பேராசிரியர் கல்யாண கிருஷ்ணன்
தாய்மொழி மூலம் கல்வியை எளிதாகக் கற்றுக் கொள்வதற்கு வழிவகை செய்யும் 'ஐஐடி மெட்ராஸ் சா·ப்ட்வேர்' என்னும் மென்பொருள் ஒன்றை உருவாக்கி சாதனை படைத்திருக்கிறார் பேராசிரியர் கல்யாண கிருஷ்ணன். மேலும் 'வித்யா விருக்ஷ¡' என்னும் ஓர் அமைப்பை உருவாக்கி, அதன் மூலம் பல்வேறு சமூக சேவைகளையும் செய்து வருகிறார்.

'ஐஐடி மெட்ராஸ் சா·ப்ட்வேரிஒன் செயல் பாடுகள், பயன்பாடுகள், மற்றும் இந்த மென்பொருளைக் கொண்டு மொழியை எவ்வாறு கற்பது போன்ற கேள்விகளுக்கு விவரமாக பதிலளித்தார், பேராசிரியர் கல்யாண கிருஷ்ணன். இனி அவருடனான உரையாடல்...

'ஐஐடி மெட்ராஸ் சா·ப்ட்வேர்' என்னும் மென்பொருள் உருவாக்கத்திற்கான அடிப்படைக் காரணம் என்ன?

இன்று தகவல்தொழில் தொடர்பு பிரமிக்கத் தக்க வகையில் வளர்ச்சியடைந்து கணிணி யின் பயன்பாடு பெருகி வருகிறது. இந் நிலையில் நம் இந்திய குழந்தைகளுக்கு, குறிப்பாக கிராமப்புறக் குழந்தைகளுக்குக் கணிணியின் மூலமாகக் கல்வியைக் கற்றுக் கொடுக்கும் முயற்சியில் நாங்கள் இறங்கினோம்.

கிராமப்புறக் குழந்தைகளுக்கு ஆங்கிலம் அதிகம் பேசவோ, எழுதவோ தெரியாது. இத்தகைய குழந்தைகளுக்கு ஆங்கில மொழியைக் கற்றுக் கொடுக்கும் நபர்களும் அங்கில்லை. இவர்கள் புத்திசாலியாக இருந்தாலும், நல்ல வாய்ப்புக்கள் கிடைக்காத தனால் மேற்கொண்டு அவர்களால் படிக்க முடியாமல் போய்விடுகிறது. இப்படிப்பட்ட குழந்தை களுக்குக் கணிணியின் மூலம் எளிமையாக ஆங்கிலம், மற்றும் தாய்மொழி அறிவை வளர்க்க வேண்டும் என்றெண்ணினோம்.

இதன் விளைவாகவே உருவாகியது எங்களது மென்பொருள் - இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் பயன்படும் வகையில் இது தயாரிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக ஒரு குழந்தைக்குப் பாடத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் உடனே அந்தப் பாடம் கணிணியின் திரையில் ஒளிவடிவில் வரும். அல்லது அந்த குழந்தைக் குத் தட்டச்சு செய்யும் வாய்ப்பு இருந்தால் ஆசிரியர் கேட்ட கேள்விக்குக் கணிணியில் தட்டெழுத்து மூலமாக பதில் சொல்ல முடியும். இதையே மற்றவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம். ஒருவர் உருவாக் கிய தகவலை இணையத்திலும் ஏற்றலாம், பாடங்களை இணையத்தின் மூலமாகச் சொல்லித் தரலாம். இதற்கான உள்கட்டமைப் புகள் அதிகம் தேவையில்லை. இத்தகைய செயலாக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த மென்பொருளை 1991ம் வருடம் எங்கள் மாணவர்கள் எழுபத்தி ஐந்து பேரைக் கொண்டு தயாரித்தோம்.

1995ல் இந்த மென்பொருளை இலவசமாக நாங்கள் எல்லோருக்கும் வழங்கினோம். வெளியீட்டு விழா என்று எதுவும் நடத்த வில்லை. ஏனென்றால் எங்களின் இந்தப் பணி வியாபார நோக்கிற்காக உருவாக்கப் பட்டது அல்ல. முழுக்க முழுக்க எங்கள் ஐஐடி மாணவர்களைக் கொண்டே தயாரிக்கப் பட்டது. வெளி நபர்கள் யாரும் இதன் தயாரிப்பில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வில்லை.

இதற்குக் காரணம் என்னவென்றால், அந்தக் காலத்தில் இதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டவர்கள் அதிகம் இல்லை.

இந்த மென்பொருளின் தனித்துவம் என்ன?

இதன் தனித்துவம் என்னவென்றால், இந்திய மொழிகள் அனைத்திற்கும் ஒரே மென்பொருளை உபயோகிக்கலாம். முக்கிய மாக, ஆங்கிலம் தெரியாதவர்கள் இந்த மென்பொருளைக் கொண்டு கம்ப்யூட்டரில் பல பயன்பாட்டு நிரல்களையும் (application' programs), ஊடாடு வலைத்தள நிரல்களையும் (interactive web application') உருவாக்கலாம். நம் இந்திய மொழிகள் எல்லாம் பதினோரு குறியீட்டுக்களில் (scripts) அடங்கும் தன்மை கொண்டவை. ஒவ்வொரு மொழியும், ஒவ்வொரு குறியீட்டில் எழுதப்படுகிறது. பல மொழிகள் ஒரே குறியீட்டின் அடிப்படையில் அமைந்திருக்கும்.

உதாரணமாக சமஸ்கிருதம், மாராட்டி, இந்தி போன்ற மொழிகள் தேவநாகரியில் எழுதப் படுகின்றன. இவை எல்லாவற்றையும் ஒரே மென் பொருளுக்குள் கொண்டு வந்துவிட்டால், பிறகு அதை மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதற்கோ, பயிற்சி அளிப்பதற்கோ மிகவும் எளிமையாகிவிடும். இந்த அணுகு முறையையே நாங்கள் பின்பற்றி இருக்கிறோம்.

எல்லா மொழிகளுக்கும் ஒரே மென் பொருளை உபயோகப்படுத்துவதற்கான காரணம் என்ன?

இது, இந்திய மொழிகளின் ஒலிப்பியல் முறையைச் (phonetic system) சார்ந்தே அமைந்திருக்கிறது. உதாரணமாகத் தமிழில் 'படிப்பது' என்று எடுத்துக் கொண்டால் ப, டி, ப்ப, து என்று அதில் நான்கு ஒலிகள் (phonetic syllable) வரும். இதேபோல் சம்ஸ்கிருதத்தில் 'இந்திரா' என்று சொன்னால் இ. ந்திரா என்று இரண்டு ஒலிகள் வரும். மேலும் 'சங்கரா' என்று சம்ஸ்கிருதத்தில் எழுதினால் ச, ங்க, ரா என்று முன்று ஒலிகளில் எழுதுவோம். ஆனால் தமிழில் எழுதும் போது ச, ங், க, ரா என்று தனித் தனியாக இருப்பதாகத் தோன்றினாலும் அதுவும் மூன்று ஒலிகளுக்குள் அடங்கும். இதனை அடிப்படையாகக் கொண்டு இந்த மென்பொருளை தயாரித்திருப்பதால், இதனை ஒலிப்பியல் (phonetic) முறையைச் சார்ந்த மென்பொருள் என்று சொல்கிறோம்.

இன்று உலகில் இருக்கும் மொழிகளில் அந்தந்த மொழியை எழுதும் போது a முதல் z வரையிலான (alphabetical) முறையைப் பின்பற்றுகிறார்கள். உதாரணத்திற்கு, ஆங்கில மொழியை இருபத்தியாறு எழுத்துக்களைக் கொண்டு எளிதாகக் கையாள முடியும்.

ஆனால் நம் இந்திய மொழிகள் ஒலியின் அடிப்படையில் அமைந்திருப்பதால், எழுத்துக்களின் சேர்மானம் (combination) மிக அதிகமான ஒலிக் கோர்வைகளை உருவாக்கும் சாத்தியம் இருக்கிறது.

இதன் விளைவாக நமக்குப் பரிச்சயமான, கணிணியின் செந்தர வரையேடுகளில் (computer standards) இந்திய மொழிகளை அடக்குவது மிகவும் சிரமம். அதன் காரணமாகவே ஒலியை அடிப்படையாகக் கொண்டு இந்த மென்பொருளைத் தயாரித் துள்ளோம். ஒவ்வொரு மொழிக்கும் சுமார் பன்னிரெண்டாயிரம் ஒலிகள் சரியாக இருக்கின்றதா என்று சரிபார்த்தே இப்பயன் பாட்டை (application) இயற்றினோம். இதன் மூலம் ஒரே மென்பொருள் எல்லா மொழிகளுக்கும் பொருந்தும் வாய்ப்பு ஏற்பட்டிருக் கின்றது. இவ்வகை ஒலிப்பியல் எழுத்து (phonetic alphabet) மூலம், கல்வெட்டுகளில் வரும் கந்த எழுத்துக்களுக்கும் வழிவகை செய்திருக்கின்றோம்.

இப்பயன்பாட்டின் சிறப்பு என்று நீங்கள் எதைக் குறிப்பிடுவீர்கள்?

வருங்காலத்தில் ஆங்கிலம் இல்லாமல் நாம் இந்த உலகில் எதையும் கற்றுக் கொள்ள முடியாது என்பதால் இந்த மென்பொருளில் ஆங்கிலத்தையும் சேர்த்திருக்கிறோம். ஒரு மொழியை, குறிப்பாக தமிழையோ, தெலுங்கையோ நீங்கள் படிக்க வேண்டு மென்றால் அதை நீங்கள் ஆங்கிலத்துடன் இணைத்தும், அவசியம் இல்லையென்றால் இணைக்காமலும் படிக்கலாம். இதன் பயன்பாடுகள் எல்லாம் நம் மொழியிலேயே இருக்கும்.

உதாரணமாக ஒரு கோப்பை (file) நகலெடுக்க வேண்டுமென்றால் அதற்கான பயன்பாடுகள் எல்லாம் தமிழிலேயே இருக்கும். இதே நிரல் (program) தெலுங்கில் வேண்டுமென்றால் தெலுங்கைப் பயன் படுத்தலாம். இதைப் போன்றே, எந்த மொழியிலும் ஊடாடு தரவுத்தளம் (interactive database) உருவாக்க வேண்டுமாயினும், அல்லது வலைகளில் தேடுவதற்கான வழிமுறைகள் வேண்டுமென்றாலும் அதை அந்த மொழியிலேயே பெற முடிகின்றது.

இம்மென்பொருளுக்கு வரவேற்பு எவ்வாறு இருக்கின்றது?

நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்த மென்பொருளின் முக்கிய இரண்டு, மூன்று பயன்பாடுகள் (application) 1999ம் ஆண்டில் முழுமை பெற்றதை அடுத்து இதைப் பரவலாக விநியோகித்தோம். மேலும் 2001ம் ஆண்டில இந்த மென்பொருளை மைக்ரோசாப்ட் வின்டோவில் உபயோகப்படுத்துவதற்கேற்ற தொகுப்பாகக் (package) கொடுத்திருக்கிறோம். சுமார் இருபத்தைந்தாயிரம் பேருக்கு மேல் பல்வேறு நாடுகளில் தற்போது இந்த மென்பொருளை பயன்படுத்துகிறார்கள். இதன் மூலம் உலகின் பல மொழிகளைக் கற்கலாம்.

உங்கள் மென்பொருள் மூலம் உலகின் மொழிகளைக் கற்றுக் கொள்வதை அறியலாம் என்று சொல்கிறீர்களே, அது எவ்வாறு சாத்தியமாகும்?

இதற்கு, சம்ஸ்கிருதத்தை உதாரணமாகக் காட்டியுள்ளோம். இம்மொழியை எங்கள் இணையப்பக்கமான http://acharya.iitm.ac.in/sanskrit/tutor.html மூலம் எளிதாகக் கற்றுக் கொள்ளலாம்.

சம்ஸ்கிருதத்தில் படிக்க வேண்டிய பாடங்களை உருவாக்கி, அதன் மூலம் ஒருவர் மூன்று மாதத்திலிருந்து ஆறுமாதத்திற்குள் தானாகவே சம்ஸ்கிருதத்தை கற்றுக் கொள்ளுமாறு ஏற்பாடு செய்திருக்கிறோம். உலகத்திலேயே சமஸ்கிருதத்தைக் கற்றுக் கொள்வதற்கு முதல்தரமான இணையதளம் எங்களின் "ஆச்சார்யா" என்று பரிந்துரைக் கப்பட்டுள்ளது. இதன் முக்கிய சிறப்பு என்னவென்றால், யார் வேண்டுமானாலும் உலகத்தின் எந்த மூலையிலிருந்தும், எந்தக் கணிணியின் உதவியுடனும் ஆச்சார்யாவை அணுகலாம். இதற்கான பிரத்யேக மென்பொருள் எதுவும் தேவையில்லை. எங்கள் இணையதளத்தைத் தெரிவு (select) செய்தால், சம்ஸ்கிருதம் என்றால் தேவநாகரியில் அழகாகத் தெரியும், தமிழ் என்றால் எல்லாம் தமிழில் தெரியும். பாடங்களும் சுவாரசியமாக இருப்பதால், பலருக்கு, முக்கியமாக வெளிநாட்டவர்க்கு இந்தக் கல்விமுறை மிகவும் பிடித்திருக்கிறது.

சம்ஸ்கிருத மொழிக்கு இந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்ததற்கு என்ன காரணம்?

காரணங்கள் பல உண்டு. முக்கியமாக, சம்ஸ் கிருதம் உலகின் மிகப் பழமையான மொழிகளுள் ஒன்று.

அம்மொழியில் உச்சரிப்பு என்பது மிகத் துல்லியமாக இருக்க வேண்டும். சம்ஸ் கிருதத்தை ஒழுங்காக உச்சரிப்பவர்கள், பிற மொழிகளை எளிதாகக் கற்றுக் கொண்டு உச்சரிக்க முடியும். ஏனென்றால் முக்கால் வாசியான ஒலிகள் சம்ஸ்கிருத ஒலியிலிருந்து தான் உருவாகிறது. அந்தளவிற்கு சம்ஸ் கிருதத்தில் நல்ல ஒலிச்சேர்க்கைகள் இருக்கின்றன. இந்தியர்களுக்கு பிற மொழி களில் எளிதாக ஆளுமை ஏற்படும், ஆனால் மற்ற நாட்டவர்க்கு நம் மொழியைப் பேசுவது கடினம். ஏனென்றால் இந்திய மொழிகள் ஒலிப்பியல் அடிப்படையில் அமைந்திருப்ப தால், இது மிக எளிதாக மற்ற மொழிகளைக் கற்க உதவுகிறது. மேலும், இலக்கியம், அறிவியல் போன்றவைகள் சம்ஸ்கிருதத்தில் பற்பல அமைந்துள்ளன.

ஆய்வுக்கான விஷயங்கள் இத்தகைய பாடங்களில் அதிகம் இருக்கின்றன. ஆகையால் இணையதளத்தில் இந்தத் தகவல்களைக் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என்கிற எண்ணத்தில் சம்ஸ் கிருதத்தை இணையதளத்தில் முதலில் கொண்டு வந்தோம். ஐந்து சம்ஸ்கிருத வல்லுநர்களைக் கொண்டு இப்பணிச் செம்மையாக செயல்படுத்தப்பட்டது. இதுபோல் தமிழிலும் செய்ய வேண்டும் என்கின்ற திட்டம் இருக்கிறது.

இந்திய மொழிகளைக் கணிணியில் ஏற்றுகிறபோது எல்லோரும் பின்பற்றும் முறைக்கும், நீங்கள் பின்பற்றும் முறைக் கும் வித்தியாசம் காணப்படுவது ஏன்?

இக் கேள்வியை நிறைய பேர் எங்களிடம் கேட்டிருக்கிறார்கள். மிகப் பெரிய மென் பொருள் நிறுவனங்களான மைக்ரோ சா·ப்ட், ஆரக்கல், கூகல் போன்றவை இந்திய மொழி களைக் கையாள்வதற்கு எழுத்து சார்ந்த யுனி கோட் முறையைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

ஆனால் பதினைந்து வருடங்களுக்கு முன்பே நாங்கள் நம் நாட்டிற்கு ஏற்றது ஒலியைச் சார்ந்த வரையரையேயன்றி, எழுத்தைச் சார்ந்தது அல்ல என்று முடிவு செய்தோம். அதற்கான காரணங்களையும் எங்கள் இணையதளத்தில் விவரமாகக் கொடுத்திருக் கிறோம். பலரும் இப்பொழுது எங்கள் கூற்றில் இருக்கும் உண்மையை உணர்ந்திருக் கின்றனர். எங்கள் இணையதளத்தில் இதுபற்றிய செய்துகாட்டல்கள் (demo) உள்ளன, 'செர்ச் டெமோக்கள்' கூட இருக்கின்றன. பகவத்கீதையிலோ அல்லது திருக்குறளிலோ ஒரு வார்த்தையைத் தேடினால், எங்கள் 'டெமோ' அது எங்கு இருக்கின்றது என்று சட்டென்று காட்டிவிடும். அது என்ன வார்த்தை என்பதை இணையதளத்தில் தமிழிலேயே நீங்கள் அச்சடித்துக் கொள்ளலாம். இணையதளத்தில் தமிழில் தட்டெழுத்து செய்வது என்பதை முதன்முதலாக நாங்கள்தான் கொண்டு வந்தோம். அதுமட்டுமின்றி, மற்ற முறைகளைப் பின்பற்றினால் அதற்குத் தேவையான எழுத்துரு (font) இருந்தால்தான் அவ்வெழுத்து தெரியும். விண்டோஸைத் தவிர, லினக்ஸ் மற்றும் யூனிக்ஸ் கம்ப்யூட்டர்கள், சன் ஒர்க்ஸ்டேஷன், சிலிகான் கிராபிக்ஸ் ஒர்க்ஸ்டேஷன் என்று பல கணிணிகள் இருக்கின்றன. இவற்றில் வரும் தகவல்களை விதவிதமான எழுத்துரு இல்லாமலே நம்மால் காண முடிகின்றது. இதற்கு எங்கள் ஐஐடி மெட்ராஸ் சா·ட்வேர் வழி வகுத்திருக்கின்றது.

'வித்யா விருக்ஷ¡' என்ற தன்னார்வ அமைப்பு தொடங்கியதன் நோக்கம் என்ன? அது எவ்விதம் செயல்படுகிறது?

இன்றும் பல கிராமங்களில் பள்ளிக்கூடமே இல்லாத சூழல் நம் நாட்டில் நிலவுகிறது. இப்போதுதான் சில கிராமங்களில் கணிணி வந்திருக்கிறது. அதுவும் வியாபர நோக்கில் மட்டுமே தவிர சேவை நோக்கில் அல்ல. இதனை மனதில் கொண்டு நாங்கள் உருவாக்கிய அமைப்புதான் 'வித்யா விருக்ஷ¡'. சமூக சேவை, சமூகத் தொண்டு போன்ற வற்றில் ஆர்வம் கொண்ட என்னுடைய நண்பர்கள் சிலர், எங்கள் மென்பொருள் பற்றித் தெரிந்து கொண்டு, இதை எல்லோருக்கும் பயன்படும் வகையில் தகவல் பரப்ப முன்வந்ததன் விளைவே இந்தத் தன்னார்வ அமைப்பு. யார் வேண்டுமானாலும் உறுப்பின ராகலாம். உறுப்பினர் சேர்க்கைக்கு எந்தவித கட்டணமும் கிடையாது.

அமைப்பில் சேரும் உறுப்பினர்களுக்கு எங்கள் மென்பொருளை எப்படி உபயோகப்படுத்துவது, எப்படி இதைக் கணிணியில் ஏற்றுவது, இந்த மென்பொருள் வலைதளத்திற்கான பயன்பாடுகளை எப்படிச் செய்வது (web development applications) போன்றவற்றுக்கான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. மொத்தம் முன்னூறுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இந்த அமைப்பில் இருக்கிறார்கள். உறுப்பினர்கள் அனைவருமே படித்தவர்கள், பலரும் நல்ல பணியில் இருப்பவர்கள், சேவை மனப்பான்மை ஒன்றையே உந்துதலாகக் கொண்டு இந்த அமைப்பில் உறுப்பினர்களாயிருப்பவர்கள்.

இப்பயிற்சி வகுப்புகள் எங்கே நடத்தப் படுகின்றன? பயிற்சி பற்றிய விவரங்களை எப்படித் தெரிந்துக் கொள்வது?

எங்கள் அமைப்பின் நிறுவனர் கிருஷ்ண சாமி (IGP, காவல்துறை உயரதிகாரி) அவர்கள் இல்லத்தில் இப்பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மாதத்தில் இரண்டு, மூன்று நாட்கள் பயிற்சி கொடுக்கப்படுகின்றது. இதற்காகத் தனியாக எந்தவித விளம்பரமும் செய்வதில்லை. ஆரம்ப காலத்தில் சென்னை யில் பொது நிகழ்ச்சிகள் நடத்தினோம், பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. மக்களுக்குத் தெரியவந்து பலர் இவ்வமைப் பில் சேர்ந்தனர், பயிற்சி எடுத்துக் கொண்டனர். பயிற்சிக்கு வந்தவர்கள் எல்லோருமே மிகவும் ஈடுபாட்டுடன் பயின்றனர். மேலும், இத்தகைய பயிற்சி வகுப்புகளைப் பள்ளிகளில் நடத்த முனைந்து, அதற்காகப் பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்க ஆரம்பித்தோம்.

அகில இந்திய அளவிலும், பார்வை யற்றவர்களுக்கும் இப்பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன என்று கேள்விப் பட்டடோம்...

இதற்கு இரண்டு காரணங்களைச் சொல்ல லாம். ஒன்று முதன்முதலாக இந்த மென் பொருளை நாங்கள் பேச்சு உருவாக்க முறையில் (speech synthesis) தயாரித்தோம். அது இயல்மொழியின் அடிப்படையில் அமைந்ததல்ல, இலக்கமுறை பேச்சின் அடிப்படையில் (digital speech synthesis) அமைந்தது. ஆயினும், மனித மொழிக்கு இணையாக எல்லோருக்கும் புரியும்படி அமைத்திருந்தோம். கண் தெரியாதவர்களும் இதனைப் பயன்படுத்தி அவர்களே யாருடைய துணையுமின்றிக் கணிணியை உபயோகிக்கும் வழிவகை செய்தோம். உலகின் முதல் முயற்சி இது. இன்றுவரை இதற்கீடான மென்பொருள் இந்தியாவில் இன்றும் இல்லை. இதைப் பற்றிப் பார்வையற்றவர்கள் பலர் கேள்விப் பட்டு எங்களிடம் பயிற்சி எடுத்துக் கொண்டுள்ளனர். இந்த வகையில் அகில இந்திய அளவில் இருநூறு பேருக்கும் மேல் பயிற்சி அளித்துள்ளோம்.

வரும் காலத்தில் என்னென்ன செய்யத் திட்டமிட்டுள்ளீர்கள்?

எங்கள் தொண்டு நிறுவனத்தைச் சின்ன நிறுவனமாகத்தான் நடத்திக் கொண்டிருக் கிறோம். முக்கிய உறுப்பினர்களான பத்து, பதினைந்து பேர்கள் மாதமொரு முறை சந்திப்போம். மற்ற நேரங்களில், தொலைபேசி மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொண்டு முடிவுகளை எடுப்போம். கடந்த பல வருடங்களாகப் பெரிய செலவுகள் எதுவும் இல்லாமல் எங்கள் முயற்சி வளர்ந்து வந்தது மட்டுமல்லாமல், வெற்றியும் பெற்றிருக் கிறது. எங்கள் உறுப்பினர்கள் பணி நிமித்தம் எங்கிருந்தாலும், அவர்கள் ஊருக்குத் திரும்புகையில் அங்கு கணிணி நிலையம் ஒன்றைத் துவக்கி, முக்கியமாகப் பள்ளிக் குழந்தைகளுக்குக் கணிணியைப் பற்றிக் கற்றுக் கொடுக்கின்றனர். இதுபோல் சிறுகச் சிறுக நிறையச் செய்து வருகின்றோம். மேலும், எங்களிடம் பயின்றவர்கள், அவர்களது நண்பர்கள், உறவினர்கள், அவர்களுடன் பணிசெய்வோர் போன்றோருக்குக் கற்றுக் கொடுக்கின்றனர். அவர்கள் மேலும் பலருக்கு இக் கல்வியைப் பரப்புகின்றனர். இவ்வாறே எங்கள் பணி தொடர்ந்து, பல திட்டங்களுக்கு வழி வகுக்கின்றது.

முதல் திட்டமாக, ஊனமுற்ற குழந்தைகளுக்கு அவர்களது தாய்மொழியில் கணிணிப் பயிற்சி அளித்தோம். பள்ளிகளுக்குக் கணிணியை வாங்கிக் கொடுத்து இப் பயிற்சியை இலவசமாகவே செய்தோம். பின்பு, இரு முக்கியமான திட்டங்களை ஆரம்பித்து வைத்தோம். ஒன்று, தேசிய அளவிலான பார்வையற்றோருக்கான முயற்சி (National Initiative for the Blind). தமிழகத்தில் பார்வையற்ற குழந்தைகளுக்கான பள்ளிக் கூடம் சுமார் முப்பதுக்கும் மேல் இருக்கின்றன. ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலிருந்தும் இரண்டு ஆசிரியர்களுக்குப் பயிற்சியளித்து, அவர்களுக்குக் கணிணியை வழங்கி, பிரெய்ல் வெளியீடு எப்படி அச்சிடுவது என்பன போன்றவற்றைச் சொல்லிக் கொடுத்தோம்.

தமிழக அரசின் உடல் ஊனமுற்றோர் துறையின் மூலமாக ஆசிரியர்கள் எங்களிடம் பயிற்சிக்கு வந்தார்கள். இதற்கான கணினித் தேவைக்கு, அவர்கள் உபயோகித்த கணினி களை நிறைய பேர் எங்களிடம் கொடுத்து தவினர். மத்திய அரசின் Rehabilitation Council of India ஆறு மாதத்திற்கு முன், உடல் ஊனமுற்ற முதியோருக்கான பயிற்சியளிக்க என்னைத் தொடர்பு கொண்டு, செலவை ஏற்று ஏற்பாடு செய்தனர். இதன் மூலம், பத்திற்கும் மேலானோருக்குப் பயிற்சியளித்தோம். இரண்டாவது திட்டம், விகாஸ் (Village Information Knowledge and Skills) என்ற பெயர் கொண்டது.

ஒவ்வொரு கிராமத்துப் பள்ளியிலும் படிக்கும் மாணவர்கள், அங்கு வசிக்கும் பெண்கள் மற்றும் முதியோர்கள் ஆகியோருக்குக் கல்வி, உடல்நலம் பற்றிய அறிவு போன்றவற்றைக் கற்பிப்பதை ஆராய்ந்து பதினான்கு பள்ளி களில் நடைமுறைப்படுத்தினோம். திருக்கழுக் குன்றம், இல்லலூர், ராணிபேட்டை போன்ற சென்னைக்கு அருகில் இருக்கும் ஊர்களில் உறுப்பினர்கள் இல்லங்களிலோ அந்த ஊர் பள்ளிக்கூடங்களிலோ கணிணி மூலம் அப்பகுதி மக்களுக்கு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம்.

தென்றல் வாசகர்கள், மற்றும் அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் உங்கள் திட்டங்களில் பங்கேற்க விழைந்தால், எவ்வாறு பங்கேற்கலாம்?

எங்களின் "ஐஐடி மெட்ராஸ் சா·ப்ட்வேர்" இந்தியாவில் பிரபலமாகிக் கொண்டு வருகிறது, பலரும் இதைப் பயன்படுத்துகின்ற னர். நீங்கள் உங்கள் ஊர்களுக்கு வரும் போது, கணிணி வாங்கவும், உங்களூரில் ஒரு மையத்தைத் துவங்கவும் உதவ முன் வரலாம். மேலும், இந்தியாவிலுள்ள ஊனமுற்றோர் பள்ளிகளுக்கு எங்கள் மென் பொருள் பற்றி எடுத்துச் சொல்லி, அப்பயிற்சிக்கான செலவை ஏற்றுக் கொள்ள முன்வரலாம்.

எங்கள் இணைய தளத்தில் சம்ஸ்கிருத பாடங்களை ஏற்றுவதற்குச் இரண்டு மூன்று வருடங்கள் ஆயின. மற்ற மொழிகளுக்கும் பாடங்கள் கொண்டு வர ஆர்வமுடன் யாராவது முன்வந்தால், அவர்களை வைத்துக் கொண்டு தமிழ் மொழிக்கான பாடங்களை யோ, அல்லது பிற மொழிக்கான பாடங் களையோ உருவாக்கலாம்.

அவரவர் மொழியில் அடிப்படைக் கல்வியைக் கணிணியின் மூலம் சொல்லிக் கொடுப்பதற்கு எங்களின் 'ஐஐடி மெட்ராஸ் சா·ப்ட்வேர்' மென்பொருளும், 'வித்யா விருக்ஷ¡' அமைப்பின் மூலம் நாங்கள் மேற்கொண்டுள்ள முயற்சியும் பலனளித் துள்ளன என்பது மிக்க மகிழ்ச்சியான விஷயம். சொந்த விருப்பின்பேரில் தொண்டு மனப்பான்மையுடன் பங்கேற்பவர்களால் மிக்க பொருட் செலவின்றி நடந்துவரும் இம் முயற்சிக்கு, உங்களைப் போன்றோரிடமிருந்து மேன்மேலும் ஆதரவு இருந்தால், பல திக்கு களிலும் பரவி மேலும் பலர் நன்மையடைய வழிவகுக்கும்.

சந்திப்பு: கேடிஸ்ரீ
தொகுப்பு: உமா வெங்கடராமன்

© TamilOnline.com