கடைசி வரை... ஒருவர்!
மனிதனது உடலை மாயையென்றும், பொய்யென்றும், வெறும் கூடென்றும், காற்றடைத்தப் பையென்றும் எத்தனையோ தத்துவங்கள் கூறியிருப்பதை அறிந்திருக்கிறோம். ஆனால் உயிர் பிரிந்த உடலோ எலும்பும், சதையுமாக நம் கண்முன் கிடக்கும் ஒரு நிஜம். அந்த உடலை அதற்குரிய மரியாதையுடன் அப்புறப்படுத்துவது அதில் வாழ்ந்தவருக்கே செய்யும் மரியாதையாகும். இறந்தவர் அநாதையாகவோ, நோய், முதுமை அல்லது விபத்து காரணமாக சொந்த பந்தங்களால் புறக்கணிக்கப்பட்டவராகவோ, இல்லை, ஏழை குடும்பத்தினராகவோ இருந்துவிட்டால் இவ்வாறு அப்புறப்படுத்தும் பணியில் எத்தனையோ இடையூறுகள், பிரச்சனைகள் வெடிக்கின்றன. இதையெல்லாம் தகர்த்தெறிய கைகொடுத்துத், தோள்கொடுத்து காடு வரையும் கடைசி வரையும் தொடர்ந்து வருகிறார் கருணை உள்ளமும் சேவை மனப்பான்மையும் உள்ள அந்த மனிதர். அவர் பெயர் ராகவன்.

மனிதன் உயிரோடு வாழும்போது செய்யப்படும் சேவைகளைக் கேட்டிருக்கிறோம் - ஏழைகளுக்குக் கல்வி, சட்ட ஆலோசனை அளித்தல், திருமணம் செய்வித்தல், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை, ஊனமுற்றவர்களை, முதியவர்களை பராமரித்தல் என்பன போன்று. இவற்றிலிருந்து வித்தியாசப்பட்டு மனிதன் இறந்த பின்னும் சேவை செய்யலாம் என்றொரு புதிய பரிமாணத்தைக் காட்டியிருக்கிறார் இவர்.

அவர் தனது நண்பர்களுடன் காயத்ரி அறக்கட்டளை என்ற சேவை நிறுவனத்தை, சென்னை குரோம்பேட்டையில் பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி, இன்றுவரை சத்தமில்லாமல் பல தொண்டுகளாற்றி வருகிறார்.

தற்பொழுது இங்கே அமெரிக்காவில் தன் பெண் வீட்டிற்கு வந்திருக்கும் அந்த சென்னைவாசியை சந்தித்த பொழுது பொதுவான பல விஷயங்களுக்கிடையே கார்கில் நிதிக்காக நானும் எனது நண்பர்கள் சிலரும் 500 அமெரிக்க டாலர்கள் சேகரித்துக் கொடுத்ததைப் பேச்சுவாக்கில் சொன்னேன். அதை மனதார பாராட்டியவரின் கண்களில் ஒரு மின்னல். அந்தச் சிறு சமூக அக்கறையில் மகிழ்ந்தவர் மனம்விட்டுத் தான் செய்யும் இந்தப் பொது நலப்பணிகளைப் பற்றி பேச ஆரம்பித்தார். அவற்றைக் கேட்க கேட்க அளவிடமுடியாத வியப்பும் மதிப்பும் உண்டாயின. அப்பொழுதே இவரின் சேவைகளுக்கு என்னாலான உதவியைச் செய்யவேண்டுமென்று ஒரு உத்வேகம் பிறந்தது. அதற்கான முதல் படியாக இந்தக் கட்டுரை.

“மூணு நாளைக்கு முன்ன ராத்திரி ஒரு மணிக்கு போன் அடிச்சுது. உங்க நகர்ல இருக்கற முதியோர் இல்லத்துல ஒருத்தர் தவறிட்டாரு. பாவம் அநாதை. நாங்க போய் அவரோட உடலை எடுத்துட்டு வந்து ‘கோவிந்தா கொள்ளி’ போட்டோம்.” என்று சொல்லி தனது பணியை அறிமுகப்படுத்தினார். அநாதை மற்றும் ஏழைகளின் உடல்களை எடுத்து வந்து எரியூட்டுவது இவர்களின் தொண்டுகளில் முதன்மையான ஒன்று. (Cremation of Unclaimed bodies)

அடுத்ததாக, இறந்தவரின் உடலை மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கோ அல்லது வீட்டிலிருந்து சொந்த ஊருக்கோ குறைந்த செலவில் எடுத்துச் செல்வது என்பது தற்கால நிலைகளில் மிகவும் கடினம். இந்த இடர்பாட்டைத் தவிர்க்க, சென்னை பாரத ஸ்டேட் வங்கி நன்கொடையாக அளித்த, 6 லட்சம் ரூபாய் மதிப்புக் கொண்ட 2 அமரர் ஊர்திகளை(Mortuary Van) குறைந்த கட்டணத்தில் கொடுத்து உதவி வருகின்றனர். ஏழைகளுக்கு இவை இலவசமாகத் தரப்படுகின்றன. வெளிநாடுகளிலிருந்து சென்னைக்கு வரும் இறந்தவர்களின் உடலை விமான நிலையத்திலிருந்து எடுத்து உரிய இடத்தில் சேர்க்கவும் இந்த வண்டிகள் உபயோகப்படுத்தப்படுகின்றன.

இதை உபயோகிப்பதற்கு ஜாதி மத பேதம் இல்லை. எந்த நாளாக இருந்தாலும், எந்த நேரமாக இருந்தாலும் தொலைபேசியில் கூப்பிட்டால் வண்டியை அனுப்புகிறார்கள். இதற்காகவே இரு ஓட்டுநர்களை வேலைக்கு அமர்த்தி அவர்களுக்கு pager-ஐயும் கொடுத்துத் தயாராக வைத்திருக்கிறார்கள். மற்றொரு சுவாரஸ்யமான விஷயம் இந்த வண்டிக்கு இவர்கள் இட்டிருக்கும் “பரமபத ரதம்” என்ற பெயர். இந்த ரதத்தில் பரமபதத்திற்குப் பயணித்தவர்கள் இதுவரை எத்தனையோ பேர் என்றார் அவர்.

கொடிய நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களைத் தொட்டுத் தூக்க, உறவினர்களே கூட பயப்படுவார்கள். அடுத்து அதற்கும் தோள் கொடுக்கிறார்கள் இவர்கள். முக்கியமாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களை எந்தச் சிரமமும் பாராமல் எடுத்து வந்து எரிக்கவோ புதைக்கவோ உதவி செய்கிறார்கள்.

புற்று நோயால் பாதிக்கப்பட்டு முற்றிய நிலையில் உள்ளவர்களை உயிரிருக்கும் பொழுதே, உறவினர்களும், நண்பர்களும் கைகழுவிவிட்டதை தன் அனுபவத்தில் நிறைய பார்த்திருப்பதாகச் சொன்னார் அவர். அப்படிப்பட்டோருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பம்மல் சங்கரா உடல்நல மருத்துவமனையின் உதவியுடன், புற்று நோயாளிகளில் முற்றிய நிலையில் உள்ளோருக்கான பராமரிப்பு மையம் (Terminally ill Cancer Maintenance Hospital) ஒன்றை 4 லட்சம் ரூபாய் செலவில் நிதி வசூலித்துக் கட்டியிருக்கிறார்கள். இதில் பத்து படுக்கைகள் போட்டு, வந்து சேரும் நோயாளிகளுக்கு இலவசமாக உணவு, உடை, மருந்துகள் அளித்துப் பராமரித்து, அவர்களது கடைசி நாட்களை அமைதியாகக் கழிக்க வழி செய்திருக்கிறார்கள். நோயாளி ஒருவரை பராமரிக்க நாள் ஒன்றுக்கு 200 ரூபாய்க்கும் மேல் ஆகின்றதாகக் கணக்கு சொன்னார் அவர்.

இத்தொண்டுகளைச் செய்யும் எண்ணம் உதித்தது எப்படி? அன்னை தெரசாவின் சமூகப் பணிக்கு கல்கத்தா சாலையோரங்களில் இருந்த தொழுநோயாளிகளின் பரிதாப நிலை தீப்பொறியாக இருந்ததைப்போல், இவரது இந்தச் சேவைக்குப் பதினேழு வருடங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவம் ஆரம்பமாக இருந்ததை நினைவு கூர்ந்தார்.

இவரது நண்பர் ஒருவரின் தந்தை புற்று நோய் முற்றிய நிலையில் இறந்துவிட்ட நேரத்தில், நண்பர் குடியிருந்த வீட்டின் சொந்தக்காரர் வீட்டிற்கு உடலை எடுத்து வர அனுமதி அளிக்க மறுத்திருக்கிறார். புற்று நோயைத் தொற்று நோயென அஞ்சிய அவரது அறியாமையை நினைத்து ஆத்திரப்படுவதற்கு பதில் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்த இவர், தன் வீட்டிலேயே அவ்வுடலை இறக்கி, இறுதிச்சடங்குகளைச் செய்ய பணித்திருக்கிறார். அப்பொழுது தான் இது போன்றே அவதிப்படுபவர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று முடிவெடுத்ததாகச் சொன்னார்.

அதன் விளைவே காயத்திரி அறக்கட்டளை, பம்மலில் புற்று நோய் மையம், பரமபத ரதம் முதலியன. இது தவிர ஞானவாபி (Gnanavaapi) என்றொரு கட்டடத்தைக் கட்டி, பிராமண முறைப்படி இரண்டாம் நாள் முதல் பதிமூன்றாம் நாள் முடிய செய்யப்படும் சடங்குகளுக்கு, ஏழைகளுக்கு இலவசமாக அறைகள் கொடுத்து வருகிறார்கள். சமீபத்தில் இந்தக் கர்மாக்களை செய்வதற்கு ஏதுவாக ரூ.6.75 லட்சம் செலவில் ஒரு குளம் கூட வெட்டப்பட்டு காஞ்சிப் புதுப்பெரியவரால் 2001 ஆண்டு, 1 அக்டோபரில் திறந்து வைக்கப்பட்டது. மேலும் பிராமணர்கள் அல்லாதவர்கள் பதினாறாம் நாள் செய்யும் உத்திரக்கிரியைக்காக ஒரு மண்டபமும், திருநீர்மலை பஞ்சாயத்திற்கு உட்பட்ட இடுகாட்டில் மழையினால் உண்டாகும் அவஸ்தைகளைச் சமாளிக்க ஏதுவாக கான்கிரீட் எரியூட்டும் சாவடி ஒன்றும் என்று இவர்களது சேவைகளும், சாதனைகளும் விரிந்துகொண்டே போகின்றன.

இப்பணிகள் அனைத்திற்குமான செலவை, தமது திட்டங்களைச் சொல்லி, பொது மக்களிடமிருந்தும், அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களிடமிருந்தும், நன்கொடையாக வசூலித்த நிதியிலேயே செய்திருக்கிறது இந்த அறக்கட்டளை என்பது குறிப்பிடத்தக்கது.

தொலைபேசித் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற இந்த மனிதர் இப்பொழுது முழுமூச்சுடன் இந்தப் பணிகளில் இறங்கிவிட்டார். ஆடம்பரமேயில்லாத ஒரு எளிமை, ஓயாத உழைப்பு, உறுதி, தன்னம்பிக்கை, தன்னடக்கம் என்று அவரிடம் பல உயர்குணங்கள்.

இவரது இன்றைய கனவுகளில் முக்கியமான ஒன்று - தாம்பரத்திற்கும் கிண்டிக்கும் இடையில் எங்காவது ஒரிடத்தில் ஒரு மின் எரியூட்டும் மேடையமைத்தல் தான். முதல் கட்ட நடவடிக்கையாய் சென்னை குரோம்பேட்டையில் இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, பல்லவபுரம் நகராட்சியால் பரிந்துரைக்கப்பட்டு, துவங்கும் நிலையில் ஊள்ள திட்டமிது. இதற்கு ரூ.3 கோடி (2 furnaces - ரூ.1 கோடி, பராமரிப்பதற்கான காப்புத் தொகை ரூ.2 கோடி) செலவு ஆகும் என்று கணித்திருக்கிறார்கள். மாதம் கட்டவேண்டிய மின்சாரக் கட்டணமே இதற்கு ரூ.1.25 லட்சம் என்று கணக்கிட்டு சொல்கிறார்.

இதைத்தவிரவும் இன்னும் புற்று நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தடுக்க மருத்துவ முகாம், ஏழைகளுக்கு குருகுல கல்வி எனப் பல திட்டங்கள் வைத்திருக்கிறார். அவரது கண்களில் தெரிந்த நம்பிக்கை ஒளியில் இதுவரை நிறைவேறிய திட்டங்களுடன் இவையும் நிறைவேறும் காட்சி தெரிந்தது.

இந்த அறக்கட்டளையை நிறுவும் முன், முக்தியடைந்த காஞ்சி மஹா பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் சென்று தன் விருப்பத்தை வெளியிட்டிருக்கிறார். அவர் ஒப்புதலும் பாராட்டும் தெரிவித்துத், தன் கைப்பட பொது மக்களிடம் நன்கொடை வழங்கவேண்டி ஒரு கடிதம் அளித்ததை சந்தோஷமாகக் காட்டினார்.

தற்போது அவர் வேண்டுவதெல்லாம்...

  • பொதுமக்களின் ஆதரவும், ஊக்குவிப்பும்.
  • புற்று நோயின் முற்றிய நிலையில் இருப்பவர்களுக்கும், இறந்த உடலை இடம் மாற்ற வண்டி வேண்டுவோர்க்கும் இந்த அறக்கட்டளையின் (கீழ்க்கண்ட) முகவரி மற்றும் தொலைபேசி எண்ணைத் தெரிவித்தல்.
  • வசதியுள்ளவர்கள் புற்று நோயாளிகளின் பராமரிப்பிற்கு ஆகும் செலவிற்கோ அல்லது இன்னும் இந்த அறக்கட்டளையின் மற்ற திட்டங்களுக்கோ தங்களால் இயன்ற பொருளுதவியை* அளித்தல் அல்லது ஒரு நோயாளிக்காக ஆகும் செலவை ஏற்றல்.
  • மற்ற சேவைகளுக்குப் பொருளோ, பணமோ, நேரமோ அளித்தல்.
  • ஏதேனும் கேள்விகள் இருப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளல்.


இவற்றில் ஏதேனும் ஒன்றை நம்மால் செய்ய முடிந்தால் இந்த அறக்கட்டளை அதை மிகவும் வரவேற்க்கும்.

இன்னும் சிறிது நேரம் இத்தொண்டுகளில் அவருக்கு பதினேழு வருடங்களாக நேர்ந்த அனுபவங்களைப் பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். எத்தனை இறப்புகள்! எத்தனை இழப்புகள்! எத்தனை அவலங்கள்! அத்தனையும் சகித்துக்கொண்டு நேசக்கரம் நீட்டி அயராது உழைத்துக்கொண்டிருக்கும் அந்த மனிதரும் அவரது அறக்கட்டளையும் என் மனதில் மிகவும் உயர்ந்துவிட்டனர்.

சொல்லிக்கொண்டு கிளம்பும் பொழுது, அவரது தொலைபேசி மணியடித்தது.

G. RAGHAVAN
Managing Trustee,
Shri Gayathri Trust,
Plot No. 45, Lakshmi Nagar,
Chromepet, Chennai - 600044
Phone: 091 044 236 4777

Shri Gayathri Gnanavapi
Lakshmipuram, Chromepet
Mortuary Van Serivice
Phone: 091 044 240 5884/236 4444

U.S.A contact:
Mukundan Ranganathan
11907 Westview Parkway
San Diego, CA - 92126
Phone: 858-635-6564

மனுபாரதி

(* - அறக்கட்டளைக்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு இந்திய வருமான வரிப் பிரிவு 80G-யின் படி வரி விலக்கு அளிக்கப்படும்.)

© TamilOnline.com