பூமியில் நீருற்று உண்டானது எப்படி?
விஞ்ஞானம் இந்த உலகம் தோன்றியது எப்படி என்று எத்தனையோ விதமான ஆய்வுகளில் தொடர்ந்து முயன்று விளக்கி வருகிறது. மக்களின் மனதில் சுரக்கும் ஆசைகளோ தொன்று தொட்டு மனிதனுக்கும் இயற்கைக்குமான உறவைப் பல்வேறு நிலைகளில் கதைகளாக்கி ஒரு இனக் குழுவிடமிருந்து இன்னொரு இனக் குழுவிற்கெனப் பரவிக் கொண்டே வருகிறது.

இந்தியாவெங்கும் சொல்லப்படும் மனிதனுக்கும் இயற்கைக்குமான உறவைப் பற்றிய கதைகள் இவை. பல்வேறு மாநில மக்களால் நம்பப்பட்டும் குழந்தை களுக்குத் தொடர்ந்து சொல்லப்பட்டும் வரும் கதைகளில் இருந்து...

பூமியில் நீருற்று உண்டானது எப்படி?

ஒரு காலத்தில் ஒரு ஊரில் ஏழு சகோதரர்கள் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் எழுவரும் மிகவும் ஒற்றுமையாக இருந்து வந்தார்கள். அவர்களைப் பார்த்து அந்த ஊர் மக்கள் அனைவரும் பெருமையும் பொறாமையும் ஒருசேர அடைந்தார்கள்.

ஒரு நாள் சகோதரர்கள் ஏழு பேரும் காட்டுக்கு வேட்டைக்குப் போனார்கள். ஆனால், நாள் முழுதும் காட்டில் சுற்றியலைந்ததில் வேட்டைக்கான எந்த விலங்கோ, பறவையோ அவர்களின் கண்களில் தட்டுப்படவில்லை. நாள் முழுதும் சாப்பாடு, தண்ணீர் இன்றி சுற்றியலைந்ததால் நாக்கு உலர்ந்து போனது. சகோதரர்கள் அனைவரும் சோர்வடைந்து போனார்கள்.

அவர்கள் தண்ணீரைத் தேடி வேறு அலைய வேண்டியிருந்தது. மழையைத் தவிர வேறு எந்த விதத்திலும் தண்ணீரைக் கண்டறியாத அவர்கள் தாகம் மேலிடச் செய்வதறியாது சுற்றியலைந்தார்கள். தாகம் மேலிட சகோதரர்கள் அனைவரும் மயங்கி விழுந்த போது ஏழு பேரில் கடைசி சகோதரன் மட்டும் தன் தாயின் பெயரை மனதிற்குள் முணுமுணுத்தான்.

உடனே தாய் மனதில் தோன்றி, 'நீ கடவுளை நினைத்துக் கொண்டு இதுவரை அசையாமல் இருந்த கற்பாறையை புரட்டிப் போடு. அதன் அடியில் இருந்து உங்கள் அனைவருக்கும் தண்ணீர் கிடைக்கும்' என்றாள். உடனே இளைய மகனும் அசையாத கற்பாறையைத் தன் பலத்தால் புரட்டித் தள்ளினான். அசையாத கற்பாறை அசைந்து கொடுக்கவே அதனடியில் இருந்து நீர் பீறிட்டது. அன்று முதல் தான் பூமியிலிருந்து நீரூற்று வெளிப்படத் துவங்கியது.

ஜீனாஸ் இன பழங்குடிமக்களின் கதை

******


அலைகள் எப்படி உண்டானது?

ஒரு காலத்தில் தண்ணீருக்குள் நிறைய உயிரினங்கள் இருந்தன. அப்போது நிலத்தில் எங்கும் தண்ணீரே தேங்குவது கிடையாது. தண்ணீர் கரைக்குப் போனால் நிலம் அதனைப் பிடித்துக் கொள்ளும் என்று பயந்தார்கள் நீர்வாசிகள். இதனால் தண்ணீர் எப்போதும் ஆடாமல், அசையாமல் இருக்கும். தண்ணீருக்குள் வசிப்பவர்கள் வெகு ஆழத்தில் இருந்தார்கள். அப்போது நிலம் வெகு தொலைவில் இருந்தது. ஒரு நாள் தண்ணீர்க்கடவுள் தனது தேசத்து மக்களை அழைத்துச் சொன்னார்.

''நிலம் வெயிலில் உலர்ந்து கொண்டே வருகிறது. யாரும் வெளியே போகாதீர்கள். பிடித்துக் கொள்ளும்'' என்று உத்தரவிட்டார்.

நிலம் எப்படியிருக்கும் என்று பார்க்க ஆசைப்பட்ட ஒரு சிறுமி யாருக்கும் தெரியாமல் ஒரு நாள் நீந்திக் கரையைப் பார்க்கப் போனாள். அவளது அம்மா இதைத் தெரிந்து கொண்டு, தன் மகளை எப்படியும் நிலத்திடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்னும் நோக்கத்துடன் தானும் ஒரு அலையாகி விரட்டிக் கொண்டே வந்தாள்.

மகளோ, அம்மா தன்னைப் பற்ற வரும் முன் பாய்ந்து கரையேறி நிலத்தைப் பார்த்து விட விரும்பினாள். அம்மாவோ தன் பிள்ளையைக் காப்பாற்ற வேகமாக ஓடி வந்தாள். சிறுமி கரையைத் தொடும்போது அவளது கூந்தலைப் பிடித்து உள்ளே இழுத்தாள். அதுதான் நுரையானது. அந்தச் சிறுமிதான் சிற்றலை. தாய்தான் பெரிய அலை. அவர்கள் கடற்கரைக்கு வருவது இன்றும் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கிறது.

மகளும் நிலத்தைப் பார்க்க முடியவில்லை. தாயும் மகளை விடுவதாக இல்லை.

முண்டா இனக் கதை

© TamilOnline.com