பருப்பு உசிலி உப்புமா
இந்த வகை உப்புமாவை அரிசி உப்புமா செய்வது போல் அகன்றபாத்திரத்தில் செய்ய வேண்டும். ஆனால் பருப்பு உசிலி உப்புமாவை தயாரிக்கும் போது அடுப்பை நிதானமாக எரியவிட்டு செய்தால்தான் பதமாக வரும்...

தேவையான பொருட்கள்

அரிசி - 2 கிண்ணம்
துவரம் பருப்பு - 1 கிண்ணம்
மிளகாய் வற்றல் - 5
கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - தேவையான அளவு
எண்ணெய் - 100 கிராம்
பெருங்காயப் பவுடர் - ஒரு சிட்டிகை

செய்முறை

முதலில் அரிசி, துவரம் பருப்பு மற்றும் மிளகாய் வற்றல் ஆகியவற்றை மிக்ஸியில் ரவை போல் பொடித்துக் கொள்ளவும்.

பிறகு தோசைமாவுக்குக் கரைப்பது போல் கொஞ்சம் கெட்டியாக தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ள வேண்டும்.

அடிகனமான பாத்திரத்தை எடுத்து அதில் எண்ணெயை ஊற்றி அடுப்பை பற்ற வைக்க வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்த பிறகு அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயத் தூள் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்

கடுகு வெடித்து பருப்பு பொன்நிறமாக வரும் போது தயராக கரைத்து வைத்துள்ள மாவை அதில் ஊற்றி அடிப்பிடித்துக் கொள்ளாமல் நன்றாக கிளறவும்.

அடுப்பை சிறியதாக எரியவிட்டு கிளறிக் கொண்டு வரவும். தேவையான அளவு உப்பை 2 நிமிடம் கழித்து போட்டு மீண்டும் கைவிடாமல் கிளற வேண்டும்.

கிட்டத்தட்ட 10, 15 நிமிடங்களில் நன்றாக வெந்த பருப்பு உசிலி உப்புமா மணக்க மணக்க தயாராகிவிடும்.

இந்த வகை உப்புமா செய்வதற்கு மட்டும் கொஞ்சம் அதிக எண்ணெய் ஊற்றினால் ருசி அமோகமாக இருக்கும்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com