விண்ணில் மறைந்த வீரர்கள்
புரந்தார் கண் நீர் மல்கச் சாகிற்பின், சாக்காடு
இரந்து கோள் தக்கது உடைத்து

திருக்குறள் - 780

How welcome is the death which brings
Tears to a grateful people.

ThirukkuRaL - 780

ஃபெப்ரவரி 1, 2003. மனித குலத்தின் சாதனைகளில் புதிய அத்தியாயம் படைத்த ஏழு விண்வெளித் தீரர்கள் கொலம்பியா விண்கலத்தில் பூமிக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்கள். இறங்குவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்னால், டெக்சாஸ் மாநிலத்தின் வானத்தில் இருநூறாயிரம் அடி உயரத்தில் விண்கலம் வெடித்துச் சிதறியது. காத்திருந்த மக்களின் கண்கள் கலங்க விண்கலத்தின் சிதைவுகள் நீல வானைக் கீறிப் படம் வரைந்து கொண்டிருந்தன. மீண்டும் அமெரிக்காவில் ஒரு பேரிழப்பு. உலகமே திகைத்து அமெரிக்காவின் கண்ணீர் அஞ்சலியில் மீண்டும் ஒருமுறை கலந்து கொண்டது. (அமெரிக்கக் குடியரசுத் தலைவர் அஞ்சலியைப் பெட்டிச் செய்தியில் காண்க.)

மனிதர் யாரும் சரி நிகர் சமானம்

கொலம்பியா விண்வெளித் தீரர் குழுவின் கதம்பத் தன்மை அமெரிக்கக் கூட்டுக் குடும்பத்துக்குச் சிறந்த எடுத்துக் காட்டு. விண்ணிலே அமரர்களான தீரர்களில் அறுவர் அமெரிக்கர்கள், ஒருவர் இஸ்ரேலி. ஐவர் ஆண்கள், இருவர் பெண்கள். ஐவர் வெள்ளையர்கள், ஒருவர் கருப்பர். ஒருவர் இந்தியர். ஐவர் அமெரிக்கா வில் பிறந்தவர்கள் - ரிக் ஹஸ்பண்ட், வில்லியம் மெக்கூல், மருத்துவர் லாரல் கிளார்க், டேவிட் பிரௌன், மைக்கேல் ஆண்டர்சன். ஒருவர் இஸ்ரேலில் பிறந்தவர்- இலான் ரமோன். இந்தியாவில் பிறந்தவர் முனைவர். கல்பனா சௌலா. சமயச் சுதந்திரத்தைக் கொண்டாடும் அமெரிக்கா வின் தலை சிறந்த விண்வெளித் தீரர்கள் எழுவரும் வெவ்வேறு சமயத்தைச் சார்ந்தவர்கள்.

திறமை கொண்ட தீமையற்ற தொழில் புரிந்து யாவரும்
தேர்ந்த கல்வி ஞானம் எய்தி வாழ்வோமிந்த நாட்டிலே!
வாழி கல்வி செல்வமெய்தி மனமகிழ்ந்து கூடியே
மனிதர் யாரும் சரி நிகர் சமானமாக வாழ்வோமே!


என்று பாடிய பாரதியின் இலட்சியத்தை நெருங்கி விட்டோம் என்ற மகிழ்ச்சியை ஒரு நொடியில் பறித்து விட்டது இந்த விபத்து.

மானிடர் ஆன்மா மரணமெய்யாது!

நாசா நடத்திய அஞ்சலி நிகழ்ச்சியில் கிறித்தவப் புதிய ஏற்பாடு மற்றும் யூதர்களின் தோராவின் துணையோடு அந்தச் சமயத் தலைவர்கள் தொழுகை இடம் பெற்றது. இந்து சமயத்தில் ஆழ்ந்த நம்பிக்கையும், சீக்கிய சமயத்தில் மதிப்பும் கொண்ட கல்பனா சௌலாவின் நினைவஞ்சலி அவர்கள் குடும்பத்தின் சார்பில் ஹ¥ஸ்டன் மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்தது.

கல்பனா சௌலா (1962-2003) - விண்வெளியில் பறந்த முதல் இந்திய அமெரிக்கப் பெண்மணி

ஹரியானா மாநிலத்தில், கர்நால் சிற்றூரில் பிறந்து விண்வெளிக் கனவுகளால் உந்தப்பட்டு அமெரிக் காவுக்குப் படிக்க வந்த கல்பனா சௌலாவின் கதை பல இந்திய அமெரிக்கர்களுக்குப் பழக்கப் பட்ட கதைதான். சிறிய ஊரில் பிறந்து வளர்ந்தாலும் விண்ணை நோக்கிக் கனவு கண்டவர் கல்பனா. இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னர், முதன் முதல் இந்திய தபால் விமானத்தை ஓட்டிய விமானி ஜே. ஆர். டி. டாடா அவர்களின் சாதனை வரலாறு கல்பனாவின் கற்பனைகளை வளர்த்தது. தன் அண்ணனோடு நெடுந் தொலைவு சென்று விமானங்கள் ஏறி இறங்குவதைப் பார்த்து வந்த இவர், அண்ணனின் கனவு கலைந்தாலும் விடாப் பிடியாகத் தான் விமானவியல் படிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார். மருத்துவம் படி என்று இவரது தந்தை எவ்வளவோ வலியுறுத்தியதையும் மறுத்து, பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் விமானவியல் படிக்க வந்த ஒரே பெண்மணி என்ற தகுதி பெற்றார்.

1982-ல் பஞ்சாப் பொறியியற் கல்லூரியில் விமானவியல் பொறியியல் துறையில் பட்டம் பெற்றபின் அமெரிக்காவுக்கு ஆர்லிங்டனில் உள்ள டெக்சாஸ் பல்கலைக் கழகத்துக்குப் படிக்க வந்தார். 1984-ல் ஆர்லிங்டனின் டெக்சாஸ் பல்கலைக் கழகத்தில் விண்வெளிப் பொறியியல் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றார். அங்கேதான் விமானப் பயிற்சியாளர் ஜான் பியர் ஹாரிசனைச் (Jean Pierre-Harrison) சந்தித்து மணந்தார். அமெரிக்கக் குடியுரிமை பெற்றார். பின்னர் தேர்ந்த விமானப் பயிற்சியாளரும், விமானியுமானது மட்டுமல்லாமல், 1988-ல் கொலராடோ பல்கலைக்கழத்தில் விமானவியல் துறையில் முனைவர் பட்டமும் பெற்றார். அங்கிருந்து கலிஃபோர்னியாவின் மவுண்டன் வியூவில் உள்ள நாசா ஏம்ஸ் ஆராய்ச்சி மையத்தில் ஆய்வாளராகப் பொறுப்பேற்றார். 1993ல் ஓவர்செட் மெதட்ஸ் நிறுவனத்தில் துணைத் தலைவராகச் சேர்ந்தார். பல ஆய்வுக் கட்டுரைகளைப் பதிப்பித்தார்.

வானை அளப்போம்

எண்பதுகளில் அமெரிக்காவுக்குப் படிக்க வந்த போது, கலிஃபோர்னியாவுக்கு வேலை தேடி வந்த பல இந்திய அமெரிக்கர்களைப் போல் பரபரப்பற்ற நிலையான வாழ்க்கையைத் தொடங்கினாலும் கல்பனா தன் இளமைக் கனவுகளை மறக்கவில்லை. ஐந்தடி உயரமும் 90 பவுண்டு எடையும் அமைதியான பேச்சும் கொண்ட கல்பனா விண்வெளியில் பறப்பதற்கு நாசாவுக்கு விண்ணப்பித்தார். 1% மட்டுமே தேரும் கடினமான பல தேர்வுகளுக்குப் பின்னர், டிசம்பர் 1994-ல் விண்வெளித் திறனாளர் பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டு, மார்ச் 1995-ல் ஜான்சன் விண்வெளி மையத்திற்குச் சென்றார். ஒராண்டு பயிற்சி, கடும் சோதனைக்குப் பின்னர், விண்வெளியில் நடத்தல், ரோபாடிக்ஸ் மற்றும் கணினி பற்றிய தொழில்நுட்பங்களை விண்வெளி வீரர்கள் பார்வையில் அலசத் தொடங்கினார். நவம்பர் 1996-ல் பறந்த எஸ்.டி.எஸ். 87 விண் கலத்தில் (STS-87 Space shuttle Mission), கருமச் சிறப்புநராகவும் (mission specialist) , தானியங்கிக் கை இயக்குநராகவும் (Robotic arm operator) பணிபுரியத் தேர்ந்தெடுக்கப் பட்ட போதுதான் அவரது கனவு மெய்ப்படும் நாள் கூடியது.

இந்த விண்வெளிப் பயணத்தில் நுண்ணீர்ப்புச் சோதனைகள் செய்ய இவரது தானியங்கிக் கை பயன்பட்டது. செயற்கைக் கோள் ஒன்றையும் செலுத்தும் பொறுப்பேற்றிருந்த இவர், தானியங்கிக் கையின் செயற்பாட்டுப் பிழையால் செயற்கைக் கோளை இழக்க இருந்தார். மற்ற சிறப்புநர்கள் விண்வெளியில் நடந்து சென்று கோளை மீட்க வேண்டியிருந்தது. தனது தவறை மறைக்காமல் அதற்குப் பொறுப்பேற்று அடுத்த முறையும் பறக்கத் தேர்ந்தெடுக்கப் பட்டார். இந்தப் பயணத்தில் பதினைந்து நாட்கள் பறந்தார்.

விண்ணில் பறப்பது என்பது சாதாரணமான செயல் அல்ல. புவி ஈர்ப்பு குறைவான விண்வெளியில், உணவு மட்டுமல்ல, உடலுக்குள் இருக்கும் எல்லாமே மிதக்கத் தொடங்கி விடும். கழிவுகளும் மிதக்கும் இடம் என்பதால் காலைக் கடன் கழிப்பதற்கும் சிறப்புக் கருவிகளும் பயிற்சியும் தேவை. எத்தகைய ஜெட் விமானங்களை ஓட்டிய வீரர்களுக்கும் விண்வெளியில் பறக்கும்போது குமட்டிக் கொள்ளும். அது போதாது என்று இரத்த அளவு குறையத் தொடங்கி விடும். தசைகள் இளகும். எலும்புகள் வேகமாகத் தேயும். தீவிரமான உடற்பயிற்சி இல்லையேல் மனிதர்கள் குழம்பாக உருகி விடும் ஆபத்தும் இருக்கிறது. அதனால்தான் ஏற்கனவே ஒரு முறை பறந்த பலர் மீண்டும் பறக்கும் ஆர்வத்தை இழந்து விடுகிறார்கள். ஆனால், கல்பனா தன் ஆர்வத்தை இழக்கவில்லை.

ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கிய எஸ்.டி.எஸ்.107 கொலம்பியா விண்கலத்தில் பயணிக்கவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரு முறை விண்வெளியில் பறந்த ஒரே பெண்மணி என்ற புகழையும் பெற்றார்.

கண்ணீரே சொல்லு கதை,
கல்லும் கரைந்தழவே!


தான் படித்த தாகூர் சிறுவர் பள்ளியை மறக்காமல் அந்தப் பள்ளிக் குழந்தைகளில் சிலரை நாசாவுக்குக் கூட்டி வர ஏற்பாடு செய்தார் கல்பனா. அவரது மறு பிறப்பு இந்தியாவில் பெரிதாகச் சிறப்பித்துப் பேசப் பட்டது. அவர் இந்தியா மீது பறக்கும் நேரத்தைக் கணித்து அவருக்குக் கையசைக்க பத்திரிகைகள் போட்டி போட்டன. அவர் படித்த பள்ளி மாணவர்கள் கல்பனாவின் ஒவ்வொரு அசைவையும் தொலைக் காட்சியில் கண்டு மகிழ்ந்திருந்தனர். ஃபிப்ரவரி 1-ம் நாள் அவர் மீண்டும் பூமிக்கு வருவதைக் காண அனைவரும் தொலைக்காட்சிக்கு முன்னர் திரளாய் நின்றனர். அவரது விண்கலம் வெடித்துச் சிதறிய போது பல உள்ளங்கள் வேதனையால் தவித்தன. தான் உயிரிழப்பதாக இருந்தாலும் விண்வெளியில் இழப்பதையே விரும்புவதாகத் தன்னுடன் பிறந்தவர் களிடம் சொன்ன கல்பனா அவர் சொன்னதுபோலவே மறைந்தார்.

கல்பனா சௌலா படித்த ஆர்லிங்டன் டெக்சாஸ் பல்கலையில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில் பேசிய பேராசிரியர் வெங்கட் தேவராஜன் இந்தியா மட்டுமல்ல, அமெரிக்காவும் போற்றும் வீராங்கனை, கல்பனா, என்று நா தழுதழுக்கக் குறிப்பிட்டார். புத்துணர்வு பெற்று வரும் இந்தியாவுக்கும், பல இன மக்களின் திறமைகளைக் கூட்டி, அறிவையும் ஆற்றலையும் வளர்க்கும் அமெரிக்காவுக்கு அடையாள மாகவும், இவ்விரு நாடுகளுக்கும் பாலமாகவும் கல்பனா விளங்கினார் என்றார் அவர். கல்பனா சௌலாவின் நினைவாக ஆர்லிங்டன் டெக்சாஸ் பல்கலைக் கழகம் விண்ணியல் மாணவர்களுக்கு உதவிச் சம்பள நிதி ஒன்றை அறிவித்தது.

கல்பனாவின் மறைவு குறித்து இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஜோர்ஜ் புஷ்ஷ¤க்கு இரங்கல் தெரிவித்தார். கல்பனாவின் நினைவைப் போற்ற இந்தியாவின் வானிலைக் கோள் ஒன்றுக்கு அவர் பெயர் சூட்டப் படும் என்றும் அறிவித்தார்.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது லாகூரில் இருந்து அகதியாய் இந்தியாவுக்கு ஓடி வந்த அவர் தந்தைக்குத் தன் மகள் சாதனை குறித்து மிகப் பெருமை. பெண் குழந்தைக்குப் படிப்பெதற்கு என்பாரும் பெண் பிறந்தால் வீட்டுக்குக் கேடு என்பாரும் ஏன், பெண் சிசுக்களைக் கொல்லவும் தயங்காத பலர் வாழும் மாநிலத்தில் பிறந்தவர்தான் கல்பனா. சாதாரணமான ஒரு கல்லூரியில் படித்தவர் தான். ஆனால், தன் விடா முயற்சியால் உயர்ந்த புதுமைப் பெண் கல்பனா சௌலா. இவர், இந்தியப் பெண்களுக்கு மட்டுமல்லாமல் அமெரிக்காவில் வளரும் பெண்களுக்கும் ஒரு முன்மாதிரி எனக் கொண்டாடப்படுவார். அமெரிக்காவும் இந்தியாவும் அவரது நினைவைப் போற்றுவது உறுதி.

கல்பனா சௌலாவின் மறைவின் போது அவரைப் பற்றி எவ்வளவோ புகழ்ந்திருந்தாலும், அவை எல்லாவற்றையும் விடச் சிறப்பானது ஒரு சிறிய சொல். “விண்கலம் வெடித்துச் சிதறியது - அமெரிக்கர்கள் அறுவர் மாண்டனர்” என்ற தலைப்புச் செய்தியில், கல்பனா முழு அமெரிக்கராக ஏற்றுக் கொள்ளப் பட்டு விட்டார். வெளிநாட்டில் பிறந்து அமெரிக்காவுக்குக் குடிபுகுந்து வெகு நாட்களாக இங்கு வாழ்ந்தாலும், குடியுரிமை இருந்தாலும் இடைக்குறி போட்ட இந்திய-அமெரிக்கரா இல்லை, இந்தியரா என்ற குழப்பங்கள் ஏதும் இன்றி மற்ற ஐவரைப் போல் அவரும் ஓர் அமெரிக்கர். அவ்வளவுதான்.

ஆகாயக் கல்லறையில்
அழுக்கில்லா வெற்றிடத்தில்
அந்த ஏழு வீரர்களும்
அமைதியாக உறங்கட்டும்.

கனடியக் கவிஞர் புகாரி

******


அமெரிக்கக் குடியரசுத் தலைவர்களின் அஞ்சலி

அந்த எழுவரும் துணிச்சல்காரர்கள், தீரர்கள், வெட்டிக் கொண்டு வா என்றால் கட்டிக் கொண்டு வரும் துடிப்புள்ளவர்கள். வானத்தில் ஏறி அண்டத்தை அளந்து அதன் அடிப்படை உண்மைகளைக் கண்டு பிடிக்க வேண்டும் என்ற தீராத தாகம் அவர்களுக்கு.

விண்வெளிப் பயணம் என்பது பக்கத்து நாட்டுக்குப் பறப்பது போல் எளிது எனத் தோன்றினாலும், நாம் இன்னும் முதல் படியில்தான் அடியெடுத்து வைத்திருக் கிறோம். இந்த முயற்சியில் இவர்கள் முன்னோடிகள்.

நம் கண்ணெதிரே இந்தக் கலம் வெடித்துச் சிதறியதை ஏற்றுக் கொள்வது கடினமாயிருக்கலாம். ஆனால், விண்வெளி மீது உலவுவோம், கண்டறியாத வற்றைக் கண்டுபிடிப்போம் என்ற முயற்சியில் இவை போன்ற துயர நிகழ்ச்சி களைத் தவிர்க்க முடியாது. வருவது வரட்டும், மனித குலத்தின் வரம்புகளை விரிவாக்குவோம் என்று எழும் முயற்சியில் இதுவும் ஒரு கூறு. கோழை களுக்கில்லை வருங் காலம், தீரர்களுக்கு. எழுவர் நம்மை எதிர்காலத்துக்கு இழுத்துக் கொண்டிருந்தார்கள். நாம் அவர்கள் காட்டிய பாதையில் தொடருவோம்.

அவர்கள் விண்ணோடு வாழ்ந்தார்கள், விண்ணில் மறைந்தார்கள், விண்ணில் சுடர் விட்டு ஒளிர்கிறார்கள். அவர்கள் தீர வாழ்க்கை நமக்குப் பெருமித மளிக்கிறது. இந்தப் புன்மைப் பூமிப் பந்தங்களை விட்டெறிந்து பரம்பொருளைத் தொட்டிருக்கும் அந்த எழுவர் நினைவு நம் நெஞ்சில் என்றும் நிறைந்திருக்கும்.

குடியரசுத்தலைவர் ரொனால்டு ரேகன், 1986-ல் சேலஞ்சர் விண்கலம் வெடித்துச் சிதறியபோது மறைந்த விண்வெளி வீரர்களுக்கு அஞ்சலி.

******


ஒரு நொடியில் விளைந்த துன்பத்தை மட்டுமல்ல, பெரும் நோக்கும் சாதனையும் நிறைந்த எழுவரின் வாழ்வையும் நினைவில் கொள்ளுவோம்.

பூமியையும், காற்று மண்டலத்தையும், புவியீர்ப்பு விசையையும் தாண்டிச் செல்ல வேண்டும் என்பது மனித குலத்தின் நெடுநாள் கனவு. இந்த எழுவருக்கு அந்தக் கனவு நனவாகியது. அந்தச் சாதனைக்கு வேண்டிய தீரமும், நெறியும் நிறைந்த வர்கள் இந்த எழுவரும்.

மாபெரும் முயற்சிகளும் இடையூறுகளும் இரண்டறக் கலந்தவை என்பதை முழுதும் உணர்ந்தவர்கள். அண்டத்தை அறியும் பணியில் வரும் இன்னல்களைப் புன்முறுவலோடு எதிர்நோக்கிய திண்மை கொண்டோர் இந்தத் தீரர்கள்.

அறியாமை இருளகற்ற நம்மில் சிறந்தோரைக் கண்டறிந்து, அவர்கள் மீள வேண்டும் என்று தொழுது விண்வெளிக்கு அனுப்புகிறோம். மனித குலத்தின் மாட்சிக்காகப் பறக்கிறார்கள் இந்த மாவீரர்கள். மனிதகுலமே அவர்களுக்குக் கடன்பட்டிருக்கிறது. என்றாலும் அவர்களில் சிலர் மீளுவதில்லை. அநியாயமாகச் சிலர் விதிக்கு இரையாகி விடுகிறார்கள்.

வாழ்க்கையின் இறுதி நாட்களில் விண்ணிலிருந்து மண்ணைப் பார்த்த இந்த மாவீரர்கள் கண்ட நிலமெல்லாம் அவர்கள் பெயர்களைக் கொண்டாடும்.

இந்தத் திருநாட்டின் நினைவுகளில் என்றும் அவர்கள் குடியிருப்பார்கள். இன்று அமெரிக்க மக்களின் சார்பில் அவர்களுக்கு எங்கள் அஞ்சலியும் நன்றியும் செலுத்துகிறேன்.

குடியரசுத்தலைவர் ஜோர்ஜ் உவாக்கர் புஷ், 2003-ல் கொலம்பியா விண்கலம் வெடித்துச் சிதறியபோது மறைந்த விண்வெளி வீரர்களுக்கு அஞ்சலி.

மணி மு. மணிவண்ணன்

© TamilOnline.com