திராவிடம்: திராவிடர்: திராவிட அரசியல்:
'திராவிடர்', 'திராவிட அரசியல்', 'திராவிட இயக்கம்', 'திராவிட கருத்துநிலை' போன்ற பதப்பிரயோகங்கள் சமகாலத் தமிழ்நாட்டுச் சமூகப் பார்வையில் ஈ.வே. ராமசாமி என்ற பெரியாரால் நடத்தப் பெற்ற சுயமரியாதை இயக்கத்தின் அடியாகவே புரிந்து கொள்ளப்படும்.

திராவிடம் என்ற இத்தொடர் இந்திய சுதந்திர காலத்துக்கு முன்னரிலிருந்து கையளிக்கப்பட்ட ஒரு சிந்தனை மரபின் பெறுபேறாக அமைகின்றது. இன்னொருவிதத்தில் அந்த சிந்தனை மரபின் வன்மையான அரசியல் கட்சிநிலைப் பதமாகவும் தொழிற்படுகின்றது.

தமிழக அரசியலில் நீதிக்கட்சி (1916), சுயமரியாதை இயக்கம் (1926), திராவிடர் கழகம் (1944) என்ற வழிமுறையிலான அரசியலில் 'பெரியார்' வழிவந்த சிந்தனையும், செயற்பாடுகளும்தான் 'திராவிட அரசியல்' என்னும் பிரிகோடுக்கான புள்ளியாக இருந்தது. இந்த திராவிட அரசியல் கருத்துநிலைதான் தமிழக அரசியலின் திசைப் போக்கின் மேலாட்சிக்குரிய போக்காகவும் வெளிப்பட்டது.

பெரியாரின் (1879-1973) இயக்கக் களம் மிக விரிவானது. பெரியாரின் கருத்துக்கள் செயல்பாடுகள் சமுதாயத்தில் பெரும்தாக்கம் செலுத்தத் தொடங் கியது. இந்து பார்ப்பன காலசாரத்திற்கு எதிராக மானுடவிடுதலைக்காக களம் இறங்கினார். அந்தக் களத்தில் இந்துக் கலாசார மதிப்பீடுகளையும் புனித ஒழுக்கக் கட்டுமானங்களையும் உடைத்தெறிந்தார்.

நாத்திகர், பார்ப்பன எதிர்ப்பாளர், தனிநாட்டிற்காக போராடியவர், இடஒதுக்கீட்டிற்காக போராடியவர், பெண்விடுதலை குறித்து அக்கறை காட்டியவர் என்றெல்லாம் பெரியார் புரிந்து கொள்ளப்பட்டார். பெரியாரது சிந்தனையும் அரசியலும் போர்க் குணமிக்கதாக இருந்தது. திராவிட அரசியல், இளம் சமுதாயத்தினரை அதிகம் கவர்ந்தது. பற்றிப் பிடித்தது. பகுத்தறிவு வாதம் எங்கும் படர்ந்துவர அதன் ஒளியில் தெளிவு பெற, கலகம் செய்ய, போராட புதுப்பாதை அமைத்தது திராவிட அரசியல்.

பெரியார் வழிவந்த திராவிடர் கழகம், காங்கிரஸ் அரசியலுக்கு எதிராக முனைப்புடன் செயற்பட்டது. மேலும் 'திராவிட நாடு' என்ற கோரிக்கையையும் முன்வைத்தது. தேசிய அரசியலுடன் ஓர் இணக்க மின்மையை எப்போதும் கொண்டிருந்தது.

ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை பெரியார் துக்கநாளாக அறிவித்தார். ஆனால் அதே இயக்கத்தில் பெரியாருக்கு அடுத்த தலைவராக கருதப்பட்ட அண்ணாதுரை இயக்கத்தில் இருந்துக் கொண்டே ஆகஸ்ட் 15 இன்பநாள் என்று அறிக்கைவிட்டார். ஆக பெரியார் அண்ணா இருவருக்கும் இடையிலான முரண்கள் வெளிப் படையாயின. கட்சிநிலைப்பாட்டுக்கு மாறாக செயற்படும் பாதைக்கு பாதை வெட்டியவர் அண்ணாதுரை.

இளைஞர்களிடையே செல்வாக்குமிக்கவராகவும் திரைப்பட கவர்ச்சியில் நாட்டம் கொண்டவராக இருந்த சி.என். அண்ணாதுரை திராவிட இயக்கத்தில் இருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகத்தை (1949) தோற்றுவித்தார்.

இந்த திமுக உருவாக்கத்துடன் திராவிட அரசியல், திராவிட கருத்துநிலை அதன் போக்கிலிருந்து வேறுதள மாற்றப் போக்குகளை நோக்கி நகர்ந்தது.

  • தேர்தல் அரசியலில் பங்கு கொள்வது என்ற தீர்மானம் (1956)


  • நாத்திக நிலையிலிருந்து விடுபடுகை (ஒன்றே குலம் ஒருவனே தேவன்)


  • திராவிட நாட்டுக் கோரிக்கை கைவிடப்படல் (1963)
ஆகிய இந்தப் போக்குகள் திராவிடக் கருத்துநிலை அரசியல் முனைப்பில் ஏற்பட்ட பலவீனங்கள். ஆட்சியதிகாரத்தை குறிவைத்து அரசியல் நடத்தும் போக்கு அதன் உள்ளீடான உத்வேகத்தை மழுங் கடித்தது. சந்தர்ப்பவாத அரசியல் தொடர்ச்சிக்கும் களம் அமைத்தது. அண்ணாத்துரை தலைமையிலான திமுக திராவிட அரசியல் தளமாற்றப் பெயர்வுக்கு காரணமாயிற்று.

சினிமா உலக செல்வாக்கு சார்ந்து திமுக தன்னைப் பிணைத்துக் கொள்ளும் போக்கு வேகம் கொண்டது. சினிமா கவர்ச்சியை அரசியலுக்கு மூலதனமாக்கும் முன்முயற்சியும் ஏற்பட்டது. இதனால் வெகுஜன மக்க ளிடையே திராவிட கொள்கைசார்ந்த அரசியல் மயப்படுத்தல் வேகப்படுத்தப்படவில்லை. அடுக்குத் தொடர் வசனம் சொற்களஞ்சியம் திமுக தலைமை யால் அறிமுகப்படுத்தப்பட்டது. மேடைப்பேச்சு நாடகம் திரைப்படம் என இது வளர்ந்திருந்தது.

திராவிட இயக்கம் வழிவந்த சினிமாக்காரர்கள் அரசியலில் செல்வாக்கு செலுத்தும் போக்கு அதிகரித்தது. கவர்ச்சிவாதத்தை மட்டுமே நம்பி அரசியலுக்கு வரமுடியும் என்ற தவறான சமிக்ஞையை வழங்கியது. இத்தன்மை திராவிடக் கொள்கையை நீர்த்துப் போகச் செய்தது.

திமுக தலைமை மக்களுக்கிடையே கொள்கை சார்ந்த முரண்பாடுகள் என்பதற்கு பதிலாக தனிநபர் சார்ந்த முரண்பாடுகள் வேகப்பட்டது. அவரவர் தமக்கான ஆதரவுத்தன்மையை பெருக்க குறுகிய குறுக்கு வழிமுறைகளை பின்பற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. கட்சிக் கொள்கை கட்சி முடிவுகளுக்கு கட்டுப்பட்டு செயற்பட்டு வருவதைவிட தமக்கான பலத்தை நிரூபித்து அதை வைத்து மிரட்டல் செய்து தமக்கேற்ப கட்சி நடவடிக்கைகளை வளைத்து வரும் போக்கு கட்சியில் நாகரிகமான போக்காக மாறியது.

கருணாநிதி x எம்ஜிஆர் இடையே ஏற்பட்ட முரண்பாடு, விலகல் திராவிடக் கொள்கையின் நடைமுறைப்படுத்தலில் ஏற்பட்ட மாறுபாடுகளின் பாற்பட்டதல்ல. மாறாக இந்த இரு தனிநபர்களின் நலன்கள் சார்ந்த விவகாரம். ஆனால் இந்தப் போக்கு திராவிட அரசியலின் திசைப் போக்கை இவ்வளவு மலினப்படுத்தி எளிமைப்படுத்தி நீர்த்துப் போக வழிவகுக்குமென யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது.

தேர்தல் அரசியலில் பங்கு கொள்ளல் என்ற முடிவானது திராவிட அரசியலின் கூர்மையை மழுங்கடித்து சந்தர்ப்பவாத அரசியலுக்குள் மூழ்கச் செய்தது. பதவி மோகம், எப்படியும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டுமென்ற வெறி திராவிடக் கொள்கைகளை காற்றில் பறக்கவிட வேண்டிய தாயிற்று. திமுகவிலிருந்து எம்ஜிஆர் தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உருவான போது திராவிட அரசியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. குறிப்பாக நாத்திகம் தமிழ்மேன்மை வாதம் கைவிடப்பட்டது.

ஆக திராவிடக் கொள்கை திராவிட அரசியல் அண்ணாதுரை தலைமையிலான இயக்க அரசியல் செயல்பாடுகளால் பின்னுக்குத் தள்ளப்பட்டு தேர்தல் அரசியல் ஒன்றையே குறியாகக் கொண்டு செயற்படும் போக்கை அதிகரித்தது. சமூகத்தில் புரையோடியுள்ள முரண்பாடுகளை களைந்து சமூகமாற்றத்தை துரிதப்படுத்தும் நகர்வுகளுக்கான செயற்பாட்டின் மையை தன்னோடு பிணைத்துக் கொண்டது.

கருணாநிதி, எம்ஜிஆர் தலைமையிலான காலங்களிலும் இது மேலும் அதிகரித்தது. தேர்தல் அரசியல்தான் திமுக, அதிமுகவின் போக்கை வழிநடத்தின. திராவிட அரசியல் கருணாநிதி x எம்ஜிஆர் என்ற தனிநபர்களை சார்ந்து மையம் கொண்டது. இந்த இருவரும் தமக்கான அரசியல் பலத்தை உறுதிப்படுத்த காங்கிரசுடன் போட்டி போட்டு கூட்டணி வைக்கும் அரசியல் தந்தி ரோபத்தை மேற்கொண்டனர்.

1970களின் நடுப்பகுதிக்கு பின்னர் எம்ஜிஆர் x கருணாநிதி என்ற நபர்கள் சார்ந்து திராவிட அரசியல் சுருங்கியது. இந்த சுருக்கம் திராவிட கருத்து நிலையை அடியோடு விட்டு வந்தது. ஒருவருக்கு ஒருவர் ஊழல் புகாரை சொல்லிக் கொண்டே வந்தனர். காங்கிரசுடன் மாறி மாறி உறவை வளர்த்து ஆட்சியதிகாரத்தைப் பிடித்தனர்.

நெருக்கடிக்காலத்தில் காங்கிரஸ் கட்சியால் பாதிக்கப்பட்ட திமுக அந்தக் காயம் மறைவதற்குள் காங்கிரசுடன் தேர்தல் உடன்பாடு கண்டது. சர்க்காரியா கமிஷனிலிருந்து தப்பும் உள்நோக்கம் காரணமாகவே திமுக இந்திரா காங்கிரசை ஆதரிக்க முன்வந்தது. இந்தக் குற்றச்சாட்டை எம்ஜிஆர் பகிரங்கமாகவே முன்வைத்தார்.

கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் தேர்தலை ஆக்கிரமித்தன. விவசாயக் கடன் ரத்து, 5 கிலோ அரிசி வாங்கும் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பவர்களுக்கு ஒரு கிலோ அரிசி இலவசம் என்று அதிமுக தேர்தல் அறிக்கை வாக்குறுதி அளித்தது.

இதுபோல் திமுகவும் ஏழைப்பெண்கள் திருமணம் முடிக்க தாலிக்கு தங்கம் போன்ற வாக்குறுதிகளை அளித்தது. எம்ஜிஆர் இரண்டரை ஆண்டுக்காலம் நடத்தியது ஆட்சியல்ல; சினிமா காட்சியே என்று கருணாநிதி பிரச்சாரம் செய்தார்.

சுயமரியாதைத் திருமணங்கள் நடத்திய கட்சி பகுத்தறிவாதம் பேசிய கட்சி சடங்குகள் தாலி என்ற வட்டத்துக்குள் தன்னை சுருக்கியது. மக்களை ஏமாற்றும் கவர்ச்சித்திட்டங்களை பின்பற்ற இக்கட்சிகள் பின்நிற்கவில்லை.

1980ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின்னரும் தமிழக அரசியல் எம்ஜிஆரா? கருணாநிதியா? என்ற மிகக்குறுகிய வளையத்துக்குள் சூழல ஆரம்பித்தது. இந்தப் போக்கு எம்ஜிஆர் மறைவு வரை நீடித்தது. இது பின்னர் ஜெயலலிதா கருணாநிதி என்ற நிலையில் தற்போது உள்ளது.

ஆக திராவிட அரசியல் சமூகசமத்துவம் சமூகநிதி என்ற கோட்பாடுகளை உயர்த்திப் பிடித்து செயற்படத் தொடங்கினாலும் அது பின்னர் திமுக உதயத்துடன் தேர்தல் அரசியலில் கரையத் தொடங்கியபோது திராவிடக் கொள்கைகளை படிப்படியாக கரைத்துவிட்டது.

மதவாத அரசியலுக்கு எதிராக இயங்கிய திராவிட அரசியல் பாஜகவின் மதவாத அரசியலுடன் பின்னிப்பிணைத்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பகுத்தறிவுவாதம் படர்நது வர காரணமான திராவிட அரசியல் தற்போது தமிழகத்தில் மதவாத அரசியல் முனைப்புறவும் பாஜக வேரூன்றவும் இதே திராவிட அரசியல் (திமுக + அதிமுக) காரணமாகி வருவது நிதர்சனம்.

தமிழ்நாட்டில் வரலாற்று அரசியல் நிகழ்வுகளை காலவரிசைப்படி பார்க்கும் போது திராவிட அரசியல் பெரியார் தலைமையில் செயற்பட்ட போது இருந்த வேகம், கொள்கை சார்ந்த முனைப்பு சமூக தீர்வுக் கான போராட்டம் சமூக சமத்துவம் பற்றிய அக் கறை அவருக்கு பின்ன ரான வழித்தோன்றல் களால் அதே பிடிப்புடன் பின்பற்ற முடியவில்லை.

மாறாக திராவிடக் கருத்து நிலையில் இருந்து பிறழ்வு பெற்று பல்வேறு தளமாற்றங் களுக்கு வேர்விட்டு கட்சி அரசியல் தேர்தல் அரசிய லுடன் மையம் கொள்ளும் போக்கையே வளர்த் துள்ளது.

தமிழும் தமிழ்நாடும் தமிழ்மக்களும் இப்படிப் பிரிந்துகிடக்கிற காரணத்தினால்தான் ஒற்றுமைக்குப் பாடுபடும் நாங்கள் திரவிட நாடு என்றும், திராவிட மக்கள் என்றும் திராவிடக் கலாசாரம் என்றும் எடுத்துக் காட்டி புத்துணர்ச்சி எற்படுத்தப் பாடுபட்டு வருகி றோம் என்று பெரியார் பலமுறை கூறினார். ஆனால் பின்னர் வந்த தலைவர்கள் தமிழர்களை ஒன்றிணைந்து வருவதற்கு பதிலாக சாதீயம், மதம் போன்ற பற்றுகளில் நம்பிக் -கை கொண்டவர்களாக மாறியுள்ளார்கள்.

சுயமரியாதை, சுயத்துவம், சுயஉணர்வு என்பதை திராவிட அரசியல் வலியுறுத்தியது. ஆனால் பெரியாருக்குப் பின்னர் இந்த சுயமரியாதை, சுயத்துவம் எதுவுமே பின்பற்றப்படாத மூடநம்பிக்கை சார்ந்த கட்சி வழிபாட்டை வளர்த்தது. வயது வித்தியாசமில்லாமல் காலில் வீழ்ந்து வரும் கலாசாரத்தை வளர்த்தது. சினிமாவின் கவர்ச்சி அரசியலையும் உள்வாங்கியது.

ஆக திராவிட அரசியல் சிதைவுக்கும் சீரழிவுக்கும் உரியதாக மாற்றப்பட்டுவிட்டது. இருபதாம் நூற்றாண்டு தமிழர் வாழ்வியலில் அதன் கலாசார நடைமுறைகளில் தமிழர்களின் எண்ணப் போக்கில் திராவிட அரசியல் திராவிடக் கருத்துநிலை மிகுந்த தாக்கம் செலுத்தியதாகவே இருந்தது.

ஆனாலும் திராவிட அரசியல் தன்னளவில் சிதை வாக்கம் பெற்று தனது கடந்த கால நினைவுகளை சாதனைகளையே விழுங்கி வரக்கூடிய சூழற்சிக்குள் இயக்கம் கொள்ளத் தொடங்கி விட்டது. எனது சொந்த அனுபவங்களை நானறிந்து உங்களுக்கு உரைப்பது தான் என்னுடைய விடுதலை. அதனை ஆராய்ந்து அறிந்து அதன்படி நடப்பதுதன் உங்கள் விடுதலை எனக் கூறுவார் பெரியார்.

மொழிப்பற்று, நாட்டுப்பற்று, மதப்பற்று, சாதிப்பற்று ஆகியவற்றை விட்டொழிக்க சொல்லும் பெரியார் விடுதலைக்கு மிகவும் அவசியமான பற்றாக ஒன்றே ஒன்றை மட்டும் குறிப்பிடுகிறார்.

'உங்களுக்கு இன்று சுயமரியாதை அபிமானந்தான் உண்மையாய் வேண்டும்' என்று அவர் குறிப்பிட்டது இன்றைய திராவிட வாரிசுகள் எனக்கூறிக் கொள்பவர்களுக்குத்தான் இது இன்று பொருந்தும்.

துரைமடன்

© TamilOnline.com