அட்லாண்டா பக்கம்
ஜார்ஜியா தமிழ் சங்கம் இப்போது படு ஆக்டிவ் மாதம் ஒரு நிகழ்ச்சியை தமிழர்களுக்குக் கொடுக் கிறார்கள். நல்ல ஒரு ஆடிடோரியத்தையும் பிடித்துவிட்டனர். இந்த சுறுசுறுப்பான தமிழ் சங்க நிர்வாகிகளுக்கு நமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஆகஸ்ட் 3ம் தேதி "முத்தமிழ் விழா" மதியம் 2.30 மணியிலிருந்து இரவு 8.30 வரை. TKS கலைவாணனின் கர்நாடக இசை, திருமதி உமையாள் முத்து, Dr. மோகன் மற்றும் Dr. நிர்மலா மோகனின் வழக்காடு மன்றம், "ராஜ ராஜ சோழன்" என்ற சரித்திர நாடகம். எல்லோருமே தமிழகத் திலிருந்து வந்து அட்லாண்டாவில் 5 நாட்கள் தங்கி நிகழ்ச்சியை நடத்திக் கொடுத்தனர்.

மிகவும் குறைந்த விலைக்கு உள்ளே செல்ல நுழைவுக் கட்டணம். அடல்ட்ஸ் ஒருவருக்கு $6. ஆறிலிருந்து 12 வயது வரை மூன்றறை டாலர்கள். ஏன் குறைந்த கட்டணம்? இந்த நல்ல நிகழ்ச்சியை அட்லாண்டா தமிழர்கள் எல்லோரும் பார்க்க வேண்டும். கட்டணம் அதற்குத் தடையாக இருக்கக் கூடாது என்ற நல்லெண்ணம்தான். இந்த நல்ல எண்ணம் ஈடேறியதா என்றால் வருத்தத்துடன் இல்லை என்று சொல்ல வேண்டி இருக்கிறது. கூட்டம் குறைவுதான். பலர் என்ன காரணமோ தெரியவில்லை இந்த நல்ல விழாவை மிஸ் செய்து விட்டனர். தமிழ் சங்கத் தலைவர் நாகி நடராஜன் அவர்களுக்கு மிகவும் வருத்தம் அதை மேடையிலேயே இரண்டு மூன்று முறை மனம் வருந்திக் கூறினார். ஐயோ இந்த நல்ல நிகழ்ச்சியை விட்டுவிட்டார்களே என்ற ஆதங்கம் அவர் பேச்சில் தெரிந்தது. மிகவும் நியாயமான வருத்தம் தான்.

சரியான நேரத்திற்கு ஆரம்பித்து நிகழ்ச்சியை சரியான நேரத்தில் முடித்தார்களா? என்ற கேள்வி யைக் கேட்க இம்முறை எனக்கு அருகதை கிடை யாது. ஏனேனில் நான் சென்றதே ஒரு மணி நேரம் லேட்டாக. பழியை தூக்கி என் மனவி மேலும், கூட்டிச் சென்ற நாக். நாகராஜன் மீதும் ஈசியாக போடலாம் ஆனால் மனசாட்சி கூடாது என்று அடம் பிடிக்கிறதே. (அதுவும் தவிர இதை படித்துவிட்டு நம்மை சும்மா விடுவார்களா? என்னால் தான் லேட் என்று கச்சைக் கட்டிக்கொண்டு சண்டைக்கு வந்துவிடுவார்களே, எதற்கு வீண் வம்பு?). என்ன செய்வது தவறு என் மேல்தான் அதனால் அவர்களும் லேட் என்னால். மன்னிக்க வேண்டுகிறேன். ஆனால் ஒரு அற்ப சந்தோஷம், எங்களுக்குப் பிறகு சிலர் வந்தனர்.

அந்தக் கால TKS சகோதரர்களின் வாரிசு "கலைமாமணி" TKS கலைவாணன் இசை மனதை பிசைந்தது. நல்ல குரல் வளம். மிகவும் ரசித்து ரசிகர்களுக்காகப் பாடினார், பாடினார், பாடிக் கொண்டே இருந்தார். நிர்வாகிகள் வந்து "ஐயா அடுத்த நிகழ்ச்சிக்கு போகவேண்டும் என்று பல்முறை சொல்லும் வரை. ஆனால் கேட்பவர்கள் எப்போது இது முடியும் என்று நிச்சயமாக நினைக்கவில்லை என்பது பொய்யல்ல. சிந்து பைரவி படத்தில் வருவது போல ரொம்ப சிம்பிளான பாடல்களை என்னைப் போன்ற இசை ஞானம் இல்லாதவர்களும் ரசிக்கும்படி (முக்கியமாக புரியும் தமிழில்) அருமையாகப் பாடினார். புலிக்குப் பிறந்தது பூனையாகாது என்று இன்று TKS சண்முகம் அவர்கள் இருந்திருந்தால் பூரித்துப் போயிருப்பார். மறைந்த திரு MGR அவர்களே இவரது இசையைக் கேட்டு பலமுறை போனிலும் நேரிலும் வாழ்த்தி இருக்கிறார்.

அடுத்தது ஒரு அருமையான "வழக்காடு மன்றம்".

மறைந்த கவிஞர் கண்ணதாசனுக்கு நிரந்தரப் புகழைக் கொடுத்தது அவர் எழுதிய காதல் பாடல்களா? அல்லது தத்துவப் பாடல்களா? என்ற தலைப்பில். திருமதி உமையாள் முத்து, Drs. மோகன் மற்றும் நிர்மலா மோகன். இந்த மூவர் குழு மிகவும் புகழ் பெற்றவர்கள். தமிழக மேடைகளை பட்டி மன்றத்தாலும், வழக்காடு மன்றங்களாலும் 3000 முறைக்கும் மேல் கலக்கி உள்ளனர். ரொம்ப லாவகமானப் பேச்சு. சிரிப்புக்குப் பஞ்சமே இல்ல. வார்த்தைக்கு வார்த்தை சிரிப்பு வெடிகள். அதுவும் Dr. மோகன் அசத்திவிட்டார். அந்த மூவருமே "அறிவு ஜீவிகள்" என்று அவர்களைப் பார்க்கும் போதே பளிச் என்று தெரிகிறது. (வீட்டிற்கு வந்து ஒரு முறை கண்ணாடியைப் பார்த்து பெருமூச்சு விட்டுக் கொண்டேன்).

Dr. மோகன் ஆரம்பத்திலேயே எனக்கு பாட வராது எனது முதல் நிகழ்ச்சியில் ஆர்வக் கோளாறால் நான் ஒரு பாடலைப் பாடினேன் உடனே ரசிகர்கள் "once more" கேட்க நான் அசந்து போய் ஆகா இந்த திறமை நமக்குத் தெரியாமல் போய்விட்டதே என்று எண்ணி மறுபடி பாட ரசிகர்கள் மீண்டும் "ஒன்ஸ் மோர்" கேட்க புல்லரித்துப் போய் "ரசிகர்களே இந்த பாடலையே திரும்பத் திரும்பப் பாடினால் எப்படி இன்னும் நிறைய பாடல்கள் இருக்கிறதே" என்று கூற அவர்கள் எழுந்து "முதலில் இதை சரியாக பாடு அப்புறம் தான் அடுத்தது" என்று பதில் சொல்ல அன்றோடு பாடுவதை நிறுத்தி பேச்சில் மட்டும் கவனம் செலுத்தினாராம். இருந்தும் ஒன்று இரண்டு முறை உணர்ச்சிவசப்பட்டு ஓரிரு பாடல்களைப் பாடினார். நாங்கள் யாரும் "ஒன்ஸ் மோர்" கேட்கவில்லை.

இந்த வழக்காடு மன்ற தலைப்பு பாடல்களைப் பற்றி இருந்ததால் மூவருமே பாடவேண்டியக் கட்டாயம் நமக்கும் அதை கேட்க வேண்டிய?

ஏனோ தெரியவில்லை அந்த நேரம் ஒரிஜினல் பாடகர்கள் TMS & சுசீலா ஞாபகம் வந்துக் கொண்டே இருந்தது. ஆனால் சத்தியமாக அவர் களால் இந்த மூவரைப் போல பேசமுடியாது என்பது சர்வ நிச்சயம். வழக்காடு மன்றத்திற்கு பேச்சு தானே முக்கியம், பாடல் இல்லையே. பின்னி எடுத்து விட்டார்கள் அருமையான உதாரணங்கள், அருமை யான நடை, எல்லோரும் புரிந்து கையைத் தட்டித் தட்டி கைவலியே வந்து விட்டது என்றால் அது பொய்யல்ல.

அடுத்ததாக நாடகம் "ராஜ ராஜ சோழன்" இந்தியா முழுவதும் TKS பிரதர்ஸ் குழுவால் 5000 முறைக்குமேல் நடிக்கப்பட்ட காவியம். சிறு வயதில் எனது ஊரில் 6000 பேர்களுக்கு மத்தியில் நின்று கொண்டு நான் வாயைப் பிளந்து ரசித்த நாடகம். இதையெல்லாம் பார்த்துத்தான் நாடக உலகில் நுழையவேண்டும் என்ற தாகத்ததை உண்டாக்கிய நாடகம். அதை திரும்ப அட்லாண்டாவில் 40 வருடங்களுக்குப் பிறகு பார்க்கப்போகிறோம் என்ற எண்ணமே அதிக சந்தோஷத்தைக் கொடுத்தது. எப்போது ஆரம்பிக்கும் என்று காத்துக் கொண்டிருந்தேன். அந்த நல்ல நேரம் வந்து நடிக நடிகைகளை சரித்திரப் பாணி உடைகளுடன் பார்த்தபோது உணர்ச்சிவசப்பட்டு கை தட்டி விட்டேன். எனது சந்தோஷத்தை விவரிக்க வார்த்தையே கிடையாது.

நடித்த அத்தனை நடிக நடிகைகளும் மிக நன்றாக நடித்தனர். குந்தவையாக நடித்த சாந்தி கணேஷ் நல்ல நடிப்போடு நல்லா நடனமும் ஆடினார். 8 வயதிலிருந்தே நடனம், நடிப்பு என்று கலை உலகிற்கு வந்து மேடையில் பிரகாசிக்கிறார். சென்னையில் உள்ள எல்லா பிரபல நாடகக் குழுவிலும் நடித்து இருக்கிறார். நிறைய அவார்டுகளும் வாங்கியுள்ளார். பல படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து நல்ல பாத்திரங்கள் செய்து கொண்டு இருக்கிறார். இவர் புகழ் இன்னும் பரவ வாழ்த் துக்கள்.

இந்தக் குழுவின் மற்றொரு நடிகை "கலைமாமணி" G. ஷியாமளா. இவரும் அனுபவம் மிகுந்த நடிகை. மிக நல்ல நடிப்பு. வேடப் பொருத்தம் பிரமாதம். திரு R.S. மனோகரின் சரித்திர நாடகங்களில் நடித்துத் தன் ஆற்றலை வளர்த்துக்கொண்டவர். நடிப்பிற்க் காக பல பரிசுகள் பெற்றிருக்கிறார்.

திரு T. குமரேசன். 71 வயது நிரம்பிய இளைஞர். இவர் நாடகத்தில் மஹாராஜாவிற்கு ராஜ தந்திரியாக வந்து வில்லன் நடிப்பில் கொடி நாட்டினார். 9 வயதில் TKS நாடகக்குழுவில் சேர்ந்து குருகுலவாசம் செய்து பிறகு 1950ல் போக்குவரத்துத் துறையில் வேலைக்குச் சேர்ந்து 40 வருடம் சைடில் நாடகங்கள் எழுதி, இயக்கி, ஜமாய்த்திருக்கிறார். வேலையில் இருந்து ரிடையர் ஆனதும் மறுபடியும் முழு நேர நடிப்புக்கு வந்து இப்போது TKS குழுவில். இவருடன் பேசிப் பழகினால் யாருக்குமே தனக்கு வயதாகி விட்டது என்ற எண்ணமே வராது. ஒரு மிக ஆக்டிவ் 71 வயது இளைஞர் இவர்.

V. ஜெயகோபி. சதர்ன் ரெயில்வேயில் பணி. இவருக்கு இங்கே என்ன வேலை? நடிப்பு ஆர்வம்தான். கலை தாகம் தான். இவர் ஒரு நடிகர், ஓவியர், கவிஞர், கதாசிரியர், பட்டிமன்றம், கவியரங்கம் பங்கேற்றவர். இயக்குனரும் கூட. இதற்கெல்லாம் நடுவில் நமது தென்னக ரெயில் வேயில் பணி. இவரைப் போல பலக் கலைஞர்கள் அங்கே இருக்கிறார்களாம். (இப்போது புரிகிறதா நமது தென்னக ரெயில்வே டிரெயின்கள் ஏன் சரியான நேரத்தில் வந்து போகின்றது என்று!!!). இவரது நடிப்புத் திறமை போல அங்கும் திறமை காட்டுவதால் தான் இவ்வளவு வருடமாக அங்கே வேலை செய்கிறார் என்பது நிச்சயம்.

குழுவின் தலைவர் திரு. TKS புகழேந்தி. அண்ணாச்சி சண்முகம் அவர்களின் புதல்வர். சிறு வயதிலேயே தந்தைக் குழுவில் அவரின் மேற் பார்வையில் நடித்த அனுபவம் உள்ளது. அப்பாவிடம் அதிக அடி வாங்கியது படிப்புக்கு அல்ல நடிப்புக்குத் தான். ஆனாலும் B.Sc அக்ரி படித்துப் பட்டம் பெற்று தமிழக அரசின் வேளாண்மைத் துறையில் வேலை செய்து பின்னர் ஸ்பிக் நிறுவனத்தில் சேல்ஸ் ரெப் பணி புரிந்து தணியாத கலை தாகத்தால் இசை, நடிப்பு, நாடகம் என்று திரும்ப வந்து 1995ல் அப்போதைய முதல் அமைச்சர் ஜெயலலிதா விருப்பப்படி உலக தமிழ் மாநாட்டிற்கு மதுரையில் "ராஜ ராஜ சோழன்" நாடகத்தை நடத்தி பல பெரியவர்களால் பாராட்டு தல்கள் பெற்றவர். பெற்றவர் பெருமை படும்படி மறுபடி TKS சகோதரர்கள் குழுவை நிறுவி திறம்பட நிர்வகித்து அதில் கதாநாயகனாக நடித்து அசத்துகிறார். அப்பாவே வந்து நாடகம் போடாத அமெரிக்காவிற்கு வந்து இங்கும், கனடாவிலும் நாடகங்கள் போட்டு நம்மை வியக்க வைக்கிறார். வாழ்க! வளர்க!

நம்மை எல்லாம் தனது பாடல்களால் உருக்கிய திரு. "கலைமாமணி" TKS கலைவாணன் நாடகத்திலும் மகாராஜா வேடத்தில் கம்பீரமாக வந்து கனகச்சி தமாக நடித்தார். இவரிடம் இவ்வளவு திறமையா? என்று ஆச்சரியப்படுத்தினார். இவரும் நன்கு படித்துப் பட்டம் பெற்று ஒரு பெரிய வங்கியில் வேலை செய்துகொண்டே கலை தாகத்தை தணித்துக் கொள்கிறார். உண்மையிலேயே இவர்களைப் பார்த்தால் மிகப் பெருமையாக இருக்கிறது. ஒரு குறை அவர்கள் தந்தையர் இதையெல்லாம் பார்க்க இன்று இல்லையே என்ற ஏக்கம் தான். எத்தனை பெரிய மாமனிதர் அந்தப் பெரியவர் சண்முகம் அண்ணாச்சி அவர்கள். தனது உயிரே நாடகம் தான் என்று வாழ்க்கை பூராவும் அந்தக் கலைக்காகவே வாழ்ந்தவர். அவரது புதல்வர்களின் திறமையையும், முயற்சிகளையும் கண்டு அவரது ஆத்மா சாந்தி அடையும் என்பது திண்ணம்.

இன்னும் ஒருவர், அவரை மறக்கக் கூடாது. அவர்தான் மிருதங்க வித்வான் ராஜகோபாலன். 40 வருட அனுபவமிக்க வித்வான். தபேலா, கடம் மற்றும் கஞ்சிரா வாசிப்பதிலும் மன்னன். உலகம் சுற்றிய வாலிபர். இவர் போகாத நாடே இல்லை. எல்லா பிரபல பாடகர்களுக்கும் மிருதங்கம் அல்லது கடம், கஞ்சிரா வாசிக்கப் போய் இருக்கிறார். இப்போது TKS கலைவாணனுடன் மிருதங்கம் வாசிக்க வந்து ஆள் பற்றாக்குறையால் நாடகத்திலும் நடிக்கிறார். மக்களும் சில இடங்களில் இவர் நடிப்புக்குக் கை தட்டியதில் முழு நேர நடிகன் ஆவதா அல்லது மிருதங்கமே வாசிப்பதா? என்று பட்டிமன்றமே நடத்திக்கொண்டு இருக்கிறார். எல்லா துறையிலும் இவர் வெற்றிக் காண்பார் என்பது நிச்சயம். ஏனெனில் அவரது பரிபூரண முயற்சி. வாழ்த்துக்கள்!

50 அல்லது 60 பேர்கள் இல்லாமல் ஒரு சரித்திர நாடகம் நடத்த முடியாது என்று நினைத்திருந்த என்னைப் போன்ற நாடகக்குழு நடத்தியவர்களுக்கு 7 பேர்கள் மட்டும் அமெரிக்கா வந்து ஒரு பெரிய புகழ்வாய்ந்த "ராஜ ராஜ சோழன்" நாடகத்தை நடத்திக் காட்டியது ஒரு ஆச்சரியமான விஷயம். பார்த்து அசந்து போனேன். அவர்களிடம் "ஐயா, நானும் நாடக நடிகன் தான். 3500 முறைக்கு மேலே நாடகங்கள் நடித்துள்ளேன். ஆனால் இன்றுவரை ஒரு சரித்திர நாடகத்தில் கூட நடித்ததில்லை. இன்னும் அந்த ஆசை மனதில் இருக்கிறது" என்று நான் நாடகம் நடந்த அடுத்த நாள் அவர்களைச் சந்தித்தபோது உண்மையைக் கூறினேன். அவர்கள் ஒரு புன்னகையோடு அடுத்த முறை நிச்சயம் நீங்கள் நாங்கள் இங்கு வரும்போது எங்களுடன் நடிக்க லாமே என்று தன்மையாகக் கூறினார்கள். பெரிய மனது. (நல்ல காலம் நேற்று இந்த ஆளை சந்திக்க வில்லை நாடகம் முடிந்துவிட்டது இனிமேல் அடுத்த முறை இங்கே வரக் குறைந்தது 2 வருடம் ஆகும். அது வரை இந்த ஆள் தொந்தரவு இருக்காது என்று அந்தப் புன்னகைக்குப் பின் அவர்களுக்குத் தோன்றியதோ என என் வக்ர புத்திக்குத் தோன் றியது.)

மனதை உறுத்திய ஒரு கேள்வியை இரு தவப் புதல்வர்களிடமும் கேட்டேன். "நல்ல அருமையான நாடகம், பாரம்பரியமிக்க நாடகம் அதை நீங்கள் திறம்பட நடித்து இங்கே நடத்தினீர்கள். மிக்க மகிழ்ச்சி. ஆனால் உங்கள் நாடகம் மக்களிடையே 100% மார்க் அந்தக் காலத்தில் வாங்கியதற்குக் காரணம் நடிப்பு மட்டுமில்லை அருமையான, அழகான சீன், செட்டிங்களால் தான் ஆனால் நீங்கள் அதைப் பற்றி ரொம்பக் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. பல காட்சிகளை வெறும் நீலக் கர்டெயினிலேயே நடத்தினீர்கள், ஒரு வேளை உங்கள் தந்தையார் இருந்து இதை முன் வரிசையில் அமர்ந்துப் பார்த்திருந்தால் சந்தோஷப் பட்டிருப்பாரா? அல்லது மனம் வருந்தியிருப்பாரா? ஏனோ தெரியவில்லை இந்தக் கேள்வியை உங்களிடம் கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது" என்று உன்மையைப் போட்டு டைத்தேன். ஆவலுடன் பதிலை எதிர்ப்பார்த்தேன். ஒரு, ஒரு நிமிடம் அங்கே கனத்த அமைதி. திரு. TKS. புகழேந்தி அவர்கள் "எனது தந்தையாரைப் பற்றி எனக்கு நன்கு தெரியும். அவர் கால மாற்றத்தைப் பற்றி நன்கறிந்தவர். ஒரு காலத்தில் 300 பேர்களை வைத்து இந்த நாடகத்தைப் போட்டார். பிறகு கடைசியில் 50 பேர்களையும் வைத்து நடத்தினார். நாங்கள் இன்னும் முன்னேறி (?) 7 பேரை வைத்துப் போடு கிறோம் ஆகவே அவர் நிச்சயமாகப் பெருமை படுவார்" என்று கூறி என்னை அசத்தினார். அவர் கூறுவதில் உண்மை இருக்கிறதோ என்று நான் எண்ண ஆரம்பித்தபோது சார் உங்களிடம் தனியாக பேச வேண்டும் என்று TKS கலைவாணன் கூற இருவரும் தனியே வெளியே சென்றோம். அப்போது அவர் "இது ரொம்ப சென்சிடிவான கேள்வி நீங்கள் இதைக் கேட்பீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை" ஆனால் உண்மையான பதில் "என் தந்தை சீன் செட்டிங் இல்லாமல் நாடகம் நடத்த அனுமதி கொடுத்திருக்க மாட்டார்கள் அது அமெரிக்காவோ அல்லது சொர்கலோகமோ ஆனாலும் முறையாக எல்லா சீன் செட்டிங் மற்றும் குறைந்தது 25 பேர்களாவது இருந்தால்தான் நாடகம் நடத்த முடியும் எனக் கூறியிருப்பார்" என்று கூற இவர் சொல்வதும் நியாயம் தானோ என்று நான் எண்ண ஆரம்பித்து இந்தக் கேள்வியை நான் கேட்டிருக்கக் கூடாதோ என்று தோன்றியது.

நன்றி.

அட்லாண்டா கணேஷ்

© TamilOnline.com