நல்லதோர் வீணை செய்தே...
இந்த இதழுக்கான ஆசிரியர் பக்கம் எழுதிய பின் மணிவண்ணன் அவர்களது 'தமிழ் நாதம்' கிடைத்தது. நான் எனது சார்பிலும், தென்றல் சார்பிலும் சொல்ல முயன்றதை (என்னை விட மிக அருமையாக) எழுதியிருந்தார். எனவே, எனது பங்கிற்கு நான் இந்த மாநாட்டிற்கு வர இயலாமைக்கு வருத்தம் தெரிவிப் பதையும், மாநாடு இனிதே நடக்க வாழ்த்து சொல் வதையும் தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை.

நம்மை எப்பொழுதும் பிரிக்கும் பிரிவினைகளை இந்த கணினி உலகிலும் வேரூன்ற விடாமல் இந்தத் தொழில் நுட்பத்தை தமிழர் முன்னேற்றத்திற்கு பயன்படுத்துவோம். வாழ்த்துக்கள்

ஆசிரியர்

******


தமிழ் நாதம்

'நல்லதோர் வீணை செய்தே அதை நலம் கெடப் புழுதியில் எறிவதுண்டோ' என்று பாடினார் பாரதியார்.

நாம் எவ்வளவு அறிவாளிகளாய் இருந்தாலும், நாமும் அதைத்தானே செய்திருக்கிறோம். நம்மில் பலர் கணினி (கம்ப்யூட்டர்), இணையம் (இன்டர் நெட்) என்ற மாபெரும் புரட்சித் தொழில் நுட்பங்களை உருவாக்குவதிலும் வளர்ப்பதிலும் பங்கு வகித்திருந்தாலும் கோடிக்கணக்கான நம்மவர் களுக்கு இந்தத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தத் தேவையான அடிப்படை வசதி - தாய்மொழியில் இவற்றைக் கொடுப்பதில் - தவறியுள்ளோம்.

உலகெங்கும் பரந்து வாழும் 75 மில்லியன் தமிழர்களில், வெறும் பத்து சதவீதம், 'ஆங்கிலம் பேசும்' பத்து சதவீதம், மட்டுமே கணியையும் இணையத்தையும் இன்று பயன்படுத்த முடியும்! என்ன ஒரு பரிதாபமான நிலை!

ஆனால், ஒரு சிலர், புழுதியிலிருந்து வீணையை மீட்டு, ஒவ்வொரு நரம்பாக மீண்டும் கட்டத் தொடங்கியுள்ளார்கள். அந்த நரம்புகளைப் பற்றியும், மீட்டெடுத்த வீணையைப் பற்றியும், அந்த நல்லதோர் வீணையில் எழக்கூடிய நாதத்தைப் பற்றியும் இப் பகுதியில் சொல்கிறோம்.

இன்று பல்லாயிரக் கணக்கான மைல்கள் இடை வெளியில், பல நாடுகளில் தமிழர்கள் சிதறிக் கிடக்கிறார்கள். வாழ்வு முறை, தொழில், தொலைவு என்று வெளியே பல இடைவெளிகள் இருந்தாலும், வெளிநாடுகளில் வாழும் இந்தத் தமிழர்களின் இதயங்களை ஈர்க்கும் ஒரு நாடி நரம்பு எது? தமிழர்கள், தமிழ் மொழி, தமிழ்ப் பண்பாடு - இல்லையா? தமிழில் ஒரு வார்த்தையாவது இன் னொரு தமிழரோடு பேச வேண்டும் என்று துடிப்பவர் கள் இவர்கள். நாம் உருவாக்கும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி நம் உள்ளத் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டால் என்ன என்று இவர்களில் சிலர் சிந்தித்தார்கள். இவர்கள் சிந்தையில் உருவானதுதான் தமிழ் எழுத்துருக்கள் (fonts) மற்றும் ஏனைய தமிழ்ச் செயலிகள் (applications). முரசு அஞ்சல், எ-கலப்பை, கம்பன், இளங்கோ போன்ற மென்பொருட்களின் மூலம் இன்று தமிழில் மின்னஞ்சல் (Email) எழுத முடிகிறது; மின்னரட்டை (chat) அடிக்க முடிகிறது. வலைத்தளங்கள் (web pages) உருவாக்க முடிகிறது. இந்த முயற்சிகள் வீணையின் இதய நரம்பை முறுக்கேற்றியுள்ளன.

சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்பது தமிழ்நாட்டிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் இளைஞர்களின் கனவு. அவர்கள் தமக்கு ஊக்கம், ஆதரவு, புதிய கருத்துகள் இவற்றைப் பிற நாடுகளில் எதிர்பார்க்கின்றனர். வீணையைப் புழுதியில் எறிந்து விட்டதால், தம்முடைய மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் உள்ள வணிக வாய்ப்புகளைக் காணத் தவறி விடுகிறார்கள். அவர்கள் உள்ளூரிலேயே வாழும் விவசாயி தங்களுடைய தொழில்நுட்பத்துக்கு வாடிக்கையாளராக இருக்கக் கூடும் என்பது அவர்கள் கண்ணில் படுவதில்லை. ஒரு விவசாயிக்கு விதைப்பது எப்போது, அறுவடை செய்வது எப்போது என்பது தெரிய வேண்டும். வானிலை, உரம், பூச்சிக் கொல்லி, கொள்முதல் விலை விவரங்கள் என்று பல தெரிய வேண்டும். தன் வயலில் வேலை செய்வோர், கொள்முதல் செய்வோர், விற்பனையாளர், வாடிக்கைக்காரர்கள், தரகர்கள் என்று பலருடன் அவர் அடிக்கடி தொடர்பு கொள்ள வேண்டிவரும். அந்த விவசாயி கணினி யையும் இணையத்தையும் ஓரளவுக்காவது பயன் படுத்த முடியாதா என்ன?

ஒரு வழியாக சில தமிழர்கள் விழித்தெழுந்து தமிழிலேயே முழுக்க முழுக்க இயங்கும் இயக்குதளம் அல்லது ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒன்றை - தமிழ் லினக்ஸை (http://www.tamilinux.org) - உருவாக்கியுள்ளனர். ஆமாம், இன்று கணினியைத் துவக்கினால், திரையிலிருக்கும் ஒவ்வோர் எழுத்தும் தமிழிலேயே இருக்கும். (அட்டைப் படக் கட்டுரை யைப் பார்க்கவும்). பேராசிரியர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராமகிருஷ்ணா போன்ற வேறு சிலர், கோடிக் கணக்கான தமிழ் நூல்களையும், ஆவணங்களையும் கணினியில் ஏற்றிப் பாதுகாக்கத் தமிழில் ஓ. சி. ஆர். அல்லது ஒளி வழி எழுத்தறிதல் என்ற தொழில் நுட்பத்தை வளர்த்து வருகிறார்கள். இந்த முயற்சி களால், வாணிகம் என்ற நரம்பு முறுக்கேறுகிறது.

தமிழ்.நெட் என்ற இணையக் குழுவில் தற்செயலாக ஒருத்தர் கூட்டன்பர்க் திட்டத்தைப் பற்றி எழுதினார். ஆங்கிலத்தில் இருக்கும் படைப்புகள் அனைத்தையும் மின்மயப் படுத்தி ஒவ்வொரு சிடி அல்லது குறுந் தட்டிலும் ஒரு நூலகத்தை உருவாக்கும் உன்னதத் திட்டம் அது. இந்தப் பேச்சுகளின் குறுக்கே புழுதியில் கிடந்த தமிழ் வீணை - தமிழ் இலக்கியங்கள் - ஒருவர் கண்ணில் பட்டது. அந்த உந்துதலில் தமிழ்.நெட் நண்பர்கள் உருவாக்கிய திட்டம் தான் 'மதுரைத் திட்டம்'. (http://www.projectmadurai.org ) பலநாடுகளில் வாழும் தமிழர்கள் தம் சொந்த முயற்சியால் வலையில் ஏற்றிய தமிழ் நூல்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. தமிழ் ஆராய்ச்சியாளர்களும், பிறநாடுகளில் வாழும் தமிழர்களும், தமிழ் மொழி, மக்கள், அவர்கள் வரலாறு, பண்பாடு, மரபு பற்றி அறிந்து கொள்ள இது வழி வகுக்கிறது. மதுரைத் திட்டம் சிந்தனை என்ற நரம்பை முறுக்கேற்றுகிறது.

பல தமிழர்கள் வேறு மொழியையும், வேறு பண்பாட்டையும் பின்பற்றி அயலானாக வாழ உழன்று கொண்டிருக்கும் போது, தமிழை மையமாகக் கொண்டு வாழுகிறார்கள் சில தமிழர்கள் - கனடியத் தமிழர்கள். கனடியன் தமிழ் வானொலி (CTR24.com), கீதவாணி (Geethavaani), கனடியத் தமிழ் ஒலிபரப்பு நிறுவனம் (CTBC) போன்ற வானொலி நிறுவனங்களை அமைத்தது மட்டு மல்லாமல் தமிழில் பல வலையிதழ்களையும், பல்லாயிரக் கணக்கான வலைப்பக்கங்களையும் உருவாக்கி வரும் பெருமை கனடியத்தமிழர்களைச் சாரும். படிப்பது, படைப்பது, பரிமாறிக் கொள்வது என்று எல்லாவற்றையுமே தமிழில் செய்யும் இவர்கள் மொழி, கலை, பண்பாடு இவற்றிலும் தமிழில் தோய்ந்திருக்கிறார்கள். இவர்கள், தன்னடையாளம் என்ற நரம்பைத் தக்க வைத்துக் கொண்டிருக் கிறார்கள்.

இவ்வளவு முயற்சிகளுக்குப் பின்னரும், தமிழ் இணையத்தின் முக்கியம் என்ன என்பது பலருக்குக் குழப்பமாகத் தோன்றுகிறது. தகவல் தொழில் நுட்ப யுகத்தின் பயன்களை விரும்பி ஏற்றுக் கொண்ட பலர், அதன் வலிமையை முற்றும் உணர்ந்தவர்கள் என்றாலும், அதே தொழில் நுட்ப வளர்ச்சி தமக்கும், தம் மக்களுக்கும் பயன்படக்கூடும் என்பதைக் காணத் தவறுகிறார்கள். பின்வரும் செய்திகள் பெரும் பாலானவர்களுக்குத் தெரியவே தெரியாது!

  • தமிழ் பேசுவோர் மக்கள் எண்ணிக்கை ஸ்பெயின், இத்தாலி, ·பிரான்ஸ், கனடா, கிரீஸ், நெதர் லாந்து, போர்ச்சுகல், பெல்ஜியம், அயர்லாந்து, ஆஸ்திரியா, ஸ்விட்சர்லாந்து நாட்டு மக்கள் தொகையை விடக் கூடுதலானது.
  • பெரும்பாலான தமிழர்கள் தமிழில் சிந்திக்கிறார்கள். அவர்கள் அன்றாட வாழ்க்கை தமிழை நம்பியிருக்கிறது.
  • கணினி, இணையம் போன்ற சக்தி வாய்ந்த தொழில் நுட்பங்கள் தமிழர்களை எழுத்தறி வின்மை, ஏழ்மை, நோய் போன்றவற்றிலிருந்து மீட்க முடியும்.


புழுதியில் கிடக்கும் வீணையை ஒரு புறமும், அதை மீட்கச் சிலர் செய்யும் பெரு முயற்சியை மறுபுறமும் பார்த்த சில தமிழ் ஆர்வலர்கள் ஓர் இயக்கத்தையே உருவாக்கியுள்ளார்கள். அந்த இயக்கத்தின் பெயர் தமிழ் இணையம். இண்டர்நெட் என்பது பல இதயங்களை இணைக்கும் மையம் என்பதால் அதை இணையம் எனலாமே என்றார் மலேசியாவின் நயனம் பத்திரிக்கையின் ஆசிரியர் 'கோமகன்' என்னும் ராஜ்குமார். தமிழ் இணைய முயற்சிகளை மேம்படுத்தும் முயற்சியில் தொடங்கியதே தமிழ் இணைய மாநாடுகள். இந்த வரிசையில் வரும் ஐந்தாவது மாநாடு செப்டம்பர் 27, 28, 29களில் ·பாஸ்டர் நகரில் நடக்கும் மாநாடு. இதை நீங்கள் படிக்கும்போது அநேகமாக மாநாடு தொடங்கி யிருக்கும்.

தமிழ் இணைய மாநாடு புழுதியில் கிடக்கும் தமிழ் வீணையின் நரம்புகளைக் கட்டி மீண்டும் நல்லதொரு வீணையாக அமைக்கும் முயற்சி.

மேலும் பல நரம்புகளைக் கட்ட வேண்டும். அதற்கு நம் அனைவரின் முயற்சியும் தேவை.

இந்த மாநாடு பலரைத் தட்டி எழுப்பித் தமிழ் இணையம் என்ற இயக்கத்தில் பங்கேற்க வைக்கும் என நம்புகிறோம்.

எல்லா நரம்புகளும் கட்டப் பட்டு சுருதி சேர்த்த பின், வீணையைப் புழுதி தட்டி மெருகேற்றிய பின், நாம் எழுப்பும் தமிழ் நாதம் கம்பன் கண்ட தமிழின் வரலாற்றுப் பெருமையையும், பாரதியின் புரட்சிக் கனவுகள் எதிரொலிக்கும் வருங்காலத்தையும் ஒருங்கிணைத்து எதிரொலிக்கும்.

எண்ணிப் பாருங்களேன்!

ரகுநாத் பத்மநாபன், மணி மு. மணிவண்ணன்

© TamilOnline.com