சிக்கலான பிரசினைகளுக்கு தீர்வு?...
இந்த இதழில் இருந்து நண்பர் மணிவண்ணன் எழுத இருக்கிறார். சென்ற இதழில், நான் எனது பக்கத்தை எழுதி முடித்தபின் அதே நோக்கில் எழுதப்பட்ட அவரது 'தமிழ் நாதம்' கிடைத்தது. என்னவோ தெரியவில்லை; எனக்கும், அவருக்கும் இந்த 'ஒற்றுமை' அதிகமாக இருக்கிறது. 'மருதம்' இதழைப் பார்த்து அதைப் பற்றி எழுதலாம் என்று இருந்தேன். இனிமேல், அவரது கட்டுரை கைக்கு வந்த பின்னரே நான் யோசிக்க ஆரம்பிக்க வேண்டும்போலிருக்கிறது.

TI2002 இனிதே நடந்து முடிந்தது. பலரது கடும் உழைப்பும், ஆர்வமும் இந்த வெற்றிக்குப்பின் இருக்கின்றன. அனைவருக்கும் உலகத்தமிழர்களின் சார்பிலும், தமிழார்வளர்களின் சார்பிலும் நன்றி. மகிழ்ச்சிக்கு நடுவில் ஒரு சிறிய நெருடல்: சிலருக்கு இந்தியாவிலிருந்து இம்மாநாட்டிற்குச் செல்ல விசா கிடைக்காமல் போய்விட்டது என்று கேள்விப்பட்டேன். இது உண்மையானால், மிகவும் வருந்தத் தக்கது. அமெரிக்காவின் கவலைகள் நியாயமானவையே; (மேலும், அந்நாட்டுக்கு எவரை வர அனுமதிப்பது என்ற முடிவு அவர்களுடையது). சிக்கலான பிரசினைகளுக்கு தீர்வு தெரியவில்லை.

தீர்வு எனக்குத் தெரியாவிட்டால் பெரிய இழப்பு எதுவும் இல்லை; ஆட்சியில் இருப்போரும், அரசியல்வாதிகளும், மக்களின் மதிப்பைப் பெற்றவர்களும் இதே நிலையில் இருக்கிறார்கள். அற்புதம் நிகழ்த்த வேண்டாம், நிலைமையை இன்னும் சிக்கலாக்காமல் இருந்தால் போதும். ஆனால், அதுதான் நடக்கிறது.

காவிரி நீர்ப்பங்கீடு நெடுங்காலப் பிரசினை - நீர்வளம் இன்றி பயிர்களும், விவசாயிகளும் வாடுவது பெரும் கொடுமை. அதே அளவுப் பெரும் கொடுமை நமது அடிப்படை மனப்பான்மையில் ஊன்றப்படும் விஷ வித்துக்கள் - அனைவரும் 'நமது பிரச்சினைகளுக்குக் காரணம் இன்னொருவர் (மற்ற மாநிலத்தவர், அல்லது மற்ற மதம், இனம், சாதி சார்ந்தவர்' என்ற முடிவை நோக்கித்தள்ளப் படுகிறார்கள். குறுகிய நோக்கும், சுயலாபம் மட்டுமே தேடும் போக்கும் கொண்டவர்கள் இந்த மனப்பான்மையை வளர்க்கும் காரியத்தை செய்து வருகிறார்கள்.

"Those who can not remember the past are condemned to repeat it" - George Santayana

இது போன்ற சொற்றொடர்களும், 'நீண்ட காலப் பிரச்சினை, தொலை நோக்கு தேவை' போன்றவையும் எவ்வளவுதான் உண்மையாக இருந்தாலும், எவ்வகையிலும் இவ்வார்த்தைகள் துன்பப்படுவோர்க்கு ஆறுதலாக முடியாது; தீர்வாகவும் முடியாது. அதேபோல் ஆதரவுப் போராட்டங்களும். ஆர்ப்பாட்டங்களும் அவ்வாறே என்பதையும் நாம் உணரவேண்டும். தீர்வு என்னவென்று தெரியவில்லை என்றாலும், இதுவரையில் நடந்த 'கூத்துக்கள்' தீர்வு தரமாட்டா என்பதையும், மாறாகத் தீர்வை எட்டுவதை மேலும் கடினமாக்கும் என்பதை நிச்சயம் சொல்ல முடியும்.

தமிழக அரசின் புதிய மத மாற்றம் பற்றிய சட்டத்தையும், அதற்கு ஆதரவளித்துப் பேசும் சில 'தலைவர்'களையும் பார்க்கும்போது, நான் SSLC ஆங்கிலப் பாடத்தில் படித்த Oscar Wilde's Happy Prince சிறுகதையில் இருந்து ஒரு இடம் நினைவுக்கு வருகிறது.

`And here is actually a dead bird at his feet!' continued the Mayor. `We must really issue a proclamation that birds are not to be allowed to die here.' And the Town Clerk made a note of the suggestion.

தென்றல் வாசகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்.

மீண்டும் சந்திப்போம்,
பி.அசோகன்
நவம்பர் - 2002

© TamilOnline.com