கலி(ஃபோர்னியா) காலம் - (பாகம் 6)
முன் சுருக்கம்:

2000-க்கும், 2001-க்கும் இடையிலான ஒரு வருட காலத்தில் அமெரிக்கப் பொருளாதார நிலையின் பெரும் சீர்குலைவு எதனால் ஏற்பட்டிருக்கலாம் என்று கற்பனை உலகுக்குச் சென்று பார்த்தோம்.

நாரதர், கலிஃபோர்னியாவில் புரளும் செல்வம் லஷ்மி கடாட்சத்தாலேயே என்று கலக மூட்டி விடவே, வந்து பார்த்த விஷ்ணுவும் முதலில் லக்ஷ்மியின் அருள் பலத்தை ஒப்புக் கொண்டார். ஆனால் டாட்-காம் கொப்பளம் உடைந்து, அதன் பின் 9/11 விளைவு, என்ரான், வொர்ல்ட்காம் ஊழல் எனத் துன்பங்கள் தொடர்ந்தன. அவற்றுக்குக் காரணம் மாயையால் விளைந்த மமதையும் பேராசையும் என்று விஷ்ணு விளக்கினார்.

அப்படிப் பட்ட விளைவுகளிலிருந்து எப்படி மக்கள் விடுபட்டு மீண்டும் சீர்நிலை பெறுவது என்று நாரதர் கேட்கவே, மஹாவிஷ்ணு தான் கண்ணனாக அவதரித்த போதே கீதையில் உரைத்து விட்டதாகக் கூறினார். நாரதர் பலரும் கீதையை மறந்து விட்டதால் அதை மீண்டும் தற்கால ரீதியில் உணர்த்த வழி கேட்டார். லக்ஷ்மி தேவியும் விஷ்ணு மீண்டும் அதற்காக அவதரிக்க வேண்டுமோ என்று கேட்டாள். விஷ்ணு, அவசியமில்லை, புத்தர் போன்ற பலரும் அந்தக் கருத்துக்களை அவ்வப்போது உரைத்திருக் கிறார்கள், தற்போது கூட குடும்ப வாழ்வு வாழ்ந்து கொண்டே ஞானம் பெற்ற பலர் மற்றவர்களுக்கு வழி காட்டுகிறார்கள் என்று கூறி, அத்தகைய ஒருவரை பூலோகத்தில் காட்டினார்.

அவர் பெயர் அருண். அவர் பல வருட காலமாக பல உயர் தொழில் நுட்ப (hi-tech) நிறுவனங்களில் பணி புரிந்தவர். அவர் அடைந்திருந்த வெற்றிகளாலும் venture உலகில் அவருக்கிருந்த பலப் பலத் தொடர்புகளாலும் அவருடைய பெயர் பரவியிருந்தது.

அப்படியிருந்தாலும் தலைக் கனமின்றி யார் என்ன கேட்டாலும் பொறுமையாக பதிலளிப்பார். அதே போல் யார் என்ன உதவி கேட்டாலும், தன்னாலான வரை தயங்காமல் செய்வார்.

அருணைப் பலர் கேட்கும் கேள்விகளுக்கு அவர் அளிக்கும் பதில்கள் மூலம் நாரதரின் கேள்விக்கு நாராயணன் உரைத்த பதிலின் விளக்கத்தைச் சிறிது சிறிதாக அறிந்து கொண்டிருக்கிறோம்.

******


ஸ்டார் பக்ஸ¥க்கு காஃபி அருந்த அருணுடன் நடந்து போய்க் கொண்டிருந்தவர்களில் ஒருவனான முரளி தன் பிரச்சனையை எழுப்பினான்.

முரளி மிகவும் ஆர்வமான இளைஞன். வாழ்க்கையில் மிக வேகமாக முன்னேறி விட வேண்டும் என்ற துடிப்புடன் இருந்தான். ஆனால் தன் திறமைக்கேற்ற பாராட்டும், பதவியும் தனக்குக் கிடைக்கவில்லை என்று புழுங்கிக் கொண்டிருந்தான்.

"அருண், நீங்க ரொம்ப மேல் பதவியில இருந்திருக்கீங்க. ஆரம்ப நிலை எஞ்சினீயர் பதவியிலிருந்து உங்க மேலாளர்கள் உங்கத் திறமையை மதிச்சு, ஒவ்வொரு பதவியா வேகமா உயர்த்தியிருக்காங்க. என் கதை வேற மாதிரி யாயிருக்கே? நான் என் வேலையை ரொம்ப நல்லாவே செய்யறேன்..."

அருண் இடை மறித்து கிண்டலான புன்னகையுடன், "அப்படீங்கறீங்க?!" என்றார்.

முரளி சூடாக, "நானா மட்டும் சொல்லிக்கலை அருண், என் வேலை விமர்சனங்களும் சொல்லுது!" என்றான்.

அருண், "சாரி முரளி, சும்மா தமாஷ¤க்கு கிண்டல் பண்ணினேன், தப்பா எடுத்துக்காதீங்க, மேல சொல்லுங்க" என்றார்.

முரளி தொடர்ந்தான். "அதுக்கும் மேல, எங்க குழு, ஏன் எங்க கம்பனி முழுவதுக்குமே ரொம்ப பயன்தரக் கூடிய புது வழிகள், புது மாதிரி பொருள் செய்ய யோசனைகள், மேலும் வியாபாரத் தந்திரங்கள் எல்லாம் நிறைய எனக்குத் தோணுது. ஆனா இதையெல்லாம் எங்க நிறுவனத்தில கேட்பாரே இல்லை. என் மேனேஜருக்கே என் மேல பொறாமையோன்னு தோணுது. ஒருவேளை நான் அவர் பதவியைப் பிடிச்சுப்பேன்னு பயப் படறாரோ என்னவோ?!"

அருண் வியப்புடன், "ஏன் அப்படி சொல்றீங்க?" என்றார்.

முரளி, "நான் குடுக்கற நல்ல யோசனை எதையும் அவர் ஏத்து கிட்டு பாராட்டறது கிடையாது. அவருடைய மேனேஜருக்கோ, மத்த குழுவில இருக்கறவங்களுக்கோ வெளிப்படுத்தறதும் கிடை யாது. அதை விட, வெந்த புண்ணுல வேல் பாய்ச்சறா மாதிரி என்னன்னா, நான் சொல்ற அதே யோசனையை ஏத்துக்காத அவர், வேற யாரோ சொன்னா பாராட்டி ஏத்துக்கறார்! இன்னும் மோசமா, அந்த மாதிரி யோசனைகள் கம்பனில வேற யோரோ சொல்லி எங்க CEO-வே அவங்களை பாராட்டி, பரிசும் குடுத்திருக்கார்! எனக்கிருக்கிறத் திறமைக்கு நான் இன்னும் எவ்வளவோ முன்னே றியிருக்கணும்னு தோணுது. இந்த நிலைமைல நான் என்ன செய்யலாம்னு தெரியாமத் தவிச்சுக் கிட்டிருக்கேன். நீங்க நல்ல வழி சொல்வீங்கன்னு யாரோ சொன்னாங்க. அதான் இங்க வந்தேன். சொல்லுங்க, நான் என்ன செஞ்சா என் திறமைக் கேத்த பலனும் மேல் பதவியும் கிடைக்கும்?" என்றான்.

அருண் பெருமூச்சு விட்டார். அவர் இந்த மாதிரி, சட்டென்று முன்னேறி விட வேண்டுமென்ற துடிப்பும், அந்த ஆசை கை கூடி வராவிட்டால் வெறுப்பும் பெற்ற பல பேரை சந்தித்திருந்தார். அவர்கள் எல்லார் கதையும் முரளி கூறியது போலவே தான் இருந்தது! சிலர் தங்கள் மனத்துக்குள்ளேயே சாதனையா ளர்களாகி (legends in their own minds) மற்றவர்களும் அப்படியே நினைக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறார்கள். பாராட்டுக்களும் சன்மானங் களும் எவ்வளவு கிடைத்தாலும் போதாமல் மேலும் இன்னும் அதிகமாக எதிர்பார்த்து, பேராசை நிராசையை வளர்த்து விடுகிறது. சிறிது காலத்தில் தங்களுக்கு எதிராக எல்லோரும் சேர்ந்து ஒரு சதி செய்வதாகவே அவர்களுக்கு ஒரு எண்ணம் எழுந்து விடுகிறது.

பெரும்பாலும் அத்தகையவர்களுக்கு நல்வழி காட்டுவது முடியாத காரியம். இருந்தாலும் அருண் முயற்சிக்க முடிவு செய்தார்.

"முரளி, நீங்க எவ்வளவு நாளா அந்த கம்பனில வேலை பாக்கறீங்க?"

"ரெண்டு வருஷமா."

"அப்போ, டாட்-காம் கொப்பள உச்சியில சேர்ந்திருக்கீங்க?!"

"கிட்ட தட்ட அப்படித்தான்!"

"இது வரை எவ்வளவு சம்பள உயர்வும் வேலை உயர்வும் கிடைச்சுது?"

"ரெண்டு சம்பள உயர்வு, ஒரு ப்ரமோஷன்."

"உங்க கம்பனில நீங்க சேரறச்சே எவ்வளவு பேர் வேலை செஞ்சாங்க?"

"2200 பேர்"

"இப்போ?"

"650 பேர்"

"முரளி, இப்போ இருக்கற பொருளாதார நிலைமைல உங்களுக்கு இன்னும் வேலை இருக்கு, அதுவும் இல்லாம ரெண்டு சம்பள உயர்வும் ஒரு வேலை உயர்வும் கூட கிடைச்சிருக்கு. உங்களுக்கு வேலைல ரொம்ப மதிப்பு இருக்கறதாத்தானே எனக்கு தெரியுது?!"

"ஆனா அது எனக்கு..."

அருண் இடை மறித்தார். "என்ன சொல்ல வறீங்கன்னு புரியுது. உங்க திறமைக்கு அது ரொம்ப குறைச்சல்ங்கறீங்க. இருக்கலாம், இருக்கலாம்! சம்பளத்தையும் பதவியையும் விட உங்க யோசனை கள உங்க பாஸ் மதிக்கலைங்கற உணர்வுதான் உங்களை ரொம்ப பாதிச்சிருக்குன்னு நினைக் கிறேன், சரியா?"

முரளி சற்று யோசித்து விட்டு, "நீங்க சொல்றது சரிதான். என் கருத்துக்களை ஏத்துக்காம, இன்னும் அதே கருத்துக்களை மத்தவங்க சொன்னா ஏத்துக் கிட்டு பாராட்டறதுதான் எனக்கு ரொம்ப வெறுப் பேத்தியிருக்கு. அது சரியாச்சுன்னா மீதி ரெண்டும் தானா வரும்னு தோணுது."

அருண் புன்னகைத்தார். "முரளி, கொஞ்சம் முன்னேறியிருக்கோம்! சரி. உங்க கருத்துக்களையே மத்தவங்க சொன்னா ஏத்துக்கப் படுதுன்னீங்க.

யார் சொன்னா ஏத்துக்கப்படுது? வேற யார் சொன் னாலுமா?"

முரளி மீண்டும் சிந்தித்தான். பிறகு, "அப்படின்னு சொல்லிட முடியாது. என் மேனேஜரோட நெருக்கமா ரெண்டு மூணு பேர் இருக்காங்க. அவங்க சொன்னாதான்."

"அவங்களுக்கும் ரெண்டு வருஷ அனுபவம் தானா?"

"சே, சே! அவங்க ரொம்ப நாளா வேலை செஞ்ச எக்ஸ்பர்ட்ஸ். அவங்களும் நல்ல திறமைசாலிங்கதான். ஆனா..."

"ஆனா, ஏன் அவங்க யோசனை மட்டும் எடுபடுதுன்னு கேக்கறீங்க, இல்லையா? சொல்றது என்னங்கறது மட்டுமில்லாம, எப்படி சொல்றதுங்கறதும் மிக முக்கியம். அவங்களுக்கு நெருக்கமிருக்கறதால, எப்படி சொன்னா ஏத்துக்குவார்னு தெரிஞ்சிருக் கலாம். மேலும், அனுபவம் நம்பிக்கையை வளர்க்குது. உங்க மேனேஜர் அவங்களோட ரொம்ப நாளா பழகி, அவங்க track record பாத்து, அவங்க சொன்னா சரியா இருக்கும்னு இன்னும் சுலபமா நம்பக் கூடும். அது உங்களுக்கு அநியாயமா படுது, அது எனக்கு புரியுது."

அருண் நிறுத்தி விட்டு முரளியைக் கூர்ந்து பார்த்தார். அவன் முகம் சற்று தெளிவடைய ஆரம்பித்தது! அதனால் மகிழ்வுடன் தொடர்ந்தார்.

"உங்க யோசனைகள் ஏத்துக்கப் படணும்னா நீங்க உங்க மேனேஜர் உங்க மேல வச்சிருக்கற நம்பிக்கையை வளர்த்துக்கணும். அதுக்கு கொஞ்ச நாள் பொறுமையா உங்க track record-ஐ வளர்த்துக்கணும். அது வரைக்கும் சும்மா இருந்துடா தீங்க. பலனையே எதிர்பாத்துகிட்டிருக்காம உங்க கடமையை உற்சாகத்தோட செய்யுங்க, பலன் தானாவரும். அந்த ரெண்டு மூணு பேரோட நெருங்கி உங்க யோசனைகளை அவங்களோட பேசிப் பாருங்க. அவை நல்ல யோசனைகளா இருந்தா நிச்சயமா உங்களுக்கு போகப் போக பேர் கிடைக்கும். மேலும், எந்த யோசனையும் ஆரம்பத் துலயே முழுசும் சரியா இருக்கறதில்லை. அந்த மாதிரி விவாதிக்கறதுனால, உங்க யோசனைகள் மெருகேற்றப் பட்டு இன்னும் பலமாகும்."

சற்று நிறுத்திய அருண், முரளியின் மனத்திலோடிய எண்ணத்தைப் புரிந்து கொண்டார்.

"அப்படி பேசறதுனால, உங்க யோசனைகளை மத்தவங்க திருடிடுவாங்கன்னு கவலைப்படாதீங்க. பொதுவா குழுவில பேசறச்சே அப்படி நடக்காது. நீங்க எழுப்பிய யோசனைன்னு பலருக்கும் தெரியும். நாளாக நாளாக உங்க பேர் வளரும். அது தவிர ரானல்ட் ரேகன் சொன்னது போல்:

'ஒருவன் தன் கருத்துக்களும் குறிக்கோள்களும் யாரால் சாதிக்கப் பட்டு, அதனால் யாருக்கு பெயர் கிடைக்கிறதென்று கவலைப் பட்டுக் கொண்டிரா விட்டால், அவன் எந்த அளவுக்கு உயர முடியும், என்னென்ன சாதிக்க முடியும் என்பதற்கு எல்லையே இல்லை'

அதை கவனத்துல வச்சு கிட்டு செயல் படுங்க! உங்களுக்கும் அந்த சாதனையாலேயே திருப்தி கிடைக்கும். இல்லாட்டா, உங்க மனதுக்குள்ளேயே பூட்டி வச்சிட்டு புழுங்கிகிட்டிருப்பீங்க, யாருக்கும் பலன் இல்லை! அது தவிர உங்க மேனேஜர் கிட்ட கூட உங்க யோசனைகளை எப்படித் தெரிவிச்சா பயனுள்ளதா இருக்கும்னு நல்ல விதமா பேசி நீங்க சொன்ன உதாரணங்களைக் காட்டிப் பேசி கத்துக்கலாம்."

முரளியின் முகம் மலர்ந்தது. "ரொம்ப நன்றி சார். இத்தனை தெளிவா எனக்கு யாரும் இது வரை புத்தி சொல்லவே இல்லை. நான் சொன்னதுக்கே ஆமாம் சாமி போட்டாங்க. நீங்க சொல்றது சரி. அது படியே செய்யறேன்" என்று கூறி நகர்ந்தான்.

ஒரு இளம் சாதனையாளனை நல்வழி திருப்பிய திருப்தியுடன், அருண் தன் ஸ்டார் பக்ஸ் கப்புச் சினோவை உறிஞ்ச ஆரம்பித்தார்!

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com