பாரதி கலாலயாவின் மும்மூர்த்திகள் தினவிழா மற்றும் பொங்கல் விழா
பாரதிகலாலயாவில் மாதம் தோறும் ஒரு கலை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சி ஏதாவது ஒரு சிறப்பு அம்சத்தை மையக்கருத்தாகக் கொண்டு, பாரதிகலாலயா மாணவர்கள், மற்றும் ஆசிரியர் களால் வழங்கப் படுகிறது. பாரதிகலாலயா பள்ளியிலேயே நிகழ்த்தப்படும் இந்த நிகழ்ச்சி வருவோர் அனைவருக்கும் இலவசமே! நிகழ்ச்சிகள் பற்றிய அறிவிப்புக்களை தென்றலில் வரும் பாரதி கலாலயாவின் விளம்பரத்தில் காணலாம்.

கடந்த ஜனவரி 19ம் தேதி ஞாயிறு காலை 9.30 மணி முதல் துவங்கி பாரதி கலாலயாவில் மும்மூர்த்திகள் தினம் மற்றும் பொங்கல் தினவிழா கொண்டாடப் பட்டது. பள்ளி முதல்வரான அனுராதா சுரேஷின் வரவேற்புரையுடன் நிகழ்ச்சி ஆரம்ப மானது.

தியாகராஜ ஸ்வாமிகளின் விநாயகர் துதியான "கிரிராஜ சுதா", குருவணக்கமாகிய "குருலேகா" என்ற பாடல்களை ஆசிரியைகள் திருமதி.பத்மா ராஜகோபால் மற்றும் திருமதி.ருக்மணி ராஜ கோபாலன் ஆகியோர் பாட, திருமதி.மைதிலி ராஜப்பன் வயலினில் இணைந்து வாசித்தார்கள். அதன் பிறகு ஆசிரியைகள் திருமதி.நந்தினி ராமமூர்த்தி, திருமதி.தன்யா சுப்ரமணியன் ஆகி யோரும் நிகழ்ச்சியில் இணைந்து கொண்டார்கள்.

பள்ளி ஆரம்பித்து 5 ஆண்டுகளில் முதன்முறையாக தியாகராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனங்கள் ஐந்தையும் மாணவ, மாணவியரும் ஆசிரியர்களும் சேர்ந்து வழங்கினார்கள். ஆசிரியைகள் மாணவ, மாணவி களுடன் இணைந்து பாடியது மட்டுமல்லாமல் ஒவ்வொருவரும் தனியாகவும் பாடினார்கள். திருமதி.பத்மா ராஜகோபால் பிலஹரி ராகத்தில் "காமாக்ஷ¢" என்ற தீக்ஷ¢தர் கீர்த்தனை பாடினார்கள். திருமதி.ருக்மணி ராஜகோபாலன் "ஸ்ரீ நாரதா" என்ற கானடா ராகக் கீர்த்தனையை வயலினில் வாசித்தார்கள். திருமதி.நந்தினி ராமமூர்த்தி "ஞானமுசாகரா" என்ற பூர்விகல்யாணி ராகத் தியாகராஜ கீர்த்தனையைப் பாடினார். திருமதி.ரம்யா சுப்ரமணியன் ஸ்யாமா ஸாஸ்திரிகளின் "ஜனனி நின்னுவினா" என்ற ரீதிகெளளை ராகக் கீர்த்தனையுடன் ஆசிரியர்களின் பகுதியை நிறைவு செய்தார்.

ஐந்து வயதுக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையுள்ள மாணவ, மாணவிகள் அனைவரும் நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டு தங்கள் பாட நிலைக்கு ஏற்ற பாடல்களைப் பாடினார்கள்.

சிறிய குழந்தைகள், "குருர் ப்ருஹ்மா, குருர் விஷ்ணுஹ¤" என்ற வணக்கத்தில் ஆரம்பித்து, "ஸ்ரீகிருஷ்ண சரணம்", "சின்னச் சின்ன பதம் வைத்து", "தீன பந்து தயா சிந்தோ" ஆகிய பஜனைப் பாடல்களையும், "கத மோஹ" என்கிற தியாகராஜரின் நாமாவளியையும் பாடினார்கள். ஒரு சிறுகுழந்தை, ப்ரியா முன் வந்து, ஹனுமான் சாலிசா முழுவதும், துளியும் அஞ்சாமல் தனியாக 20 நிமிடங்கள் பாடியது அதிசயிக்கத் தக்கதாக இருந்தது.

புல்லாங்குழல் மாணவன் தத்தா மலஹரி ராக கீதம் வாசித்தார். அடுத்தபடியாக கீதம் வகுப்பிலிருக்கும் குழந்தைகள், தியாகராஜரின் "நாததனுமனிசம்" என்ற கீர்த்தனையையும், "சுகுணமுலே" என்ற கீர்த்தனத்தை வர்ணம் மாணவிகளும் பாடினார்கள். நீல் வீலர், குமார் அவர்களுடன் இணைந்து "பரிபாலய, பரிபாலய" என்ற ரீதி கெளளை ராக தியாகராஜர் கிருதியைப் பாடினார்கள்.

"பாவனுதா", ""ஸ்ரீகண நாதம்", "மேலுக்கோவையா" ஆகிய கீர்த்தனங்களை திருமதி.பத்மா ராஜகோபால் அவர்கள் மாணவர்களும், திருமதி.மைதிலி ராஜப்பன் வயலின் மாணவர்கள் பஞ்சராக ஸ்வரஜதிகளும், திருமதி.அனுராதா சுரேஷின் மாணவர்கள் "காண ஆயிரம் கண் வேண்டும்", "ஸ்ரீவேணு கோபால" ஆகிய பாடல்களையும், திருமதி.ருக்மணி ராஜ கோபால் அவர்களின் வயலின் மாணவர்கள் "மீனாக்ஷ¢ ஜய காமாக்ஷ¢", "நின்னே கோரி" என்ற பாடல்களையும் வழங்கினார்கள்.

நிகழ்ச்சியின் சிறப்புப் பகுதியாக, திருமதி.வித்யா வெங்கடேசனின் பரத நாட்டிய மாணவிகள் மதுவந்திராகத்தில் ஒரு தில்லானாவிற்கு நடனம் செய்தார்கள்.

"பவநாம" என்கிற மங்களத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றதுடன், பாரதி கலாலயாவின் புத்தாண்டை மங்கலமாகத் துவங்கி வைத்தது.

© TamilOnline.com