இந்திரா பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கியச் சூழலில் 1960 களில் இருந்து இயக்கம் கொண்டவர் இந்திரா பார்த்தசாரதி. இவர் படைப்பாளியாகவும் பேராசிரியராகவும் ஒருங்கே செயற்படும் வாய்ப்புப் பெற்றவர்.

வைணப் பாரம்பரியம் மிக்க கட்டுப்பாடான குடும்பப் பின்புலத்தில் கும்பகோணத்தில் பிறந்து வளர்ந்தவர் இ.பா. இவர் கும்பகோணம் கல்லூரியில் பொருளாதாரம் - ஆங்கிலம் படித்தார். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் எம்.ஏ., படித்தார். ஆனால் இவரின் தந்தையார் தனது மகன் ஆங்கிலம் படிக்க வேண்டுமென்றுதான் விரும்பி இருந்தார்.

சிறுவயது முதல் படைப்பிலக்கியத்தில் ஆர்வ மாக இருந்தார். எழுதவும் தொடங்கிவிட்டார். இக்காலத்தில் கு.ப.ரா, தி. ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு ஆகிய எழுத்தாளர்களுடன் நட்புறவு கொண்டிருந்தார். அவர்களது தூண்ட லால் என்ன மாதிரியான நூல்களை தேடிப் படிக்க வேண்டுமென்பதை புரிந்து கொண்டார். நவீன இலக்கியப் பரிச்சயமும் அதற்குரிய மனநிலை யையும் நன்கு உருவாக்கி வளர்த்து கொண்டார்.

1952இல் எம்.ஏ. முடித்துவிட்டு திருச்சி தேசியக் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து வந்தார். 1955இல் டில்லிவாசியாக அங்குள்ள ஓர் கல்லூரியில் தமிழ் விரிவுரை யாளராக பணியாற்றத் தொடங்கினார். 1962 முதல் டில்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கல்லூரியில் சேர்ந்தார்.

1964ல் ஆனந்தவிகடனில் இந்திரா பார்த்த சாரதியின் 'மனித இயந்திரம்' என்ற கதை பிரசுரமானது. தொடர்ந்து எழுதுவதும் அவை பிரசுரமாவதும் எனும் போக்கு தீவிரப்பட்டது. 1968ல் 'மனித தெய்வங்கள்' என்ற சிறிய சிறுகதைத் தொகுப்பு நூலாக வெளிவந்தது.

இதன் பின்னர் தமிழ்ச்சூழலில் குறிப்பிடத்தக்க ஓர் எழுத்தாளராக இ.பா. கவனிப்புப் பெறத் தொடங்கினார். நாவல், சிறுகதை கட்டுரை என இவரது களம் விரிவு பெறத் தொடங்கியது. இவர் எழுதிய முதல் நாவல் 'காலவெள்ளம்', இதில் அரசியல் அரங்கில் நிகழும் சதுரங்க விளை யாட்டை நாவல் களத்துக்குள் கொண்டு வந்தார். குருதிப்புனல், சுதந்திர பூமி, தந்திரபூமி ஆகிய நாவல்களும் அரசியல் சார்பு வகைப்பட்ட படைப்புகளாகவே வெளிவந்தன.

இந்திரா பார்த்தசாரதியின் நாவல்கள் பலவும் நகர வாழ்வின் பாசாங்குகளை விமரிசிக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. இளம் வயதிலேயே டெல்லியில் இருக்க நேர்ந்ததால் நகரவாழ்வியல் மீதான மதிப்பீடுகள் விழுமியங்கள் குறித்த விசாரணையை தனது படைப்புகளில் வெளிப் படுத்தினார். டெல்லி வாழ்வில் பல் கலாச்சார அதிர்ச்சிகளை சந்தித்தார். குறிப்பாக தமிழ் மத்தியதரக் குடும்பங்களில் உள்ள போலித் தன்மைகள் பாசங்குகள் இவரது படைப்பில் தனித்தன்மை பெற்றது.

கிராமிய வாழ்வியல் உள்நோக்கு இவரது படைப்புகளில் அதிகம் காணக்கிடைக்காது. குருதிப்புனல், உச்சிவெயில் ஆகிய நாவல்களில் கிராமியப் பின்னணி வெளிப்பட்டது, இருப்பினும் இதில் கூட நகரத்தில் இருந்து வருகிற ஒருவனின் பார்வையிலேயே கிராமத்தின் சித்திரம் இருந்தது.

இந்திரா பார்த்தசாரதியின் நாவல்களில் உரை யாடல்கள் மிகுந்து இருக்கும். பாத்திரங்கள் பெரும்பாலும் உரையாடல்கள் வழியே உருவாகும். உளவியல் சார் அணுகுமுறை இவரது எழுத்தில் முக்கியமாக இழையோடிக் கொண்டிருக்கும். இது இவரது எழுத்துக்கும் பாத்திரப்படைப்புக்கும் தனித் தன்மையைக் கொடுக்கிறது. மொழி வெளிப் பாட்டில் சிக்கல் தன்மையற்ற ஓட்டம். நவீன வாழ்க்கையின் மோதுகை, நவீன தன்மையின் துலங்கல்களாக தாக்கப் பின்புலத்தை வெளிப்படுத்தும் பாங்கில் இவரது படைப்பாக்கம் அமைவு பெறும்.

இவரது நாவல், சிறுகதை, நாடகப் பிரதியாக்கம் ஆகிய படைப்பு முயற்சிகள் நவீனத்துவ முயற்சிகளின் சாயல்களை உள்வாங்கியவையாகவும் அவற்றின் வெளிப்படுத்துக்கையாகவும் அமைவது இவரது சிறப்பாகும். மேலும் சிறுகதை, நாவல், நாடகம் ஆகிய அந்தந்த வகைமைகள் அவற்றுக்குரிய தனித்தன்மைகளையும் உள்வாங்கி கச்சிதமாக வெளிப்படுவதை இந்திரா பார்த்தசாரதியின் படைப் புலகு நன்கு வெளிப்படுத்திக் கொண்டிருக்கும்.

நவீன நாடக முயற்சியில் இவருக்கு இருந்த ஈடுபாடு புதுவை சங்கரதாஸ் நாடகப்பள்ளி - உருவாகவும் காரணமாயிற்று. பல்வேறு நவீன நாடகக்காரர்கள் தமிழில் பின்னர் உருவாகி வளர்ந்து வரவும் உரிய சூழல் உருவாகவும்கூட இ. பா. வின் முன்முயற்சிகள் குறிப்பிடத்தக்கன.

இவர் எழுதிய நாடகப்பிரதிகளில் ஒன்று 'ஓளரங்கசீப்'. சரித்திர நாடகம் சமகால அரசியலின் ஒத்திசைவைப் பெற வேண்டும் என்பதில் தெளி வாக இருந்தவர். நாடக நிகழ்வுகளுக்கும் சமகால அரசியல் நிகழ்வுகளுக்கும் தொடர்புகள் இருக்கும் என்பதை இந்திரா பார்த்தசாரதியின் ஓளரங்கசீப் நாடகப்பிரதி மெய்ப்பிக்கிறது.

அடிப்படையில் மக்களுக்காக அரசாங்கமா, அரசாங்கத்திற்காக மக்களா என்ற கேள்வி எழுகின்றது. ஒளரங்கசீப் தான் நினைப்பது, செய்வது அனைத்துமே சரியானது என்றே நினைக்கிறான். அவன் ஒரு தன்னலம் கருதா சர்வாதிகாரி இல்லை. ஒரு ஆட்டு இடையனைப் போல மக்களை நடத்திச் செல்ல வேண்டுமென்று நினைக்கிறான். கடைசியல் எல்லாமே தோல்வி அடைகிறது. மக்களோடு தன்னை இணைத்துக் கொள்ளாத, மக்களின் பார்வையிலிருந்து பாராத எந்தச் செயல் திட்டமும் தோல்வி அடைகிறது.

இந்திரா பார்த்தசாரதி பல்வேறு விருது களுக்கும் கெளரவங்களுக்கும் உரியவராகவே இன்றுவரை உள்ளார். இதுவரை குருதிப்புனல் நாவலுக்கு சாகித்ய அகாதமி பரிசும், இராமனுஜர் நாடகத்துக்காக சரஸ்வதி சம்மான் விருதும் பெற்றுள்ளார்.

1991ல் சிறந்த இந்தியப் படமாய் தேசிய விருது பெற்ற முதல்படமான 'மறுபக்கம்' படத்தின் கதை இந்திரா பார்த்தசாரதி எழுதிய உச்சிவெயில் என்ற குறுநாவலே என்பது குறிப்பிடத்தக்கது.

இ.பா. போலந்து நாட்டு வார்சா பல்கலை கழகத்திலும் சிலகாலம் பணியாற்றியவர். கணையாழி இதழின் கெளரவ ஆசிரியராகவும் பணியாற்றியவர்.

******


படைப்புகள்

நாவல்கள்
தந்திரபூமி
சுதந்திரபூமி
ஹெலிகாப்டர்களும் கீழே இறங்குகின்றன
குருதிப்புனல்
உச்சிவெயில்

நாடகம்
போர்வை போத்திய உடல்கள்
மழை
இறுதியாட்டம்
கொங்கைத் தீ
ஔரங்கசீப்
இராமானுஜர்

கட்டுரை
தமிழ் இலக்கியத்தில் வைணவம் என்றுமுள்ள தமிழ்

தெ. மதுசூதனன்

© TamilOnline.com