பத்மஸ்ரீ டாக்டர் சரோஜினி வரதப்பன்
சந்திப்பு: டாக்டர். அலர்மேலு ரிஷி
புகைப்படம்: பாலாஜி

செல்வங் கொழிக்கும் பரம்பரை; வள்ளல் பரம்பரை; தெய்வ நம்பிக்கை மிக்க பரம்பரை; சுதந்திர தாகம் நிறைந்த பரம்பரை; அரசியல் தொடர்புடைய பரம்பரை எல்லாம் நிறைந்தும் வயதுக்கு வந்துவிட்ட பெண் திருமணமாகும் வரை வீட்டைத் தாண்டி வெளியே வரக்கூடாது என்ற கட்டுப்பாடு நிரம்பிய குடும்பப் பின்னணி. இத்தகைய பின்னணியில் ஒன்பதாவது படிக்கும் போதே படிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் தன் 79வது வயதில் (2001 ஆம் ஆண்டில்) Ph.D. பட்டம் பெறுகின்றவரை தன்னை உயர்த்திக் கொண்டு இந்திய அரசு 'பத்மஸ்ரீ' பட்டமளித்துக் கெளரவிக்கும் அளவிற்கு இன்று வளர்ந்திருப்பவர். அவர்தான் பத்மஸ்ரீ டாக்டர் (திருமதி) சரோஜினி வரதப்பன் அவர்கள். முன்னாள் தமிழக முதலமைச்சர் திரு. பக்தவத்சலம் அவர்களின் புதல்லி. அரசியல் பின்புலம் இருந்தும் சமூகசேவை ஒன்றையே முழுமூச்சாகக் கொண்டு இந்த வயதிலும் அயராமல் உழைத்துக் கொண்டிருக்கும் இவரைப் பற்றி இதோ ஒரு நேர்முகம்...

உங்கள் பெயரைச் சொன்னாலே பெண்களுக்கு ஒரு புத்துணர்ச்சி, தன்னம்பிக்கை தானாக வந்துவிடும். ஒன்பதாவது வகுப்பில் படிப்பை நிறுத்திய பின்னர் உங்கள் மேற்படிப்பு தொடர்ந்த வரலாறு பற்றி...

என் பெற்றோர்க்கு என் படிப்பு பாதியில் நிறுத்தப்பட்டதில் உடன்பாடு இல்லை என்றாலும் குடும்பத்தவர் சில கட்டுப்பாடுகளை மீறுவதற்கு அஞ்சிய ஒரு காலம். உறவினர்களைப் பகைத்துக் கொள்ளக்கூடாது என்பதும் ஒரு காரணம். என் நெருங்கிய உறவினர் வீட்டுக் கலியாணத்திற்குக்கூட என் பெற்றோர் என்னை அழைத்துச் செல்லவில்லை. மூன்றாண்டுகள் (திருமணமாகும் வரை) வீட்டிலேயே இருந்தேன். அதிர்ஷ்டவசமாக எனக்கு ஒரு ஹிந்தி டீச்சரை ஏற்பாடு செய்து வீட்டிலிருந்தபடியே 'விசாரத்' பரீட்சை வரை படிக்க வைத்தார்கள. பிற்காலத்தில் மத்திய அரசில் சமூக நல வாரியத் தலைவியாக இருந்த போது வடமாநிலங்களில் மகளிர் அமைப்புகளில் ஆங்கில மொழிப் பயிற்சி யில்லாத அவர்களிடம் ஹிந்தியில் உரையாற்ற என் ஹிந்திப் பயிற்சி பயன்பட்டது Blessing is Disguise என்று சொல்லலாம்.

திருமணத்திற்குப் பிறகு எப்படி படிப்பைத் தொடர முடிந்தது?

திருமதி துர்காபாய் தேஷ்முக் அவர்களுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். பள்ளிக்கல்வி யைக்கூட முடிக்காத இவர் சமுதாய உணர்வு உடையவர். இப்போது லஸ் சர்ச் ரோடில் உள்ள ஆந்திர மகிள சபா இருக்குமிடத்தில் தன்னைச் சுற்றிக் குழந்தைகளை அழைத்து வைத்துக்கொண்டு அவர்களுக்குக் கல்வி போதிப்பார். குழந்தைப் பாடல்களைக் கற்பிப்பார். திடீரென்று பெரியவர் களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்ற எண்ணத்தில் பெனாரஸ் மெட்ரிகுலேஷன் வகுப்பைத் தொடங்கி வைத்தார். அந்தக் காலத்தில் பள்ளிப்படிப்பைப் பாதியில் விட்டவர்கள் எல்லாம் நேரடியாக இந்தப் பிரிவில் தேர்ச்சி பெறலாம். தானும் மாணவியாகச் சேர்ந்து மெட்ரிகுலேஷன் தேர்ச்சி பெற்றார். அவரைப் பார்த்து நானும் அந்த வகுப்புப் பயிற்சியைப் பெற்று மெட்ரிகுலேஷன் முடித்தேன்.

பட்டப்படிப்பு எப்படி?

மைசூர் பல்கலைக்கழகத்தில் B.A. படிக்காமல் நேரடியாக M.A. படிக்கலாம். அப்படித்தான் அரசியல்துறையில் M.A. பட்டம் பெற்றேன். என்ன இருந்தாலும் சென்னைப் பல்கலைக்கழகம் M.A. என்றாலே அதன் சிறப்பு தனி என்ற ஒரு நெருடல் இருந்தது. அந்த நேரம் பார்த்து இங்கு வைணவத் துறை ஒன்று தொடங்கப்பட்டது. அதில் இரண்டாவது M.A. பட்டமும் பெற்றேன்.

ஆசிரியராய்ப் பணி புரியும் விருப்பமுள்ளவர் கள்தான் Ph.D யைத் தேடிப் போவார்கள். நீங்கள் எப்படி?

என் பேராசிரியர் வைணவத்தில் எனக்கிருந்த ஈடுபாட்டைப் பார்த்துவிட்டு என்னை ஊக்குவித்ததால் Ph.D செய்யவும் ஆர்வம் பிறந்தது. பல்வேறு நிறுவனங்களில் பொறுப்புக்களை வகித்து வந்தததால் என்னுடைய பிரயாண நேரங்களைத்தான் படிப்பதற் குப் பயன்படுத்திக் கொள்வேன்.

'மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு' என்ற குறள் உண்மை உங்கள் உழைப்பில் தெரிகிறது. பாராட்டுக்கள். இவ்வளவு வளர்ச் சிக்கு உங்கள் திருமணம் தடையாக இல்லையா?

இல்லை. என்னுடைய அத்தையின் பிள்ளையைத் தான் திருமணம் செய்து கொண்டேன். உறவிலேயே திருமணம் என்பதால் அந்நியமாகத் தோன்றவில்லை.

தந்தை அரசியலைச் சேர்ந்தவர். விடுதலைப் போராட்ட வீரர். உங்களுக்கு அரசியலில் நுழைய ஆர்வம் தோன்ற வில்லையா?

இல்லை. காரணம் என் தாயார் எழுபது எழுபத் தைந்து ஆண்டுகளுக்கு முன்பே சமூக சேவையில் ஈடுபட்டார். காலஞ்சென்ற சிறந்த சமூகசேவகி திருமதி. அம்புஜம்மாள் அவர்களோடு சேர்ந்து மாதர் சங்கத்தில் தொண்டு செய்தவர். அவர்களோடு சிறுமியாக இருந்த நானும் கூடப் போவதுண்டு. ஒருசமயம் என் தாயாருக்கு உடல்நலமில்லாதிருந்த போது என்னை அனுப்பி வைக்குமாறு அம்புஜம்மா கேட்டுக்கொண்டார். அதனாலேயே எனக்கு இயல்பாகவே ஓர் ஆர்வம் பிறந்தது. ஹிந்தி பிரசார சபையின் வெள்ளிவிழா நிகழ்ச்சிக்கு காந்திஜி அவர்கள் சென்னைக்குப் பதினைந்து நாள் வருகை தந்தார். அவர் சபாவில் தங்கியிருந்த அந்த நாட்களில் அவரைச் சுற்றியிருந்த தொண்டர் படையில் நானும் சேர்ந்தேன். தீரர் சத்தியமூர்த்தி வீடும் எங்கள் வீடும் சபாவுக்கு எதிரே இருந்ததால் நாங்கள் இணைந்து தொண்டர் படையில் உற்சாகமாகப் பங்கு கொண்டோம். இவை எல்லாமாகச் சேர்ந்து 21வயது முதலே நான் முழுமூச்சாக சமூக சேவையில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன்.

சமூகசேவை என்று சொல்லும்போது பல அமைப்புக்கள், செயல்திட்டங்கள் ஆகிய வற்றில் தமிழ்நாடு பிறமாநிலங்களைவிட முன்னிலை வகிக்கிறது என்பது உண்மையா?

முற்றிலும் உண்மை. இந்திய மாதர் சங்கம், 'அகில இந்திய மகளிர் மாநாடு' , 'அண்ணபூர்ணா' உணவகம், மகளிர் தொண்டு நிறுவனம், ஆந்திர மகிள சபா, 'மத்திய சமூக நலவாரியம்' இப்படி பல்வேறு அமைப்புகளின் தமிழக சாதனைகள் பலப்பல. 1943ல் கல்கத்தாவில் கடுமையான பஞ்சம். குழந்தைகள் பட்டினியில் வாடினார்கள். அப்போது மத்திய அரசில் உணவு அமைச்சர் திரு.கே.எம். முன்ஷி அவர்கள் அனுமதியுடன் திருமதி. லீலாவதி முன்ஷி அவர்கள் 'குழந்தைகள் காப்பு நிதி' (Save the Childredn Fund) ஒன்றை நிறுவிய போது Food council அதற்கு நிதி உதவி அளித்தது. இதன்படி சுகாதாரமான முறையில் எளிய உணவு, மலிவு விலையில் எல்லோருக்கும் கிடைப்பதற்குப் பெண்கள் அமைப்பு 'அன்னபூர்ணா' என்ற பெயரில் உணவகம் தொடங்கியது. எல்லா மாநிலங்களிலும் உருவானது இந்த அமைப்பு. இன்றும் தமிழகத்தில் சென்னையில் (மவுண்ட்ரோடில் இராஜாஜி மண்டபம் அருகில்) தொடர்ந்து பெண்களின் நிர்வாகத்தில் (திருமதி. இளப்வாலா ஜாதவ் என்ற சமூகசேவகி தொடங்கி வைத்து நிர்வகித்து வந்தார்) நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதில் central women's Food council ன் தலைவி என்ற முறையில் என்னுடைய பங்கும் உண்டு. மற்ற மாநிலங்களில் அன்னபூர்ணா காணாமல் போயிற்று.

இந்திரா காந்தி தமிழகத்திற்கு வருகை தந்தபோது நலிவுற்ற பெண்களுக்கு எழுத்தறிவு மட்டும் பயன்தராது. பொருளாதார நிலை உயரவும் சமூக அமைப்புக்கள் அவர்களுக்குத் தொழிற்பயிற்சி தரவேண்டும் என்று கூறிய கருத்தை ஏற்று உடனே 'மகளிர் தெண்டு நிறுவனம்' என்ற அமைப்பு தமிழகத்தில் தோற்றுவிக்கப்பட்டது. இந்நிறுவனத் தில் இணை இயக்குநராகச் செயல்பட்டு வருகிறேன்.

துர்காபாய் தேஷ்முக் அவர்கள் ஆந்திரமகிள சபாவை மட்டும் வளர்க்கவில்லை. திட்டக்கமிஷன் பரிந்துரையுடன் மத்திய அரசில் Central Social Welfare Board ஒன்றை உருவாக்கினார். தமிழகத்திலிருந்து இந்த வாரியத்தின் தலைவியாக நான் தேர்ந்தெடுக்கப்பட்டு தலைநகருக்கு அனுப்பி வைக்கப்பட்டேன்.

இப்படிப் பல விதங்களில் சமூக தொண்டு அமைப்புகளில் தமிழகம் பெருமை சேர்த்திருக்கிறது. அரசியல் அமைப்பு அங்கத்தினராக முதல் பெண்மணியாக துர்காபாய் தேஷ்முக் தேர்ந் தெடுக்கப்பட்டதையும் குறிப்பிடலாம்.

தமிழக மகளிர் மேம்பாட்டு நிறுவனங்களில் உங்கள் பங்கு?

கிராமப்புறப்பெண்களுக்காக 'மஹிளா மண்டலி' ஆங்காங்கே அமைத்து இவை செயல்படுவதற்கு இடம் அமைத்துத் தர தமிழக அரசிடம் நிதி உதவிகளைப் பெற்றுத் தந்திருக்கிறேன். சென்னை கார்ப்ரேஷனில் 6 தொகுதிகளில் total literacy (கல்வியறிவின்மை என்பதை முழுவதுமாக நீக்கியது) கொண்டு வந்ததில் பெருமையடைகிறேன். பள்ளிப்படிப்பை பாதியில் விட்ட பெண்களுக்கு முறைசாராக் கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தினேன்.

தமிழகத்தை விட்டுத் தலைநகருக்கு வருவோம்... இங்கு உங்கள் பொறுப்புக்கள்?

'இந்திய மகளிர் சங்கம்' (Womens Indian Assn) மூலமாக தையற்கலை, தட்டச்சுப் பயிற்சி, குறுக்கெழுத்துப் பயிற்சி, கணினிப் பயிற்சி போன்ற தொழிற் பயிற்சிகளுக்குத் திட்டங்கள வகுத்துச் செயல்படுத்தியிருக்கிறேன். இந்த அமைப்பின் ஆரம்ப காலத்திலிருந்தே அங்கம் வகித்த நான் 1980ல் இதன் தலைவராக நியமிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் பொறுப்பிலிருந்திக்கிறேன். சங்கம் ஆரம்பித்த போது ஆறு கிளைகளை மட்டுமே கொண்டிருந்த இந்த மகளிர் சங்கம் இன்று 70 கிளைகளாக வளர்ந்திருக்கிறது.

மத்திய அமைச்சரவைக் குழுவிலும் சென்னை சட்டமன்றத்திலும் அங்கத்தினராக இருந்திருக்கிறேன்.

அகில இந்திய மகளிர் மாநாட்டுத் தலை மைப் பொறுப்பேற்றவர் பட்டியலைப் பார்க்கும் போது உங்கள் ஒருவரைத் தவிர யாருமே இரண்டாண்டுகளுக்கு மேல் பொறுப் பில் இல்லையே? பலர் ஓராண்டு மட்டுமே தலைவராக இருந்திருக்கிறார்கள்...

ஆம். நான் தொடர்ந்து தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். மார்க்ரெட்கஸின்ஸ் என்ற ஐரிஷ் பெண்மணி (இந்தியாவைத் தன் இருப்பிட மாக்கிக் கொண்டவர்) ஒருவரால் 1926ல் இந்நிறுவனம் தொடங்கப்பட்டு இவ்வாண்டு அக்டோபரில் 'பிளாட்டினம் ஜூபிளி' கொண்டாட உள்ளது. ஆரம்பகாலத்தில் 'பர்தா ஸிஸ்டம்' பால்ய விவகாரம், விவாகரத்து, சொத்துரிமை போன்ற பெண்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் முயற்சிகளில் செயல்பட்டு வந்தது. இன்று ஆல்போல் தழைத்து இந்தியாவில் 500 கிளைகளையும், இலட்சம் அங்கத்தினர்களையும் கொண்டு ஐக்கிய நாட்டு சபையில் தங்களைத் தொடர்பு கொள்ளச் செய்யும் தகுதி பெற்றுள்ளது. இதில் தமிழ்நாட்டின் பிரதிநிதி மட்டுமே ஐந்து ஆண்டுகள் தலைமைப் பொறுப்பேற்றிருப்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.

அரசுத் தொடர்பில்லாத தொண்டு மையங்கள் அகில இந்திய அளவில்?

செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமைப் பொறு பேற்றிருந்த போது கடலோர நகரங்களில் புயல் பாதுகாப்பிடங்கள் 25 ஏற்படுத்திய போது அவற்றின் நிர்மாணச் செலவில் 50% தமிழக அரசை ஏற்க வற்புறுத்தி மீதித் தொகையை செஞ்சிலுவைச் சங்கம் ஏற்க வைத்து வெற்றி கண்டேன். நலிந்த மக்களுக்குத் தொழில் முனைக் கல்வி அளிக்கவும், சீர்திருத்த மையம் ஒன்று அமைக்கவும் ஒரு கட்டடம் கட்டுவதற்கு நார்வே நாட்டு செஞ்சிலுவைச் சங்கத்தாரிடமிருந்து 50 லட்சரூபாய் நிதி பெற்றுத் தந்தேன்.

உங்கள் தொண்டு செயல்பாட்டில் புதுப்புது வழிமுறைகள் இடம் பெறுமா?

ஆம். காலத்தின் தேவைக்கேற்ப இடம்பெறும். கார்கில் நிதிக்கும், ஒரிசா வெள்ளப்பெருக்கின் சேதத்தால் பாதிக்கப்பட்டோருக்கும் நிதி திரட்டித் தந்தோம்.

சமுதாய சிந்தனையிலிருந்து ஆன்மீகத் திற்கு வருவோம்... உங்கள் தெய்வ நம்பிக்கைப் பற்றி...

எங்கள் குடும்பத்தில் எல்லோருக்கும் தெய்வ பக்தி உண்டு. எங்கள் கிராமத்தில் மூன்று கோயில்களுக்கு நாங்கள் நிறைய பொருளுதவி செய்திருப்பதுடன் தலைமுறை தலைமுறையாக அக்கோயில்களின் தாளாளர்களாக இருந்து வருகிறோம். ஆனால் மதத்துவேஷம் கிடையாது. ஒரு மூதாட்டி நானும் என் தோழி வசுமதி இராமசாமி மற்றும் சில தோழிகளும் செளந்தர்ய லஹரி கற்றுக் கொண்டோம். காந்தீயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டதனால் கூட்டுப் பிரார்த்தனையிலும் ஈடுபாடு உண்டு.

மாதம் ஒரு கோயிலாக நாங்கள் இதைப் பாடி வருகிறோம். இதுபற்றி காஞ்சிப் பெரியவரிடம் சொன்னபோது மாதந்தோறும் பாடுவதோடு ஒவ்வொரு மாதமும் ஒரு ஏழை பெண்ணுக்குத் திருமணத்திற்கு ஒரு திருமாங்கல்யம் செய்து தருமாறு ஒரு கருத்தைத் தெரிவித்தார். எங்களில் யாராவது ஒருவர் ஒரு பெண்ணுக்கு அந்த மாதத்தில் திருமாங்கல்யம் தருவது என்று தீர்மானித்துக் கொள்வோம். இப்படியாக யார் யாரோ முன் வந்து தானம் செய்ய இதுவரை 2000க்கும் மேற்பட்ட பெண்கள் பயன் பெற்றிருக்கிறார்கள்.

செளந்தர்ய லஹரி பற்றிக் குறிப்பிட்டீர் கள்... அப்படியானால் உங்களுக்கு இசைப் பயிற்சி உண்டா? இதை தவிர வேறு எந்தத் துறைகளில் ஆர்வமுண்டு...

வயலின் வாசிப்பேன். டென்னிஸ், பேட்மிட்டன், டேபிள் டென்னிஸ், ஷட்டில் காக் போன்ற விளையாட்டுக்கள் விளையாடுவதில் ஆர்வமுண்டு.

Ph.D. வரை உங்களை வளர்த்துக் கொண் டுள்ள நீங்கள் உங்களைப்போல வளர ஆசைப்படுவோர்க்கு வசதியில்லாத நிலையில் இருப்பவர்க்கு ஏதாவது செய்ய முயன்றிருக் கிறீர்களா?

நிச்சயமாக. என் கணவர் தன் பங்கிலிருந்து 40 ஏக்கர் நிலத்தை நன்கொடையாகத் தர அதில் பூந்தமல்லியில் சரோஜினி வரதப்பன் உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. அதில் புறநகர்ப்பகுதி வாழ் குழந்தைகள் 3000 பேர் கல்வி பயில்கிறார்கள்... 100 அனாதைக் குழந்தைகளுக்கு விடுதி அமைத்து இலவசமாகத் தங்க வைத்து உணவு உடை வசதிகளுடன் தந்து இதே நிறுவனத்தில் படிக்க வைக்கிறோம்.

மேற்படிப்புக்கு வழி செய்கிறீர்களா?

சிறந்த தேசப்பக்தரும், விடுதலைப் போராட்ட வீரருமான என் தந்தை திரு. பக்தவத்சலம் மறைவுக் குப்பின் அவர் பெயரில் ஒரு அறக்கட்டளை நிறுவி கொரட்டூரில் பக்தவத்சலம் வித்யாஷ்ரம் என்ற கல்விக்கூடம் அமைத்ததோடு பக்தவத்சலம் நினைவுக்கல்லூரியும் நிறுவியிருக்கிறோம். அமெரிக் காவில் கலிபோர்னியாவில் வாழும் இந்தியர்கள் 'கல்வி நிதியுதவித் திட்டம்' ஒன்றை அமைத்துள்ளனர். இந்தியாவில் கல்வியில் ஆர்வமும் நல்ல தேர்ச்சியும் பற்றுள்ள ஏழை மாணவர்களுக்கு மேற்படிப்பைப் தொடரப் பொருளுதவியை செய்கிறது இந்த அமைப்பு. இதன் பொருளுதவியைப் பெற்றுத்தரும் Facilitator ஆகநான் பணியாற்றிய பல மாணவ மாணவிகள் நிதி உதவி பெறச் செய்திருக்கிறேன்.

உங்கள் கல்வித் தேர்ச்சியையும் தகுதி யையும் கல்வித்துறை பயன்படுத்திக் கொண்டுள்ளதா?

நிறையவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. சென்னை, திருச்சி, அண்ணாமலை, அன்னைதெரசா ஆகிய பல்கலைக்கழகங்களில் சிண்டிகேட் மெம் பராகப் பொறுப்பு வகித்திருக்கிறேன். நாங்கள் 40 ஏக்கர் நிலத்தைத் தானமாக அளித்து உருவாக்கிய சமஸ்கிருத கல்விச் சங்கத்தின் துணைத் தலைவர் பொறுப்பில் இருக்கிறேன். மைலாப்பூர் அகாடமி தலைமைப்பொறுப்பு, தமிழகத்தின் சார்பில் இந்திய குழந்தை நலச்சங்கத்தின் துணைத்தலைவர், திரைப்படத் தணிக்கைக் குழு, ரெயில்வே கேட்டரிங் கமிட்டி, தொலைபேசி ஆலோசனைக்குழு, புறநகர் குடிநீர்துறை போன்றவற்றில் அங்கம் வகித் திருக்கிறேன்.

தமிழக அரசு sheriff of Madras ஆக என்னை நியமித்தது. மாநில பெற்றோர் ஆசிரியர் சங்கம் தோற்றுவிக்கப்பட்ட போது அதன் முதல் தலைவ ராகத் தேர்ந்தெடுத்தது. சாரணர் இயக்கத்தின் தமிழக அளவிலும் பின்னர் அகில இந்திய அளவிலும் ஆணையாளராகவும் இருக்கிறேன். குற்றம் புரிந்த சிறுவர்களுக்கென அமைந்த நீதிமன்றத்தின் (Juuvenile Court) Honorary மாஜிஸ்டிரேட்டாகப் பொறுப்பு வகித்திருக்கிறேன்.

இவற்றில் நீங்கள் எதைச் சிறப்பாகக் குறிப்பிட விரும்புகிறீர்கள்?

தமிழ்நாட்டுத் திட்டக்கமிஷனின் பகுதி நேர அங்கத்தினராக நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி நான். நியமித்தவர் டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்கள்.

உங்கள் சாதனைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போவதைக் கேட்க மூச்சு மூட்டுவது போல் திணறுகிறது. இவற்றிற்கெல்லாம் கிடைத்த பாராட்டுக்களின் பட்டியலையும் கேட்கலாமா?

1973 ல் பத்மஸ்ரீ பட்டம்.

1975 ல் சாரண இயக்கத்தின் சார்பான ஜனாதிபதியின் வெள்ளி யானை

1988 ல் செஞ்சிலுவைச் சங்கச் சேவைக்காகத் தங்கப் பதக்கம்

1992 ல் அகில இந்திய மாதர் சங்கத்தால் 'ஆண்டின் சிறந்த பெண்மணி' என்ற பட்டம்.

காதி கிராமோத்யோக் பவனால் 'ஸ்திரீ ரத்னா' என்ற பட்டம்

ஆந்திர மகிள சபா பொன்விழாக் கொண்டாட்டத் தின் போது சபாவின் மூத்த அங்கத்தினர் என்ற கெளரவம்

தமிழக முதல்வரால் ஸ்ரீசக்தி புரங்கார் என்ற பட்டம்.

ரோட்டரி கிளப், லயன்ஸ்கிளப், பாரதீய வித்யா பவன் போன்ற இன்னும் பல அறக்கட்டளைகள் பாராட்டி அளித்த பணமுடிப்புகள் தொண்டு நிறுவனங்களுக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டன.

அகில உலக அளவில் உங்கள் சமூக நற்பணிகள் பயனளித்திருக்கின்றன. எனவே பல நாடுகளுக்கும் சென்றிருப்பீர்கள்... அது பற்றி...

அகில இந்திய மகளிர் சங்கத்தின் அங்கத்தின ராகவும், தலைவராகவும் அரசின் பிரதிநிதியாகவும், கட்டுரைகள் பல படிப்பதற்காகவும் பீஜிங், பிலிப்பைன்ஸ், நைரோபி, மாஸ்கோ, பெர்லின், ஓட்டாவா, ஈராக், நேபால், நியூயார்க் போன்ற வற்றிக்குச் சென்றிருக்கிறேன். கல்வி மாநாட்டில் கலந்து கொள்ள ஜப்பான், சூடான், பங்களாதேஷ், ஸியோல், கொரியா சென்றுள்ளேன்.

செஞ்சிலுவைச் சங்க அகில உலக மாநாடுகளில் கலந்து கொள்ள ஜெனீவா, நார்வே, யுகே போன்ற நாடுகள் போயிருக்கிறேன்.

காந்தீயத்தில் நாட்டம் மிக்கவர் நீங்கள். அவரைப் பற்றிக் கூறியவுடன் உங்கள் மனதைப் பூரிக்க வைக்கும் நிகழ்ச்சி ஒன்றைக் குறிப்பிட முடியுமா?

காந்தி நூற்றாண்டு விழா கொண்டாடிய போது 'பாதயாத்திரை' மேற்கொண்ட தொண்டர்களோடு சேர்ந்து 86 மைல்கள் நடந்து மூன்று தென்மாநிலங்களில் காந்தீய உணர்வுகளையும் மதிப்பையும் பிரசாரம் செய்தேன் என்பது தான் உண்மையான மகிழ்ச்சி.

'பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால் மிகப் பிழையிருக்குதடீ' என்று புலம்பிக் கொண்டிருந்த பெண் சமுதாயத்தின் அவலக் குரலை மாற்றி மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும் என்ற பாரதி வாக்கை மெய்பித்த பெண்மணியாக உங்க ளைக் காண்கிறேன். இத்துணை வெற்றி களுக்கும் சாதனைகளுக்கும் பின்னால் உள்ள இரகசியத்தைக் கூற முடியுமா?

ஒரே வார்த்தையில் சொல்லிவிடலாம். ஒழுங்காகத் திட்டமிட்டுச் செயல்படுதல் (proper planning)

அர்த்தமுள்ள பயனுள்ள வாழ்க்கைக்கு எடுத்துக் காட்டாகத் திகழும் உங்கள் சமூகப்பணி வெற்றிப் பாதையில் மேலும் மேலும் தொடர தென்றல் பத்திரிக்கையின் சார்பில் எங்கள் வாழ்த்துக்கள். நன்றி.

சந்திப்பு: டாக்டர். அலர்மேலு ரிஷி
புகைப்படம்: பாலாஜி

© TamilOnline.com