அட்லாண்டாவில் கேட்டவை
நல்ல நண்பர் ஒருவர் எல்லா கெட்-டு-கெதரிலும் ஜாலியாக இருப்பவர் சென்ற முறை நடந்த ஒரு பார்ட்டியில் சிறிது டல்லாக இருந்தார். என்ன விஷயம் என்று கேட்ட போது "எனக்கு இந்த U.S. வாழ்க்கையே பிடிக்கவில்லை, ஆபிஸ¤க்குப் போய்வந்து களைப்பாக இருக்கும் நேரம் டி.வி. கூட பார்க்கவிடாமல் மனைவி "நானும் தான் வேலைக்குப் போகிறேன் அதனால் நீங்களும் எனக்கு கிச்சன் வேலையில் உதவவேண்டும் எனக் கட்டாயப்படுத்துகிறாள். வேறு வழி இல்லாமல் நானும் பிடிக்காமலேயே அந்த வேலைகளைச் செய்கிறேன். நன்றாக சாப்பிட்டுவிட்டு சோ·பாவில் வந்து அமர்ந்தால் அப்பாடி என பெருமூச்சு விடுவதற்குள் என் மனைவி என் வேலையெல்லாம் முடிந்துவிட்டது உங்கள் பங்கு இருக்கு எல்லா சமைத்த பாத்திரங்களையும் டிஷ் வாஷரில் போட்டு கிச்சனைக் க்ளீன் பண்ணிவிடுங்கள்: என்று கூறினாள். "உண்ட களைப்பு தீருமுன்னே கஷ்டப்பட்டு இந்த வேலையை செய்ய வேண்டி உள்ளது இல்லயேல் வீட்டில் சண்டை வந்து நிம்மதி பறிபோகிறது" என்று வருத்தத்தோடு கூறினார்.

இரண்டு பீர் உள்ளே தள்ளிவிட்டு. நான் உடனே "இதெல்லாம் வீட்டுக்கு வீடு வாசப்படி. எல்லா வீடுகளிலும் நடப்பதுதானே. இதைத்தான் பெரியவர்கள் சுகமான சுமைகள் எனக் கூறினார்கள்" என்று அவர் மனதைத் தேற்றினேன். அவரும் அடுத்த பீரை முடிக்கும் வரை ஏதோ யோசனையில் இருந்தார். திடீரென "இதற்கெல்லாம் என் தாயார் தான் காரணம்" எனக் கூற, நான் "சே சே பெற்ற அம்மாவை ஒன்றும் குறை சொல்லாதீர்கள்" என செல்லமாகக் கோபிக்க அவர் சொன்னார் "ஐயா எனக்கு மூன்று சகோதரிகள். சிறு வயதில் என் அம்மா என் அக்கா தங்கைகளுக்கு கல்யாணத்திற்குப் பிறகு புகுந்த வீட்டில் போய் கஷ்டப்படுவீர்கள் அதனால் இப்போதே எல்லா வேலையையும் செய்யக் கற்றுக்கொள்ளுங்கள் என வற்புறுத்தி கிச்சன் வேலை எல்லாம் சொல்லிக் கொடுத்தார் ஆனால் நான் பையனாகப் பிறந்த ஒரே காரணத்துக்காக எனக்கு எதுவுமே சொல்லித் தரவில்லை. அதனால் நான் மிகவும் சிரமப்படுகிறேன் அதனால் தான் என் அம்மா மேல் கோபம் கோபமாக வருகிறது" எனப் பொய்கோபத்துடன் கூற நாங்களெல்லாம் சிரித்து அவர் மனைவியிடமும் இதைச் சொல்லிச் சொல்லிக் கிண்டல் செய்தோம்.

அந்த நண்பரே திடீரென "அந்த தப்பை நானும் செய்யவில்லை என் 6 வயது மகனுக்கு இப்போதே கிச்சன் வேலையில் டிரெயினிங் கொடுக்க ஆரம்பித்துவிட்டேன் அவனும் என்னைப் போல பிற்காலத்தில் கஷ்டப்படக் கூடாது பாருங்கள்" என்று சொல்லி எல்லோரையும் சிரிக்க வைத்தார்.

அப்போது இன்னொருவர் கிண்டலாக "உங்க பெண்ணுக்கு டிரெயினிங்?" எனக் கேட்க நண்பர் "அட போங்க சார், நான் அதைப் பற்றித் துளிக்கூட கவலைப் படவில்லை. நிச்சயமாக என்னைப் போலவும், உங்களைப் போலவும், மாப்பிள்ளையாக ஒரு இளிச்சவாயன் வந்து சேரமாட்டானா?" எனத் தமாஷாகக் கேட்க அந்த இடமே வெடிச்சிரிப்பில் முழுகியது.

******


இது கொஞ்சம் வருடங்களுக்கு முன்னால் நடந்த கதை. ஒரு அப்பாவி நண்பர் மிகவும் நல்லவர், சூது வாது தெரியாதவர். எல்லோருக்கும் அவரை மிகவும் பிடிக்கும். அவரது வீட்டில் அவருக்கு கல்யாணம் செய்ய நல்ல பெண்ணாகத் தேடிக் கொண்டிருந்தனர். இவருக்கும் வயது 30 ஆகிவிட்டபடியால் திருமணம் செய்ய ஆவலாக இருந்தனர்.

ஒருமுறை ஒரு மாதம் லீவில் சென்று நல்ல பெண்ணாகப் பார்த்து பிடித்துப்போய் திருமணத்தையும் உடனே முடித்து அட்லாண்டா திரும்பி வந்துவிட்டார். கல்யாணமாகி 8 நாட்கள்தான் அங்கே புது மனைவியுடன் கூட இருந்தார் பாவம். அப்போது அவருக்கு கிரீன் கார்ட் இருந்ததால் மனைவி வந்து இவருடன் குடியேற குறைந்தது 24 மாதங்கள் அவர் காத்திருக்க வேண்டியிருந்தது. மனிதர் பாவம் நொந்து நூலாகிவிட்டார். எப்போதும் மனைவியை நினைத்து புலம்ப ஆரம்பித்துவிட்டார் எங்களைப் போன்ற நெருங்கிய நண்பர்களிடம். நாங்களும் அவருக்கு ஏதேதோ ஆறுதல்களைச் சொல்லிக்கொண்டிருந்தோம். அடிக்கடி கவலையை மறக்க அவர் வீட்டில் கெட்-டு-கேதர் ஏற்பாடு செய்து ஒவ்வொரு முறையும் அவரது திருமண வீடியோவைப் போட்டு எங்களை அறுத்துவிடுவார்.

ஒரு ஸ்டேஜில் நாங்கள் எங்களுக்குப் பிடித்த சினிமா டேப்பை எடுத்துச் சென்று அவர் அந்த டேப்பை போடும் முன் இதை போட்டு அவர் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டோம்.

ஒரு கெட்-டு- கேதரில் என் மனைவி வேலை விஷயமாக கனடா சென்று இருந்ததால் நான் மட்டும் தனியே பார்ட்டிக்கு சென்றேன். அவர் ஏன் என் மனைவி வரவில்லை என்று கேட்ட போது அவரிடம் திடீரென ஆபிஸ் வேலை விஷயமாக கனடா போய் இருக்கிறாள் எனக் கூற அவர் மிக சோகமாக "பார்த்தீர்களா, என் மனைவியும் இந்த நாட்டில் இல்லை அதே போல உங்கள் மனைவியும் இந்த நாட்டில் இல்லை கடவுள் ஏன் தான் இப்படி நம்மை சோதனை செய்கிறானோ தெரியவில்லை, நீங்களும் நானும் ஒரே நிலையில் இருக்கிறோம்" என வருத்தமாகக் கூற நான் அவரிடம் "ஐயா, என் கவலை எல்லாம் என் மனைவி இன்னும் நான்கு நாட்களில் திரும்ப வந்துவிடுவாளே என்பதுதான்" என சிரித்தபடி கூற, கூடியிருந்த எல்லோரும் முக்கியமாக கல்யாணமான நண்பர்கள் எல்லாம் விழுந்து விழுந்து சிரித்தனர்.

******


நானும் என் குடும்பமும் அட்லாண்டாவில் வந்து புதிதாக குடியேறியிருந்த சமயம் அது. நான் நடித்த சினிமா படங்களை அட்லாண்டா தமிழர்கள் பார்த்திருந்ததால் புதிதாக பல நண்பர்கள் கிடைத்தனர். ஒவ்வொரு வாரமும் யாராவது டின்னருக்குக் கூப்பிட நாங்களும் போய் வந்துகொண்டிருந்தோம். சமயத்தில் எங்கள் வீட்டிலும் விருந்து நடக்கும். அப்போது இரண்டு மூன்று மாதங்களில் அட்லாண்டா குளிர் ஆரம்பமாகியது. அதுவரை சென்னையில் இருந்த எங்களுக்கு இந்த குளிர் புதுசு எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. பல நண்பர்கள் அட்லாண்டா குளிர் மிகவும் கம்மி மற்ற பல இடங்களில் 6 மாதங்கள் குளிர் கொன்றுவிடும் ஆகவே இதை நீங்கள் ரசிக்க வேண்டும். சில வருடங்கள் இங்கே வாழ்ந்தால் உங்களுக்கு வெயிலைவிட இதுதான் பிடிக்கும் என அட்வைஸ் செய்ய ஆரம்பித்தார்கள். அப்போதுதான் இந்தியாவில் இருந்து இங்கு வந்திருந்ததால் பல விஷயங்கள் எங்களுக்கு புதிது.

ஒரு முறை ஒரு புது நண்பர் நல்ல பெரிய வீடு வாங்கி அதற்கு எல்லோரையும் அழைத்து "கிரகப் பிரவேசம்" செய்தார். நல்ல கூட்டம். எல்லோரும் கல கல என்று பேசி ஜாலியாக பொழுது போனது. இரவு 11 மணிக்கு எல்லாம் முடிந்து எல்லோரும் கிளம்ப ஆரம்பித்தோம். நல்ல குளிர் காலமானதால் குளிர் அதிகமாகவே இருந்தது. நான் ஓவர் கோட் எல்லாம் போட்டு ஜேம்ஸ் பாண்ட் ஸ்டைலில் இருந்தேன். என் மனைவி பட்டுப் புடவைக் கட்டிக் கொண்டு வந்திருந்ததால் தனது கோட்டை காரிலேயே விட்டு விட்டு உள்ளே வேகமாக வந்துவிட்டாள். இப்போது திரும்பும் நேரம். வெளியில் மற்றவர்கள் காரை எடுப்பதற்காக சிறிது காக்க வேண்டியிருந்தது. என் மனைவி கோட் போடாததால் குளிர் குளிர் என முனகிக் கொண்டிருந்தாள். நண்பர் ஒருவர் என் மனைவி படும் பாட்டை பார்த்து "என்ன உங்க வை·ப் ஜாக்கெட் போட்டுக்கொள்ளவில்லையா?" என என்னிடம் கேட்க நான் அவரிடம் என்ன இப்படி கேட்கறீங்க? பட்டுப்புடவை அதற்கு மேட்சிங்காக பட்டு ஜாக்கெட் போட்டிருகிறாள் பார்த்தால் தெரியவில்லையா?" எனச் சொல்ல அவர் பாவம் பயந்து போய் "இல்லை இல்லை இந்த ஊரில் குளிருக்குப் போடும் கோட்டை ஜாக்கெட் என்றுதான் சொல்லுவார்கள்" என்று கூற, நான் அறியாமல் சொன்னதை மற்றவர்கள் ஜோக் என நினைத்து சிரிக்க ஜாக்கெட்டைப் பற்றி கேட்ட நண்பர் ஏண்டா கேட்டோம் என வெட்கப்பட ஒரே சிரிப்பு தான் போங்கள்.

அட்லாண்டா கணேஷ்

© TamilOnline.com