வல்லிக்கண்ணன்
இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் எழுத்தாளர்களுள் முதுபெரும் எழுத்தாளராக மட்டுமல்ல நவீன தமிழ் இலக்கியத்தின் வரலாற்றிலும் வளர்ச்சியிலும் தன்னையும் பிணைத்துக் கொண்டவர்தான் வல்லிக்கண்ணன்.

திருநெல்வேலி நாங்குனேரி தாலூகாவில் திசையன்விளை என்ற ஊரில் 1920 நவம்பர் 12 இல் பிறந்தவர். எஸ்.எஸ்.எல்.சி வரை படித்தவர். 1937இல் பரமக்குடியில் குமாஸ்தாவாக அரசு வேளாண்மைத் துறை அலுவலகத்தில் பணி புரிந்தார். 1939ல் பிரசண்ட விகடன் இதழில் 'சந்திரகாந்தக்கல்' என்ற முதற்சிறுகதையை எழுதி வெளிவந்தது.

1940களில் ஆனந்தவிகடன் இதழில் சிறுகதை வெளிவந்தது. பல்வேறு பத்திரிகைகளிலும் கதை கட்டுரைகள் எழுதினார். தான் முழுநேர எழுத்தாளராகவே வரவேண்டுமென்ற விருப்பில் 1941 இல் தனது வேலையை ராஜினாமா செய்தார். சிறுவயது முதல் வாசிப்பும் எழுத்துமீதான ஆர்வமும் வல்லிக்கண்ணனை தீவிர எழுத்தாளராக்கியது. எழுத்தாளருக்குரிய மனநிலையும் வேட்கையும் அவரை வழி நடத்தியது.

1942இல் எழுத்துலகில் முன்னேற வேண்டும் என்ற நோக்கில் வீட்டைவிட்டு வெளியேறினார். பத்திரிகை உலகில் வாய்ப்பு தேட வேண்டும் என்ற நோக்கத்துடன் அன்று 30 மைல்கள் நடந்து இரவு நேரத்தை மரத்தடியில் போக்கி அதிகாலையில் நடையைத் தொடர்ந்து மதுரையைச் சேர்ந்தார்.

ஆனால் அங்கு அவர் எதிர்பார்த்த பத்திரிகை உலகில் புகுந்து கொள்வதற்கான வாய்ப்பு எற்படவில்லை. ஒரு வாரத்திற்கு பிறகு திரு நெல்வேலி திரும்பினார். ஆனால் எழுத்து மீதான தீவிரம் இன்னும் குறைந்தபாடில்லை. தொடர்ந்து எழுதிக் கொண்டே இருந்தார். 'கலைமகள்' இதழில் உருவகக் கதைகள் பல வெளிவந்தன.

1943 ஜனவரியில் புதுக்கோட்டை திருமகள் பத்திரிகையில் சேர்ந்தார். இதழ் சீராக நடைபெற வழி இல்லை என அறிந்து மார்ச் மாதம் கோயம்புதூரிலிருந்து வெளிவந்த 'சினிமா உலகம்' எனும் மாதமிருமுறை வரும் பத்திரிகையில் சேர்ந்தார். அங்கே ஒன்பது மாதங்கள் உழைத்தார். பின்னர் தன்னை மேலும் வளர்த்துக் கொள்ளும் விதத்தில் சென்னை வந்து 'நவசக்தி' மாத இதழில் சேர்ந்தார்.

1944 பிப்ரவரியில் திருச்சியில் இருந்து வந்த கிராம ஊழியன் எனும் இலக்கிய இதழில் உதவி ஆசிரியராக சேர்ந்தார். 1945இல் அப் பத்திரிகையின் ஆசிரியரா கவும் வல்லிக்கண்ணன் பொறுப்பேற்றார். இக் காலத்தில் சிறுசிறு பிரசுரங்களையும் எழுதி வெளியிட்டார். கோயில் களை மூடுங்கள், சினிமாவில் கடவுள்கள், அடியுங்கள் சாவுமணி முதலியன அவர் வெளியிட்டவையில் சில.

1947ல் கிராமஊழியன் பத்திரிகை நின்றுவிட செம்படம்பரில் சென்னை திரும்பி அவரது அண்ணன் அசோகனுடன் வசித்தார். 1948ல் பாரதி விடுதலைக் கழகம் அமைக்கப்பட்டது. அவ் அமைப்பின் செயலாளராக வல்லிக்கண்ணன் இருந்தார். பாரதி பாடல்களை நாட்டுடைமை ஆக்குவதில் தீவிரமாக முயற்சி மேற்கொண்டனர். அதில் இந்த அமைப்பு வெற்றியும் பெற்றது.

1950-51ல் 'ஹனுமான்' வார இதழில் துணை ஆசிரியராக பணி புரிந்தார். ஆனாலும் 1952 முதல் சுதந்திர எழுத்தாளராக வாழத் தொடங்கினார். இதன் பின்னர் வல்லிக்கண்ணன் முழுநேர எழுத்தாளராகவே இன்றுவரை வாழ்ந்து வருகின்றார். எழுத்தையே நம்பி வாழ்ந்து அதிலும் கெளரவத் துடனும் மதிப்புடனும் வாழ்ந்தவர்களுள் வல்லிக் கண்ணனுக்கு சிறப்பான இடமுண்டு.

1944இல் 'கல்யாணி முதலிய சிறுகதைகள்' எனும் நூலை வெளியிட்டார். தொடர்ந்து நாட்டியக்காரி, உவமை நயம் (கட்டுரை) குஞ்சாலாடு (நாவல்) உள்ளிட்ட நூல்களை வெளியிட்டார். தமிழ்ச் சூழலில் வல்லிக்கண்ணன் முக்கியமான எழுத்தாளராக பரிணமித்தார். அவரது வாசிப்பும் தேடலும் பல்வேறு மொழிபெயர்ப்பு முயற்சிகளிலும் ஈடுபட காரணமாக இருந்தது.

வல்லிக்கண்ணன் எழுதத் தொடங்கிய காலம் முதல் இன்றுவரை அவரது எழுத்து வெளிவராத இதழ்கள் மிக மிகக்குறைவு. அவரது பாராட்டுக்கும் அன்புக்கும் ஆட்படாத எழுத்தாளர்களும் குறைவு. தான் எழுதுவதுடன் மட்டும் நிற்பவர் அல்ல. தமிழில் எழுதிக் கொண்டிருக்கும் பல்வேறு தரப்பினரின் எழுத்துக் களை தேடிப் படித்து கொண்டிருப்பவர். அவர்களுக்கு மடல் எழுதி ஊக்குவித்துக் கொண்டிருப்பவர்.

சிறுகதை ஆசிரியராக, நாவலாசிரியராக, கட்டுரை ஆசிரியராக, மொழிபெயர்ப்பாளராக, ஆய்வாரளராக என பல்வேறு களங்களிலும் ஒருங்கே ஓய்வு உலைச்சல் இன்றி உழைத்து வருபவர். 'புதுக் கவிதையின் தோற்றம் வளர்ச்சியும்' (1977), சரஸ்வதிகாலம் (1978), பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை (1981) தமிழில் சிறுபத்திரிகைகள் (1991) போன்ற நூல்கள் தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கியமான நூல்கள். இந்த நூல்களை தவிர்த்து தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதிவிட முடியாது.

இன்றுவரை 75க்கு மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இன்றும் தொடர்ந்து வாசிப் பிலும் எழுத்து முயற்சியிலும் சந்தோஷமாக ஈடுபட்டு வருபவர். தனது எழுத்துக்கு சமூகப் பொறுப்பு இருக்க வேண்டுமென்பதில் பிடிவாதக் குணம் கொண்டவர். காந்திய வாழ்க்கையின் சாயல்களை தன் வாழ்விலும் படரவிட்டவர்.

வல்லிக்கண்ணன் படைப்பாளராக சிந்தனையாள ராக தன்னை அடையாளப்படுத்தி வந்தாலும் அனைத்துப் பிரிவினரின் நன்மதிப்புக்கும் சொந்தக்காரர். இலக்கிய குழுமனப் பான்மை களுக்கு அப்பால் நேசிக்கப்படும் ஒருவராகவே இன்று வரை வாழ்ந்து வருகிறார். இந்த வாழ்க்கையில் அவர் எத்தனையோ பரிசுகளுக்கும் கெளரவங்களுக்கும் தகுதி படைத்துள்ளவராகவே இருந்துள்ளார்.

இதுவரை இந்தியாவுக்கு அப்பால் ஈழத்துக்கு மட்டும் சென்று வந்துள்ளார். எளிமையும், நுண்திறனும் சமூகப் பார்வையும் அவரிடம் இருக்கும் சிறப்பியல்கள். தமிழ் இலக்கியச் சூழலில் வல்லிக்கண்ணனின் தடம் எத்தகையது என்பதற்கு அவர் எழுதிக் குவித்திருப்பவையே சான்று.

வல்லிக்கண்ணன் படைப்பாளராக சிந்தனை யாளராக தன்னை அடையாளப்படுத்தி வந்தாலும் அனைத்துப் பிரிவினரின் நன்மதிப்புக்கும் சொந்தக்காரர். இலக்கிய குழுமனப்பான்மை களுக்கு அப்பால் நேசிக்கப்படும் ஒருவராகவே இன்று வரை வாழ்ந்து வருகிறார். இந்த வாழ்க்கையில் அவர் எத்தனையோ பரிசுகளுக்கும் கெளரவங்களுக்கும் தகுதி படைத்துள்ளவராகவே இருந்துள்ளார். 'சாகித்திய அகாதமி' யும் வல்லிக் கண்ணனுக்கு பரிசு கொடுத்து கௌரவித்துள்ளது.

பொறுப்புகள் இல்லாமல் வாழ்வதே எனக்குப் பிடிக்கும். கல்யாணம், மனைவி, குடும்பம் முதலியன பொறுப்புகளை அதிகம் சுமத்துகிற பிணைப்புகள், எனவே அவற்றிலிருந்து ஒதுங்கினேன். ஆகவே நான் சுத்த சுயம் பிரகாச சுயநலம் காரணமா கத்தான் திருமணம் செய்து கொள்ளவில்லை. இலக்கிய சேவைக்காகத்தான் நான் செய்து கொள்ளவில்லை என்று நான் சொன்னால், அது என்னை நானே ஏமாற்றிக் கொள்வதாகும் என தன்னடக்கமாகவே வல்லிக்கண்ணன் கூறுவார்.

இன்றுவரை வல்லிக்கண்ணன் அதே நடை உடை பாவனையும், போலிமையும் பாசாங்கும் இல்லாமல் வாழ்ந்து வருகிறார். ஜனரஞ்சக கவர்ச்சிக்கு அடிபணியாமல் ஒருவித சீரிய மனப்பான்மையுடன் இயங்கிக் கொண்டிருப்பவர். அவரது எழுத்தில் பிழையோடும் மனிதநேயம்தான் தனது வாழ்க்கை யின் போக்கும் நோக்கும் என்பதாகவே வாழ்ந்து வருகிறார்.

படைப்புகள்

  • தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு)

  • விடிவெள்ளி (நாவல்)

  • அன்னக்கிளி (நாவல்)

  • வசந்தம் மலர்ந்தது (நாவல்)

  • வாழ விரும்பியவள் (சிறுகதை)

  • சுதந்திரப் பறவைகள் (சிறுகதை)

  • வல்லிக்கண்ணன் கதைகள்


தெ. மதுசூதனன்

© TamilOnline.com