ஹ்யூமர் கிளப்புக்கு வாங்க!
சன்னிவேல் நீல்கிரீஸில் கடையில் ஒரே கூட்டம் என்னவாக இருக்கும்? நானும் தலையை நுழைத்தேன். கடையின் முதலாளி ஜோசப் அனைவரிடமும், ''நம்ம ஊருக்கு ஒரு கெஸ்ட் (விருந்தாளி) வராங்க. யாரு, எங்கிருந்து வராங்கன்னு தெரிஞ்சா, நீ நான்னு போட்டி போட்டுகிட்டு வந்திருவீங்க... விருந்தாளி யாரு தெரியுமா? காமெடி நாடகங்களில் பெயர் பெற்றவர் டிவி, சினிமா நடிகர், இயக்குநர் மற்றும் டிவி ஆர்டிஸ்ட்டு அசோசியஷன் தலைவரான எஸ்.வி. சேகர்'' என்று சஸ்பென்சை உடைத்தார். ''இவர் சன்னிவேலுக்கு வருகிறார். அக்டோபர் 12ம் தேதி ஐஎம்சில் எஸ்.வி.சேகருடன் ஒரு பேஸ் டூ பேஸ் (நேர்முக சந்திப்பு) அவர் நாடகம் ஒன்றை திரையிட்டுக் காண்பிப்போம் முதன்முறையாக ஸ்டான்ட்-அப் காமெடி செய்யப்போகிறார் என்று விளக்கிக் கொண்டிருந்தார்.

அருகிலிருந்த ஒருவர், ''எஸ்.வி. சேகர் தனியாக வருவதும், படம் பிடித்து வைத்த தன் நாடகத்தை திரையில் காண்பிப்பது என்ன பெரிய வித்தை! தனது குழுவினருடன் வந்து, புது நாடகத்தை அரங்கேற்றப்போகிறார் என்று பார்த்தேன். இது வீடியோ, சிடி என்று வாங்கிப் பார்ப்பது போல் தானே' என்றார். மற்றொருவர் சேகர் நாடகத்தை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது. எங்க வீட்டிலிருந்து ஐந்து பேர்'' என்றார். மூன்றாமவர் ''ஸ்டாண்ட் அப் காமெடியை இதுவரை தமிழில் யாரும் செய்திடாதது என்று பேசிக்கொண்டே டிக்கட்டுகளை வாங்கிச் சென்றனர். நான் மட்டும் விடுவேனா, நானும் வரிசையில் நின்றேன்.

மாலை வேளை எல்லோர் கையிலும் வெற்றிலை பாக்கு, பழம், சுண்டல், நெற்றியில் சுந்தனம், குங்குமம். நவராத்திரி அனைவர் முகத்திலும் கொலுவிற்கு வேகவேகமாக சென்றுவிட்டு ஐஎம்சி வாசலில் ஆஜர்.

ஆரஞ்சு டீ ஷர்ட் கருப்பு பாண்ட் அணிந்து, படத்தில் காண்பதுபோல் சாதாரணமாகத் தோற்றமளித்தார். அனைவரையும் புன்னகையோடு வரவேற்றார். ஆட்கள் குவிந்தவண்ணமிருக்க ஜோசப் சேகரை அறிமுகப்படுத்தினார்.

தன்னுடைய இந்த திடீர் பயணத்தால் அதிக விளம்பரம் செய்ய நேரம் இல்லாமல் போனாலும் அரங்கம் நிறைந்திருந்ததைக் கண்டு மிக மகிழ்ச்சி அடைந்தார். அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

நேர்முக சந்திப்பாயிற்றே! ஒருவர் மாறி ஒருவர் கேள்விகைள கேட்டனர். தன் நாடக, சினிமா தொடக்க காலம் முதல் இன்று வரையிலான அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அவர் பதிலளிக்கும்போது மக்களிடமிருந்து அவ்வப்போது சிரிப்பு அலை ஒலித்துக்கொண்டிருந்தது. இருக்காதா! 'மேடை நாடக காமெடி கிங் ஆயிற்றே!.

தமிழ்நாட்டின் தற்போதைய நிலவரத்தையும் அதாவது காவேரி நீர்பிரச்சனை பற்றியும் விளக்கிக்கொண்டிருந்தார். ஒரு பெண்மணி குறுக்கிட்டு, ''எதற்காக இயக்குனர்கள், நடிகர்களிடையே இந்த கருத்து வேறுபாடு' என்று வினவினார். அதற்கள் ஒரு இளைஞன் ''அவங்க என்ன சொல்லவாரங்கன்னா... என்று இழுத்தார். விடவில்லை சேகர் உடனே அவரை நிறுத்தி, ''நீங்க உட்காருங்க ஸார் முதல்ல... வந்திருக்கிறவங்களக்கும் புரிஞ்சிருச்சு. அவங்க என்ன டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவா பேசறாங்க.. நல்ல தமிழ்ல புரியும்படிதானே பேசுறாங்க... உங்களுக்கு ஏதாவது கேட்கணும் என்றால் கேளுங்க என்று சொல்லவே அனைவரும் சிரித்து மகிழ்ந்தார்கள். கேள்வி கேட்ட இளைஞன் உள்பட.

காவிரிநீர் பிரச்சனை எவ்வளவு தூரத்தில் இருக்கிறது. இயக்குநர்கள் நடிகர்கள் பங்கெடுப்பு, முயற்சி போன்றவற்றை விளக்கமாக கூறினார் சேகர். அவர் சொன்ன பதில்கள் அனைத்தும் சுவாரசியமாகவும், கலகலப்பாகவும் இருந்தது. நேரம் போவதே தெரியவில்லை. திடீரென்னு தன் முகம் பதித்த கைகடிகாரத்தைப் பார்த்தார் சேகர். ''நீங்க எல்லோரும் வீடு திரும்ப நேரமாகிவிடும். நாடகம் பார்க்கிறீங்களா?''னு கேட்டார். எல்லோரும் 'ம்' கொட்டவே 'யாமிருக்க பயமேன்' 'பெரியப்பா' என்று பலர் சொன்னாலும் ஏகோபித்த வரவேற்பு மகாபாரதத்தில் மங்காத்தாவுக்குத்தான்.

நாடகத்தின் நடுநடுவே மீண்டும் சிரிப்பு அலை. நாடகம் முடிந்தவுடன் எஸ்.வி.சேகர் ஆடியன்ஸைப் பார்த்து ''இவ்வளவு உற்சாகத்துடன் இருங்கீங்களே நாம் அனைவருமாகச் சேர்ந்து ஒரு ஹ்யூமர் கிளப் ஆரம்பித்தால் என்ன? என்றார். மிகுந்த வரவேற்பு இருந்தது. தன் அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு வருகிற அக்டோபர் 21ம் தேதி மயூரி ரெஸ்டாரண்ட் சன்னிவேலில் சந்திப்பதாக அறிவித்துவிட்டு நம்மிடமிருந்து விடைபெற்றார்.

நான் ஆச்சரியப்பட்டேன். ஒரு தனிநபர் ஒன்றரை மணிநேரம் பேசி சிரிக்க வைத்துவிட்டார். சிரிக்க வைப்பது சாமான்ய விஷயமா? அன்று நீல்கிரிஸ் கடையில் ''எஸ்வி சேகர் தனியாக வருகிறார்... படம் பிடித்து வைத்த நாடகத்தை திரையில் காண்பிப்பது என்ன பெரிய வித்தை. தனது குழுவினருடன் வருவாரென்று பார்த்தேன். இது வீடியோ, சிடினு வாங்கிப் பார்ப்பதுபோல் தானே'' என்று சொன்னவரின் சிரிப்புச் சத்தம்தான் உரக்கக்கேட்டது. எல்லோர் குரலைவிட. அவர் நாடகங்களை எத்தனைமுறை பார்த்தாலும் அலுக்கவே இல்லை. ''வாய்விட்டு சிரிச்சா நோய்விட்டுப்போகும்னு சொல்லுவாங்க... ஹ்யூமர் கிளப்புக்கு வருகிற 21ம் தேதி நான் போகிறேன். நீங்க...

ஸ்ரீதர்

© TamilOnline.com