ஜெயமாதங்கியின் மாசற்ற மதுரதமிழ் இசை விருந்து
செவ்வேட்பரமனாகிய முருகக்கடவுளுக்க வருடத் தில் தினந்தோறும் திருவிழாதான். ஆனால் கார்த்திகைப் பெண்டிர்களால் வளர்க்கப்பட்ட கார்த்திகேயப் பெருமானுக்கு ஆடிமாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திர நாளும், தை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திர நாளும் சிறப்பானவை. முருகனடியார்கள் இவ்விரண்டு நாட்களையும் விரதமிருந்து சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். ஆடிக்கிருத்திகைத் திருநாள் ஆகஸ்டு 3, 2002 சனிக்கிழமையன்று விரிகுடாப்பகுதியில் ஸன்னிவேல், லில்லி அவின்யுவில் திரு. சிவமணி அவர்களின் இல்லத்தில் ஷண்முகக் கடவுளுக்கு அர்ப்பணமாக ஏற்பாடகியிருந்த திருமதி. ஜெயமாதங்கி அவர்களின் இசைக்கச்சேரியுடன் விழா கொண்டாடப்பட்டது. திரு.சிவமணி அவர்கள் பலவருடங்களாக விரிகுடாப் பகுதியில் கர்நாடக இசைவளர தன்னலம் கருதாமல் தன் இல்லத்திலேயே சங்கீதவித்வான்களையும், வளரும் இளம் இசைக்கலைஞர்களையும் ஊக்கு விக்கும் நோக்குடன் கச்சேரிகள் ஏற்பாடு செய்து வித்வான்களை கெளரவித்து இசைக்கலைக்கு அரும்பணியாற்றுகிறார் என்று கூறினால் அதுமிகை யாகாது வளர்க அவரது இசைப்பணி!

திருமதி. ஜெயமாதங்கி அவர்களின் கச்சேரியின் சிறப்பு அம்சமாக முருகனின் திருநாளில் விநாயகர் துதி தவிர மற்ற பாடல்களும் முருகனைப் பற்றிய பாமாலையாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. கச்சேரியில் முருகனடியார்கள் இயற்றிய பாடல் களாக ஸ்ரீமுத்துஸ்வாமி தீக்ஷ¢தரின் 'சுப்ரமண்யேனே', தமிழ் தியாகய்யர் திரு. பாபநாசம் சிவனின் ஸ்ரீவள்ளி தேவஸேனாபதே, திரு. பெரியசாமி தூரனின் 'முருகா முருகா', 'கலியூக வரதன்', 'அருணகிரிநாதரின் திரு வருணை, திருச்செந்தூர் கயிலைமலை, சிதம்பரம் முதலிய தலங்களில் பாடிய திருப்புகழ்பாடல்கள், ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாஸ சுவாமிகளின் பகை கடிதல், பொன்மயில் கண்ணி முதலியவை இடம் பெற்றன.

ராகங்களை விஸ்தாரமாகப் பாடாமல் கந்தரலங்கார விருத்தங்களை விஸ்தாரமாக தோடி, சாவேரி, சண்முகப்பிரியா ராகங்களில் பாடி, திருப்புகழ் பாடல்களை செவிக்கு விருந்தாக விளம்பகாலம், மத்யமகாலங்களில் பாடியது மிகவும் சிறப்பாக இருந்தது. பெஹாக், தேஷ், வலஜி, காபி ராகங்களில் பாடிய பாடல்கள் செவிக்கு இனிமையாக இருந்தன. ஸ்ரீகவிகுஞ்சரபாரதி சுவாமி மலைநவரத்ன மாலையை ராகமாலிகை விருத்தமாக காம்போதி, சாவேரி, காபி ராகங்களில் பக்திப் பரவசத்துடன் இனிமை யாகப் பாடினார். செவ்வேட்பரமன் அவர்கள் நாவில் வேலேந்தி, மயிலேறி நடம் புரிந்தார் என்றே கூறலாம்.

ஒரு கச்சேரி சிறப்பாக அமைய பக்கவாத்யங்கள் நன்றாக அமையவேண்டும். அந்த வகையில் திரு. அரவிந்த் லக்ஷ்மிகாந்தன் அவர்கள் வயலின் வாசித்து கச்சேரி சிறப்புற அமைத்துக் கொடுத்தார். இவர் காலஞ்சென்ற வயலின் மேதை லால்குடி கோபா லய்யரின் மகளான திருமதி. ஸ்ரீமதி பிரும்மானந்தம் அவர்களின் சிஷ்யர். லால்குடி ஸ்கூல் பாணியே தனி. அதில் தயாராகியுள்ள மாணவனின் வாசிப்பு எல்லோ ரும் அறிந்ததே. இவருடைய வாசிப்பு ஒரு நல்ல கச்சேரிக்கு மெருகூட்டுவது போல் அமைந்தது.

அடுத்து லயவித்வான் திரு. ரவீந்திரபாரதி அவர்கள் திருப்புகழ் பாடல்களுக்கு அனுசரணையாக கச்சேரி சிறப்பாக திறம்பட மிருதங்கம் வாசித்தார். அவருடைய 'தனி' பிரமாதம்.

திருமதி ஜெயமாதங்கி விஸ்வநாதன் அவர்களைப் பற்றி சில வரிகள்:

இவர் தனது ஆறாவது வயதிலேயே கர்நாடக இசை பயிலத்தொடங்கி தனது 14வது வயதில் முதன்முதலாக சோளிங்கர் மலை அருள்மிகு. யோகநரஸிம்மஸ்வாமி கோயிலில் வஸந்தோத்ஸவ விழாவில் கச்சேரியை அரங்கேற்றினார். இவரது குரு திரு. கிருஷ்ணமூர்த்தி ஐயர் (வித்வான் கிட்டிமணி ஐயர்) இவர் சங்கீதமேதை மகாராஜபுரம் திரு. விஸ்வநாத ஐயரின் சிஷ்யர். திருமதி. ஜெயமாதங்கி தனது காலஞ்சென்ற தகப்பனார் திருப்புகழ் அடிமை திரு. கே.ஆர். வெங்கட்ராமய்யரிடம் திருப்புகழ் பாடல்கள் பயின்று தனது 11வது வயதிலேயே கோவில் திருவிழாக்களிலும், திருவருணை அருணகிரிதநாதர் விழாக்களிலும் திருப்புகழ் கச்சேரி செய்துள்ளார். இவர் சென்னை மத்திய கர்நாடக இசைக் கல்லூரியில் வித்வான் பட்டம் பெற்றவர்.

பக்திப் பரவசத்துடன் செவிக்கினிய விருந்தாக அமைந்திருந்த ஆடிக்கிருத்திகை கச்சேரியில் கூடியிருந்த நிறைய ரசிகர்கள் மனங்குளிர நேரில் இவரைப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

ஆருத்ரா

© TamilOnline.com