கலி(ஃபோர்னியா) காலம் - (பாகம் 4)
முன் சுருக்கம்: 2000 க்கும், 2001க்கும் இடையிலான ஒரு வருட காலத்தில் அமெரிக்கப் பொருளாதார நிலையின் பெரும் சீர்குலைவு எதனால் ஏற்பட்டிருக்கலாம் என்று கற்பனை உலகுக்குச் சென்று பார்த்தோம்.

பாற்கடலில் நிம்மதியாக சயனித்துக் கொண்டிருந்த விஷ்ணுவை நாரதர், கலி·போர்னியாவில் புரளும் செல்வம் லஷ்மி கடாட்சத்தாலேயே என்று கலக மூட்டி விட்டார். வந்து பார்த்த விஷ்ணுவும் லக்ஷ்மியின் அருள் பலத்தை ஒப்புக் கொண்டார். ஆனால் டாட்- காம் கொப்பளம் உடைந்தவுடன் ஏற்பட்ட துன்பங்களை நாரதர் விவரித்ததும் விஷ்ணு நடந்தது மாயையின் பலத்தால் என்று விளக்கினார். ஆனால் கலி·போர்னியா காலம் அத்தோடு முடிந்து போகாமல், 9/11 விளைவு, என்ரான், வொர்ல்ட்காம் ஊழல் எனத் தொடர்ந்தது. நாரதர், நடந்ததும் நடப்பதற்கும் காரணம் மாயையால் விளைந்த மமதையும் பேராசையும்; அவற்றை சட்டங்களாலும் வரைமுறைகளாலும் மட்டும் தடுக்க முடியாது; தேவலோகத்திலும் கூட அவை தலைவிரித்தாட முடியும் என்று நிரூபித்தார்.

******


"நாராயண, நாராயண!" நாரதரின் குரல் வைகுண்டத்தின் அமைதியைக் கலைத்தது!

பாற்கடலில் லக்ஷ்மியுடன் பரம பதம் ஆடிக் கொண்டிருந்த விஷ்ணு, "என்ன நாரதா, இந்த முறை வெகு சீக்கிரம் திரும்பி விட்டாயே என்ன விஷயம்?! வேறு எங்கும் கலகமே கிடைக்க வில்லையா என்ன?" என்றார்.

நாரதர், "மஹாப்ரபோ, நான் வந்தாலே கலகந்தானா?! இந்த முறை நிச்சயமாக அப்படி இல்லை. போன முறை வந்த போது பூலோக வாசிகள் இந்த மாயை, மமதை, பேராசை போன்றவற்றால் ஏற்பட்ட விளைவுகளின் பிடிப்பில் அவதியுறுகிறார்களே, அவர்கள் எப்படி விடுதலை பெறுவார்கள் என்று உன்னிடம் கேட்கலாம் என்றுதான் வந்தேன்!" என்றார்.

லக்ஷ்மியும் "சரியான கேள்வி, நாரதா! இந்த நிலை எதனால் வந்தது என்று மட்டும் காட்டி நிறுத்திவிடாமல் விடுபடும் வழி தேடும் உன்னை மிக்க மெச்சுகிறேன்" என்று ஊக்குவித்துவிட்டு விஷ்ணுவிடம் "ஊம்... சொல்லுங்களேன். உங்கள் மந்தகாசப் புன்னகையை சற்று விட்டுவிட்டு, அல்லாடும் மானிடர்கள் மனநிம்மதி அடையும் வழி கூறுங்களேன்" என்று மன்றாடினாள்.

விஷ்ணு புன்னகையுடனேயே, "இதை நான் இப்போது சொல்லி யாரும் தெரிந்து கொள்ள வேண்டியதே இல்லையே தேவி! கண்ணனாக அவதரித்த போதே இந்திரனின் அம்சமான அர்ஜூனனுக்கு உரைப்பது போல் பூலோகவாசிகளுக்கு கீதையாக சொல்லிவிட்டேனே? மறந்துவிட்டார்கள் போலும்! நாரதா, நீ கூட மறந்து விட்டாயா என்ன?!" என்றார்.

நாரதர் திடுக்கிட்டார்! "மேகவண்ணா, கடைசியில் என் தலையிலேயே கை வைக்கிறாயே, நியாயமா இது?! கீதையில் நீ உரைத்த படி கர்ம யோகம், தியான யோகம், பக்தி யோகம் என்னும் மூன்று யோகங்களின் மூலம் வாழ்வில் உன்னதத்தையும் நிம்மதியையும் எப்படி அடைவது என்பது எனக்கு நன்றாகவே புரிந்துள்ளது. ஆனால் இப்போதைய பூலோக வாசிகள் பலருக்கும் கீதை இருப்பதே தெரியாது. தெரிந்தவர்களில் பலரும் புரிந்து கொள்ளவில்லை. புரிந்தவர் சிலரில் பெரும்பாலோர் மறந்தனர் அல்லது புறக்கணித்தனர். இந்த நிலைமை எவ்வாறு மாறக் கூடும்?"

விஷ்ணு திருவாய் மலர்ந்தார். "வலுக்கட்டாயமாக மாற்ற முடியாதே நாரதா! அவரவர் தம் நிலைமையைப் புரிந்து கொண்டு நல்வழியை நாடினால் வழி காட்ட அவ்வப்போது ஏற்கனவே ஞானம் பெற்ற நல்லாத்மாக்களிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்."

நாரதர் சற்று யோசித்தார். பிறகு, "பரந்தாமா, கீதையின் கருத்துக்கள் மிகவும் உட்படையான பொது அளவில் இருப்பதால் புரிந்து கொள்ள கஷ்டப் படுகிறார்களோ? நீ உரைத்ததை அவர்களின் தற்கால வாழ்க்கைக்கும் அவரவர் சூழ்நிலைக்கும் பொருத்தமாகப் புரியும்படி அவ்வப்போது யாராவது விளக்கினால் உதவக் கூடுமோ என்னவோ?" என்றார்.

லக்ஷ்மி சிலாகித்தாள். "மிகவும் நல்ல யோசனை இது நாரதா. ஸ்வாமி, தாங்கள் மனது வைத்தால் அது நடக்குமே? மீண்டும் அவதரிக்க வேண்டுமோ?" என்றாள்.

விஷ்ணு தலையசைத்து மறுத்தார். "தேவையே இல்லை தேவி. பல பூலோக ஞானிகள் அந்த புண்ணிய காரியத்தைக் காலம் காலமாக செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். கெளதம புத்தரும் அப்படிப் பட்ட ஒருவர் அல்லவா?! நான் அத்தகைய ஞானி ஒருவரை இந்தக் காலத்திலேயே, கலி·போர்னியாவிலேயே காட்ட முடியும்." என்றார்.

நாரதர் ஆச்சரியத்துடன், "தற்போதா? கலி·போர்னியாவிலா?! திரிவிக்ரமா, உனக்குத் தெரியாததில்லை. இருந்தாலும் என்னால் நம்ப முடியவில்லை! நான் பார்த்த வரை இந்தக் கலி·போர்னியா காலத்தில் திருடப் பார்ப்பவர்கள் தான் எங்கு பார்த்தாலும் இருப்பதாகத் தெரிகிறதே ஒழிய, அந்த அளவு ஞானத்துடன் திருத்தப் பார்ப்பவர்களை நான் பார்க்கவே இல்லையே?!" என்றார்.

விஷ்ணு புன்னகையுடன், "ஒரு வேளை நீ முற்றும் துறந்த முனிவரைத் தேடியிருக்கலாமோ என்னவோ நாரதா. நான் கூறுவது சராசரி வாழ்க்கை வாழும் ஒரு ஞானியை! அவர் மற்ற எல்லார் போலவே குடும்ப வாழ்க்கை நடத்திக் கொண்டு அங்கு வாழும் மக்களின் மனத்தில் தற்போது எழும் கேள்விகளுக்கு கூறும் பதில்கள் மூலம் வழி காட்டிக் கொண்டே இருக்கிறார். இதோ பாருங்கள் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று!"

மூவரும் தம் தூர தரிசனத்தால் கலி·போர்னியாவின் silicon valley-யில் உள்ள லாஸ் ஆல்டோஸ் நகரில் நடந்து கொண்டிருந்த ஒரு சம்பவத்தைக் கவனிக்கலானார்கள்.

******


(கதிரவனின் இடைக் குறிப்பு: இனி வரும் பகுதிகளில், பலர் கேட்கும் கேள்விகளுக்கு அந்த பூலோக ஞானி அளிக்கும் பதில்கள் மூலம் நாரதரின் கேள்விக்கு நாராயணன் உரைத்த பதிலின் விளக்கத்தைச் சிறிது சிறிதாகப் பார்க்கலாம் வாருங்கள்!)

******


அருண் தன் ஆறு வயது மகனை பால மந்திர் சிறுவர் வகுப்பில் விட்டு விட்டு வெளி வந்தார். வழக்கம் போல் சில பேர் அவரைச் சூழ்ந்து கொண்டு தங்கள் வினாக்களைத் தொடுக்க ஆரம்பித்தனர்.

அருண் ஒரு சிறிய ஆரம்ப நிலை நிறுவனத்தில் உயர் நிலையில் இருப்பவர். அவர் பல வருட காலமாக பல உயர் தொழில் நுட்ப (hi-tech) நிறுவனங்களில் பணி புரிந்தவர். மிகப் பெரிய நிறுவனங்களில் தன் ஆரம்ப கால அனுபவத்தைப் பெற்ற அவர் சமீப காலமாக மிகச் சிறு நிறுவனங்களிலேயே உழன்று கொண்டிருக்கிறார். அவர் அடைந்திருந்த வெற்றிகளாலும் venture உலகில் அவருக்கிருந்த பலப் பலத் தொடர்புகளாலும் அவருடைய பெயர் பரவியிருந்தது.

அப்படியிருந்தாலும் தலைக் கனமின்றி யார் என்ன கேட்டாலும் பொறுமையாக அருண் பதிலளிப்பார். அதே போல் யார் என்ன உதவி கேட்டாலும், வேலை வாய்ப்புகளோ, சிபாரிசுகளோ, மூலதனத்துக்கான அறிமுகமோ, தன்னாலான வரை தயங்காமல் செய்வார். அதனால் பலரும் அவரை நாடி அறிவுரையும் உதவியும் கேட்கும் தகுதியை அடைந்திருந்தார்.

சுரேஷ் என்பவர் அருணுடைய தற்கால வேலையைப் பற்றி விசாரித்தார். "அருண், உங்களுக்கு இருக்கற தகுதிக்கும், திறமைக்கும், அனுபவத்துக்கும், நீங்க எந்த கம்பெனில வேணா உயர் நிலை பதவில இருக்கலாமே? குஷி தொழில்! 9-to-5 வேலை. அபாரமான சம்பளம், அபரிமிதமான perks! ஏன் இப்படி துக்கடா கம்பனில ராப்பகலா அல்லல் படறீங்க?

அருண் வழக்கப்படி தலையை அண்ணாந்து பின் பக்கமாக தூக்கி அதிரடி சிரிப்பு ஒன்றை வட்டாரமே எதிரொலிக்கும் படி இடி இடிப்பது போல் வீசினார்! சற்று தூரத்திலிருந்தவர்கள் என்னவோ ஏதோ என்று உற்றுப் பார்த்தனர்! கேட்டவருக்கே ஒரு மாதிரி வெட்கமாகி விட்டது! அருண் மற்றவர்கள் பார்வையைப் பற்றி ஒன்றுமே கண்டு கொள்ளாமல் பதிலளித்தார்.

"சுரேஷ், இது ரொம்ப நல்ல கேள்வி! ஆனா நல்ல பதில் இருக்கான்னு எனக்குத் தெரியலை! நானே இந்தக் கேள்வியைப் பல முறை என்னையே கேட்டுக்கறேன், என் இல்லத்தரசியும் விடாம என்னைக் கேட்டுக் கிட்டேத்தான் இருக்கா! எனக்குத் தோணின படி பெரிய நிறுவனத்துல பெரிய பதவின்னாலும் அது நிறுவனத்தில நடக்கற மொத்த நடவடிக்கைகளில் ரொம்ப சிறிய பாகமாத்தான் இருக்கும். ஆயிரக் கணக்கான பேர் இருக்காங்க, அவங்களோட தொழில் ரீதியாத்தான் பழக முடியும். சில பேர் வேற நாட்டுல கூட இருப்பாங்க, முகத்தைக் கூட பார்க்காம கூட வேலை செய்யணும்! நான் இப்ப இருக்கற சிறிய கம்பனிகளில நிறுவனத்தோட பல துறைகளிலும் உதவி செய்ய முடியுது. சில பேரே இருக்கறதுனால ஒரு குடும்பம் மாதிரி நெருக்கம் இருக்கு. அதுவே தனி உற்சாகம்..."

அருண் மூச்சு வாங்கிக் கொண்டுத் தொடர்ந்தார்.

"...மேலும், பெரும் நிறுவனங்களில அலுவலக அரசியல் தலை விரித்தாடுது. அவங்கவங்க தன்னோட சாம்ராஜ்யத்தை வளர்க்கறதுலயும் தன் வேலை முன்னேற்றத்திலேயும் அதிகாரத்தைப் பெருக்கறதிலேயும் தான் ரொம்ப கவனம் செலுத்தறாங்களே ஒழிய நிறுவனத்துக்கு எது நல்லதுன்னு நிறைய பேர் கவலைப்படறது கிடையாது. எனக்கு அது பிடிக்கலை. சின்ன கம்பெனில அதுக்கெல்லாம் நேரம் கிடையாது. இருக்கற எல்லாரும், நிறுவனத்தை எப்படி வளர்க்கறதுன்னுதான் சதாசர்வ காலமும் பாடு படறாங்க. அரசியல் விளையாடறவங்களுக்கு அங்கே இடம் இல்லை. வெளியில அனுப்பிச்சிடுவாங்க. அந்த மாதிரி பாடு பட்டு நிறுவனத்தை ஒரு அளவுக்கு வளர்த்தா, நம்ம பிள்ளைங்களை குழந்தைல இருந்து வளர்த்து பெரிய ஆளாக்கி அவங்க நல்லா வாழறதுல அடையற திருப்தியும் பெருமையும் கிடைக்குது. அதுனாலதான்!" என்று முடித்தார்.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com