ஊடகத்தைப் புரிந்து கொள்வது...
சென்ற மாதம் இரண்டு ஆங்கிலப் புத்தகங்களைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது - ஒன்று Penguin நிறுவனத்தினரால் பிரசுரிக்கப்பட்டுள்ள திரு. ரங்கா ராவ் அவர்கள் மொழிபெயர்த்த தெலுங்குச் சிறுகதைத் தொகுப்பு. அருமையான அந்தச் சிறுகதைகளைப் பற்றி பின்னர் எழுதலாமென்றிருக்கிறேன். பார்க்கலாம். மற்றொன்று திரு. தியோடோர் பாஸ்கரன் எழுதிய "The Eye of the Serpent".

திரைப்படம் - இந்த முக்கியமான ஒரு ஊடகத்தை இந்தியாவில் சரியாகப் பயன்படுத்தவில்லை என்பது பலரது கருத்தாக இருக்கிறது. எனக்கும் இதே எண்ணம்தான். அதே சமயம், பல "கலைப்படங்கள்" என்னால் முற்றிலும் புரிந்து கொள்ள முடியாதவையாய் இருக்கின்றன. புரிந்து, மிகவும் ரசித்த நல்ல படங்களை ஏன் அவை அப்படிப்பட்ட தாக்கத்தை உண்டாக்கின என்பது பிடிபடவில்லை. நல்ல சினிமா என்றால் என்ன? விமர்சகர்கள் எப்படி திரைப்படங்களை அணுகுகிறார்கள்? இதைப்பற்றி ஏன் இந்தியாவில் புத்தகங்கள் இல்லை?

எனது நண்பர் எனக்கு Akira Kurosawaவின் படைப்புகள் பற்றிய புத்தகம் அன்பளிப்பாகக் கொடுத்து இருந்தார். அதைப் படித்த பின் இவை பற்றி எனக்குக் கொஞ்சம் புரிந்தது அதைபோன்று விரிவான திரைப்படப் படைப்பியல் பற்றியும், தமிழ்த் திரையுலக வரலாறு பற்றியும் யாராவது எழுதி இருக்கிறார்களா என்று விசாரிக்க வேண்டும் என்று எண்ணி அதைப்பற்றி ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டேன். தற்செயலாக ஐதராபாதில் ஒரு புத்தகக் கடையில் தியோடர் பாஸ்கரனின் புத்தகம் கிடைத்தது. மேலும் இந்தத் துறையைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அருமையாக எழுதப் பட்டுள்ளது

தியோடர் பாஸ்கரன் எழுதிய அந்த நூலை வெளியிட்டிருப்பவர்கள் East West books, சென்னை.

தமிழில் சில வருடங்களுக்கு முன் வந்து நின்று போன 'சலனம்', தற்பொழுது 'நிழல்' என்ற திரைப்படக் கலை பற்றிய மாத இதழ் இருக்கின்றது என்பதும் தெரிய வந்தது. இந்த இதழ்கள் பற்றியும், திரு. பாஸ்கரன் அவர்கள் திரைப்படங்கள் பற்றி எழுதிய கட்டுரைகளையும் தென்றலில் வெளியிடலாமென்றிருக்கிறோம்.

யோசித்துப் பார்த்தால், இந்தியாவிலும் குறிப்பாகத் தமிழகத்திலும் திரைப்படங்கள் மற்றும் அத்துறைக் கலைஞர்களின் தாக்கம் மிகப் பெரிது. இந்த ஊடகத்தைப் புரிந்து கொள்வதும், அதன் வரலாற்றை ஆவணப் படுத்ததுலும் மிகவும் அவசியம். என்று தோன்றுகிறது.

******


ஏற்கனவே பலமுறை சொல்லப்பட்ட குறை - மன்னிப்பு வேண்டுவதைத் தவிர வேறு ஒன்றும் சொல்வதிற்கில்லை. எழுத்து பிழைகள் பற்றித்தான். தவிர்க்க மேலும் முனைவோம்.

மீண்டும் சந்திப்போம்,
பி.அசோகன்
பிப்ரவரி - 2003

© TamilOnline.com