அம்புஜம் மாமியின் US பயணம்
நியாயத்தின் மறுபக்கம்

சமீபத்தில் ஒரு ஞாயிற்றுகிழமை மாலை 'காஸ்ட்கோ' சென்று திரும்புகையில் டீஅன்சா - ஹோம் ஸ்டட் சிக்னலில் காத்திருந்தோம். அப்போது மடேர் என்று பெரும் சத்தத்துடன் எங்கள் கார் குலுங்கி நின்றது. கார் சீட்டில் பெல்டுடன் எங்கள் முகம் பார்த்து உட்கார்ந்திருந்த எனது ஒரு வயது பேரன் பெரிய குலுங்களினால் பெரிதாக சத்தம் போட்டு அழ ஆரம்பித்தான். (ஒரு விஷயம். காரில் பெல்ட் போட்டுக் கொள்வது பற்றி மாறுபட்ட அபிப்ராயம் இருக்கமுடியாது. ஆனால் குழந்தைகளை ஒரு சிறிய சீட்டில் பெல்டுடன் கஷ்டப்படுத்த வேண்டியிருக்கிறதே என்ற வேதனைப்பட்டுக் கொள்வேன்.) நாங்கள் நிதானம் செய்து கொண்டு, திரும்பினால் ஒரு நீண்ட பழைய 'செவர்லே' கார் எங்கள் கார் பின்னால் இடித்துக் கொண்டு நின்றது. பிறகு ''ரைட் எய்ட்'' பார்க்கிங் இடத்தில் என் மகனும் அந்த காரை ஒட்டி வந்த ஒரு நடுத்தர வயது பேரும் மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று யோசனை செய்தனர். தவறு தன் மீது இருந்ததால் அந்த நபர் ''போலீஸில் புகார் செய்ய வேண்டாம். என் இன்ஷ¥ரன்ஸ் கம்பெனி மூலம் செட்டில் செய்து கொள்ளலாம்'' என்று இன்ஷ¥ரன்ஸ் கார்டை காண்பித்து, நிஜமான வருத்ததுடன் ரொம்ப கேட்டுக்கொண்டார். அவரும் தன் மனைவி குழந்தைகளுடன் வாரவிடுமுறையை ஜாலியாக கழித்து விட்டு வீடு திம்பிக் கொண்டிருந்தனர். என் பேரன் பயத்தினால் அலற ஆரம்பிக்க, நான் ஸ்டோலரில் அவனை இங்கும் அங்குமாக நகர்த்தி சமாதானபடுத்திக்கொண்டிருந்தேன். (மறுபடி கார் ஸீட் விஷயம். என் பேரன் பெல்டுடன் அமர்ந்ததினால் தலையிலோ, மற்ற பாகங்களிலோ அடிபடாமல் உயிர் தப்பினான். அப்போதுதான் அமெரிக்கார்களின் தீர்க்க தரிசனம் புலனாயிற்று. ஓட்டி வந்த நபர் அவர் மனைவி இருவரும் என்னிடம் வந்து மன்னிப்பு கேட்டு கொண்டது, குழந்தைக்கு அடிபடவில்லையே, Okayயாக என்று பல தடவை கேட்டு சமாதானபடுத்தி கொண்டனர்.

இன்ஷ¥ரன்ஸ் கம்பெனியும் ஒரு கேள்வி, பேச்சு கேட்காமல் காரை புதுபாகங்களுடன் சரி செய்து கொடுத்தது மட்டுமன்றி, ஒருவார இடைவெளிக்கு என் மகன் உபயோகத்திற்காக புத்தம் புதிதான கார் அனுப்பியது எவ்வளவு பெரிய விஷயம் - என்று வியந்தேன்.

இந்த நிகழ்ச்சி பற்றி பிறகு சிந்தித்த போது என்னையறியாமல் சென்னையில் எங்களுக்கு ஏற்பட்ட இதே மாதிரி சம்பவம் நினைவிற்கு வந்தது. ஸன்னிவேல் வருவதற்கு ஒரு மாதம் முன்பு நாங்கள் பெங்களூரிலிருந்து சென்னைக்குப் போகும் வழியில் பூந்தமல்லி அருகே சிக்னலுக்காக காத்திருந்தோம். பெரிய சத்தத்துடன் எங்கள் மாருதி கார் குலுங்கி நின்றது. சிறிய வண்டி ஆனதால் சேதம் சற்று அதிகம். என் கடைசி மகன் பின்னாலிருந்து மோதிய 'டொம்போ' டிரைவருடன் சண்டை போட, தவறு அவன் மீது இல்லை, அந்த டெம்போவை மோதிய திருவள்ளுவர் பஸ் என்று தெரியவே, பஸ் டிரைவரிடம் நியாயம் கேட்க சென்றனர். பஸ் டிரைவர் கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாததுடன், கீழே இறங் காமலே, சென்னை செல்ல நேரமாகிவிட்டது. போலீஸ் புகார் கொடுத்துக் கொள்ளுங்கள், என் பெயர் கலியன், ரூட் நம்பவர் 166 பஸ் நம்பர்... குறித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு உடனே பஸ்ஸை ஓட்டிக்கொண்டு சென்றுவிட்டான்! என் மகன் விடவில்லை. போலீஸிற்கு போன் செய்து, வயது முதிர்த் கான்ஸ்டேபிளும் உடனே வந்தார். விஷயங்களை தெரிந்து கொண்டார். நீங்கள் பெங்களூரிலிருந்து வருகிறீர்கள். நான் FIR போட்டு கரை கோர்ட்டில் நிறுத்தினால் உங்களுக்கு வண்டி கிடைக்க ஒருவாரம் ஆகும். அந்த டிரைவர் தன்னுடைய நிஜமான பெயரை சொன்னான் என்பது என்ன நிச்சயம். அப்படியே பிடித்தாலும் அவன் ஓட்டுநர்கள் சங்கம், யூனியன் என்று பெரிய பிரச்சனையாகிவிடும். பேசாது உங்கள் காரை மோதிய வேன் காரனுடன் சமாதானமாக போங்கள் என்று அட்வைஸ் செய்து போய்விட்டார். எங்களக்கும் மறுநாளே பெங்களூர் திரும்ப வேண்டிய அவசியம். டெம்போகாரர் கொடுத்த பணத்தை போல் இரண்டு மடங்கு செலவழித்து ஊர் திரும்பினோம். எங்கள் கார் இன்ஷியூரன்ஸ் கம்பெனி போலீஸ் FIR ரிப்போர்ட் இல்லாமல் 'கிளைம்'' செய்ய முடியாது என்று உறுதிபட கூறிவிட்டார்.

USல் நியாயமாக முடிந்த விஷயம் சென்னையில் ஏனோதானோ என்று முடிந்ததின் காரணம் எங்களது நேமின்மையா, பஸ் ஓட்டுநரின் அலட்சியபோக்கா அல்லது காவல்துறையின் அணுகுமுறையா என்று இன்றுவரை புரியாதது.

அதே தப்பு

அன்று அம்புஜம் மாமியின் muntain view உறவினர் வீட்டில் சீமந்தம். மாமியின் பிள்ளை முதலில் அவளை அவர்கள் வீட்டில் விட்டுவிட்டு, பிறகு தாங்கள் வந்து கலந்து கொள்வதாக சொல்லி சென்றான். ஆரம்ப குசலங்கள் முடிந்தபிறகு மாமிக்கு பொழுது போகலை. பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த நடுத்தர வயது பெண்ணுடன் பேச்சு கொடுத்தாள். அந்த பெண்மணி அம்புஜம் மாமிக்கு 'மன்னியின் சித்தப்பா பெண்ணின் பேத்தி' (அப்பாடா!) என்ற சொந்தம் தெரிந்ததும், மாமி அவளை விடவில்லை. பாவம் அந்த பெண் 30 வருஷங்களுக்கு முன்பே படிக்க US வந்து இங்கேயே செட்டில் ஆனவள். தெரிந்த சொந்தம் - தெரியாத சொந்தம் என்று அம்புஜம் மாமி அவளை அறுக்க தொடங்கினாள். அந்த பெண்ணும் மெதுவாக பேச்சை மாற்றினாள். அப்புஜம் மாமியின் குடும்பத்தை பற்றி விசாரித்தாள். மாமியின் மூத்த பிள்ளை LAயில் இருப்பது தெரிந்து உபசாரமாக, நானும் LAயில் தானிருக்கிறேன். எங்கள் வீட்டுக்கு வாருங்கள் என்று அழைத்தாள்.

அப்போது அம்புஜம் மாமி ''என் பிள்ளைக்கும் மருமகளுக்கும் வாரம்பூரா என் பேத்திகளை சாக்கர் கிளாஸ், பரதநாட்டியம், பியானோ, ஸ்விம்மிங், பர்த்டே பார்ட்டி என்று கொண்டு விடுவதும் கூட்டுவருவதுமாக சரியாக இருக்கு. நேரம் இருந்தால் என் பிள்ளையை உங்கள் வீட்டிற்கு கொண்டு விட சொல்கிறேன்'' என்றாள்.

'ஐயோ மாமி, நானும் என் குழந்தைகள் சின்னவர் களாக இருந்த போது இதே தப்பைத்தான் செய் தேன். அப்போதெல்லாம் ஒருவேகம். என் பிரண்ட்ஸ் தன் குழந்தைகளை வாரம் மூன்று கிளாஸ்களுக்கு அனுப்பினால், நான் என் குழந்தைகளை நாலு கிளாஸிற்கு அனுப்ப வேண்டும் என்ற போட்டி.

''மாமி, இதெல்லாம் குழந்தைகளுக்கு பத்து வயசு வரைக்கும்தான். அதற்கு பின் அவர்களுடைய டேஸ்டே மாறிவிடுகிறது. எதுவுமே பூராவாக கற்றுக் கொண்டோம் என்பதேயில்லை. அதற்காக எல்லா குழந்தைகளையும் அப்படி சொல்ல முடியாது. நூற்றில் ஒன்று நல்ல டான்ஸராக, சுவிம்மிங்கில், சாக்கரில் என்று பிரகாசிக்கலாம். எல்லா பெற்றோர்களுக்கும் அந்த நூறில் நம் குழந்தை ஒன்றாக இருக்ககூடாத என்ற ஆர்வம்தான். எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் காலைவிடுவதற்கு பதில், ஏதேனும் ஒன்றில் ஆழமாக ஊன்றுவது நல்லது அல்லவா'' என்று கூறிமுடித்தாள்.

அம்புஜம் மாமியும் பதிலுக்கு, ''ஆமாம், நீ சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. குழந்தைகளின் விருப்பம் அறிந்து ஏதாவது ஒன்று அல்லது இரண்டு கிளாஸ்களில் மட்டுமே சேர்க்கணும்'' என்று பேசிக்கொண்டிருக்கும் சமயம், மாமிக்கு ஆரத்தி எடுக்க அழைப்பு வரவே அந்த பெண் தப்பித்தாள்.

விமலா பாலு

© TamilOnline.com