வகுப்புவாரி பிரதி நிதித்துவ உரிமை
நீதிக்கட்சியின் ஆட்சியின் போது அமைச்சர் முத்தையா முதலியார் தான் வகுப்புவாரி பிரதிநிதித்துவ உரிமைக்கான அரசாணையைப் பிறப்பித்தார். இதை எதிர்த்தவர்கள் நீதிமன்றம் சென்றனர். அரசியல் சாசனத்தின் அடிப்படையில் சமத்துவம், சமஉரிமையைச் சுட்டிக்காட்டி முதலில் உயர்நீதிமன்றமும் பின்னர் இதே காரணத்தைக் காட்டி உச்சநீதிமன்றமும் இந்த அரசாணையைத் தடை செய்தன. இதை எதிர்த்து தமிழ்நாட்டில் மிகப்பெரும் போராட்டம் நடத்தப்பட்டது. இதன் பயனாக முதல்முறையாக அரசியல் சாசனம் திருத்தப்பட்டு வகுப்புவாரி பிரதி நிதித்துவ உரிமை மீண்டும் நடைமுறைக்கு வந்தது.

சென்னையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், க. அன்பழகன், எதிர்க்கட்சித்தலைவர், திமுக மூத்த தலைவர்,

******


சட்டசபைக்கு வந்தால் ஏதேதோ ஆகும். அது யாருக்கும் நல்லதில்லை என்று நீங்கள் சொல்லுகிற காரணம் உங்களுக்கே ஏற்புடைய தாக இருக்கிறதா? இந்தச் சாக்குப் போக்கு களைக் கைவிட்டு, கேள்விகள் கேட்பதற்கென்றே இருக்கிற சட்டமன்றத்துக்கு இனியாவது போய் உங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற முயலுங்கள்!

எதிர்க்கட்சிக்குச் சொல்லும் உரிமை... ஆளுங்கட்சிக்குச் செய்ய வேண்டிய கடமை. இதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை.'போனால் முதலமைச்சராக மட்டும்தான் சட்டமன்றத்துக் குள் போவேன்' என்ற பிடிவாதம் நல்லதல்ல.

கலைஞருக்கு எழுதிய கடிதத்தில்... புலவர் புலமைப்பித்தன், அதிமுகவின் அவைத் தலைவர்,

******


உலக அளவில் தமிழர்கள் குடியேறி வாழும் நிலப்பகுதி விரிவடைந்துள்ளது. இந்தியாவில் தமிழ் ஒரு மாநில மொழிதான். அரசியலமைப் பில் அரசாங்க நடைமுறையில் அதற்கு இருக்கும் இடம்அதுதான். அதன் பழமைக்கும் செம்மொழித் தகுதிக்கும் பாரம்பரியத்துக்கும் ஏற்ற ஒரு அங்கீகாரம் கிடைக்கவில்லை. தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும்.

உலகம் முழுவதும் தங்களது மொழியையும் பண்பாட்டையும் பயன்படுத்த, பாதுகாக்க, தகவல் தொழில்நுட்பத்திற்குப் பெரிய அளவில் பயன்படுகிற, கணினி மக்கள் கருவியாக வேண்டுமானால் அதை நாம் தமிழ்மொழி வழியாகப் பயன்படுத்த வேண்டும்.

வா.செ. குழந்தைசாமி கல்வியாளர் தமிழ் இணையப் பல்கலைக்கழகத் தலைவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில்...

******


வெற்றி நமதே என்பது எம்ஜிஆரின் தாரக மந்திரம். வெற்றியில் மக்களும் பங்கேற்க வேண்டுமென்பதற்காக அவர் அவ்வாறு கூறினார். முதன்முதலில் 1977 இல் இங்கு எம்ஜிஆர் வேட்பாளரை நிறுத்தினார். ஆனால் சி.பா. ஆதித்தனார் போட்டியிட்டதால் எம்ஜிஆர் தான் நிறுத்திய வேட்பாளரை வாபஸ் பெற்றார்.

சாத்தான்குளம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில், ஜெ. ஜெயலலிதா தமிழக முதல்வர்

******


நாடு சுதந்திரமடைந்த போது ஒரு இளம் பெண்ணாக இருந்த நான் சுதந்திர இந்தியாவில், ஜனநாயகம், பெண்கள் முன்னேற்றம் ஆகியவை பற்றிய கனவுகளோடு இருந்தேன். கடந்த 50 ஆண்டுகளில் ஜனநாயகம் எவ்வாறு நடத்தப்பட்டது என்பதைப் பார்த்து மனம் நொந்து போய்விட்டேன். இன்று பெண் தலைவர்கள் தலையெடுத்திருப்பதும் ஜன நாயகத்துக்காகக் குரல் கொடுப்பதும் எனக்கு நம்பிக்கை ஊட்டுகிறது.

ராஜம் கிருஷ்ணன், மூத்த எழுத்தாளர் சென்னையில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில்...

******


நான் தமிழன்; அதிலும் மதுரைப் பக்கத்துத் தமிழன் என்பதால் அந்தத் தமிழைத்தான் என்னால் அதிகம் பயன்படுத்திப் படம் எடுக்க முடியும். அது நான் வாழ்ந்த சூழல்.. ஒரு கலைஞன் தனக்குள் காட்சிகளும், சப்தங்களுமாகப் பதிந்து போன வாழ்க்கையைத் தான் தனது படைப்புகளில் பதிவு பண்ண முடியும். இங்கிருந்து கொண்டு நான் வாஷிங்டன்னைப் பற்றி ஒன்றும் எடுக்க முடியாது.

கி. ராஜநாராயணன் கரிசல் பூமியைப் பற்றி எழுதுகிறார் என்றால் அவர் சார்ந்த கிராமம். அந்த மனிதர்கள், அந்த மொழியில் தான் தோண்டித் துருவி எழுதுகிறார். இன்னும் வாழ்நாள் முழுக்க அவர் எழுதுகிற அளவுக்கு வளத்தைக் கொடுத்திருக்கிறது அந்த மண். அவரைப் போய் ஏன் கோவை மாவட்டத்துக் கொங்குத் தமிழில் எழுதவில்லை என்று கேட்க முடியாது.

அது மாதிரி எனக்குத் தெரியாத ஒன்றை நான் படைக்க முடியாது. நான் சார்ந்த மண், நான் சார்ந்த மொழி, பழக்கவழக்கங்கள், தேனி, உசிலம்பட்டிக் காடுகளில் இருக்கிற மனிதர்கள், அந்த வாழ்க்கை தான் நான் அனுபவித்த வாழ்க்கை. மொழியில் சற்று மாறுபட்டிருந்தாலும், அது எல்லோருக்கும் பொதுவான வாழ்க்கைதானே... அதைத் தான் நான் படைக்கிறேன்.

பாரதிராஜா திரைப்பட இயக்குநர், குமுதம் தீராநதிக்கு (பிப் 2003) வழங்கிய நேர்காணலில்...

© TamilOnline.com