புகழ்பெற்ற அமெரிக்க பெண் தொழிலதிபர் இந்திரா நூயி
சென்னையில் பிறந்து தற்போது அமெரிக்காவில் வசிக்கும் இந்திரா நூயி, மிகவும் புகழ்பெற்ற அமெரிக்க பெண் தொழிலதிபர்களில் 4வது இடத்தில் உள்ளார்.

இவர் 'பெப்ஸிகோ' நிறுவனத்தின் தலைவராகவும் மூத்த நிதித்துறை அதிகாரியாகவும் உள்ளார்.

·பார்ச்சூன் பொருளாதார பத்திரிகை இத்தகவலை வெளியிட்டுள்ளது.

மிகவும் புகழ்பெற்ற 50 பெண் தொழிலதிபர்களை அப்பத்திரிகை பட்டியலிட்டுள்ளது. இதில் ஹெவ்லெட்-பேகார்ட் நிறுவனத் தலைவரும் மூத்த செயல் அலுவலருமான கார்லி பியோரினா முதல் இடத்தில் உள்ளார்.

உணவு மற்றும் குளிர்பானம் பொருள்கள் தயாரிப்பில் உலகிலேயே 4வது இடத்தில் உள்ள பெப்ஸிகோ நிறுவனத்தின் தலைவர் இந்திரா நூயி, 1994ம் ஆண்டு இந்நிறுவனத்தில் சேர்ந்தார். தற்போது நிதி, திட்டமிடல், மனிதவளம், சட்டம், தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் ஆகிய அனைத்து பொறுப்புகளையும் நிர்வகித்து வருகிறார்.

இருப்பினும் தனது வர்த்தகத்துக்கு போட்டியாக உள்ள 'கோகோகோலா' நிறுவனம்தான் தனக்கு சவாலாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை, கிறிஸ்தவக் கல்லூரியில் பட்டப் படிப்பும், கோல்கத்தாவில் எம்பிஏ படிப்பையும் முடித்த நூயி, இந்தியாவில் 2 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். பின்னர் மேற்படிப்பை அமெரிக்காவில் முடித்த அவர், 'பாஸ்டன் கன்சல்டிங் குரூப்'பில் 6 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். பின்னர் 'மோட்டரோலா' நிறுவனத்தின் துணைத் தலைவராகவும், நிர்வாகம் மற்றும் திட்டமிடலின் இயக்குநராகவும் இருந்தார்.

அதன்பிறகு 'ஏசியா ப்ரென் போரேரி' நிறுவனத்தின் துணைத் தலைவராக நான்கு ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.

இத்தகைய தகுதிகளுக்கும் சிறப்புகளுக்கும் உரியவராக இருக்கும் இந்திரா நூயியை 'தென்றல்' வாழ்த்தி பெருமைப்படுகிறது.

© TamilOnline.com