வெள்ளை நிறத்தில் ஒரு பூனை
வருஷங்கள் உருண்டோடின. அத்துடன் பல மாறுதல்கள். ராபர்ட்டுக்கு ஆறு வயதாகும் பொழுது, எமிலி மாரடைப்பால் இறந்து போனாள். சில மாதங்களுக்குப் பின்னர், அம்சிண்டோ வரை போய்த் தன் பேரனைப் பார்த்துவரச் சென்ற சாமிக்கண்ணு திரும்பவேயில்லை. இரண்டு நாள் காய்ச்சலில் அவனும் போய்விட்டான். மிஞ்சியவர்கள் மங்காத்தாவும், ஜானும் தான்.

தொடர்ந்து அவள் அந்தப் பண்ணையிலேதான் தங்கியிருந்தாள். வீட்டை நிர்வகிக்கும் வேலைக் காரியாகவே அவள் வாழ்ந்து கொண்டிருந்தாள். அதற்குப் பின்னர் அவர்களுக்குக் குழந்தைகள் பிறக்கவில்லை. தந்தை போன பின், பல முறை மங்காத்தா பண்ணையை விட்டுப் பிறந்த ஊருக்குத் திரும்பிவிட யோசித்தது உண்டு. ஆனால் அவளால் முடியவில்லை. திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற நிலையைத் தவிர, ஜானின் அன்பிலே எந்தவிதமான மாறுதலும் இருக்கவில்லை. தன்னுடைய பெரிய வீட்டிலே தங்கியிருக்கும்படி அவன் பலமுறை வற்புறுத்தினான். அவனது கெளரவத்தை நாசப் படுத்த மனம் இன்றி, அவள்தான் அதே பழைய வீட்டில் தொடர்ந்து வேலைக் காரியென்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தாள். ஆனால், ஜான் அந்த வீட்டைப் புதுப்பித்துக் கொடுத்து, பல செளகர்யங்கள் செய்து கொடுத் திருந்தான். மாதத்திற்கு அவள் செலவிற்குக் கணிசமாகப் பணமும் கொடுத்து வந்தான்.

ராபர்ட்டிற்கு பத்து வயது. ஒரு சமயம் அவன் பள்ளிக்கூட விடுமுறையைக் கழிக்க மாமன் (அப்படித்தான் அவன் ஜானை அழைத்தான்) வீட்டிற்கு வந்திருந்தான். தகப்பனுக்கு மகனைக் கண்டதும் மகிழ்ச்சி பிடிபடவில்லை. தன்னுடன் குதிரைசவாரிக்குக் கூட்டிச் சென்றான். பரந்து கிடந்த தனது பண்ணையைச் சுற்றிலும் பார்க்கக் கூடவே அழைத்துச் சென்றான்.

மங்காத்தா தன் மகனை மார்புடன் அணைத்துக் கொள்ள ஆசையால் துடித்தாள். ஆனால் அந்தச் சிறுவனின் பார்வையிலே ஒரு இகழ்ச்சி-ஏளனம். பேதங்கள் புரியாத, கபடமற்ற பச்சைப் பிள்ளையாக இருக்கும் போதே, உண்ணும் உணவோடு நிறவேற்றுமை என்ற விஷமும் ஊட்டப்படுவதால் ''என்னைத் தொடாதே'' என்று வெள்ளைச் சிறுவன் கருப்பு வேலைக்காரியைக் கண்டு சீறும் பரிதாப நிலை.

மார்கரெட் ஊட்டி விட்டிருந்த விஷத்திலே வளர்ந்திருந்தான் ராபர்ட். ஆசையுடன் கன்னத்தை வருடிய மங்காத்தாவின் கருப்புக் கரங்களை வெடுக்கென்று தூரத் தள்ளினான்.

''அங்கிள்: எனக்கு இந்த நானியைப் (ஆயாவை) பிடிக்கவில்லை'' என்று கூக்குரலிட்டு வெறுப்பை வெளியிட்டான். பெற்ற மனம் வேதனையால் வெந்தது. ஜான் குற்ற உணர்விலே தவித்தான். வேறு என்ன செய்வான்.

ஒரு நாள், ஜான் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தான். தேனீர் கெட்டிலை மேஜை மீது வைத்துவிட்டு மங்காத்தா அருகில் நின்று கொண்டிருந்தாள். உடுத்திக் கொண்டு வெளியே போகத் தயாராகிவிட்ட ராபர்ட் ஓடி வந்தான். ''நானி! இந்த ஷ¥வைப் பாலிஷ் பண்ணிக் கொடு...''வீசி அவனது காலணிகளை அவள்மீது போட்டான். ஜானின் முகம் கோபத்திலே சிவந்து விட்டது. ராபர்டை அடிக்கக் கையை ஓங்கிக் கொண்டு எழுந்துவிட்டான். மங்காத்தா சட்டென்று அவன் கையைப் பற்றிக் கொண்டாள். ''ஜான்! அவனைத் தொடாதீங்க... எனக்காக... அவனை அடிச்சா என் மனசு வெடிச்சுப் போயிடும்... நான் ஏற்கனவே படுகிற சித்திரவதை போதாதா?... விம்மினாள்.

ஜான் மீண்டும் ஆசனத்தில் உட்கார்ந்துவிட்டான். ஆனால் அவனது பார்வையிலே பொங்கிநின்ற சீற்றத்தைக் கண்டு சிறுவன் பயந்து போனான்.

காலம் நகர்ந்தது. ராபர்ட் வளர்ந்து ஆளாகி விட்வாட்டர்ஸ்ராண்ட் யுனிவர்சிடியில் விவசாயம் பற்றிப் படித்துக் கொண்டிருந்தான். அம்சிண்டோ வில் வளர்ந்த சங்கரன் அதிகம் படிக்கவில்லை. அச்சகம் ஒன்றில் தொழிலாளியாகச் சேர்ந்து விட்டிருந்தான். ஒரு முறை தன் மகனைப் பார்க்கப் பிறந்த ஊருக்குப் போயிருந்தாள் மங்காத்தா. சங்கரனும் பெரியவனாக வளர்ந்துவிட்டிருந்தான். அவர்கள் வசித்தது சாதாரணமானதொரு தகரக் கூரை வீடு. கழுத்துப்பட்டை நைந்த ஷர்ட்டும், பழைய கோட்டும் தரித்த சங்கரன் ஒரு சாதாரணத் தொழிலாளி. மூத்தபிள்ளையோடு ஒப்பிட்டுப் பார்த்த மங்காத்தா துயரத்திலே துவண்டாள்... இருவருக்குமிடையே எத்தனை ஏற்றத்தாழ்வுகள்!

கல்லூரிப் படிப்பு முடிந்ததும் ராபர்ட் தன் மாமனுடன் தங்கியிருக்க வந்தான். இந்தச்சில வருஷங்களில் ஜானுக்குப் பலவித நோய்கள். பண்ணையைச் சுற்றிப் பார்க்க முடியாது முட்டிகளில் கெளட்நோயின் வேதனை - பிரம்பை ஊற்றிக் கொண்டு நடக்க வேண்டிய நிலை. இளம் வயதிலேயே ஆரோக்கியம் குன்றி பெரும் நோயாளியாகி விட்டிருந்தான். பண்ணை விவகாரங்களைக் கவனிக்க ராபர்ட் அது சமயம் பெரும் உதவியாக இருந்தான்.

வந்த சில நாட்களிலேயே அவனுக்குச் சூழ்நிலை பிடிக்கவில்லை. தன் மாமன் ஜானுக்கு அந்தக் கருப்பு நிறப் பெண்ணுடன் அத்தனை நெருக்கமான உறவு ஏன்? அவளுக்கு அந்த வீட்டில் அத்தனை அதிகாரம் ஏன்? மாமன் முறைகெட்டு வாழ்கிறான் என்றவரைக்கும் அவன் மனத்தில் ஒரு கசப்புத் தட்டிவிட்டது.

சில தினங்களில் ஜானுக்கு முட்டி நோவு அதிகமாகிவிட்டது. அத்துடன் நல்ல காய்ச்சல். படுத்துவிட்டான். அருகிலிருந்து மங்காத்தா அவனுக்குக் கருத்துடன் பணிவிடைகள் செய்து கொண்டிருந்தாள். ஒரு நாள் இரவு காய்ச்சல் அதிகாகிவிடவே, ஜானைவிட்டுப் போக மனமின்றி, அவனுடன் படுக்கையறையிலேயே அவள் இரவு முழுவதும் உட்கார்ந்திருந்தாள். இதைக்காண ராபர்ட்டுக்குப் பொறுக்கவே முடியவில்லை. விடிந்ததும் முதல் வேலையாக ஜானிடம் வந்தான். மங்காத்தாவை அப்பால் போகும்படி அதட்டிவிட்டு படுக்கையருகே வந்து நின்றான். ''அங்கிள்! இப்போது நீங்கள் ஒரு முடிவான தீர்மானத்திற்கு வந்தாக வேண்டும். மோனிகா என்னுடன் படித்தவள். அவளைக்கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன். நாங்கள் இருவரும் இனி உங்களோடு வந்து இங்கேயே தங்கி விடுவது என்ற முடிவு. உங்களுக்கு நான் வேண்டுமா? இந்த வேலைக்காரி வேண்டுமா? அவள் உரிமையோடு வீட்டுக்குள் வளைய வருவதைக் காண எனக்குச் சகிக்கவேயில்லை. நன்றாக யோசிச்சு சாயங்காலத்திற்குள் முடிவைச் சொன்னால் போதும். இவள்தான் வேண்டுமென்றால் நான் இன்று இரவே ஊருக்குத் திரும்பிவிடுவேன்...'' ஆத்திரமாகப் பேசிவிட்டு வெளியே சென்று விட்டான்.

தேநீர்க் கோப்பையைக் கொண்டு வந்து மேஜை மீது வைத்த மங்காத்தாவின் கரத்தைப் பற்றிக் கொண்டு. ஜான் துக்கத்தில் திணறினான்.

''மங்கா! இந்த இளவயதிலேயே நான் நோயாளியாப் படுத்துவிட்டேனே! இந்தப் பண்ணையின் கதி...'' அரற்றினான் ஜான். அவன் நெற்றியிலே பூத்திருந்த வியர்வையை மங்காத்தா தன் முந்தானையினால் துடைத்துவிட்டாள். ''ஜான்! எல்லாத்தையும் நான் கேட்டுக் கொண்டுதான் இருந்தேன். எனக்குக் கிடைக்காத பாக்கியம் உங்களுக்காவது கிடைக்கட்டுமே எத்தனையோ வருஷங்கள் பெற்ற பிள்ளையைப் பிரிஞ்சு இருந்தீங்க... இப்போவாவது ஒண்ணாயிருங்க...''

''அப்போ நீ...?'' பதறினான் அவன்.

''நான் முடிவு செய்துவிட்டேன். என் பிறந்த ஊரில் என் சகோதரி வீட்டிற்குப் போய்விடுவேன். அங்கே சங்கரன் இருக்கிறான். இப்படி நம் குழந்தைகளை நாம் ஆளுக்கு ஒன்னுன்னு பங்குப் போட்டுக் கொள்வோம்... வேறே வழி...'' அவளது கண்கள் கலங்கின. துக்கம் நெஞ்சையடைத்தது. எனினும், துணிவைத் துறக்க மனமில்லை.

''மங்கா! நீயில்லாமல் எப்படி நான் வாழ்வேன்?'' பச்சைப் பிள்ளையாக அழுதான் ஜான்...

''மோனிகா-உங்க மருமகள் வந்து கவனித்துக் கொள்வாள் பயப்படாதீங்க...'' சமாதானப் படுத்தினாள். நோயாளியைக் கவனித்துக்கொள்ளப் பண்ணை ஆள் ஒருத்தனை அமர்த்திவிட்டு அவள் பிடிவாதமாக மறுநாளே கிளம்பிவிட்டாள். ஜான் அவளை மறக்கவில்லை. மாதந்தோறும் அவள் செலவுக்குப் பணம் அனுப்பிக் கொண்டேயிருந்தான். இளைய மகனுடன் பெரியம்மா என்ற உறவு முறையுடனேயாவது தங்கி வாழ முடிந்ததே என்ற ஆறுதல் அவளுக்கு.

பல ஆண்டுகள் சென்றன. சங்கரன் ஒருநாள் காலைப் பேப்பரில் வந்த துக்கச் செய்தியைப் படித்தான். ''பெரியம்மா! நீங்க வேலை பார்த்த அந்தப் பண்ணை முதலாளி ஜான் கிப்சன் இறந்துவிட்டாராம்'' என்றான்.

மங்காத்தா திடுக்கிட்டுப் போனாள். எழுந்து உள்ளே சென்று விட்டான். உயிருக்குயிரான அவளது ஜான் போய்விட்டான். அவனது இறுதிச் சடங்கிற்குக்கூட அவளால் போகமுடியாத அவலநிலை. ரகஸியமாக அவள் உகுத்த கண்ணீர், பட்ட வேதனை வார்த்தை களில் அடங்கா.

சில தினங்களுக்குப் பின்னர் அவளுக்கு டர்பனில் இருந்த ஒரு பெரிய வக்கீலிடமிருந்து அழைப்பு வந்தது. குறிப்பிட்ட தேதியன்று அவரைச் சந்தித்த போதுதான் அவளுக்கு ஒரு உண்மை புலனாகியது. பரந்து விரிந்து கிடந்த அவனது பண்ணை நிலங்களையும் மற்றச் சொத்துகளையும் விற்று, வந்த பணத்தை ராபர்ட்டும் அவளும் பாதியாகப் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று உயிலில் எழுதி வைத்து விட்டுப் போயிருந்தான் அவளது ஜான்.

திடீரென்று அவள் ஒரு நாள் பெரும் பணக்காரியாகி விட்டாள். சங்கரனுக்கு ஒரு வீடு அவளுக்கு ஓவர் போர்ட்டில் ஒரு பெரிய மாளிகை பல கார்கள். பேரன் பேத்திகளுக்கு வெளிநாட்டுப்படிப்பு வசதி... நன்கொடைகள்... உலகம் சுற்றும் வாய்ப்புகள்... உறவினர்களும் நண்பர்களும் ஈயாக மொய்த்துக் கொண்டனர். இப்போது அவளுக்குப் பெயர்-புகழ்-பதவி இத்யாதி...

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு நாள் காலை, அவள் வீட்டின் வாயிலில் ஒரு கார் வந்து நின்றது. டிரான்ஸ்வால் மாகாணத்தைக் குறிக்கும் நம்பர் பிளேட், காரின் சக்கரங்கள் மீது புழுதி... வெகு தொலைவிலிருந்து வந்த அடையாளம். உயரமான ஒரு வெள்ளைக்காரன் இறங்கினான். கூட இறங்கினாள் ஒரு வெள்ளைக்காரப் பெண். தயங்கிக் கொண்டு வராந்தாவில் நின்றான் அவன், உள்ளே வரச்சொல்லி உபசரித்தாள் மங்கா. அவனையு மறியாது உடலில் ஒரு சிலிர்ப்பு-புரிந்துவிட்டது. வந்திருப்பவன் அவள் மூத்தமகன் ராபர்ட் கிப்சன். உணர்ச்சி வசத்தாலே மெய்பதறி நின்றான்.

தலையிலிருந்த தொப்பியை எடுத்து மரியாதை யாகக் கையில் பிடித்துக் கொண்டு உள்ளே வந்தான். அவன் முகம் செவேலென்று இருந்தது. கண்களைச் சுற்றிலும் கவலைத் திரைகள். லேசாக முடியில் நரை. ராபர்ட், அவளுடைய மூத்த மகன், கிழவனாகிக் கொண்டு வருகிறானே? காலம் எப்படி விரைந்து விட்டது? திகைப்புடன் அவள் பார்த்தாள்.

''என்னை உங்களுக்குத் தெரிகிறதா?...''அவன் குரல் உணர்ச்சியால் உடைந்தது.

''எப்படித் தெரியாமல் போகும்? நான் பெற்ற பிள்ளை' எனக்கூவி அழத் துடித்தது அவள் வாய்... ''ராபர்ட் கிப்சன்...'' என்றாள் புன்முறுவலுடன்.

''இவள் என் மனைவி மோனிகா... ''அறிமுகப் படுத்தினான் ராபர்ட்.

''உங்களிடம் மன்னிப்புக் கேட்டு ஆசிகள் வாங்கிக் கொண்டு போக வந்திருக்கிறேன்...'' தழுதழுத்தது அவன் குரல், குழப்பத்துடன் அவள் விழித்தாள்.

'பெற்ற தாயை வீட்டை விட்டு வெளியேற்றச் செய்த பாவத்தின் பலனை அனுபவிக்கிறேன்-என் மகன் ஆல்பர்ட்... உங்கள் பேரன், ஜெயிலில் இருக்கிறான். வக்கீல் தேர்வுக்குப் படித்துக் கொண்டிருந்தான். சமீபத்தில் அவன் படித்து வந்த பல்கலைக்கழக மாணவர்களிடேயே பெருத்த கிளர்ச்சி. பத்திரிகை யில் படித்திருப்பீர்கள் ரேடியோவிலும் கேட்டிருக் கலாம். ஆல்பர்ட் மாணவர்கள் தலைவன் அவனும் மாணவர்களில் சிலரும் கைதாகியுள்ளனர், ஆல்பர்ட் வன்முறை வழிகளை வகுத்துப் பரப்பின தாகவும், புரட்சிகரமான பிரசங்கங்கள் செய்ததாகவும் பல குற்றச்சாட்டுக்கள். தண்டனை ஒரு சமயம் மிகவும் கடுமையாகவும் இருக்கலாம்...'' கண் கலங்கினான் ராபர்ட். மோனிகா கைக்குட்டையால் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

''ஆல்பர்ட்?'' மங்காத்தாவால் பேசமுடியவில்லை அப்படி அவளுக்கு ஒரு பேரன் இருக்கிறான்...

''என் தந்தை ஜான்கிப்சன் இறக்கும்போது உண்மையை என்னிடம் சொல்லிவிட்டுத்தான் போயிருந்தார். அப்படியிருந்தும் நான் உங்களைக் காணாமலேயே இருந்தேன். காரணம் சுயநலம். வெள்ளைக்காரனாக வாழ்ந்துவிட்ட எனக்கு உங்களிடம் தொடர்பு கொள்ள மனத்தில் இடம் இருக்கவில்லை. ஆனால் ஆல்பர்ட்? அவன் போக்கே வேற. சிறையில் அவனைச் சந்தித்தபோது என் உதவிகளை அவன் ஏற்க மறுத்தான். என்ன சொன்னான் தெரியுமா?'' பெற்றதாயை அவள் நிறத்துக்காகச் சந்திக்க பயந்த கோழை. நீங்களா என் கொள்கைகளைப் புரிந்து கொண்டு உதவப் போகிறீர்கள்? எனக்குத் தெரியும் நான் யார் என்று. என் பாட்டன் என்னிடம் சொன்ன ரகசியத்தை நான் மறக்கவில்லை. என் உடலின் நிறந்தான் வெள்ளை; உள்ளே ஓடும் ரத்தம் கருப்பு...ஏன் என்றால் என் பாட்டி ஒரு கருப்புப் பெண். அதனால் என் ரத்தம் என் இனத்தைச் சேர்ந்த கருப்பர்களின் உரிமைக்குப் பாடுபடத் துடிக்கிறது. உங்களால் இதைப் புரிந்து கொள்ள முடியாது உங்களிடம் பேசவோ, உறவு கொள்ளவோ எனக்கு விருப்பமே இல்லை'' என்று சீறினான்.

''படிக்கப் போன இடத்தில் அரசியல் சுழலில் சிக்கிக் கொண்டு உன் வாழ்க்கையை நாசமாக்கிக் கொள்ளப் போகிறாயே! என்ன தண்டனை கிடைக்குமோ''- பதறினேன்.

''உரிமைக்காகப் பாடுபடத் துணிந்தவன்-தண்டனைகளைக் கண்டு அஞ்சமாட்டான்'' என்றான்.

''என் மனைவி மோனிகா மகனின் கரத்தைப், பிடித்துக் கொண்டு அழுதாள், அப்போது என்ன சொன்னான் தெரியுமா?''

''இந்த நாட்டில் எத்தனையோ இளைஞர்கள் மோட்டார் விபத்தில் மாண்டு போகின்றனர். சிலர் கடலில் மூழ்கி மறைந்து போகின்றனர். இளம் வயதுள்ள வாலிபர்களை விபத்துக்களுக்கு வீணே பறிகொடுக்கும் போது ஒரு சில இளைஞர்களைத் தாய்மார்கள் உரிமைப் போராட்டத்திற்குப் பறிகொடுத்தால் என்ன குறைந்தா போகும்?...''

உரிமைப் போராட்டம் எனும் தியாகத் தீயில் குதித்துவிட்டான் என் பிள்ளை... என்ன நேருமோ... அம்மா...என்னை மன்னித்து விடுங்கள்... அவனுக்கு இருக்கிற அளவு எனக்கு இல்லை.... நான் பாவி...''திடீரென்று அவளை அணுகி இரு கரங்களாலும் அணைத்துக் கொண்டு வாய் விட்டு விம்மி அழுதான் ராபர்ட்.

புயலில் தடுமாறிய பஞ்சிறகுபோல் உணர்ச்சியால் மங்காத்தா குழம்பிப்போனாள். இதுவரை தொட்டுத் தன் நெஞ்சோடு தழுவிக் கொள்ளத் துடித்த மகனை, இத்தனை காலத்திற்குப் பின்னர், ஆசைதீர அணைத்துக் கொண்டு அழுதாள்.

பின்னர் சொன்னாள்: ''ஆல்பர்ட்டைப் பற்றிக் கவலைப்படாதே. அவனுக்காகப் பிரார்த்தித்துக் கொள்கிறேன். ஒரு சிலர் சுயநலம் பாராமல் தியாகம் செய்தால் தான் பலர் சுகமாக வாழ முடியும்... இயற்கையின் நியதி...உன் மகனைப் பற்றி நீ துயரப்படக்கூடாது-பெருமைப் படணும்...நான் பெருமைப்படுகிறேன். எனக்கு இப்படிப் பட்ட ஒரு பேரனா?...''

''அம்மா ஒரு வேண்டுகோள். என் சின்ன மகன் வில்லியம் இங்கே லேடீஸ்மித்தில் படிக்கிறான். இந்து மதத்திலே ஈடுபாடு அவனுக்கு நீங்கள் யார் என்று இப்போது தெரியும் அவன் உங்களைப் பார்க்க வருவான். அவனுக்கு உங்களால் ஆன உதவிகள் செய்ய வேண்டும். இவனாவது அரசியலில் சிக்காமல்... ஆன்மீக விஷயங்களில் ஈடுபட்டு வாழட்டும் என்பது என் ஆசை, மறுக்கக்கூடாது''

''ராபர்ட்! இதென்னகேள்வி! பெற்ற தாய் நான் என் பிள்ளைக்கு உதவ மறுப்பேனா? வில்லியத்தை அடிக்கடி என்னிடம் அனுப்பிவை கவனித்துக் கொள்கிறேன்?''

அதற்குப் பின்னர், அவர்கள் அடிக்கடி சந்தித்தனர். தன் கையாலேயே தன் மூத்த மகனுக்கு இத்தனை காலத்திற்குப் பின்னர் உணவு பரிமாறி ஆனந்தப் பட்டாள் மங்காத்தா. சங்கரனுக்கும் உண்மை உரைக்கப்பட்டது. மற்றக் குழந்தைகளுக்கும் தெரிந்து விட்டன். ஆனாலும் இது குடும்பத்தினருக்கு மட்டுமே தெரிந்த பரம ரகசியம். மற்றவர்களுக்குப் புரியாத குழப்பம்.

கதையைச் சொல்லிவிட்டு, கண்களைத் துடைத்துக் கொண்டாள் மங்காத்தா. ''ஐயரே! இந்தக் கதையைப் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?

பசுபதியின் நினைவில் சட்டென்று மகாகவியின் பாடல் அடிகள் எழுந்தன.

வெள்ளை நிறத்தொரு பூனை - எங்கள்
வீட்டில் வளருது கண்டீர்;
பிள்ளைகள் பெற்றதப் பூனை-அவை
பேருக்கொரு நிறமாகும்.
சாம்பல் நிறமொரு குட்டி-கருஞ்
சாந்து நிறமொரு குட்டி;
பாம்பு நிறமொரு குட்டி-வெள்ளைப்
பாலின் நிறமொரு குட்டி.


''பாரதியார் ஒரு பாடலை உங்களுக்காகவே எழுதினது போல் அதிசயமாக இருக்கிறது.''

'ஐயரே! இவ்வளவு கேட்டபின் உண்மையை மறைக்காமச் சொல்லுங்க. நானும் ஜானும் நடத்திய வாழ்க்கை தவறானதா? அப்படியானால், எனக்கு நல்ல கதி கிடைக்காதா? இந்தக் கேள்வி என் மனசைச் சதா அறுத்துக்கிட்டேயிருக்கு...'

''ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற தமிழர் பண்பாட்டின் படி நீங்க இருவரும் தூய அன்போடு - மனசாஷிக்கு முன்னால் கணவன் மனைவியாக வாழ்ந்தீங்க, அது எப்படித் தவறாகும்? நீங்க இந்த நாட்டு மக்களுக்குச் செய்திருக்கும் சேவை-தர்மம்-வழங்கியுள்ள நன் கொடைகள்-இவைகளுக்கெல்லாம் திறக்காத சுவர்க்கத்துக் கதவுகள் எங்களைப் போன்ற சாமானியர்களுக்கு எங்கே திறக்கப் போகின்றன.''

''அம்மா, உங்களைச் சந்தித்த நாளிலிருந்து உங்கள் மீது எனக்கு அபார மதிப்பு. இந்தக் கதையைக் கேட்ட பின் என் மதிப்பில் நீங்க ரொம்ப உயர்ந்துட்டீங்க...?'. உணர்ச்சி வசத்தில் தடுமாறிய பசுபதி கைகூப்பி வணங்கினார்.

சில்லென்று எங்கிருந்தோ ஒரு சிறு இடுக்கிலிருந்து வந்த குளிர் காற்று அவரை நடுங்கச் செய்தது. சிந்தனைகளினின்று விழித்துக் கொண்டார். விளக்கை அணைத்துவிட்டுப் போர்வையை இழுத்து மூடிக்கொண்டு உறங்க முயற்சித்தார்.

லக்ஷ்மி

© TamilOnline.com