போர் தேவையா...
போர் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள், அதன் பொருளாதாரத் தாக்கம் ஆகியவை சி.என்.என். மற்றும் சி.என்.பிசி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் நிரந்தர அம்சங்களாகி விட்டன. பங்குச் சந்தையின் எதிர்வினைகள் பற்றிக் கவலைப்படும் அளவுக்கு, ‘யாரும் போர் தேவையா’ என்ற கேள்வியை ஆராய்வதில் செலுத்தவில்லை என்று பட்டது.

பிபிசி நிகழ்ச்சி ஒன்றில் சமாதான ஊர்வலங்களில் பங்கு கொள்பவர்கள் பயங்கரவாதத்தை ஆதரிப்பதாகத்தான் அர்த்தம், என்று ஒரு அமெரிக்க அதிகாரி சொன்னார். "நான் செய்வதற்கு உதவி செய்யவில்லை என்றால் நீ எனது எதிரி" என்ற மனப்பான்மை மிகவும் அதிகமாகத் தெரிகிறது. ஈரானுக்கு எதிராக ஈராக்கை வளர்த்ததும், சோவியத் யூனியனுக்கு எதிராக ஆ·ப்கனிஸ்தானை வளர்த்ததும் எந்த அளவு இந்நிலைக்குக் காரணம் என்பது பற்றி சுயவிமர்சனம் செய்துகொள்ளும் நேர்மை மற்றும் தைரியம் தென்படவில்லை. கொலையாளிகளும் அவர்களுக்கு உதவுபவர்களும் ஒன்றே என்று உறுமும்.

'செயல் வீரர்கள்' பாகிஸ்தானுக்கு உதவுவதன் மூலம் இந்தியாவுக்கு நேர்ந்த பயங்கரவாதப் பிரச்சினைகளுக்குப் பொறுப்பேற்பது பற்றியும் சிறிது யோசித்தால் நல்லது.

இந்தப் பதட்டமான நிலையில், ஐரோப்பிய மற்றும் பிறநாடுகளில் மக்களும், (ஓரளவுக்கு) அரசாங்கங்களும் போரைத் தடுக்க முயற்சி எடுக்கத் தூண்டுவது ஒன்றுதான் சற்று ஆறுதல் அளிக்கும் செய்தி.

******


அறிவியல் தொழில்நுட்பம் ஆகியவை விண்வெளிப் பயணம் சார்ந்த துறைகளில் இன்னும் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் பல இருக்கின்றன என்பதை, கொலம்பியா விண்கல விபத்து அழுத்தமாக அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறது. விபத்தில் உயிரிழந்த அனைவரது குடும்பங்களுக்கும் தென்றல் தனது இரங்கலைத் தெரிவிக்கிறது.

கல்பனா சாவ்லாவைப் போற்றும் இந்தியர்களும், இந்திய அரசாங்கமும், அத்தோடு நின்று விடாமல் இன்றும்ம் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளைத் தடுப்பதற்கு வழி செய்ய வேண்டும். கல்பனா பிறந்த அரியானாவில் ஆண்: பெண் விகிதம் ஆயிரத்துக்கு 861 - இந்தியாவில் ஆயிரத்துக்கு 933.

உயர்த்திச் சொல்லித் தாழ்த்தி வைத்திருக்கும் அவல நிலையிலிருந்து பெண்கள் மீளவேண்டும்.

******


சென்ற இதழில் யோசிக்காமல் செய்த சில தவறுகளுக்கு வாசகர்களிடமிருந்து பலமான குட்டுகள் விழுந்தன - ஒரு ஆங்கிலப் பாடலை எவ்வாறு வெளியிட்டீர்கள் என்றும், வேறு இடங்களில் ஆங்கில வார்த்தைகள் உபயோகப் படுத்தப்பட்டது தவறு என்றும். மன்னிக்கவும். இனி அவற்றைத் தவிர்க்கிறோம்.

மீண்டும் சந்திப்போம்,
பி.அசோகன்
மார்ச் - 2003

© TamilOnline.com