திருவாதிரை திருநாள்
மார்கழி மாதத்தில் 'ஆருத்ரா தரிசனம்' என சொல்லப்படும் சிதம்பரத்தில் பெருமான் ஸ்ரீ நடராஜருக்கு உகந்த நாள் 'திருவாதிரை திருநாள்' சிதம்பர நாதனே, தில்லை நடராஜனே, சிவகாமி நேசனே என்று எல்லோரும் கொண்டாடும் பண்டிகை.

ஆருத்ரா நட்சத்திரத்தில் தான் சிவபெருமான் பிறந்த உத்தமமான நாள். களிபாவாடை சாற்றுவார்கள். பச்சை கதிர், பச்சைப்பயிறு, களி வைத்து சிவனை கும்பிடுவார்கள்.

கன்னி பெண்கள் தங்களுக்கு நல்ல கணவர் பெறவும், சுமங்கலி பெண்டியர் தங்களுடைய மாங்கல்யம் பலம்பெறவும் இந்த நோன்பை செய்வார்கள்.

திருவாதிரை களி

தேவையான பொருட்கள்
அரிசி (பொன்னி) - 2 கப்
பயத்தம் பருப்பு - 1/4 கப்
வெல்லம் - 2 3/4 கப்
தேங்காய் - 1/2 மூடி
முந்திரி பருப்பு - 5 கிராம்
நெய் - 1/4 கப்
ஏலக்காய் - 6 அல்லது 8
துவரம் பருப்பு - 2 ஸ்பூன் (பாதி வேகவைத்தது)
தண்ணீர் - 5 கப் (தேவைக்கேற்ப)

செய்முறை

முதலில் வாணலியை எடுத்துக்கொள்ளவும்.

அதில் அரிசியை, பொன்னிற சிவப்பாக வரும்வரை லேசாக வறுக்கவும். பயத்தம் பருப்பையும் தனியாக அதே மாதிரி வறுத்து எடுத்துக் கொண்டு, மிக்ஸியில் கரகரப்பாக (அரிசி உப்புமா போல) பொடி செய்து கொள்ளவும். இது 2 1/2 கப் அளவு வரும்.

பிறகு வாணலியை எடுத்துக்கொண்டு 5கப் தண்ணீர் விடவும். அதில் சிறிது தேங்காய் துருவி, வெல்லம் 2 3/4கப், அரைவேக்காடு துவரம்பருப்பு, 2 ஸ்பூன் வெல்லம் சேர்த்து கொதிக்கவிடவும். கொதி வந்தவுடன் அரிசி குறுணையை சிறிது சிறிதாக போட்டு, கட்டி தட்டாமல் சற்று கெட்டியாகும்வரை கிளறவும். இதை ஒரு பாத்திரத்தில் போட்டு குக்கரில் வைக்கவும். 3 அல்லது 4 விசில் விடவும்.

பொல பொலவென்று வரும். இது நன்றாக வெந்து காணப்படும். இதில் மீதி நெய்யில் முந்திரிபருப்பு வறுத்துபோட்டு, ஏலக்காய் பொடி, தேங்காய்துருவல் சேர்த்து லேசாக கிளறவும்.

திருவாதிரை களி தயார்!!

ஏழுகறி குழம்பு

திருவாதிரை களிக்கு ஏற்றதாக ஏழுகறி குழம்பு செய்வார்கள். எல்லா காய்கறிகளையும் இதில் சேர்த்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்
உருளைகிழங்கு - 4
சேப்பங்கிழங்கு - 100 கிராம்
சேனை கிழங்கு - 100 கிராம்
சர்க்கரை வள்ளிகிழங்கு - 2
பச்சைபட்டாணி
மொச்சை பட்டாணி - 100 கிராம்
முருங்கை - 1
கொத்தவரங்காய் - 100 கிராம்
பீன்ஸ் - 100 கிராம்
அவரைக்காய் - 100 கிராம்
கேரட் - 2
வாழைக்காய் - 1
பூசணி - 1 கீற்று
பரங்கி காய் - 1 கீற்று
கத்தரி - 2 அல்லது 3
செள செள - 1
பச்சை மிளகாய் - 2
மாங்காய் - 2 துண்டு

இதில் ஏதாவது காய்கறிகள் குறைந்தாலும் பரவாயில்லை.

தேங்காய் - 1
துவரம்பருப்பு - வேகவைத்தது 1 கப்
புளி - பெரிய எலுமிச்சம் பழம் அளவு
வறுத்து பொடி செய்ய
மிளகாய் வற்றல் - 6 அல்லது 8
தனியா - 3 டேபிள் ஸ்பூன்
கடலை பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

தேங்காயையும் லேசாக வறுக்கவும் .கொஞ்சம் கொர, கொரப்பாக அரைத்துக் கொள்ளவும். காய்கறிகள் பெரிய துண்டங்களாக நறுக்கவும்.

பெருங்காயம் - சிறிது
மஞ்சப் பொடி - கொஞ்சம்
தாளிக்க கடுகு - 2 ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
ஆயில் - கொஞ்சம்
கருப்வேப்பிலை,
கொத்தமல்லி - தேவைக்கேற்ப

செய்முறை

முதலில் உருளை, சேனை, சர்க்கரை வள்ளிகிழங்கு, மொச்சை ஆகியவற்றை வேக வைக்கவும். பிறகு தோல் உரித்து கொள்ளவும். அடிகனம் உள்ள பாத்திரம் அல்லது குக்கரில் மற்ற காய்கறிகளை தண்ணீர்விட்டு வேகவிடவும். பாதி வெந்தவுடன் புளிகரைசல், மஞ்சப்பொடி, உப்பு, பெருங்காயம் சேர்க்கவும்.

நன்றாய் வெந்தபிறகு வேகவைத்த துவரம் பருப்பு, அரைத்த விழுது எல்லாவற்றயும் சேர்த்து கிளறி நன்கு கொதிக்கவிட்டு அடிபிசகாமல் பார்த்துக்கொள்ளவும்.

கம, கம என வாசனை வந்தவுடன் கீழே இறக்கி தாளிக்கவும். கருப்வேப்பிலை, கொத்தமல்லியை தூவவும்.

பரிமாறும் போது நன்கு கிளறி, காய்கறி துண்டங்களாக வைத்து, திருவாதிரைகளி (இனிப்பு) எழுகறி கூட்டு (காரம்) என வைக்கவும்.

அன்னபூரணி சங்கர்

© TamilOnline.com