நீதி தேவன் கரங்களில் இட இதுக்கீடு தீர்வு!
புத்தாண்டின் முதல் சர்ப்ரைஸ் உச்சநீதி மன்றத்தில் இருந்து வந்துள்ளது. இட ஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றம் முக்கியக் கருத்து வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் அரசுப் பணிகளிலும், கல்வி நிலையங்களிலும் ஆதி திராவிடர்கள், பழங்குடியினர், பிற்படுத்தப் பட்டோ ர், மிகவும் பிற்படுத்தப்பட்டோ ர் ஆகிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீட்டை எம். ஜி. ஆர் அரசு 68 சதவீதமாக உயர்த்தியது. மீண்டும் இதனை 69 சதவீதமாகக் கருணாநிதி அரசு (1989- 91) உயர்த்தியது. இதற்கான சட்டம் அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது பட்டியலில் சேர்க்கப்பட்டது.

ஒன்பதாவது பட்டியலில் சேர்க்கப்பட்ட ஒரு சட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியாது. இவ்வாறு ஒன்பதாவது பட்டியலில் 284 சட்டங்கள் உள்ளன.

இவ்வாறு தமிழக அரசு கொண்டுவந்த 69% சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 9 ஆவது பட்டியலில் சேர்க்கப்பட்ட ஒரு சட்டத்தை விசாரிக்க நீதிமன்றத்துக்கு என்ன அதிகாரம் என்று தமிழக அரசு வாதிட்டது. இதில் 1992 இல் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது இட ஒதுக்கீடு 50 சதவீதத்துக்கு மேலே இருக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தமிழக அரசு மேல் முறையீடு செய்ததில் 69% இட ஒதுக்கீடு அமல்படுத்துவதால் பொதுப் பிரிவில் பாதிக்கப்படும் எண்ணிக்கைக்கு ஏற்ப இடங்களை அதிகரித்துக் கொள்ள ஒவ்வொரு ஆண்டும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு அனுமதி வழங்கி வந்தது. இருந்தபோதும் தற்போதும் இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் 9 ஆவது அட்டவணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தில்லியைச் சேர்ந்த ஒரு அமைப்பு மற்றொரு வழக்கு தொடர்ந்தது. 9 ஆவது அட்டவணையில் உள்ள சட்டங்களும் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பது அந்த வழக்கு. இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்று தலைமை நீதிபதி ஒய். கே. சபர்வால் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந் நிலையில் ஜனவரி 11 அன்று 9 நீதிபதிகள் தங்கள் தீர்ப்பை வழங்கினர். அதில் 9 ஆவது பட்டியலில் சேர்க்கப்பட்ட சட்டங்களும் உச்சநீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டதுதான் என்று திட்டவட்டமாகத் தீர்ப்பளித்துள்ளனர். அதாவது 1973 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்ட அனைத்துச் சட்டங்களையும் விசாரணைக்கு உட்படுத்தும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு உள்ளது. இதற்காக மூன்று நீதிபதிகள் கொண்ட தனி அமர்வு நீதிமன்றம் அமைக்கப்படுகிறது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இதன்படி, தமிழக அரசின் 69% இட ஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டுள்ளதால் இந்த சட்டத்தையும் உச்சநீதி மன்றம் பரிசீலிக்க உள்ளது. மேலும், ஏற்கனவே இட ஒதுக்கீடு 50% க்கு மேல் போகக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த சர்ப்ரைஸ் தீர்ப்பால், ஏற்கனவே இட ஒதுக்கீட்டால் முன்னேற்றம் கண்டுள்ள பின் தங்கிய, மிகவும் பின்தங்கிய வகுப்பினர் துடிதுடித்துப் போயுள்ளனர். அதேசமயம் 50% க்கும் அதிகமான இட ஒதுக்கீட்டால் பாதிக்கப் பட்டதாக உணரும் பிற வகுப்பினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மொத்தத்தில் நீதி தேவன் கரங்களில் இட ஒதுக்கீடு தீர்வு!

தொகுப்பு: அப்பணசாமி

© TamilOnline.com