நான் மனித ஜீவி
மார்ச் 8 உலகளாவிய பெண்கள் தினம். இந்தத் தினம் பெண்களிடையே விழிப்புணர்வும் தன்னிலை பற்றிய உணர்வும் பிரக்ஞையும் கொள்ளக்கூடிய எழுச்சி மிகுநாளாக பெண்களால் கொண்டாடப் படுகிறது.

சமுதாயத்தில் பெண் வகிக்கும் பாத்திரம் 'பெண்' என்ற அடையாளத்தால் ஏற்படும் பாராபட்சம், அநீதி, வன்முறை, ஒடுக்குமுறை பற்றியெல்லாம் விரிவாக சிந்திக்கவும் செயல்படவும் தொடர்ந்து பெண்கள் முயற்சி செய்து வருகிறார்கள். இந்த முயற்சிகள் நாடு, இனம், மொழி, தேசியம், மதம்... எல்லாம் கடந்து 'பெண்' என்ற அடையாளத் தனித்துவத்தால் அவர்களிடையே ஒருங்கிணைவும் ஆற்றலும் பெருகி புதிய சக்தியாக வெளிப்படுகின்றது.

மானிடவிடுதலையில் பெண்விடுதலைச் சாத்தியப் பாட்டை உத்தரவாதப்படுத்தும் செயற்திட்டங்களை வகுத்து செயற்படுவது தவிர்க்க முடியாததாயிற்று. பாலின அடையாளத்தை அடிப்படையாகக் கொண்டு தடைகளை ஆராய்ந்து செயல்படக்கூடிய வழிமுறைகளை உருவாக்கி புதிய பண்பாடு வளரக்கூடிய சூழல்கள் உருவாகிவிட்டது.

உலகப் பெண்களிடையே வறுமை, வன்முறையை எதிர்க்கும் பேரணி வளர்ச்சி பெற்று வருகிறது. அக்டோபர் 17, 2000 இல் நியூயார்க் நகரில் ஐ.நா. சபை கட்டிடம் அருகாமையில் பெண்கள் கூடியதை உதாரணமாகக் கூறலாம். இது போல் பல்வேறு போராட்டங்களில் பெண்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

குறிப்பாக போர்மேகம் சூழ்ந்துவிட்டால் அங்கே அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். இதுவரையான உலகவரலாற்று அனுபவங்கள் கற்றுக் கொடுத்திருப்பது இதைத்தான். அமெரிக்கா ஈராக் மீது எப்படியும் யுத்தம் மேற்கொள்ளும் என்ற நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் யுத்த எதிர்ப்பு நடவடிக்கையில் அதிகமாகப் பெண்கள் தான் ஈடுபட்டு வருகிறார்கள்.

எந்தவொரு யுத்தமும் பெண்கள் மீது அதிக சுமைகளைச் சுமத்திவிடுகிறது. கலவரம், வன்முறை என்று வந்துவிட்டால் கூட பெண்கள்தான் அதிகம் தாக்கப்படுகிறார்கள். பெண்களுக்கு எதிரான வன்முறை கட்டவிழ்த்துவிடப்படுவது கலவரம், வன்முறை இனப்படுகொலையின் முக்கியமான ஆயுதமாக தாக்குதலாக மாறிவிடுகிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்ததன் பின்னர் இந்தியாவில் ஏற்பட்ட மிக மோசமான கொடூரமான வன்முறைத் தாண்டவம் 'குஜராத்'. அங்கு நடந்த வன்முறைக் கலவரத்தில் அதிகம் பாதிக்கப் பட்டவர்கள் பெண்கள். திட்டமிட்டு குறி வைத்து பெண்கள் தாக்கப்பட்டனர். இஸ்லாமிய பெண்களை தேடித் தேடி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கினர். அடித்து உதைத்தனர். இவை குறித்து மனித உரிமை அமைப்புகள் உண்மை அறியும் குழுக்கள் மிக ஆதாரபூர்வமாக வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.

இஸ்லாமியரை மணந்து கொண்ட ‘கீதாபெண்’ என்பவரைப் பிடித்துக் கணவனை விட்டுவிட்டு வருமாறு கூட்டம் மிரட்டியுள்ளது. அவள் மறுத்ததால் ஆடைகள் பிய்த்தெறியப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு வெட்டிக் கொல்லப்பட்டாள். இஸ்லாமியரைத் திருமணம் செய்து கொண்டு அம்மக்களிடையே சமூக பணியாற்றுவதால் ‘மீனா மாலிக்’ என்ற பெண் கொலை மிரட்டலைச் சந்தித்தால். வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்படும் பெண், அவள் மேல் தவறில்லை என்று தெரிந்தாலும் கற்பிழந்தவளாகக் கருதப் படுவதால் மன உளைச்சலுக்கு ஆளாகிறாள். தற்கொலை முயற்சியில் இறங்குகிறாள்.

இவ்வாறு குஜராத் இனப்படுகொலை குறித்து பெண்களுக்கு எதிரான வன்முறை எதிர்ப்பு - தற்காலிக குழு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுபோன்ற எண்ணில்லாத பாதிப்புகளை, வன் முறைகளை பெண்கள் எதிர்கொண்டிருக்கிறார்கள். பெண்களையும் வகுப்புவாதிகளாக மாற்றும் நடவடிக்கைகள் அரங்கேறுகின்றன. பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் எண்ணிக்கை நீண்டது.

ஆக வன்முறையோ கலவரமோ பெண் என்ற பாலின அடையாளத்தை இலக்காகக் கொண்டு செயற் படுகிறது. இதனை குஜராத் கலவரம் மேலும் மெய்ப்பிக்கிறது.

''வரலாற்றுபூர்வமாகப் பார்த்தால் பாசிச இயக்கங் கள் ஒரு தேசத்தின் விரக்தியாலும் தெளிவின்மை யாலும் வளர்ந்து வந்திருக்கின்றன. நமது நாட்டின் விடுதலைப் போராட்டம் கிளப்பிவிட்ட பல அற்புதக் கனாக்கள் பிற்பாடு சிதறடிக்கப்பட்ட போதுதான் இங்கேயும் பாசிசம் உருவாகத் துவங்கியது'' என்று எழுத்தாளர் அருந்ததி ராய் குறிப்பிடுவதும் கவனிக்கத்தக்கது.

சுதந்திரமடைந்த இந்தியாவில் பெண்கள் வாழ்க்கை முன்னேற்றம் அடைந்துள்ளது. ஆனால் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெருமளவு அதிகரித்து வருவதையும் மறந்துவிடக்கூடாது. இவ்வன்முறைகள் ஆண் மேலாதிக்க உணர்வுகளின் வெளிப்பாடாகவே உள்ளது. இவற்றால் உடல், உள்ளம், உடைமை, உரிமை என்பவற்றில் பாதிப்புகள் அல்லது இழப்புகள் ஏற்படும் பட்சத்தில் அது பெண்களுக்கு எதிரான வன்முறைகளாகக் கொள்ளப்படுகிறது.

படிக்காத பண பலமற்ற பெண்கள், கிராமியப் பெண்கள், வயலில் கூலி வேலைசெய்யும் பெண்கள், தொழிற்சாலைகளில் வேலை மற்றும் வீட்டு வேலை செய்யும் பெண்கள் அன்றாடம் இவ்வன்முறைகளுக்கு ஆளாகின்றனர். இவ் வன்முறைகளுக்கு பெண்கள் மத்தியில் கல்வியறிவு, வறுமை, இயலாமை என்பன காரணமாக உள்ளன.

வீட்டில், வீதியில் எங்கு பார்த்தாலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிமிடத்துக்கு நிமிடம் நடந்து கொண்டிருக்கிறது. அன்றாட தினசரி நாளேடுகளில் வரும் செய்திகளை கூர்ந்து பார்த்தால் இது நன்கு தெரியும். ஆனாலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் 99% வெளியில் வராதவை.

ஆகவே சமுதாயத்தின் பெண்கள் பாத்திரம் பெருமிதமாகப் பேசினாலும் அவற்றையும் மீறி தலைகீழாகப் புரட்டும் சிறுமைகள், தீங்குகள், வன்முறைகள் தான் அதிகம். இதன் உச்ச வெளிப்பாடகவே கலவரம் வன்முறைகளில் பெண்கள் இலக்காக்கப்படுகின்றனர்.

இனப்படுகொலை என்று வந்துவிட்டால் பெண்கள் தனியே வகைப்படுத்தி தாக்கப்படுகின்றனர். பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் தாக்குதல்கள் இலங்கையில் நடை பெற்ற இனப்பேராட்டத்திலும் அதிகம் இடம் பெற்றதை நினைவு கூறலாம்.

ஆகவே தான் பெண்களுக்கு எதிரான வன்முறை எதிர்ப்பு நடவடிக்கையில் பெண்கள் அணிதிரண்டு செயல்படுவது காலத்தின் கட்டாயமாகிறது.

பெண்விடுதலை என்பது மானிடவிடுதலையின் தாட்பரியத்தையும் கொண்டது. சமுதாயத்தின் அரைப்பகுதியினரின் துன்பங்கள் துயரங்கள் வேதனைகளைப் பொருட்படுத்தாமல் மனிதநேயம், மனிதவிடுதலை பற்றி பேசுவதில் அர்த்தமில்லை.

''நான் தகுதியும் சுயமரியாதையும் எனக்குரிய பெருமையையும் மதிப்பையும் கொண்ட ஒரு மனிதஜீவி. அப்படியெனில் என் மீதும் என் போன்றவர்கள் மீதும் ஆண்கள் தொடர்ச்சியாக ஓநாய்கள் போல சீழ்க்கையடிப்பதும், ஏளனமாகச் சிரிப்பதும் இகழ்ச்சியுடன் பேசுவதும் ஏன்?

மிருகங்களுக்கு மட்டுமே செய்யக்கூடிய பாணி யிலான தொல்லைகளை அவர்கள் தொடர்ந்தும் எமக்குத் தருவது ஏன்?' என்ற ஜக்குலின் அன் கரின் கேட்பது இந்த சமுதாயத்தை நோக்கித்தான்.

துரைமடன்

© TamilOnline.com