தமிழ் மடலாடற் குழுக்கள்
கணினியில் தமிழ் வளர யாஹுவின் யாஹு குரூப்ஸ் மடலாடற் குழுக்கள் (mailing lists) பெரும்பங்கு பலருக்கும் தெரியாத ரகசியம். முதலில் தமிழில் அஞ்சல் பரிமாற்றங்களைத் தொடங்கியது தமிழ்.நெட் (1996) என்ற அமைப்பு வழியா கத்தான் என்றாலும், ஈகுரூப்ஸ் (http://www.egroups.com) என்ற நிறுவனத்தை யாஹு வாங்கியதிலிருந்து, பெரும்பாலான தமிழ் மடலாடற் குழுக்கள் யாஹு குரூப்ஸ் வழியாகத்தான் செயல்படுகின்றன. இந்தக் குழுக்களின் வழியாக அன்றாடம் உலகெங்கும் வாழும் தமிழர்களுடன், தமிழில் அஞ்சல் மூலம் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ள முடியும்.

யாகூ குரூப்ஸின் முகப்புப் பக்கமான http://groups.yahoo.com என்ற பக்கத்தில் தமிழ் என்று தேடினால் 1200க்கும் மேற்பட்ட குழுக்களைக் காணலாம். அதே பக்கத்தில் பதிந்து கொண்டால் இவற்றில் எவற்றில் வேண்டுமானாலும் உறுப்பினரா கலாம். மிகப் பெரும்பான்மையான உறுப்பினர் உள்ள குழுக்கள் ஒன்று காமக் கேளிக்கைகள் அல்லது திரைப்பட நடிகைகள் தொடர்பானவையாக இருக்கின்றன. பல திரைப்பாடல் மற்றும் சாதி தொடர்பான குழுக்களிலும் நிறைய உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

இலக்கியம், கவிதை, வரலாறு, அரசியல், பொது அறிவு தொடர்பான பல குழுக்களும் இயங்கி வருகின்றன. இவற்றில் அகத்தியர் (agathiyar@yahoogroups.com) என்ற குழு பல பேரறிஞர்களை உறுப்பினர்களாகக் கொண்டு இயங்கி வருகிறது. இதன் சிறப்பு இந்து மதம், பண்டைத் தமிழர் வரலாறு பண்பாடு பற்றிய செய்திகளை எளிய தமிழில் அலசுவது. இதன் நிறுவனர் ஜே.பி. என்று அன்பாக அழைக்கப்படும் மலேசியாவின் டாக்டர் எஸ். ஜெயபாரதி. இவர் இணையத்தில் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து நூல்களாகவும் வெளியிட்டுள்ளார். அண்மையில் வெளிவந்த 'நாடி ஜோதிடம்' பற்றிய நூல் வெளிவந்த சில வாரங்களுக்குள் விற்றுத் தீர்ந்து விட்டது.

இதே போல் சிங்கைத் தமிழர் பழனியப்பன் தொடங்கிய தமிழ் உலகம் (tamil-ulagam@yahoogroups.com) என்ற குழுவும் உலகத் தமிழர்களின் கருத்தரங்காக விளங்கி வருகிறது. இதில் அரசியல், வரலாறு பற்றிய கட்டுரைகளும், நல்ல பல கவிதைகளும் வெளிவருகின்றன. ஆண்டு தோறும் இணையம் வழியாகப் பாரதிதாசன் விழாவைக் கொண்டாடுவது இந்தக் குழுவின் சிறப்பு. நகைச்சுவைத் திலகங்கள் கத்தார் சுலைமான் ‘தம்பி’யும் எல்லே சுவாமிநாதனும் இதில் வயிறு குலுங்கும் நகைச்சுவைக் கட்டுரைகளைப் படைத் திருக்கிறார்கள். இதில் பங்கேற்கும் பலர் சிங்கை பழனி தொடங்கிய சிங்கை இணையம் (http://www.singaiinaiyam.com.sg/home.htm) என்ற வலையிதழிலும் எழுதி வருகிறார்கள்.

தினம் ஒரு கவிதை (Dokavithai@yahoogroups.com) என்ற குழு ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு இயங்கி வருகிறது. உலகத் தமிழர்களில் மிகச் சிறந்த கவிஞர்கள் பலரின் படைப்புகளை இதில் காணலாம். 'லாவண்யா' நாகசுப்பிரமணியன் சொக்கன் தொடங்கிய இந்தக் குழுவில் கனடாவின் புகாரி, பேரா. அனந்தன், பசுபதி போன்றவர்களின் கவிதைகளும் வெளியாகியுள்ளன. இதன் சிறப்பு, கவிதைகளை ஓவியங்களுடன் பதிப்பிப்பது. இதனால், ஒவ்வொரு கடிதமும் பல கிலோ பைட்டுகளை அடைத்துக் கொள்கிறது. இவற்றைச் சேமித்து வைத்துக் கொள்ள இடமில்லாமல் போகிறது.

அண்மையில் தொடங்கி மிக பரபரப்பாக இயங்கி வரும் குழு 'ராயர் காப்பி கிளப்' (RayarKaapiKlub@yahoogroups.com). தமிழகத்தின் இளைய தலைமுறை எழுத்தாள நட்சந்திரங்கள் பலரும் பங்கேற்கும் இந்தக் குழு முழுக்க முழுக்க படைப்பிலக்கியத்துக்கு மட்டுமே என்ற கொள்கை கொண்டிருக்கிறது. இவர்களில் பெரும்பாலோர் “வாத்தியார்” சுஜாதா பாணியில் எழுதுபவர்கள். “சின்ன வாத்தியார்” இரா. முருகன், ‘லாவண்யா’ நாகசுப்பிரமணியம் சொக்கன், “தமிழ் சி·பி.காம்” வெங்கடேஷ் மற்றும் எல்லே ராம் ஆகியோர் தலைமையில் இயங்கும் இந்தக் குழு கற்றுக் குட்டி எழுத்தாளர்களுக்கு நல்ல பயிற்சி மையமாக விளங்கும் என்பதில் ஐயமில்லை. இவற்றில் வெளியிடப்படும் கதை, கவிதைகளுக்கு மூத்த எழுத்தாளர்கள் உடனடியாகக் கருத்து சொல்லித் திருத்துகிறார்கள். திண்ணை.காம், கல்கி, விகடன், குமுதம் ஆகியவற்றில் கதைகள் எழுதிய எழுத்தாளர்களும் ஆசிரியர்களும் நிறைந்த மன்றம் இது.

இவற்றில் உறுப்பினராக வேண்டுமென்றால், குழுவின் பெயரின் பின்னால் - subscribe@yahoogroups.com

என்பதை ஒட்டி அந்த முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பினால் போதும். உதாரணமாக, ராயர் காப்பி கிளப்பில் இணைய RayarKaapiKlub-subscribe@yahoogroups.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும். இந்தக் குழுக்களில் பெரும் பாலானவை புதிய உறுப்பினர்களின் கடிதங்களைத் தணிக்கை செய்வதால் உங்கள் படைப்புக் கடிதங்கள் வெளிவரத் தாமதமாகலாம்.

மணி மு. மணிவண்ணன்

© TamilOnline.com