பங்குகள் பட்ட பாடு - (பாகம் - 1)
முன் கதை: Silicon Valley - இல் தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பற்றிப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாட ஆரம்பிக்கவே, முழு நேரமாகத் துப்பறிய ஆரம்பிக்கிறார். சட்ட வழக்கு நிறுவனம் வைத்திருந்த அவரது நண்பர் ஒருவரின் மகன் கிரணும் மகள் ஷாலினியும் அவரது துப்பறியும் தொழிலில் மிக ஆர்வம் கொண்டு அவருக்கு உதவி புரிகின்றனர். கிரண் MBA படித்து பங்கு வர்த்தகம் புரிபவன். ஆனால் துப்பறியும் ஆர்வத்தால் சூர்யாவுடனேயே நிறைய நேரம் செலவழிக்கிறான்! அவனுக்கு மிகப் பிடித்தவை வேகமான கார்கள், வேகமான பெண்கள், வேகமான எலக்ட்ரானிக்ஸ்! ஷாலினி Stanford மருத்துவமனையில் மருத்துவராகவும், Bio-Medical ஆராய்ச்சி நிபுணராகவும் பணி புரிபவள். அவளுக்கு சூர்யாவின் மேல் உள்ள ஒரு தலை நேசத்தைச் சூர்யாவிடம் கூற வேண்டாம் எனத் தன் தம்பி கிரணிடம் கட்டாயமாகக் கூறியிருக்கிறாள். சூர்யாவின் கடந்த கால சோகம் அவர் இதயத்தை இறுக்கியிருப்பதை அவள் அறிவதால், அது இளகும் வரை காத்திருக்க நினைக்கிறாள்.

******


கிரண் தன் இருக்கையில் குறுக்காக படுத்தது போல் பரந்து கொண்டு கம்ப்யூட்டர் திரையில் வண்ண வண்ணமாக ஆடிக் கொண்டிருந்த எண்களின் பரத நாட்டியத்தை ரசித்துக் கொண்டு அவ்வப்போது சில பங்கு வர்த்தக ஆணைகளை அனுப்பிக் கொண்டிருந்தான். பார்ப்பவர்களுக்கு அவன் அலட்சியமாக, சோம்பலாக இருப்பதாகவே பட்டாலும் அவனுடைய கூர்மையான பங்கு வர்த்தக அறிவால் அவனுடைய ஆணைகள் அவனுக்கும் அவன் வாடிக்கையாளர்களுக்கும் லாபத்தைப் பெருக்கிக் கொண்டே இருந்தன. மேலும் அவன் செய்யும் வாங்கல் விற்றல் எல்லாம் பெரும்பாலும் அவன் முன் கூட்டியே ப்ரோக்ராம் வர்த்தகங்களாக செய்து வைத்திருந்ததால் அவை தாமாகவே நடந்து கொண்டிருந்தன. அவ்வப்போது சில பங்கு வியாபாரங்களையும், ப்ரோக்ராம் செய்த எல்லைகளையும் மட்டும் மாற்றுவான்.

அவனுடைய பெரும் வேலை பல்வேறு புறங்களிலிருந்து கிடைக்கும் விவரங்களை ஜீரணித்து எந்த பங்குகளை எந்த விலைக்கு வாங்கலாம், எந்த விலைக்கு விற்க வேண்டும் என்ற எல்லைகளைக் கணித்து நிர்ணயிப்பது. அதன் பின் அவற்றை நிறைவேற்றும் வேலை கம்ப்யூட்டருக்கும், கிரணுடன் பணியாற்றும் பங்கு வர்த்தகர்களுக்கும் தான்!

அதனால்தான் கிரண் தன் அலுவலகத்திலேயே இல்லாமல் சூர்யாவுடனேயே சுற்ற முடிந்தது. அப்படி சுற்றும் போது கூட, ஸெல் ·போன் மூலமும், மின்வலையுடன் இணைக்கப் பட்ட தன் PDA-விலிருந்தும் வேலையை முடித்து விடுவான். அவனால் பெரும் பலன் கிடைத்ததால், அவன் வேலை செய்த ஹார்வி வில்கின்ஸன் ·பைனான்ஷியல்ஸ் நிறுவனத்தார் அவனைப் போகும் வழியிலேயே விட்டு விட்டிருந்தனர்!

கிரணின் ஸெல் ·போன் அவனுக்குப் பிடித்த ராக் இசை ரிங் டோனில் அலறியது! கிரண் அதை எடுத்து பேசியதும் ஒரே குரல் இரண்டாகக் கேட்பது போல் இருந்தது! கிரணின் நிறுவனத் தலைவர் ரிக் வில்கின்ஸன் அவன் அலுவலக அறைக்குள் நுழைந்தார்.

"கிரண்! அட! நீ இங்கயே இருக்கியா?! மழை வானத்தைப் பிச்சு கிட்டு கொட்ட வேண்டியதுதான் போ! நான் உன்னை இங்கே பார்த்து எவ்வளவு நாளாச்சு தெரியுமா? எனக்கு உன் குரல்தான் ஞாபகம் இருக்கு, முகம் மறந்தே போச்சு! என்ன, துப்பறியற வேலை ரொம்பக் குறைஞ்சு போச்சோ?!"

கிரண் பதிலடி அடித்தான். "ரிக், ஸெல் ·போன்லதான் உங்க குரல் இனிமையா கேட்கரத்துக்கு நல்லா இருக்கு! நேர்ல கர்ண கடூரம்! நான் இங்க இருந்தா என்னை எதாவது பக்க நிர்வாக வேலைல மாட்டிடுவீங்களே? அப்புறம் அதால என் ட்ரேடிங் குறைஞ்சு கம்பனி லாபந்தான் கம்மியாகுது! அதுக்கு பதிலா துப்பறியற வேலையே மேல்! வியாபாரம் தடை படறதே இல்லை! அதான் உங்க கண்ல படாம ஒளிஞ்சுக்கறேன்! இப்ப என்ன வச்சிருக்கீங்க?"

ரிக் புன்னகையுடன், "உன் கூட பேசி ஜெயிக்க முடியாதுப்பா, விட்டுடு!". அவர் முகத்தில் திடீரென வருத்தத்துடன் சேர்ந்த கவலை தொத்திக் கொண்டது. அறைக் கதவை மூடினார். "கிரண், ஸீரியஸா சொல்றேன் கேட்டுக்க. நம்ம நிறுவனம் இப்ப ரொம்ப ஆபத்துல இருக்கு. உன் உதவி நிச்சயம் தேவை..." என்று இழுத்தார்.

கிரண் வழக்கமாக சிரித்து சிரித்துப் பேசும் ரிக்கின் பாவனையில் ஏற்பட்ட வித்தியாசத்தைக் கண்டு உஷாரானான். மேலும் அவர் உடல் தோரணையும் மிகவும் மாறிப் போய் கம்பீரம் இழந்து முகத்திலும் கவலை ரேகைகள் படர்ந்து பத்து வயது ஏறி விட்டது போல் காட்டின.

ரிக் ஆறடி இரண்டங்குல உயரம், ஆஜானுபாகுவான உடல். ஆனால் தற்போது கவலையாலும் மன அழுத்தத்தாலும் குறுகிப் போனது போல் இருந்தார்.

கிரணும் கிண்டலை விட்டு, "ஏன், என்ன ஆச்சு?! சொல்லுங்க. உதவி கேக்கணுங்கறதில்லையே? எதானாலும் செய்யறது என் கடமை" என்றான்.

ரிக் கவலையுடன் தொடர்ந்தார். "இந்த விஷயம் வெளியில யாருக்கும் தெரியக் கூடாது! தெரிஞ்சா அதோ கதிதான். உன் துப்பறியறத் திறமை இதுக்கு உதவலாங்கறதுனாலதான் நான் உன்னை இதுல இழுக்கறேன். இல்லைன்னா, இதுல உன்னை மாட்டி விட நான் விரும்ப மாட்டேன்..."

ரிக் வில்கின்ஸன் அந்த நிறுவனத்தை கென்ட் ஹார்வி என்பவருடன் முப்பது வருடங்களுக்கும் முன்பு இருவர் மட்டுமே இருந்த ஒரு அறை அலுவலகத்தில் ஆரம்பித்தார். அப்போதிலிருந்து சிறிது சிறிதாக வளர்ந்த அந்நிறுவனம், தற்போது ஆயிரக் கணக்கான வாடிக்கையாளர்களுடன், பல நூற்றுக் கணக்கானவர்கள் வேலை செய்யும் பல மாடிக் கட்டிடத்தில் இருக்கும் அளவுக்கு தேறி விட்டது.

ஹார்வி வில்கின்ஸன் நிறுவனம், வாடிக்கையாளர்களின் மதிப்பையும் நம்பிக்கையையுமே அஸ்திவாரக் கற்களாய்க் கொண்டு வளர்ந்தது. அத்தகைய நிறுவனத்தில் வேலை செய்யும் எவனோ ஒரு பேராசைக்காரன் மோசடிக் காரியம் செய்திருப்பது வாடிக்கையாளருக்குத் தெரிந்தால், மதிப்பிழக்காவிட்டாலும், நம்பிக்கைத் தளர்ந்து, வேறு நிறுவனத்துக்கு மாற்றி விடுவார்கள் என்று ரிக் மிகவும் வேதனைப் பட்டார்.

ரிக்கின் மனம் ஆழமாக புண்பட்டிருப்பதும், விஷயம் எங்கு வெளி வந்து விடுமோ என்ற பயத்தாலும், யாரை நம்ப முடியுமோ என்ற சந்தேகத்தாலும் இன்னும் தயங்குவது கிரணுக்கு நன்றாகப் புரிந்தது. "தயங்காதீங்க. எதுவானாலும் உங்களுக்கு நான் உதவத் தயார். போட்டு உடைச்சுடுங்க ப்ளீஸ், சஸ்பென்ஸ் தாங்கலை!" என்று ஒரு குழந்தை போல் கேலியாகக் கெஞ்சினான்.

ரிக் சிரித்து விட்டு சற்றுத் தளர்ந்தார். "உன் குணம் மாறாது! எப்பவும் இந்தத் தமாஷ்தான்! சரி கவனமாக் கேட்டுக்க." அவர் குரல் இன்னும் தாழ்ந்தது. "யாரோ நம்ம கம்ப்யூட்டர் ப்ரோக்ராமைத் தப்பா பயன் படுத்தி பண மோசடி செய்யறா மாதிரித் தெரியுது. அது பத்தின விவரங்கள் தெரியறத்துக்கு முன்னாடி நான் வெளி ஆளுங்களைக் கொண்டு வந்து களேபரம் படுத்த விரும்பலை. நம்ம தொழில்ல வாடிக்கையாளர்களுடைய நம்பிக்கை மிக மிக முக்கியம். இதை யார் செய்யறாங்கன்னு கண்டு புடிச்சு சரி செஞ்சாகணும். அதுனால முதல்ல நிறுவனத்துக்குள்ளயே விசாரிக்கணும். நம்ம கம்ப்யூட்டர் பாதுகாப்புக் குழுவும் ஆடிட் குழுவும் ஏற்கனவே அலசிக் கிட்டிருக்காங்க. ஆனா எனக்கு உன் கம்ப்யூட்டர் மற்றும் துப்பறியும் திறமைகள் பத்தித் தெரியும். நீ இந்த நடவடிக்கைல கலந்துகிட்டா நிச்சயமா நல்ல பலன் கிடைக்கும். என்ன சொல்றே?!" என்றார்.

அவர் சொல்லி வாய் மூடுவதற்குள், கிரண், "சொல்றத்துக்கென்ன இருக்கு?! அ·ப்கோர்ஸ்! நிச்சயமா செய்யறேன். வாங்க போலாம்!" என்று அவரை இழுத்துக் கொண்டு ஓடாத குறையாக கம்ப்யூட்டர் தளத்துக்கு விரைந்தான்.

கிரணுக்கு அவனுடைய நிறுவனத்தின் கம்ப்யூட்டர்களைப் பற்றி நன்றாகத் தெரியும். ஹை-டெக் எலக்ட்ரானிக் விஷயங்களில் அவன் மிகவும் ஆர்வம் உள்ளவன் ஆதலால் சமயம் கிடைக்கும் போதெல்லாம் அந்தத் தளத்தில் போய் அங்கிருக்கும் கம்ப்யூட்டர்கள், அவற்றை இணைக்கும் மின்வலைக் கருவிகள், அவற்றில் ஓடும் வெவ்வேறு விதமான சா·ப்ட்வேர்கள் இவற்றையெல்லாம் அக்கு வேறு ஆணி வேறாக அலசிக் கொண்டிருப்பான். அங்குப் புதிதாக எது நிர்மாணிக்கப் பட்டாலும், ஒரு புதிய பொம்மை வாங்கியதும் குழந்தை அதை உடனே பெட்டியிலிருந்து எடுத்து விளையாட வேண்டும் என்றுத் துடிப்பது போல அதை அலசி முடிக்கும் வரை அவனுக்கு இருப்புக் கொள்ளாது. அத்தகைய நேரங்களில் அவன் சூர்யாவுக்குக் கூட கிடைக்காமல் காணாமல் போய் விடுவான்! சூர்யாவுடன் சுற்றாத நேரங்களில் அவன் இருக்கக் கூடிய மிகச் சில இடங்களில் ஹ'ர்வி வில்கின்ஸன் நிறுவனத்தின் கம்ப்யூட்டர் தளம் ஒன்று!

கிரண் கம்ப்யூட்டர் தளத்தின் சா·ப்ட்வேர் பிரிவுக்குச் சென்றான். அங்கு அவனுக்கு மிகவும் நண்பர்களான கண்ணன், சுரேஷ் என்னும் இருவர் முக்கியமான பதவிகளில் இருந்தனர். இருவரும் அந்த நிறுவனம் பயன்படுத்திய தனிப்பட்ட விசேஷமான ப்ரோக்ராம் எழுதிய குழுக்களில் முதன்மை பெற்றவர்கள்.

கிரண் ரிக்கிடம், "இந்த விஷயம் கண்ணனுக்கும் சுரேஷ¤க்கும் தெரியுமா? அவங்களை நான் இழுத்துக்கலாமா?" என்று கேட்டான்.

ரிக் தலையசைத்து மறுத்து, "இல்லை இது வரைக்கும் ரொம்ப சில பேருக்குத்தான் தெரியும். ரெண்டு கையில எண்ணிடலாம். ஆடிட் ஆளுங்க கூட எதோ கணக்குல பிசகா நடந்திருக்குன்னு தான் நினைச்சு பார்த்துகிட்டிருக்காங்க. செக்யூரிட்டி பிரிவினர் இதை பத்தி ஆராய்ஞ்சுகிட்டிருக்கிறது அவங்களுக்குத் தெரியாது. இதை இப்போதைக்கு மூடி வைக்கிறதுதான் நல்லது. கண்ணன், சுரேஷ் போன்றவங்களுக்கெல்லாம் தெரிய வேண்டாம். தெரியப்படுத்தாம எதாவது செய்ய முடியுமான்னு முதல்ல பாக்கலாம்." என்றார்.

கிரண், "ஹ¥ம், தெரியாட்டா குடாயறது கஷ்டமாச்சே... சரி, ட்ரை பண்ணிப் பாக்கறேன். ஆனா கூடிய சீக்கிரம் எதுவும் தெரியலன்னா அவங்களுக்கும் விஷயத்தைச் சொல்லி இன்னும் ஆழமா விசாரிக்கணும். இந்த சா·ப்ட்வேர்ல அவங்கதான் எக்ஸ்பர்ட். நான் ரொம்ப கேம்தான் எழுதுவேன். இந்த ஆர்பிட்ராஜ், ட்ரான்ஸேக்ஷன் அக்கவுன்டிங் மாதிரி விவகாரம் எல்லாம் கண்டா எனக்கு கொஞ்சம் பயந்தான்!" என்றான்.

ரிக், "சரி, முதல்ல முயற்சி பண்ணிப் பாரு, அப்புறம் பாக்கலாம்!" என்றார்.

கிரண், "ஒகே, யூ ஆர் த பாஸ்! என்ன நடக்குது, நான் என்ன பாக்கணும்னு சொல்லுங்க! என்னால ஆன அளவுக்கு விஷயத்த வெளியில விடாமப் பாக்கறேன்" என்றான்.

ரிக் விளக்கினார். "இந்த சா·ப்ட்வேர் எல்லாம் எப்படிப் பயன் படுத்தப்படுதுன்னு உனக்கு நல்லாத் தெரியும். சமீப காலமா ரெண்டு விதமான மோசடி நடக்கறதுன்னு தெரிஞ்சிருக்கு. இன்னும் பல விதங்கள் தெரியாம இருக்கலாம். தெரிஞ்சதுல ஒண்ணு 'பென்னி (Penny) ஷேவிங்'. பெரிய பெரிய ட்ரான்ஸேக்ஷன்கள் ஒரு நாளுக்குப் பல முறை நடக்குது. அதுல சில சமயம் விலையோ கமிஷனோ கணக்கு போடச்சே சரியா டாலர்ஸ் அன்ட் ஸென்ட்ஸா வகு படாம ஒரு பென்னில ஒரு பின்னமா மீதி இருக்கும். அத பென்னி வரைக்கும் சரியான அக்கவுன்ட்ல போட்டு காட்டிட்டு அந்த சிறு பின்னத்தை இன்னொரு அக்கவுன்ட்ல போட்டுடுவாங்க. நாள் முடிவுல அந்த இன்னொரு அக்கவுன்ட்ல சேர்ந்திருக்கற சில டாலர்களை ஒவர்ஸீஸ் நம்பர் அக்கவுன்ட்டுக்கு வையர் ட்ரான்ஸ்·பர்ல அனுப்பப்படுது. இப்படித் தினமும் நடக்கறதுனால சில மாசங்களில பல ஆயிரம் ரொக்கம் போயிடுது!"

கிரண் இடை புகுந்தான். "அடிடா சக்கைன்னான்! ப்ரில்லியன்ட்! நல்ல திருட்டுதான் இது! கத்தியில்லாம சத்தமில்லாம பகல் கொள்ளை! சே! இதை நான் முதல்ல நினைச்சு அடிக்காம போயிட்டேனே!" என்றான். ரிக்கின் முகம் போன போக்கைப் பார்த்து வாயைப் பொத்திக் கொண்டு, "சாரி, அடக்கிக்க முடியல! மேல சொல்லுங்க" என்றான்.

ரிக், "இட் இஸ் நாட் ·பன்னி, கிரண்" என்று முறைத்து விட்டு தொடர்ந்தார். "இரண்டாவது 'கோஸ்ட் (ghost) ட்ரான்ஸேக்ஷன்'. அதாவது யார் ப்ரோக்கர்னே போடாம மிக நிறைய டிரேடிங் நடக்கற ரெண்டு அக்கவுன்ட்களில ஒரு ஜோடி ட்ரான்ஸேக்ஷன்கள் சேத்து அதுல வர கமிஷனை அந்தத் தனி அக்கவுன்ட்ல சேத்து நாள் முடிவுல வையர் ஆயிடுது. இதுல முதல்ல சொன்னதை விட பணம் ரொம்ப அதிகம்!" என்றார்.

கிரண் ஆச்சர்யம் காட்ட வாயைக் குவித்து மெல்ல விஸிலடித்தான்! "கில்லாடிங்கதான்! சரி சா·ப்ட்வேர்ல என்ன பார்க்கணும்?"

ரிக் மெல்ல தலையாட்டினார். "ஆமாம். ரொம்ப க்ளெவர்தான். அதுனாலதான் உன் திறமை தேவை. முதலாவது, இந்த ப்ரோக்ராம் ஸோர்ஸ் கோட் (source code) மொத்தம் பாத்து, உனக்குத் தெரியற படி யார் செஞ்சிருக்கலாம்னு எதாவது க்ளூ கிடைக்குதான்னு பாக்கணும். மேலும், இன்னும் என்னென்ன மோசடி செஞ்சிருக்காங்கன்னு புதுசா எதாவது தெரிய வருதான்னு அலசணும்."

கிரண், "செய்யறேன். ஆனா அதெல்லாம் கண்ணன், சுரேஷ் ரெண்டு பேருக்கும் தெரியாம செய்ய முடியாதே..." என்று இழுத்தான். சற்று யோசித்து விட்டு, "சரி இப்படி செய்யலாமா - நான் இந்தப் ப்ரோக்ராம் எல்லாம் வெளியிலேந்தே பயன் படுத்தி போர் அடிச்சுப் போச்சு, அது எப்படி வேலை செய்யுதுன்னு தெரிஞ்சுக்கணும்னுதான் நோண்டறதா சொல்றேன். அந்த செக்யூரிட்டி ஆளுங்களை எனக்கு அந்த ஸ்டோரேஜ் வால்யூம்ல இருக்கற டிரெக்டரிகளுக்கும் ·பைல்களுக்கும் அனுமதி குடுக்க சொல்லுங்க. CIO கிட்டயும் நான் பாக்கறத சொல்லி ஸா·ப்ட்வேர் குழுவுக்கு மெமோ அனுப்ப சொல்லிடுங்க!" என்றான்.

ரிக் மெச்சினார். "ரொம்ப நல்ல ஐடியா கிரண். அப்படியே செய்யலாம். நான் இப்பவே ஈ-மெயில் அனுப்பிடறேன். நீ போய் அவங்களோட இப்பவே பேச ஆரம்பி. உனக்கு எதாவதுத் தெரிஞ்சா உடனே என்னைக் கூப்பிடு." என்று கூறிவிட்டு விரைந்தார்.

கிரண், கண்ணன் சுரேஷ் இருவரும் அமர்ந்திருந்த அறைகள் இருந்த பிரிவுக்குச் சென்றான். கண்ணனும் சுரேஷ¤ம் எவ்வளவு வித்தியாசமாக இருக்க முடியுமோ அவ்வளவு வித்தியாசம்! கண்ணன் உயரமாக, திடகாத்திரமாக, பெயருக்கேற்றார் போல் கார் மேக வண்ணனாகக் காட்சியளித்தான். முகத்தில் ஒரு மில்லி மீட்டர் கூட முடி தெரியாமல் ஷேவ் செய்து பள பளவென்று வைத்திருந்தான். முடியையும் எண்ணை போட்டு சீவியது போல் க்ரீம் தடவி நேர்த்தியாக வைத்திருந்தான். சுரேஷோ, படு குள்ளம், எலும்பை எண்ணிவிடலாம் போல ஒல்லி. மீசை மட்டும் பெரியதாக மேலுதட்டை மறைத்திருந்தது! முடி வெட்டி பல மாதங்களாகியிருந்தன போலும்! காடாக வளர்ந்து அடங்காப்பிடாரியாக பல திசைகளிலும் நீட்டிக் கொண்டிருந்தது! குணத்திலேயும் இருவரும் நேர் எதிர். கண்ணன் கிரணுக்கேற்றார் போல் தமாஷ் பேர்வழி. சுரேஷோ கணக்கு வாத்தியார் போல் படு சீரியஸ்!

ஆனால், சா·ப்ட்வேர் டிசைன் செய்து அவ்வளவு அனுபவமற்ற ப்ரோக்ராமர்களுடன் சேர்ந்து அதை இறுதி உருவுக்கு கொண்டிவருவதில் மட்டும் இருவரும் ஒரே மாதிரி சேம்பியன்கள்! இருவரும் தமிழ்நாட்டுப் பொறியியல் கல்லூரிகளில் கம்ப்யூட்டர் ஸயன்ஸ் படித்து விட்டு அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் மாஸ்டர்ஸ் பட்டம் வாங்கியவர்கள். மூளையென்றால் அபார மூளை! நிறுவனம் வெளியிலிருந்து வாங்கிய மென்பொருட்களை நிர்மாணித்து டூன் செய்வது மட்டுமல்லாமல், உள்ளேயே டிஸைன் செய்யப்பட்ட விசேஷமான சா·ப்ட்வேரை எழுதுவதும் அவர்கள் பொறுப்பே. ஹார்வி வில்கின்ஸன் நிறுவனத்தின் மென்பொருள் குழுவில் பணியாற்றிய முனைவர் (Ph.D) பட்டம் பெற்ற பலர் உருவாக்கிய வழிமுறைகள் (algorithms) கண்ணன், சுரேஷ் இருவரின் முயற்சியால் தான் உயிர் பெற்று பயன்பட்டன.

கிரண் எதிர் எதிரே இருந்த அவர்கள் அறைகளுக்கு நடுவில் நின்று, "என்னங்கடா கண்ணுங்களா, எப்பிடிக் கீறீங்க" என்று தான் சமீபத்தில் பார்த்த தமிழ்ப் படத்தின் ஜாம்பஜார் ஜக்கு பாஷையை எடுத்து வீசினான்! பலத்த அமெரிக்க அக்ஸென்ட் வாடையுடன் கலந்து வீசிய மெட்ராஸ் பாஷையின் மணத்தால் தாங்க முடியாமல் சிரித்துக் கொண்டு இருவரும் வெளியில் வந்தனர்.

கண்ணன் கிரண் முதுகில் ஒரு ஷொட்டு விட்டான். "என்னமா, கிரண், கொய்ப்பா? வூட்டுல சொல்லிக்கினு வந்துக்கினியா? ஆளே அப்பிடியே அம்பேலாயிட்டே?" என்றான். அந்த அளவு சென்னைத் தமிழ் கிரணின் தலைக்கு மேல் பறந்து விடவே அவன் புரியாமல் விழிப்பதைப் பார்த்து, சுரேஷ் மொழி பெயர்த்தான். "ஒண்ணுமில்லே கிரண், எங்கே ரொம்ப நாளா இந்தப் பக்கம் காணலயேங்கறத அவ்வளவு அன்பா சொல்றான் அவ்வளவுதான்!" என்றான்.

கிரண் புன்னகையுடன் வந்த விஷயத்துக்கு இறங்கினான். "ரொம்ப வேலையும் சூர்யாவுடனும் பிஸி, அவ்வளவுதான்! எனக்கு இப்போ கொஞ்சம் ·ப்ரீ டைம் இருக்கு. நம்ம கம்பெனி கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் எல்லாம் அலசியாச்சு, இப்ப சா·ப்ட்வேர் பத்தி இன்னும் ஆழமா கத்துக்கலாம்னு பாக்கறேன். அந்த கான்பிகரேஷன், ஸோர்ஸ் கோடெல்லாம் எங்கே இருக்குன்னு கொஞ்சம் காட்டி, மேலளவுக்கு விளக்கினீங்கன்னா நல்லா இருக்கும். அப்புறம் நானே குடாய்ஞ்சுக்கறேன்."

கண்ணன் இன்னும் சீண்டினான். "அய்யய்யோ முடியாதுப்பா! அப்புறம் எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டு எங்களை வீட்டுக்கு அனுப்பிச்சுடுவீங்க! எங்க வேலைக்கு உத்தரவாதமே யாருக்கும் புரியாம சா·ப்ட்வேர் எழுதறதுதானே?!"

கிரண் பதிலுக்கு சீண்டினான். "உங்களை வச்சுகிட்டிருக்கிறது அதுனால இல்ல! புரியாம எழுதறத்துக்கு, நிறைய பேரு லைன்ல நிக்கறாங்க! புரியறா மாதிரி எழுதறதுனாலதான் நீங்க இன்னும் இங்க குப்பை கொட்ட முடியுது! பாக்கப் போனா எங்க கோட் ரிவ்யூவரே ஒரு மூணாம் க்ளாஸ் பையன் தான்! அவனுக்குப் புரியலன்னா நீங்க அவுட்!"

சுரேஷ், "சரி, விளையாடினது போதும்! நிறைய வேலை இருக்கு. வா கிரண் காட்டறேன்!" என்று தன் அறைக்கு அழைத்துச் சென்றான். ப்ரோக்ராம் ·பைல்களைக் காட்டிக் கொடுத்து, டிஸைன் டாக்யுமென்டையும் காட்டி சிறிது விளக்கினான்."

கிரண், "ரொம்ப தேங்ஸ் சுரேஷ்! கண்ணன், அடுத்தது சூப்பர் babes படம் எதாவது வந்தா சொல்லு, போய் உக்காந்து விசிலடிக்கலாம்!" என்று கூறி விட்டு தன் அறைக்கு விரைந்தான். அங்கு அடுத்த நாலு மணி நேரம் வெளியிலேயே தலை காட்டாமல் ப்ரோக்ராம் ·பைல்களை ஆராய்ந்தான். அந்த ஸா·ப்ட்வேரின் சிக்கலான போக்கும், அவற்றில் செய்யப்பட்டிருந்த நுணுக்கமான மாற்றங்களும் அவன் தலையை கிர்ரென்று சுற்றவைத்தன!

கிரண் நிறுவனத்தின் கம்ப்யூட்டர் பாதுகாப்புப் பிரிவுக்கு விரைந்து சென்றான். அங்கு அந்தத் துறையின் தலைவர் மைக் ஜான்ஸனைப் பார்த்து அவர்கள் அது வரை செய்த விசாரணையின் நிலைமையைத் தெரிந்து கொண்டான். பின்பு அவசரமாக மேல் மாடியில் இருந்த ரிக் வில்கின்ஸனின் அறைக்கு வேக வேகமாக சென்றான்.

கிரண் அவசரமாக வருவதைப் பார்த்த ரிக், அங்கு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவர்களை பாதியிலேயே விடுக்கென்று வெட்டி அனுப்பி விட்டார். கிரண் அவர் அறைக்குள் புகுந்து கதவை மூடி ஒரு நாற்காலியில் மடிந்து விழுந்து ரிக்கைப் பார்த்து தலையாட்டினான். "நிச்சயமா யாரோ புகுந்து விளையாடியிருக்காங்க..." சில நொடி மூச்சு வாங்க நிறுத்தி விட்டுத் தொடர்ந்தான்.

"...ரொம்ப க்ளெவரா மேலுக்குப் பார்த்தா ஒண்ணும் தெரியாத படி நாலு லெவல் புதைச்சு வச்சிருக்காங்க. ரிக் இதை நிச்சயமா என்னால கண்டுபிடிக்க முடியாது. என்னென்ன செய்யப் பட்டிருக்குன்னு ஆழமா அனலைஸ் பண்ணறத்துக்கு கண்ணன், சுரேஷ் வேணும். நான் செச்யூரிட்டி பிரிவு தலைவர் மைக் கிட்டயும் பேசிட்டேன். யார் செஞ்சாங்கன்னு கம்ப்யூட்டர் தடயங்களை வச்சு மட்டுமே கண்டுபிடிக்க முடியாது போலிருக்கு! யார் செஞ்சாங்கன்னு கண்டுபிடிக்க சூர்யா வேணவே வேணும்னு நினைக்கிறேன்." என்றான்.

ரிக் முடியாது என்று தலைசைத்தார். "நோ கிரண். வேணும்னா கண்ணன், சுரேஷ் இன்வால்வ் பண்றது ஓ.கே. ஆனால் சூர்யா வெளி மனுஷர். அவரை உட்படுத்தறத்துக்கு எனக்கு விருப்பமில்லை" என்றார்.

கிரண் பதிலுக்கு, "சூர்யா செய்யற கேஸ் எல்லாமே இப்படி டெலிகேட் நிலைமைதான், தயங்காதீங்க. இது வெறும் கம்ப்யூட்டர் ஸெக்யூரிட்டி விஷயம் இல்லை. அப்படி இருந்தா நம்ம டீம் ஏற்கனவே புடிச்சிருப்பாங்க. மனுஷங்களைப் பாத்து பேசி, பல விஷயங்களைக் கோர்த்துப் பாத்தாத்தான் இந்த முடிச்சவிழ்க்க முடியும். அதுக்கு சூர்யாவை விட சரியான ஆள் யாருமே உங்களுக்குக் கிடைக்க மாட்டாங்க. அவர் ரொம்ப டிஸ்க்ரீட், நிச்சயமா வெளியில விடாம உங்க பேரைக் காப்பாத்துவார்" என்றான்.

ரிக் இன்னும் சற்றுத் தயங்கி விட்டு "சரி, சூர்யாவை அழைச்சு கிட்டு வா, பேசலாம். நீ சொல்ற அளவுக்கு அவர் சாமர்த்தியசாலியாத் தோணிச்சுன்னா, உன் மேல பாரத்தைப் போட்டுட்டு நம்பறேன்." என்றார்.

கிரண் குதித்தான். ரிக்கின் கையை ஏராளமாகக் குலுக்கி விட்டு, "எக்ஸலன்ட், ரிக்! நீங்க நிச்சயமா அதுக்கு வருத்தப் பட மாட்டீங்க. இதோ வந்துட்டேன், எங்கயும் நகராதீங்க!" என்று கத்திவிட்டு ஓடினான், சூர்யாவை அழைத்து வர.

காரை அசுர வேகத்தில் ஓட்டி, தர தரவென்று இழுத்து வராத குறையாக சூர்யாவை ரிக்கின் அலுவலகத்துக்கு அரை மணிக்குள் கொண்டு வந்து நிறுத்தி விட்டான்.

ரிக் சூர்யாவுடன் கை குலுக்கிக் கொண்டே அவரை பார்வையால் எடை போட்டார். சூர்யா ரிக் அளவு உயரமில்லாவிட்டாலும் நல்ல உயரம் தான். ரிக், சூர்யாவின் நல்ல உடற்பயிற்சியால் செதுக்கப் பட்ட கச்சிதமான தேகத்தையும், பார்த்தாலே கவனத்தைக் கவரக் கூடிய முகவாட்டையும், நேர்த்தியாக வெட்டப் பட்ட தலைமுடி, மற்றும் குறுந்தாடியுடன் கூடிய மீசையையும் பார்த்து, ஒரு முடிவுக்கு வந்தார். சூர்யா கவர்ச்சியான பல வண்ணக் காகிதத்தில் சுற்றி மூடப்பட்ட வெற்றுப் பெட்டியாக இருக்க வேண்டும், கிரணுக்காக சில நிமிடம் பேசி விட்டு அனுப்பிவிடலாம் என்று.

ஆனால் பாவம் அதிர்ந்தே போனார் சூர்யாவின் வாயிலிருந்து வெளிவந்த அடுத்த வார்த்தைகளைக் கேட்டு!

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com