வயலின் வித்வான் லால்குடி ஜி.ஜெயராமன் அவர்களின் கச்சேரி
மென்மையான, சீரான, நுட்பமான, நவீனப் பாங்குடைய இசையினால் கர்நாடக இசையுலகில் என்றென்றும் சிறப்பான வயலின் வித்வானாகப் புகழப்படுபவர் லால்குடி ஜி.ஜெயராமன் அவர்கள். கேட்பவரின் ஆழ்மனதில் சென்று உணர்ச்சிகளை எழுப்பிவிடக்கூடிய சக்தி இவர் கையிலிருக்கும் வயலினுக்கு உண்டு. சென்னையில் இசைக் குடும்பத்தில் பிறந்த இவர் 12 ஆவது வயதிலேயே தன் இசைப்பயணத்தைத் தொடங்கிவிட்டார். அவருக்குள் இருந்த தனித்தன்மை அவரை வயலின் வாசிப்பில் இழுத்துச் சென்றது. 1965ல் எடின்பர்க் இசை விழாவில் தனது சொந்த இத்தாலியன் வயலினைப் பயன்படுத்தி இவர்வாசித்த இசையைக் கேட்ட பிரபல வயலினிஸ்ட் Yehudi Menuhin மெய்மறந்து ரசித்துப் பாராட்டியிருக்கிறார். 1964ல் ஓகியோ க்லீவ்லேண்டில் மிகப் பிரம்மாதமான வயலின் கச்சேரியை நிகழ்த்திக் காட்டினார். அன்றிலிருந்து ஓகியோ அரசு ஏப்ரல் 2ஆம் தேதியை 'லால்குடி டே' என்றே அறிவித்தது.

லால்குடி ஜெயராமன் வளைகுடாப் பகுதியில் வருகிற ஏப்ரல் 12, 2003 மாலை 4 மணிக்கு வயலின் கச்சேரி நிகழ்த்தப்போகிறார். சான் ஜோன்ஸ் பகுதியிலுள்ள CET Performing Arts Centerல் இந்தக் கச்சேரி நடைபெறவுள்ளது. இவரோடு லால்குடி கிருஷ்ணனும், லால்குடி விஜயலெஷ்மியும் வயலின் வாசிக்கிறார்கள். திருவாரூர் பக்தவச்சலம் மிருதங்கமும் டி. ராதாகிருஷ்ணன் கடமும் வாசிக்கிறார்கள்.

(மேலும் விபரங்களுக்கு: ஹேமா பார்த்தசாரதி, 510 793 4711)

இந்த நிகழ்ச்சியில் கிடைக்கும் பணம் சென்னையிலுள்ள சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனைக்கு அளிக்கப்படவுள்ளது. பொருளாதார வசதியற்ற வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் மக்களுக்கு இலவசமாக கண் சிகிச்சையும், அறுவை சிகிச்சைகளும் செய்து வரும் முதன்மையன கண் மருத்துவமனை இது என்பது குறிப்பிடத்தக்கது.

'கண் பராமரிப்புக்கான மிகச் சிறந்த மருத்துவ மனை'என்று அவுட்லுக்(Outlook) இதழ் பாராட்டியிருக்கும் இந்த மருத்துவமனையின் நிறுவனர் Dr. பத்ரிநாத் இந்திய அரசாங்கத்தின் மிக உயரிய விருதுகளான பத்மபூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

அமெரிக்காவிலுள்ள Opthalmic Mission Trust என்ற தொண்டு நிறுவனம், சங்கர நேத்ராலயாவிற்கு உதவிப்பணம் சேகரித்து அளிக்கிறது. இந்த நிறுவனத்தைப் போலவே, ரஜினிகாந்த், காலம் சென்ற நானா பல்கிவாலா, ஸெயில் சிங், ஆர்.வெங்கட்ராமன், ராஜீவ் காந்தி, அப்துல்கலாம், ஸ்பெயின் நாட்டு ராஜா மற்றும் ராணி இன்னும் சிலரும் இந்த மருத்துவமனைக்குப் பொருளாதார உதவி அளிக்கிறார்கள். இதற்கு முன்னால் இந்த மருத்துவமனைக்காக எம்.எஸ். சுப்புலெஷ்மி, எல்.சுப்பிரமணியம் மற்றும் கவிதா கிருஷ்ணமூர்த்தி போன்றவர்களின் இசைக் கச்சேரி நடத்தப்பட்டிருக்கிறது.

சங்கர நேத்ராலயா கண்மருத்துவமனை பற்றிய விபரங்களுக்கு: www.sankaranethralaya.org

© TamilOnline.com