மூன்று தலைமுறைகளுடன் தொடரும் இசைப் பயணம் - T.V. கோபாலகிருஷ்ணன்
இசைப் பயணத்தில் ஏற்பட்ட இடைவெளிக்கு மன்னிக்கவும். 3 வயது முதல் 18 வயது வரை உள்ள சிறார்களைக் கொண்டு எங்களது வித்யா பீடம் சார்பில் பன்மொழி தேசிய ஒருமைப்பாடு நிகழ்ச்சி வழங்கியதால் இந்த இடைவெளி. 2002ம் ஆண்டு குழந்தைகள் ஆண்டு என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் செப்டம்பர், அக்டோபர் வரை இது தொடர்பாக எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. ஆகையால் வித்யா பீடத்தைச் சேர்ந்த நாங்கள் இதனை சீரியஸாக எடுத்துக் கொண்டு, 'சித்தி' என்ற நிகழ்ச்சியை வழங்கினோம். காஞ்சி மடாதிபதி தவத்திரு விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஆசியோடு இந்நிகழ்ச்சி மாபெரும் வெற்றி பெற்றது. குழந்தைகள் வளர்ச்சியில் பெரிதும் அக்கறை காட்டும் காஞ்சி மடாதிபதி அவர்கள், குழந்தைகளை ஊக்குவிப்பதோடு அவர்களுக்கு முன்னுதாரண மாகவும் திகழ்கிறார். இந்த 2 மணி நேர நிகழ்ச்சியில் ரசிகர்களும் பெற்றோர்களும் ஆக்கபூர்வமாக ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

2000ம் ஆண்டு இந்திய சுதந்திர பொன்விழா கொண்டாட்டத்தின் போது இந்தக் கருத்தினை சிறிய எடுத்துக்காட்டாக வழங்கினோம். அப்போதைய ஜனாதிபதி திரு. K. R. நாராயணன் நிகழ்ச்சியைப் பாராட்டியதோடு மட்டுமல்லாமல் இந்தக் குழுவினர் உலகம் முழுவதில் இத்தகைய நிகழ்ச்சியை வழங்கி இந்தியாவின் 'வேற்றுமையில் ஒற்றுமை' தத்துவத் தையும் நமது கலாச்சாரப் பெருமையையும் பரப்பவேண்டும் என்று ஆசி கூறினார்.

இதே வேளையில் நான் ஸ்ரீ குகா என்ற CD தயாரிப்பில் (VisionMusica) ஈடுபட்டேன். காஞ்சி பராமாச்சாரியாரின் அருளுரைகள் மற்றும் 'ஸ்ரீ சுப்ரமண்யா நமஸ்தே' என்ற முத்துஸ்வாமி தீட்சிதரின் புகழ்பெற்ற கீர்த்தனையின் மகத்துவமும் இந்த CDயில் இடம்பெறுகின்றன. இந்த CD மற்றும் ஒலிநாடாக்களில் கல்யாணபுரம் திரு அரவாமுதன் அவர்கள் பரமாச்சாரியாரின் அருளுரைகளை உரைக்கின்றார், எனது குரலும் உண்டு. டிசம்பர் 21ம் தேதி தவத்திரு ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்வாமிகள், எங்களது AIMA விழா துவக்கத்தின் போது இந்த CD மற்றும் ஒலிநாடாக்களை வெளியிட்டார்கள். தவத்திரு ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஆசியோடு துவங்கிய இந்த CD ப்ராஜக்ட், நமது இசையை வரவேற்கும் ஒவ்வொரு இல்லங்களிலும் தவழும் என்று எதிர்பார்க்கிறேன்!

சென்னையில் 1950களின் துவக்கத்திற்குச் சென்று மீண்டும் எனது (நமது) பயணத்தைத் தொடரலாமா?

RR சபா, பார்த்தசாரதி ஸ்வாமி சபா, தியாக பிரம்ம கான சபா, கர்நாடக இசையின் கோட்டை மியூசிக் அகாதமி, இந்தியன் ·பைன் ஆர்ட்ஸ் சொஸைட்டி, ராஜா சர் முத்தையா செட்டியார் துவங்கிய தமிழ் இசைச் சங்கம் போன்றவற்றைத் தவிர்த்து, ஸ்ரீ கிருஷ்ண கான சபா, நாரத கான சபா, பிரம்ம கான சபா, மைலாப்பூர் ·பைன் ஆர்ட்ஸ் கிளப் போன்ற புதிய சபாக்கள் வரத் தொடங்கின. மைலாப்பூர் ·பைன் ஆர்ட்ஸ் கிளப், நாரத கான சபா, தியாக பிரம்ம கான சபா, கிருஷ்ண கான சபா ஆகியவை தங்களது சொந்த இடம் மற்றும் அவர்களுக்கே உரிதான நிகழ்ச்சிகள் மற்றும் ரசிகர்கள் ஆகியவற்றை கொண்டிருந்தன.

யோகிகள் பூஜ்யஸ்ரீ சத்குரு ஞானானந்த ஸ்வாமிஜி மற்றும் அவரது சிஷ்யர் பூஜ்யஸ்ரீ ஹரிதாஸ்கிரி ஸ்வாமிகளின் பரிபூரண ஆதரவைப் பெற்றிருந்த காரணத்தால் நாரத கான சபாவைப் பற்றி இந்த இடத்தில் குறிப்பிட்டுக் கூறுகிறேன். அனைத்து தென்னிந்திய கலாச்சாரமும் போற்றப்படும் இந்த சபாவில் இறையுணர்வும் புனித்தன்மையும் இன்றும் போற்றிப் பராமரிக்கப்படுகிறது. மாதம் ஒன்று அல்லது இரண்டு இசைக் கச்சேரிகள் (பெரும்பாலும் வாய்ப்பாட்டு), பின்னர் நாடகங்கள் மற்றும் நாட்டியங்களும் இந்த சபாவின் நிகழ்ச்சிகளில் சேர்க்கப்பட்டன. இந்த சபாக்களில் வாய்ப்பு கிடைப்பது என்பது புது அல்லது வளரும் கலைஞர்களுக்கு மிகவும் சிரமம்.

தனியாக இசைக் கருவி வாசிக்கும் நிகழ்ச்சிகள் வெகு சில மட்டுமே. Dr த்வாரம் வெங்கடஸ்வாமி நாயுடு ஒரு அங்கீகரிக்கப்பட்ட வயலின் (தனி) இசைக் கலைஞராகப் போற்றப்பட்டார். மைசூரையும் உள்ளடக்கிய அந்தக் கால சென்னை மாகாணத்தின் வடக்குப் பகுதிகளில் இசை ரசிகர்களிடையே இவர் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தார். கேரளாவைச் சேர்ந்த ஒரு பிராமணனாக இருந்த போதும், என்னுடைய இசைத் திறமையைப் புரிந்துகொண்டு ஊக்குவித்த உலகத் தரம் வாய்ந்த வயலின் கலைஞர் Dr. த்வாரம். மணி ஐயர், பழனி சுப்ரமண்யப் பிள்ளை போன்ற மேதைகளுக்கு அடுத்து என்னைப் பக்கவாத்தியமாக அமர்த்திக் கொள்வார் அவர். பல சந்தர்பங்களில் அவரது நெருங்கிய சகாக்களும் தீவிர ரசிகர்களும் ஒரு அரவாடு, குற்வாடுவை (தமிழன் மற்றும் இளைஞன்) ஊக்குவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மோனாலிசா புன்னகை மற்றும் 'அவனது வாசிப்பைக் கேளுங்கள்' தான் அவரது ஒரே பதில்.

திருவையாறு தொடங்கி, மைலாப்பூர் சங்கீத வித்வத் சமாஜம் நிறுவியுள்ள தியாகராஜ ஸ்வாமி கோயில் உட்பட உலகெங்கும் தியாகராஜ ஆராதனை நடக்கும் நேரம் இது. சங்கீத வித்வத் சமாஜத்தைப் பற்றி வரும் மாதத்தில் விளக்குகிறேன்.

நன்றி

TVG

© TamilOnline.com