சும்மா கிடந்த சங்கை ஊதி...
கட்டாயமதமாற்றத் தடைச் சட்டம் வந்தாலும் வந்தது. பல பிரமுகர்களின் நடவடிக்கைகளில் திடீர் மாற்றம். காஞ்சிகாமகோடி ஜெயேந்திர சரஸ்வதியும் அதில் ஒருவர். கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை ஆதரித்து மெரீனா கடற்கரையில் பெரும் கூட்டம் நடைபெற்றது. சங்கராச்சாரியார் கூட்டத்துக்கு தலைமைத் தாங்கி நடத்தினார்.

கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு வேட்டி சேலை கொடுக்கப்பட்டது. இவை தீபாவளிப் பரிசாக வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனாலும் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்துக்கு ஆதரவாக நடைபெறும் கூட்டத்துக்கு வரும் நபர்களுக்கு பரிசுகள் கொடுப்பது ஓர் முரண்பட்ட நிகழ்ச்சியாகத்தான் உள்ளது.

இன்னொருபுறம் கட்டாயமதமாற்றத் தடைச் சட்டம் 'இந்து' என்றால் என்ன என்ற விளக்கத்துக்குரிய பேச்சாகவும் விவாதமாகவும் திசை திருப்பப்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி இந்தி அகராதி ஒன்றில் இந்து என்றால் திருடன் என்று கூறப்பட்டுள்ளதாக இந்தச் சட்ட எதிர்ப்பு கூட்டமொன்றில் கூறினார்.

இந்த அகராதி விளக்கம் வீணான சர்ச்சைகளுக்கு களம் அமைத்துக் கொடுத்துள்ளது. கருணாநிதி தனது சொந்தக் கருத்தை கூறி விவாதத்தை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் அப்படி அமையாது சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் கதை போல் கருணாநிதி உள்ளார்.

இந்து என்றால் திருடன் என்று கூறிய சர்ச்சை கருணாநிதி மீது நீதிமன்றத்தல் வழக்கு தாக்கல் செய்யும் நிலைவரை சென்றுள்ளது.

******


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலை மத்திய தொல்பொருள்துறை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிவு எடுத்துள்ளது. இந்த முடிவுக்கு திருவண்ணாமலை மக்கள், தமிழக அரசு, எதிர்க்கட்சிகள் உள்ளிட்டவை தமது வன்மையான கண்டனத்தை, எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.

கோவிலை மத்திய தொல்பொருள்துறை தமது பொறுப்பில் எடுக்கும் முயற்சியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடுத்தது. நீதிமன்றமும் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது.

******


நவம்பர் 9ம் தேதி அதிமுக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது. உணவுத்துறை அமைச்சர் தனபால், தொழிலாளர்துறை அமைச்ச்ர வி.டி. நடராஜன் பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சர் டி. சுதர்சனம் ஆகியோரிடமிருந்து அமைச்சர் பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது. புதிதாக அன்வர் ராஜா, ஆர். வைத்தியலிங்கம், ஆர். வடிவேல், பி.வி. தாமோதரன், ஏ. பாப்பா சுந்தரம் ஆகியோர் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அன்வர் ராஜா முன்னர் அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக அரசு ஆட்சிப்பொறுப்புக்கு வந்து 18 மாதங்களில் 9 முறை அமைச்சர்களை மாற்றியிருக்கிறது. இந்த ஆட்சி முடிவதற்குள் அனைவரும் அமைச்சர்களாகியே தீருவர் என்று எதிர்பார்க்கலாம்.

கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா சந்தனக்கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்டு 100 நாட்களை நெருங்கிவிட்டன. ஆனால் நாகப்பாவை மீட்க தமிழக கர்நாடக இரு அரசுகளும் இணைந்து செயற்படும் நிலையில் இல்லை. நாகப்பா குடும்பம் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து நாகப்பாவை மீட்க உதவும்படி கேட்டுக் கொண்டது.

ஆனால் தமிழக கர்நாடக இரு அரசுகளும் வீரப்பன் விவகாரத்தில் மாறுபட்ட கருத்துக் கொண்டுள்ளார்கள். இதனால் நாகப்பாவை மீட்பதில் தாமதம் ஏற்படுகிறது. இதுவரை வீரப்பனிடம் இருந்து 5 கேசட்டுகள் வந்துள்ளன. தூதராக குளத்தூர் மணியை அனுப்ப வேண்டுமென்பதில் வீரப்பன் உறுதியாக உள்ளான்.

கர்நாடக அமைச்சரவை நாகப்பாவை எப்படியேனும் மீட்டுவிட வேண்டுமென்ற நெருக்கடியில் உள்ளது. நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட போது இருந்த பரபரப்பு, அவசரம், மீட்பதற்கு தூதுவர்கள் தயாரானநிலை இவையெல்லாம் நாகப்பா விவகாரத்தில் இல்லாமல் போய்விட்டது.

வீரப்பன் மனமிரங்கி நாகப்பாவை விடுவிப்பானா? அல்லது சிறையில் இருக்கும் குளத்தூர் மணி தான் மீட்பரா? பதில் தெரியாத குழப்பமாகவே கடத்தல் நீடிக்கிறது.

******


பொடாவின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள மதிமுக தலைவர் வைகோவை திமுக தலைவர் கருணாநிதி சிறையில் சென்று பார்த்தார். குடும்பப் பாசம் என்று சந்திப்புக்கு காரணம் கூறினாலும் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் கருதியதாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

வைகோ பொடாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடிவு எடுத்துள்ளார். இதுபோல் பழ. நெடுமாறனும் வழக்கு தாக்கல் செய்ய உள்ளார்.

******


தமிழ்நாட்டில் பேருந்துகளை தனியார்மயமாக்கும் திட்டநடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. சுமார் 50 சதவீத பஸ்களை தனியாருக்கு தருவதற்கான முயற்சிகள் தீவிரமாகி உள்ளது.

இந்த தனியார்மயமாக்கும் முயற்சியால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையில்லாமல் வீட்டுக்கு அனுப்பக்கூடிய ஆபத்து உருவாகியுள்ளது. ஆகவே அதிமுக அரசின் தனியார்மயமாக்கல் திட்டத்துக்கு எதிராக தொழிற்சங்கங்கள் போராட திட்டமிட்டுள்ளன. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவிப்பதுடன் போராட்டத்தை நடத்தவும் தயாராகிவிட்டனர்.

தமிழகம் மீண்டும் ஏதோவொரு வடிவில் போராட்டத்தை சந்திக்க தயாராகிவிட்டது.

துரைமடன்

© TamilOnline.com