சாத்தான் குளம் : ஜனநாயகம்
சாத்தான்குளம் இடைத்தேர்தலில் அதிமுகவிற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே போட்டி நடந்தாலும், அனைத்து அரசியல் கட்சிகளின் கவனமும் அங்குதான் குவிந்துள்ளது.

அதிமுக ஆட்சியில் இருப்பதால் தன் முழு அதிகாரத்தையும் பயன்படுத்தித் தேர்தலில் எப்படியும் வெற்றிபெற்றுவிட வேண்டுமென்பதில் குறியாக உள்ளது.

முதல்வர் ஜெயலலிதா உள்பட அதிமுக அமைச்சர் கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் எல்லோருமே சாத்தான் குளத்தில் முகாமிட்டு தேர்தல் பிரச்சாரம் செய்துவருகிறார்கள். தேர்தல் விதிமுறைகளை மீறி அதிமுக செயல்படுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

காங்கிரசுக்கும் அதிமுகவுக்கும் இடையிலான கைகலப்பும் மோதலும் சில இடங்களில் தென் படுகிறது. ஜனநாயக மரபுப்படி தேர்தல் நடக்குமா என்ற சந்தேகம் பலமாகவே உள்ளது.

******


திமுக தலைவர் கருணாநிதிக்கும் அதிமுக தலைவர் ஜெயலலிதாவுக்கும் இடையே கேள்வி-பதில் விவாதம் சூடாக நடைபெற்றுவருகிறது.இருவரும் மாறி மாறி சொல்லால் தாக்குவதில் ஒருவருக் கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதைத் தினமும் நிரூபித்து வருகிறார்கள். இதனால் நாட்டுக்கோ, நாட்டுமக்களுக்கோ ஏதாவது நன்மை உண்டா என்றால், எதுவுமே இல்லை.

விரைவில் இவர்களது கேள்வி-பதில் விவாதங் களைத் தொகுத்து புத்தகம் போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

******


பொடா சட்டத்தின் கீழ் வைகோ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு மாதக் கணக்காகி விட்டது. ஆனாலும் நீதிமன்ற விசாரணை விரைவுபடுத்தப்பட்டு வைகோ வெளியில் வருவதாகத் தெரியவில்லை.

நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் வைகோ விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கிளப்பு உள்ளன. தமிழக அரசு பொடாவை தவறாகப் பயன்படுத்தி உள்ளது. அதில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டுமென்று விவாதம் நடைபெற்றது.

ஆனால், மத்திய அரசு பொடாவில் மாற்றங்கள் ஏதும் தேவையில்லை என உறுதியாகக் கூறி வருகிறது.

******


தமிழ்நாடு காமராஜர் காங்கிரஸ் தலைவர் குமாரதாசுக்குக் கொலைமிரட்டல் விடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு திமுக எம்எல்ஏ பரிதி இளம்வழுதி சிறையில் அடைக்கப்பட்டார். இதை பாஜக தவிர பெரும்பாலான எதிர்க்கட்சிகள் கண்டித்தன. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு அதிமுகவுக்கு எதிராக பெரும் கண்டனக்கூட்டம் நடத்தினர்.

தற்போது பரிதி சிறையில் இருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனாலும் சட்டசபைக்குள் நடந்த விவாதம் சபைக்குள் தீர்க்கப்படாமல் வெளியில் போலீசார் கொண்டு சிறைப்பிடிக்கப் பட்டமை தமிழக வரலாற்றில் புதிது. இது அனைவருக்குமான எச்சரிக்கை என்று எதிர்க் கட்சிகள் கூறுகின்றனர்.

******


நீலகிரி மலையில் உற்பத்தியாகி கேரளா நோக்கிப் பாய்ந்து மீண்டும் கோவை ஈரோடு மாவட்டங்களில் பாயும் பவானி ஆற்றை கேரளாவோடு முடக்க முயற்சி நடக்கிறது. இதற்காக பாலக்காடு மாவட்டம் முக்காலியில் பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பனை கட்டிவருகிறது.

இதைத் தடுத்து நிறுத்துமாறு தமிழக அரசு நடுவர் மன்றத்தில் முறையிட்டுள்ளது. தமிழக விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் தடுப்பணைக்குத் தமது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

தடுப்பணையை பார்க்கச் சென்ற தமிழக விவசாயிகள், அரசியல் கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மீது கேரளா போலீசார் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தி உள்ளனர். இதுவரை இந்தத் தாக்குதல் பற்றி கேரள அரசு எந்த பதிலும் கூறவில்லை.

தமிழக அரசு கர்நாடகம், கேரளம் இருமாநில அரசுகளுடனும் தண்ணீருக்காக முரண்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இருமாநில அரசுகளும் தமிழகத்துக்கு எதிராக செயல்பட துணிந்து விட்டனர். இப்போக்கு ஆரோக்கியமானதல்ல.

தமிழக விவசாயிகளும், விவசாய சங்கங்களும் கேரளாவின் இச்செயலை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதே போல் தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளது.

துரைமடன்

© TamilOnline.com