டு வாழ்க்கையை மையமாக வைத்து நாகம்மாளை எழுதினேன்'' என்று கூறுகிறார்.

புராதான காலத்தில் இருந்து கொங்குநாடு தமிழ்நாட்டோடு பெரிதும் தொடர்பற்ற பகுதி யாகவே இருந்துள்ளது. எந்தப் பெரிய மன்னனின் ஆட்சியின் கீழும் கொங்குநாடு இருந்ததில்லை. இத்தகைய வரலாற்று ஓட்டங்கள் கூட கொங்கு நாட்டு மக்களின் தனித்தன்மையை மனஇயல்பை மொழி வழக்காறுகளை தீர்மானித்துள்ளன.

கொங்கு நாட்டு வாழ்வியல் பண்பாட்டுப் பின்புலத்தில் இருந்து வெளிப்பட்ட எழுத்தாளர்கள் தமிழ் இலக்கியப் பரப்புக்கு புதிய களங்களை கொண்டு வந்து சேர்த்துள்ளனர். இந்த மரபின் தனிச்சிறப்பு மிக்க எழுத்தாளராக பரிணமித்தவர்தான் ஆர். சண்முகசுந்தரம்.

நாகம்மாள் (1942), பூவும் பிஞ்சும் (1944), பனித்துளி (1945) ஆகிய மூன்று நாவல்களை எழுதினார். 1945க்குப் பிறகு சுமார் பதினைந்து ஆண்டுகள் வரை அவர் எழுதவில்லை. மீண்டும 1960களில் எழுதத் தொடங்கி 1970வரை நிறையவே எழுதினார்.

புதுமலர் நிலையம் எனும் வெளியீட்டகத்தையும், புதுமலர் அச்சகத்தையும் நடத்தியுள்ளார். மேலும் வசந்தம் என்னும் இதழை எறத்தாழ இருபது ஆண்டுகள் நடத்தியுள்ளார். எழுத்தையே முழுநேரத் தொழிலாகக் கொண்டு வாழ்க்கை நடத்தியுள்ளார். காந்திய ஈடுபாடும், காந்தியச் சிந்தனைக்கான வாழ்க்கை முறையையும் ஓரளவு கடைப்பிடித்து வந்தவர். இறுதிவரை கதராடையே அணிந்து வந்தார். வறுமையில் உழன்ற எழுத்தையே நம்பி வாழும் வாழ்க்கைக்கு ஆர். சண்முகசுந்தரமும் எடுத்துக் காட்டாகவே வாழ்ந்துள்ளார்.

நூற்றுக்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்புகளை மேற்கொண்டுள்ளார். வானொலி நாடகங்கள், சிறுகதைகள், நாவல்கள் என அவரது படைப்புலகம் விசாலமாகவே உள்ளது. மொத்தமாக 21 நாவல்களை எழுதியுள்ளார்.

கொங்குபிரதேசத்தின் வட்டாரத் தன்மையை நன்கு வெளிப்படுத்தும் வகையில் அந்த மக்களின் வாழ்வியல் நடைமுறைகள் அந்த மக்களுக்கேயுரிய மொழி அனுபவத்தில் வெளிவந்துள்ளமைதான் ஆர். சண்முகசுந்தரத்தின் தனிச்சிறப்பு. தமிழில் வட்டார இலக்கியம் அதன் உயிர்ப்போடு அதன் மொழியோடு வெளிவருவதற்கு ஆர். சண்முக சுந்தரத்தின் எழுத்து நடை, மொழிநடை அழகாக அமைந்துள்ளது. கொங்குவட்டார கிராம மக்களின் - வாழ்வியல் கூறுகள் அறிந்து கெள்வதற்கு எழுத்துப்பூர்வமான ஆதாரங்களாக ஆர். சண்முகசுந்தரத்தின் படைப்புகள் இருந் துள்ளன என்றால் மிகையாகாது. தமிழின் உயிர்ப்பாற்றலை வட்டாரச் சிறப்போடு வெளிப்படும் வகையில் கொட்ட முடியும் என்பதை ஆர். சண்முகசுந்தரம் படைத்துக் காட்டிச் சென்றுள்ளார்.

ஆர். சண்முகசுந்தரத்தின் படைப்பாளுமை தமிழின் வட்டார இலக்கிய வகைமைகளுக்கு தெளிவான ஊற்றுமூலமாயிற்று. இவர் தமது அறுபதாம் வயதில் இயற்கை எய்தினார். (1.9.1977). ஆனாலும் அவர் படைப்புகள் கொங்குவட்டாரத்தில் உயிர்ப்பை பறைசாற்றிக் கொண்டிருக்கும் எழுத்துகளாகவே உள்ளன.


படைப்புகள்
1. மனமயக்கம் - சிறுகதை
2. நாகம்மாள் - நாவல்
3. பூவும் பிஞ்சும் - நாவல்
4. விரிந்த மழை - நாவல்
5. தனிவழி
6. சுட்டி சுட்டது

மொழி பெயர்ப்பு
1. அசலா - சரத்சந்திரர்
2. பார்வதி - சரத்சந்திரர்
3. வைகறை - தாராசங்கர் பானர்ஜி
4. ஆனந்தமடம் - பங்கிம்சந்திரர்
5. ராஜசிம்மன் - பங்கிம் சந்திரர்

தெ. மதுசூதனன்

© TamilOnline.com