இனிப்பும் கசப்பும்
SEP 11

வண்ணப் பறவைகள் விண்ணில் பறக்கையில்
கண்ணுக் கழகாய்க் காட்சி அளித்திடும்
குண்டைப் பொழியும் விமானம் பறக்கையில்
கண்ணில் நீரைப் பொழியும் வேதனை.

சின்னக் குழந்தையின் மழலை மொழிகள்
செவியினுக் கினிய குழலின் இனிமை
வெடிக்கும் குண்டின் நெருப்பில் வெந்திடும்
உயிர்களின் ஓலமோ உள்ளத்தில் வேதனை.

கொத்துக் கொத்தாய் மலர்ந்து ஒளிரும்
மலர்களின் வாசம் நாசிக்கு இன்பம்
நெருப்பில் உயிர்கள் கருகும் புகையோ
நுகரும் நாசிக்குத் திணரடிக்கும் துன்பம்.

ஐம்பொறி வாயிலாய் அனுபவிக்க வென்றே
ஆண்டவன் படைத்த சுகங்களை உலகில்
தீவிரவாதி வெடிவைத் தழிக்கும் வெறித்தனச்
செயல் என்றும் வேதனையின் சிகரமே??!!© TamilOnline.com