எங்களது இனிய பயணம்
''யாதும் ஊரே யாவரும் கேளீர்'' என்று தமிழ்ப்புலவர் கூறியிருப்பது போல, அமெரிக்காவிற்கு நான்காவது முறையாக வந்திருக்கும் எங்களுக்கு பல முன் அனுபவங்கள் இருந்தாலும் இந்த முறை நயாகரா அருவிக்கு சென்று வந்தது பெரிய அனுபவமாகவே இருந்தது.

சான்ஓசே விமானநிலையத்திலிருந்து அட்லாண்டா வழியாக பங்பெல்லோ சென்றடைந்தோம். அன்று இரவு அங்கு தங்கிவிட்டு, மறுநாள் காலையில் நயாகரா புறப்பட்டோம். எங்களுக்கு குற்றால அருவிதான் முதலில் ஞாபகம் வந்தது. அந்த ஆனந்தத்தை அசைபோட்டவாறு பயணம் செய்தோம்.

குற்றால அருவிக்கு பத்துமைல்கள் தூரத்திற்கு முன்பாகவே சாரல் ஆரம்பித்துவிடும். அந்த அனு பவமும் ஆனந்தமுமே தனிதான். இங்கு நயாகரா அருவிக்கு பத்து மைல்களுக்கு முன்பாகவே பெரிய புகைமண்டலம் தெரிந்தது. காரை நிறுத்திவிட்டு குழந்தைகளுடன் அருவிக்குப் பக்கத்தில் மேல் பாகத்திற்குச் சென்றோம். வலதுபக்கம் அமெரிக்கன் நீர்வீழ்ச்சி, எதிர்ப்புறம் கனடா நாட்டின் எல்லையில் குதிரை லாட வடிவில் நீர்வீழ்ச்சி. இது ஒரு கண் கொள்ளாகாட்சி. அமெரிக்கன் நீர்வீழ்ச்சியின் கீழ்பாகத்தில் சென்று பார்க்க மழைகோட், விசேஷகாலணி கொடுத்து அனுமதிக்கின்றனர். நீர்வீழ்ச்சியின் மிக அருகில் சென்று பார்த்தோம்.

படகில் சென்று மிக உயரத்திலிருந்து கொட்டிக் கொண்டிருக்கும் அருவிக்குள் சென்று சூரியஒளியின் பிரகாசத்தில் வெள்ளிநிறச்சாரலை அனுபவித்தோம். வானவில்லின் வண்ண ஜாலங்களும், இயற்கையின் அழகும் பிரதிபலித்தது. அருவியின் அருகில் செல்ல செல்ல நீர்த்திவலைகள் மேலேபட காற்று பலமாக அடிக்க அருவியே மேலே கொட்டுவது போன்ற உணர்வு, ஆனந்தம்தான்.

அங்கு பலநாட்டு மக்கள் வந்துள்ளனர். இருந்தாலும் யாவரும் நாட்டைப் பற்றியோ, ஆண், பெண் என்பதைப் பற்றியோ, வயதானவர் குழந்தை என்ற உணர்வோ இல்லை. யாவரும் தன்னை மறந்த நிலையில் இயற்கையோடு இயற்கையாக நனைந் தனர். ஆனந்த வெள்ளத்தில் திளைத்தனர். இந்த நேரத்தில் நம்நாட்டு வேதாந்தத்தில் சொல்லும், நமக்கு ஆதிசங்கரர் போதித்த அத்வைத கருத்து நினைவு வந்தது.

பாரதியார் கூறிய வேதாந்தத்தின் வேரைக் கண்டேன் என்று கூறிய தத்துவத்தின் கருத்து புரிந்தது. எல்லோர் முகத்திலும் பேதமற்ற சிரிப்பு. எல்லோரும் நிரந்தரமாக நிஜ வாழ்விலும் ஆனந்தமாக இருக்கவேண்டுமென்று இயற்கை யிடமே வேண்டிக்கொண்டேன்.

நம் தமிழ்நாட்டு கோரத்த முனிவரோ, திருமூலரோ இங்கு இருந்திருந்தால் அழகான ஒரு பாட்டை பாடியிருப்பார்கள். பாதாள கங்கை, பாதாள லிங்கம் என பெயரிட்டு வணங்க துவங்கியிருப்பார்கள்.

நேரம் போனதே தெரியவில்லை. அதற்குள் மணி பிற்பகல் 3 ஆகிவிட்டதால் ஒரு இந்தியன் உணவு விடுதி மூடியிருந்தாலும் கேட்டுக் கொண்டதன் பேரில் உணவு கொடுத்தனர். பிறகு நயாகரா ஆற்றைக் கடந்து கனடா கஸ்டம்ஸில் அனுமதி பெற்று நயாகராவில் தங்கினோம். எங்களுக்கு ஒதுக்கப் பட்டிருந்த ஒன்பதாவது மாடியில் உள்ள அறையின் ஜன்னல் வழியாகப் பார்த்தால் அருவியின் மாயா ஜாலங்கள் நன்றாக தெரிந்தன.

மாலை இருட்டத் தொடங்கியதும், நீர்வீழ்ச்சி யினூடே பலவண்ணங்களில் மின்விளக்குகள் அலங்கரிக்கப்பட்டுள்ளது, மிகவும் கண் கொள்ளாத காட்சி. இரவு பூராவும் அந்த விளக்குகளின் வண்ண ஜாலங்களை மிகவும் ரசித்து அனுபவித்தோம்.

மறுநாள் காலை 9 மணியளவில் 1MAX தியேட்டரில் நயாகரா நீர்வீழ்ச்சி எந்த ஆற்றில் உற்பத்தியாகிறது. நீர்வீழ்ச்சி பிறகு எப்படி செல்கிறது? மற்றும் நீர்வீழ்ச்சியில் பலர் நிகழ்த்தியுள்ள சாகச சாதனைகளை விளக்கும் படம் பார்த்தோம்.

ஒரு நடுத்தர வயது பெண்மணி ஒரு பீப்பாயினுள் தன்னை அடக்கிக் கொண்டு, அந்த பீப்பாயை நன்றாக ஆணி வைத்து அடித்து மூடிவிடச் சொல்லுகிறாள். பிறகு அந்த பீப்பாய் நயாகரா ஆற்றில் உருட்டிவிட, அது அருவியினூடே அவ்வளவு உயர்த்திலிருந்து கீழே ஆற்றில் விழுகிறது. பிறகு அந்த பீப்பாயை திறந்து பார்க்கையில் அதன் உள்ளிருந்து அந்த பெண்மணி எந்தவிதமான பாதிப்புமின்றி வெளியில் வருவது விந்தையாக உள்ளது. அதைவிட பெரிய விந்தை என்னவென்றால் அந்தப் பெண்மணியுடன், ஒரு கருப்பு நிறப் பூனைக்குட்டியும் பீப்பாயினுள் அடைக் கப்பட்டது. பீப்பாயை திறந்து அந்த பெண்மணி வெளியே வரும் போது அந்த பூனைக்குட்டி வெள்ளை நிறமாக வருகிறது. இதுவும் கலியுகத்தில் ஏற்படும் விந்தைப் போலும்.

பிறகு அங்குள்ள ஒரு கோபுரத்தின் மேல்தளத்திற்கு சென்றோம். அங்கிருந்து பார்க்கும் போது நயாகரா நீர்வீழ்ச்சியின் முழுதோற்றத்தையும் உயரத்திலிருந்து பார்க்க முடிகிறது. இது மிகவும் அருமையான காட்சியாகும். அதன்பின் அங்குள்ள ஓர் இந்தியன் உணவு விடுதியில் உணவு அருந்திவிட்டு கனடாவில் உள்ள டொராண்டோ நகரத்திற்குப் புறப்பட்டோம்.

இதுவரையில் மைல்கள் அளவில் குறிப்பிடப் பட்டுள்ள சாலை அறிவிப்புகள், கனடாவின் எல்லை யில் கிலோமீட்டர் அளவில் துவங்குகின்றன. நயாகராவிலிருந்து டொராண்டோ செல்லும் சாலை சுமார் 120 கிலோமீட்டர் தூரம். நயாகரா நீர்வீழ்ச்சி ஆறாக மாறி ஆண்டாரியோ என்னும் ஏரியில் கலக்கிறது. டொராண்டோவிற்கு மாலை சென்ற டைந்ததும் ஒரு விடுதியில் தங்கினோம். இரவு பூராவும் நல்லமழை. மறுநாள் காலை விஞ்ஞான அறிவியல் கலைக்கூடத்தைப் பார்க்கச் சென்றோம்.

அக்கலைக்கூடத்தில் விஞ்ஞானபூர்வமான பல விளக்கங்களைக் கண்டோம். அங்குள்ள 1MAX தியேட்டரில் உடல் உறுப்புகள் பற்றியும், நாம் உண்ணும் உணவு வகைகள் எப்படி நம் வயிற்றினுள் சென்று ஜீரணிக்கிறது என்பது பற்றி விளக்கப் படத்தைப் பார்த்தோம். அதன் பின் மதிய உணவு சாப்பிடுவதற்காக 'பெர்னாட்’ தெருவிற்குச் சென்றோம்.

பெர்னாட் தெரு சுமார் 2 கிலோமீட்டர் நீளம் கொண்டது. பல கடைகள் தமிழர்களால் நடத்தப் படுகிறது. கடைகளின் பெயர் பலகைகள் விளம்பரங் கள், வெளியிடப்படும் தமிழ் தினசரி நாளிதழ் அனைத்தும் அழகான இலங்கைத் தமிழில் அமைந் துள்ளன. மதிய உணவு உடுப்பி ஓட்டலில் சாப்பிட் டோம். அந்த ஓட்டலின் உள் மற்றும் வெளி தோற்றம் தமிழ்நாட்டிலுள்ள ஒட்டலில் அமர்ந்து சாப்பிடும் எண்ணத்தை தோற்றுவித்தது.

சென்னை தியாகராயர் நகரில் உள்ள ரங்கநாதன் தெருவில் நடமாடுவது போல் இருந்தது. சாப்பிட்ட பிறகு உலகிலேயே மிகவும் உயர்ந்த, டொராண் டோவில் உள்ள CNTOWER என்ற கோபுரத்தில் ஏறி நகரின் வளமையை கண்டுகளித்தோம். இந்த கோபுரம்தான் உலகிலேயே மிகவும் உயர்ந்தது எனவும், கனடாவின் தொலைக்காட்சி ஒளிபரப்பு இங்கிருந்துதான் நடைபெறுகிறது எனவும் அறிந் தோம். நாங்கள் சென்று களித்த தளத்தில் நிறைய உணவு விடுதிகள் உள்ளன. ஆனால் கோபுரத்தின் உச்சியின் மேல்வரை செல்ல அனுமதிப்பதில்லை. அதன்பிறகு நாங்கள் சென்ற வாடகை காரில் ப·யலோவிற்கு திரும்பினோம். நயாகரா நீர்வீழ்ச்சி பகுதியின் எல்லையில் USA கஸ்டம்ஸ் பரிசோதனைக் குப் பிறகு நாங்கள் ப·பல்லோவை நோக்கி தொடர்ந்தது.

இரவு அங்கு ஒரு விடுதியில் தங்கினோம். மறுநாள் அதிகாலை 6.45 மணிக்கு விமானம் மூலம் திரும்பும் பயணம்.

மறுநாள் அதிகாலை விடுதியிலிருந்து புறப்பட்டு விமான நிலையம் சென்றடைந்தோம். விமான நிலையத்தில் பாதுகாப்பு பரிசோதனைக்காக வரிசை யில் நின்றோம். நீண்டவரிசை. எங்கள் முறை வருவதற்கு 6.35 மணியாயிற்று. 6.45 மணிக்கு விமானம் புறப்பட வேண்டும். என்னுடன் வந்த என் பெண், மருமகன், குழந்தைகள் பரிசோதனை முடிந்து என் கணவரை மட்டும் சோதனைக்காக தனியாக அழைத்தனர்.

உடல்பூராவும் மெட்டல் டிடெக்டர் மூலம் பரி சோதித்து, கால் அணி, மேல்சட்டை பாக்கெட்டு களிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்து பரிசோதித் தனர். என் கணவர் அணிந்திருந்த காலணியில் பார்வைக்காக மேல்புறம் ஆணி தைத்திருந்தது. அதை பரிசோதித்து காலணியையே ஸ்கேன் செய்வ தற்காக எடுத்துச் சென்றனர். ஒருவழியாக பரிசோத னை முடிந்து எங்களை அனுப்பும் போது காலை 7.10 ஆயிற்று. அதுவரை விமானம் எங்களுக் காக காத் திருந்தது. விமானநிலைய பரிசோதனை எங்களுக்கு புதிய அனுபவம். ப·பலோவிலிருந்து அட்லாண்டா சென்று, அங்கிருந்து வேறு விமானத்தில் சால்லேக் சிட்டி வந்தடைந்தோம். அங்கிருந்து மற்றொரு விமானத்தில் எங்கள் பகுதியான சான்ஓசோவிற்கு பிற்பகல் 4 மணியளவில் சென்றடைந்தோம்.

சாந்தா பாலகிருஷ்ணன்

© TamilOnline.com