தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்
இருபதாம் நூற்றாண்டின் தமிழியல் வரலாற்றில் சிறப்பிடம் பெறுபவர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார். இவரது சம காலத்தில் வாழ்ந்த பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை (1891-1956), மயிலை சீனி. வேங்கடசாமி ஆகிய இருவரும் கூட முக்கியம் வாய்ந்தவர்கள். மயிலை சீனி வேங்கடசாமி தவிர, ஏனைய இருவரும் தமிழியல் ஆராய்ச்சிக்கான கல்வி நிறுவனம் சார்ந்த செயற்பாட்டாளர்கள். இந்த மூவரும் தமிழியல் ஆய்வைப் புதிய தளங்களில் நகர்த்தியவர்கள். தமிழியல் ஆய்வுப் பரப்பை ஆழ அகலப்படுத்தி முக்கியமான படைப்பாற்றலைச் செய்தவர்கள்.

தமிழியல் ஆய்வு அறிவு நிலைப்பட்ட அணுகுமுறை களையும் பார்வைகளையும் புலமைப் பாய்ச்சல் களையும் கொண்ட காலகட்டமாக (1925-1960) முனைப்புறத் தொடங்கிய காலகட்ட ஆய்வுப் பரப்பில் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் தனக்கென்று சில முத்திரைகளைப் பதித்தார்.

மரபுக் கல்விப் பாரம்பரியமும் நவீன கல்விப் பாரம்பரியமும் மிக்க குடும்பச் சூழலில் ஊடாட்டம் கொண்டு நிரம்பிய தமிழ் ஆர்வத்துடன் புலமைத் தேடலுடன் திகழ்ந்தார். 1920-களில் பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. பட்டம். 1922-ல் சட்டக் கல்லூரியில் படித்து பி.எல். பட்டம். 1923--ல் எம்.ஏ. பட்டம் பெற்றதுடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் ஆனார். அத்துடன் உயர் நீதிமன்ற நீதிபதியாக வந்த வழக்கறிஞரிடம் பயிற்சி பெறவும் சேர்ந்தார். எனினும், அத் துறை அவரை ஆட்கொள்ளவில்லை.

வரலாறு, பொருளாதாரம் போன்ற துறைகளில் நாட்டம் கொண்டு படித்தார். பட்டமும் பெற்றார். தமிழ் வித்துவான், பி.ஓ.எல். ஆகிய தேர்வுகளிலும் வெற்றி பெற்றார். சென்னை சிந்தாதரிப்பேட்டையில்

வேதாந்த சங்கம் நிறுவித் தமிழ், தருக்கம், வேதாந்தம் ஆகியவற்றைக் கற்பித்த மகா வித்துவான் கோ. வடிவேல் செட்டியாரின் மாணாக்கராகிப் பயின்றார். மறைந்து போன நூல்கள் பற்றிய செய்திகளைத் திரட்டி வைத்திருந்த இராமலிங்கத் தம்பிரானிடம் 'தணிகைப் புராணம்', 'சேது புராணம்' ஆகிய நூல்களைக் கற்றார். பிரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரியார், திருப்புறம்பியம் இராமசாமி நாயுடு, ஸ்ரீரங்கம் சடகோபாச்சாரியார் போன்ற அறிஞர்களிடம் வைணவத் தத்துவம் பயின்றார். சைவச் சித்தாந்தத்தை மறைமலையடிகளிடம் கற்றுக் கொண்டார்.

இவ்வாறு தெ.பொ.மீ.யின் கற்றல், தேடல் பல்துறைசார் அறிவுத் தேட்டங்களுடன் கூடியதாக இருந்தது.

காந்தியச் சிந்தனையில் நாட்டம் கொண்டவ ராகிச் சென்னையிலுள்ள சிந்தாதரிப்பேட்டையில் சேரி வாழ் மக்களின் நலனுக்காகப் பாடுபட்டார். சென்னை மாநகராட்சியின் உறுப்பினராகவும் ஆல்டர்மேனாகவும் பணிபுரிந்து ஒடுக்கப்பட்ட மக்களின் தோழன் என்ற பெயர் பெற்றார். சிந்தாதரிப்பேட்டையிலும் சுற்றுப்புறங்களிலும் பல ஆரம்பப் பள்ளிகளைத் தொடங்கி அவற்றின் வளர்ச்சியைக் கண்காணிக்கும் பொறுப்பைப் பல்லாண்டுகள் ஏற்றார். சில தொழிற்சங்கங்களின் தலைவராகப் பணிபுரியும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது.

வடிவேல் செட்டியாரின் மரணத்தின் பின் வேதாந்த சங்கத்தின் தலைவர் பதவி அவரை நாடி வந்தது. தமிழ் எம்.ஏ. மாணவர்களுக்கு ஊதியமின்றி வகுப்புகள் நடத்துதல், சென்னைத் தமிழ்ச் சங்கம் நிறுவிப் பல இலக்கிய மாநாடுகளை நடத்தியது, அச் சங்கத்தின் வழி பல நூல்களை வெளியிடல் போன்ற பணிகளை அக் காலகட்டத்தில் மேற்கொண்டார். இளமை யிலேயே ஈழத்து இலக்கிய ஏடான கலாநிலையத் திலும் விவேக சூடாமணி, நவசக்தி, லோகோபகாரி, தேசபக்தன் போன்ற பல இதழ்களிலும் இடையறாது எழுதி வந்தார்.

பொது வாழ்வு, கற்றல், கற்பித்தல் என்ற தொடர்ச்சியில் தொ.பொ.மீ- யின் ஆளுமை உருவாக்கம் புடம் போடப்பட்டது. இதன் சாத்தியப்பாட்டைத் துல்லியமாக்கும் விதத்தில் சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், இந்தி, பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளைப் பேரார்வத் துடன் கற்றுப் பன்மொழிப் புலவராகவே இருந்தார். வரலாறு, கல்வெட்டியல் தத்துவம், இலக்கணம், இலக்கியம், மொழியியல் போன்ற துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றிருந்தார். பன்மொழிப் புலமை, பல்துறைப் புலமை யாவும் தெ.பொ.மீ. யின் உலகப் பார்வையை - அறிவியல் வரலாற்றுப் பார்வையை - விசாலப்படுத்தின. இவையே இவரது பன்முக ஆளுமை விகசிப்புக்குக் காரணமாயிற்று. இதனால் ஆய்வுலகில் தனக்கான தனிப்பாதையில் பீடுநடை போடவும் முடிந்தது. புலமை மிக்க பேராசிரியராகத் திகழ்வதற்கும் சமன்நிலைப் பண்பும் ஒருங்கிணைந்த ஒருமுகப் பண்பும் கொண்டிருந்தமை, ஆய்வில் காழ்ப்புணர்ச்சி இன்றி முன்னேறவும் வழி வகுத்தது.

தெ.பொ.மீ. 1924 சென்னை நகராட்சி உறுப்பினராகப் பொறுப்பேற்றது முதல், அண்ணா மலைப் பல்கலைக்கழகம், சென்னை மாநிலக் கல்லூரி ஆகியன இவரைப் பேராசிரியராகப் பெற்றது வரை தெ.பொ.மீ.யின் ஆளுமை படிப்படியாக வளர்ச்சியுற்றது.

தெ.பொ.மீ. யின் தமிழ்ப் புலமையும் பல்துறை அறிவுத் திறனையும் கண்ட இராஜா சர். அண்ணா மலைச் செட்டியார் தம் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையின் தலைவராக அவரை அமர்த்தினார். ஈராண்டுகளை (1944-1946) அத் துறையின் கீழமைந்த பல திராவிட மொழிகள் உருது, இந்தி, மொழித் துறைகள் என்பவற்றின் வளர்ச்சியையும் உயர்த்தப் பயன்படுத்தினார். 1945-இல் அப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அனைத்திந்திய வரலாற்று மாநாட்டில் புதிதாகத் திராவிடப் பிரிவு அமைக்கப்பட்டபோது அதற்கு தெ.பொ.மீ. தலைவராக்கப்பட்டார்.

1954-இல் சென்னை மாநிலக் கல்லூரியில் முதன்மைப் பேராசிரியராக அமர்ந்து தமிழ் ஆய்வை வளர்க்கவும் பாடத் திட்டங்களைப் புதுமை செய்யவும் துணை செய்தார். 1958-இல் மீண்டும் அண்ணா மலைப் பல்கலைக்கழகம் சென்று தமிழ், மொழியியல் என்னும் இரு துறைகளையும் செவ்வனே வளர்த்தார்.

தமிழியலுக்கு தெ.பொ.மீ. யின் முதல் பங்களிப்பு 1960 களில் பல்கலைக்கழக நிலையில் ஒப்பிலக்கியத்தைத் தமிழ்த் துறையில் ஒரு பாடமாக்கி அந்தத் துறையில் ஆய்வாளர்களுக்கு வழிகாட்டியது. அப்போது பல தமிழாசிரியர்கள் முணுமுணுத்தாலும் இன்று ஒரு சிறப்பான தேவை யான பாடமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதைக் காணும்போது தமிழியலின் தளம் விரிவுபடுத்தப்பட வேண்டுமென்ற அவரது தொலைநோக்குப் பார்வை நன்கு பரிமளித்துள்ளது என்பது புலனாகிறது.

அடுத்த பங்களிப்பு, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மொழியியல் துறைக்கு உருவம் கொடுத்து அதைப் பயிற்றுவிக்கும் துறையாகவும், ஆய்வுத் துறையாகவும் அமைத்து அனைத்திந்திய நிலையில் ஒரு அங்கீகாரம் பெற்றுத் தந்து தென்னகம் முழுமையும் மொழியியலைப் பரப்பியது. அதன் ஒரு பகுதியே அவருடைய இலக்கணத் துறையில் ஆய்வும் ஆய்வு வழிகாட்டலும். இலக்கண மொழியியல் கோட்பாடு, இலக்கியக் கோட்பாடு, மொழி வரலாறு ஆகியவை உருவாகவும் உழைத் தார். இதனால் பழைய பாடங்கள் புதிய நோக்குப் பெற்றன.

தெ.பொ.மீ. தமிழுக்குச் செய்த தொண்டு தமிழைத் தமிழர் அல்லாதார் அறியச் செய்தது. இதுவும் இரண்டு பரிமாணம் உடையது. ஒன்று அவருடைய ஆங்கில நூல்கள், கட்டுரைகள், மற்றொன்று அவர் சிகாகோ பல்கலைக்கழகத்தில் தமிழ்க் கல்வி தொடங்க வழிகாட்டியதோடு அறிஞர், புலமையாளர் என்ற முறையில் அங்கு தமிழ் இலக்கிய வரலாறு, தமிழ் மொழி வரலாறு என்ற இரண்டு தலைப்பில் பத்துப் பத்துச் சொற்பொழிவுகள் செய்து நூல்களாக வெளியிட்டுத் தமிழ் ஆய்வுக்குப் பரந்த அளவில் அடித்தளம் இட்டது. அவருடைய மொழி வரலாறு முற்றிலும் புதுமையானது. அறிவியல் ரீதியானது.

1963 முதல் 1965 வரை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் திராவிட மொழியியல் உயராய்வு மையத்தின் இயக்குநராகத் திறம்படப் பணியாற்றித் தமிழகத்தில் மொழியியல் கல்வி தனித்து வளர்வதற்கும், அத் துறைசார் ஆய்வாளர்கள் பலரின் தோற்றுவிப்புக்கும் காரணமாகி இருந்துள்ளார். அதன் பின்னர் 1965-இல் புதிதாகத் தொடங்கிய மதுரைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்த ரானார். பழைய சென்னைப் பல்கலைக்கழகத்தின் மரபையும் ஆற்றலையும் பல வழிகளில் பயன்படுத்திக் கொண்டதுடன் புதிய அறிவியல் துறைகள், உயிரியல், பொருளாதாரம், கணிதம் போன்ற துறைகளையும் தொடங்கி வெற்றி கண்டார்.

தமிழ் வளர்ச்சி, தமிழ் வழிக் கல்வி போன்றவற்றில் கூட உறுதியும் தெளிவும் கொண்டிருந்தார். தமிழே எல்லா மட்டங்களிலும் பயிற்சி மொழியாக வேண்டும் என்ற குறிக்கோளுடன் அறிவியலைத் தமிழில் கற்பிக்கவும் எழுதவும் வகை செய்யும் திட்டங்களைத் தீட்டினார். தாமே ஐன்ஸ்டைனின் சார்புக் கொள்கை போன்ற அறிவியல் தத்துவங்களைத் தமிழில் எழுதித் தமிழரால் முடிந்ததெல்லாம் தமிழால் முடியும் என்று உலகுக்கு உணர்த்தியவர்.

தெ.பொ.மீ. யின் ஆய்வுகள், சிந்தனைகள், கட்டுரைகள், நூல்கள் யாவும் இருபதாம் நூற்றாண்டுத் தமிழியல் ஆய்வுக்கு அறிவியல் நெறிப்பட்ட அணுகுமுறைகளை, புதிய செல்நெறிகளை வழங்கிச் சென்றுள்ளன. தற்சார்பு அகவயப்பட்ட பார்வை களுக்கு மாற்றாக புறவயப்பட்ட பார்வையை வழங்கித் தமிழ் மொழி, தமிழ் இலக்கியம் உலகுக்கு என்ன கொடுத்தது என்ன பெற்றுக் கொண்டது என்பதைப் பரந்துபட்ட ரீதியில் தெளிவுபடுத்தி உள்ளார்.

தன் மனதுக்குத் தன் அறிவுக்குச் சரி என்று பட்டதைத் தைரியமாகவே சொல்லி வந்தார். தமிழ் உலகில் தமிழ் மொழி உணர்வு அதிகமாக ஆட்சி செய்த காலத்தில் அறிவு வழிப்பட்ட விஞ்ஞான ரீதியான கருத்துக்கள் பரவுவதற்குப் பாடுபட்டதுடன் அதற்கான புலமைச் சூழலை உருவாக்கிக் கொடுத்தார். 'தமிழுக்காக உயிர் கொடுப்போம்' என்ற மேடை முழக்கத்துக்கு மாற்றாகத் 'தமிழுக்கு உயிர் கொடுக்கும்' புலமைச் சவாலை அறிவார்ந்த தளத்தில் எதிர்கொண்டார். பல தமிழ் நூல்களுக்கு வடமொழி மூலம் கற்பிக்கப்பட்டதைத் தன்னுடைய ஆய்வால் தமிழ் மூலம் நிரூபித்து அவருடைய காலத்தில் ஏற்பட்ட வாத விவாதங்களுக்குத் தர்க்க அடிப்படையில் பதில் கொடுத்தார்.

இருபதாம் நூற்றாண்டுத் தமிழியல் ஆய்வுப் பரப்பில் மடை மாற்றத்தை ஏற்படுத்தியவர்களில் தெ.பொ.மீ. யும் ஒருவர். 1920-1980 களில் தெ.பொ.மீ. யின் வாழ்க்கையும் சிந்தனைகளும் செயற்பாடுகளும் இதனை நிரூபித்துள்ளன.

தெ.மதுசூதனன்

© TamilOnline.com