எல்லா நல்லவைகளுடனும் புத்தாண்டே நீ வருக!!
புத்தாண்டு பிறக்கும் நன்னாளில் மனதில் எழும் பற்பல ஆசைகளையும் எண்ணங்களையும் நிறைவு செய்ய, மற்றும் பழையன கழிந்து புதியன புக, வழிபாடு, யோகம், யாகம் என அவரவர் வழக்கப்படி செய்து வருகிறோம். இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்து தரும் சக்தி நல்லிசைக்கு உண்டு என்பதை நாம் அனைவரும் அறிவோம். பக்தி, கருணை, பரவசம், ஆனந்தம் இப்படி பலப்பல உணர்வுகளை மிக எளிதில் தூண்டிவிட நல்லிசை ஒன்றே போதுமன்றோ? அதுவும் ஆண்டவனின் சந்நிதியில், கேட்பவர் நெஞ்சம் மகிழ உணர்ச்சித் ததும்பப் பாடப்படும் பாட்டின் சக்தியைக் கேட்கவா வேண்டும்? 2003 புத்தாண்டு பிறந்த சுபதினத்தில் சன்னிவேல் கோவிலில் திரு இராகவன் மணியன், பக்தரனை வரையும் இத்தகைய இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தினார்.

விரிகுடாப் பகுதிவாழ் மக்களில் அனேகர் இராகவன் மணியனின் பாடல்களைக் கேட்டிருப்பர். பெரிய கச்சேரியாகட்டும், சிறு இசை நிகழ்ச்சி யாகட்டும், இவர் நிகழ்ச்சிகளில் கண்டிப்பாக இரண்டு விஷயங்களை கேட்பவர் உணரலாம்: நிகழ்ச்சிக்கு இவர் தரும் முழு ஈடுபாடும், ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் இவர் செய்யும் புதுமையான சாதனையும் தான் அவை. ஹரிகேச நல்லூர் முத்தையாபாகவதரின் இரண்டாம் சிஷ்ய பரம்பரை யில் வந்த ஸ்ரீமதி பி.கே.ராஜம்மாளின் பேரனான இவர், தமது இளம்பிராயத்திலேயே இசைப் பயணத்தை தொடங்கிவிட்டார். ‘பல்லவி’ டி. நரசிம்மாச்சாரியிடம் இசைப் பயின்றார். பத்தாம் வயதிலேயே முழு நீளக் கச்சேரியை வழங்கிய இவர், 1988 முதல் ‘பத்மஸ்ரீ’ ஸ்ரீ பாலமுரளி கிருஷ்ணா அவர்களிடம் பயின்று வருகிறார். இந்தியாவிலும் அமேரிக்காவிலும் பல இசை நிகழ்ச்சிகளைத் தந்துள்ளார். வயிலின், புல்லாங்குழல் ஆகிய இசைக்கருவிகளில் தேர்ந்த இவர், தற்சமயம் ஸிஸ்கோவில் பணிபுரிவதோடு பற்பல இசை நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகிறார். மேலும்

இவர் இசைப்பயணத்தைப் பற்றி அறிய http://www.ragavan.net என்னும் இணைய முகவரியை அணுகுங்கள்.

இவருக்குத் துணையாக வயலின் வாசித்த பாலாஜி ஸ்ரீனிவாசன், தமது ஏழாம் வயதில் ஸ்ரீ வி. ஜானகிராமனிடம் வயலின் கற்கத்தொடங்கி, ஒன்பதாம் வயது முதல் கச்சேரிகளில் வாசித்து வருகிறார். தற்சமயம் இவர் ஸ்டான்·பர்டு கல்லூரியில் ஏரொனாட்டிக்ஸில் பி.எச்.டி பெறும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். மிருதங்கத்தில் இவர்களுக்கு பக்கபலம் தந்தவர் ஸ்ரீ வாதிராஜா பட். இவரும் இளவயதிலேயே கச்சேரிகளிலும் இந்திய வானொலியிலும் மிருதங்கம் வாசித்துள்ளார். தற்சமயம் ஸைபேஸில் பணிபுரியும் இவர், மிருதங்க வித்வான் ஸ்ரீ டி.வி.கோபாலகிருஷ்ணன் அவர்களிடம் தம் மிருதங்கப் பயிற்சியைத் தொடர்ந்து பெற்றுவருகிறார்.

இத்தகைய வல்லுநர்கள் அளித்த இசை விருந்து மிகவும் இன்பகரமாக அமைந்தது. இராகவன், கம்பர் இராமரை வர்ணிக்கும் ‘இந்திர நீலம்’ என்னும் பாட்டை, எடுப்பான நாட்டை ராகத்தில் விருத்தமாக பாடினார். இராகவனின் கச்சேரிகளில் ஏதாவது ஒரு புதுமையேனும் இருக்கும் என்பதற்கு இது ஒரு முன்னுரைப் போல் அமைந்தது. வர்ணங்களே முதலில் பாடப்படும் பெரும்பான்மையான கச்சேரிகளுக் கிடையில், கம்பராமாயணப் பாடல் வித்தியாசமாய் இருந்தது. அதற்கடுத்து அதே ராகத்தில் ‘ஜகதாநந்தகாரகா’ என்னும் தியாகராஜரின் பஞ்சரத்தின் க்ருதியை பாடினார். ‘கௌமாரி கௌரி’ என்னும் தீக்ஷிதர் க்ருதியை 'கௌரி மனோஹரி' ராகத்தில் இவர் உணர்ச்சித் ததும்ப வழங்க அந்த கௌரியே மனோஹர ரூபத்தில் வந்தது போன்றிருந்தது. பின்னர் 'ஆந்தோளிகா' ராகத்தில் ஆலாபனை செய்துவிட்டு முத்துத்தாண்டவரின் 'சேவிக்க வேண்டுமய்யா' என்னும் பாடலைப் பாடினார். அடுத்து வந்த 'ஹம்ஸாநந்தி' ஆலாபனை பரபரப்பாக இருந்தது - ‘ஈ பரி சோபகு’ என்னும் புரந்தர தேவர் நாமா இந்த ராகத்தின் நெளிவு சுளிவுகளை அலசுவதாய் அமைந்திருந்தது. கண்ட சாபு தாளத்தில் அமைந்த இப்பாடலின் முடிவில் வந்த தனி ஆவர்த்தனம் ஏற்றதாய் இருந்தது. மார்கழி மாத கச்சேரிகளில் கண்ணனின் நினைவை ஊட்டும் ஆண்டாளின் திருப்பாவையைப் பாடும் தமிழ் மரபையொட்டி கல்யாணியில் ‘அம்பரமே, தண்ணீரே’ என்னும் பாடலை அழகாக வழங்கினார். இப்பாடல்களுக்கெல்லாம், ஆலாபனையின் பின்னரோ, பாட்டின் பின்னரோ ராகத்தையும், பாடலின் முக்கியத்துவத்தையும் தெள்ளத்தெளிவாய் சொல்லிவந்தார் இராகவன்.

திருப்பாவையை அடுத்து மிக ரம்யமாய் வந்தது 'கரகரப்ரியா' ராக ஆலாபனை. இது 21-ஆம் நூற்றாண்டு, 22-ஆம் நூற்றாண்டை நோக்கி நடை போடும் மூன்றாம் ஆண்டு என்பதால், 22-ஆம் மேளகர்த்தா ராகமாகிய கரகரப்ரியா ராகத்திலும், திஸ்ர நடையில் அமைந்த ஆதித்தாளத்திலும் தானே இயற்றியிருக்கும் ஒரு பல்லவியை வழங்கினார். ‘ஸ்வாகதம் நவ ஸம்வத்ஸரம், ஸர்வ மங்களம்’ என்று புத்தாண்டை வரவழைத்து, அனைத்து நலன்களையும் தர வேண்டிக்கொள்வதாய் இருந்த இப்பல்லவியை வெகு லாவகமாய்ப் பாடி வராளி, மலயமாருதம், ரஞ்சனி போன்ற ராகங்களில் ஸ்வரங்களும் பாடினார். இவற்றிற்கெல்லாம், ஒவ்வொரு ஸ்வரமும் துல்ய மாகக்கேட்கும் வகையில் பாலாஜி வயலின் வாசித்தார்.

அடுத்து வந்தது 'தேஷ்' ஆலாபனை. பன்கிம் சந்தர் சாட்டர்ஜியின் ‘வந்தே மாதரம்’ பாடல் வரிகளையும், இவ்வரிகளுக்கு சுப்ரமணிய பாரதியார் அளித்திருக் கும் தமிழாக்கத்தையும், தேச பக்தியைத் தூண்டும் வகையில் பாடினார். அடுத்து வந்தது வாத்ஸல்யமும் பக்தியும் கலந்த ‘ஜோ ஜோ யஷோத நந்தா’ என்னும் ஆனந்த பைரவியில் அமைந்த புரந்தர தாசரின் பாடல். அதற்கடுத்து 'செஞ்சுருட்டி' தில்லானாவும் நிறைவாக, 'குறிஞ்சி'யில் மங்களமும் பாடி அனைவர் உள்ளத்திலும் நிறைவையேற்படுத்தினார்.

மொத்தத்தில், அங்கு வந்திருந்த அனைவருக்கும் புத்தாண்டு மகிழ்ச்சியாகத் துவங்கியது என்றால் அது மிகையன்று.

வி.நா.

© TamilOnline.com