தமிழகம்: நிதியும் நீதியும்
சாத்தான்குளம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கும் காங்கிரசுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவியது. ஆனால் அதிமுக அதிரடி வெற்றியை ஈட்டியது. வெற்றிக்காக அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதா பல்வேறு வாக்குறுதிகளை வழங்கினார். அதாவது வாக்காளர்களுக்குக் கல்லூரி அல்லது பெண்கள் பாலிடெக்னிக், சிமெண்ட் தொழிற்சாலை, ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் உட்பட பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. இவை பத்திரிகை களில் செய்தியாக வெளிவந்திருந்தன.

இந்த வாக்குறுதிகள் குறித்து தேர்தல் ஆணையம் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டது. ''முதல்வர் வாக்குறுதிகள் எதுவும் வழங்கவில்லை. அதுவும் பரிசீலிப்பதாகத்தான் சொன்னார்'' என்று தமிழக தலைமைச் செயலர் பதில் கொடுத்தார். ஆனால் இந்த விளக்கத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ளவில்லை. இதற்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தது. பொறுப்பில் உள்ளவர் கள் தேர்தல்விதி முறைகளை மீறுவது வேதனை தரத் தக்கது எனவும் கூறியது.

*****


திமுக தலைவர் மு. கருணாநிதி இலக்கியத்தின் பக்கமும் தனது கவனத்தைக் குவிக்கத் தொடங்கிவிட்டார். சமீபத்தில் அவர் வெளியிட்ட தொல்காப்பியப் பூங்கா வெளியான இரண்டே மாதத்தில் நான்காம் பதிப்புக்குத் தயாராகி புத்தக உலகில் சாதனை படைத்திருக்கிறது.

தற்போது மார்க்சிம் கார்க்கி எழுதிய தாய் நாவலை தனது உரை நடையில் எழுதத் தொடங்கி உள்ளார். அரசியலில் காட்டும் அக்கறையிலிருந்து இலக்கியத்துக்கு அதிகம் அக்கறை காட்டத் தொடங்கிவிட்டார்.

*****


தமிழகத்தில் கடந்த 13 ஆண்டுகளாக அமலில் இருந்த விவசாயிகளுக்கான இலவச மின்சாரத் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அத்துடன் குடிசைகளுக்கான ஒரு விளக்குத் திட்டமும்கூட ரத்து செய்யப்பட்டுள்ளது. வீடு மற்றும் தொழில் நிறுவனங் களுக்கான மின்கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் தூண்டுதலுடன் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதைக் கண்டித்து விவசாயிகள் கூட்டமைப்பு போராட்டத்தில் குதித்துள்ளது. எதிர்க்கட்சிகள் பலவும் இந்நடவடிக்கையைக் கண்டிக்கின்றன.

*****


தமிழகத்தில் 28 மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால் வறட்சி நிவாரணப் பணிகளைச் சரிவர செய்யாமல் அலட்சியப் போக்கில் கடைப்பிடிக்கிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

அரசு விழாக்கள் வளர்ச்சிப் பணிகள் தொடக்க விழா என மாவட்டங்கள்தோறும் சென்றுவரும் முதல்வர், வறட்சி நிவாரணப் பணிகளை செயல்படுத்த அலட்சியம் காட்டி வருகிறார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலர் ஆர். நல்லகண்ணு குற்றம் சாட்டுகின்றார்.

*****


அமைச்சர்கள், 29 மாவட்ட ஆட்சியர்கள் என தமிழகம் முழுவதும் உள்ள உயர் அதிகாரிகளுடனும் தனது மேசையிலிருந்தபடியே முதல்வர் ஜெயலலிதா நேரடியாகப் பார்த்துப் பேசும் வீடியோ கான்·பரன் சிங் வசதி நடைமுறைக்கு வருகிறது.

மொத்தம் 3 கட்டங்களாக ரூ. 1.6 கோடி செலவில் செய்யப்பட்டுள்ள இந்த நவீன வசதியை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்துள்ளார்.

*****


தமிழக நீதிமன்றங்களில் பல காலியிடங்கள் நிரப்பப்படாமலேயே இருக்கின்றன. எழுதுபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்கவும் நிதி ஒதுக்கப்படவில்லை. இதனால் நீதிமன்ற பணிகள் ஸ்தம்பிக்கின்றன என்ற ரீதியில் வழக்கு தொடரப் பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணையின் போது தலைமை நீதிபதி தமிழக அரசின் நிதிநெருக்கடி பல்லவியை காட்டமாகவே நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளார். தமிழகத்தை நிதிநெருக்கடி உள்ள மாநிலமாக அரசியல்சாசனப் பொறுப்பில் உள்ளவர்களுக்குப் பரிந்துரை பண்ணவேண்டி வரும் என்று அரசை எச்சரித்துள்ளார்.

*****


மத்திய அரசு அளித்த உறுதிமொழிக்கு மாறாக தமிழக அரசு பொடா சட்டத்தைப் பழிவாங்கும் போக்கில் பயன்படுத்தி வைகோ, நெடுமாறன் ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளதைத் திமுக தலைமையில் கூடிய 11 கட்சிகள் கண்டித்தன. அவர்களை விடுதலை செய்யக்கோரி மார்ச் 29 இல் தமிழ்நாடு முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

*****


குமாரதாஸ் தலைமையிலான தமிழ்மாநில காமராஜ் காங்கிரஸ் கட்சி அதிமுகவில் இணைந்துவிட்டது. தே. குமாரதாஸ், ஆர். ஈஸ்வரன், எம்.ஏ. ஹக்கீம் ஆகிய மூவரும் தமிழ்மாநில காங்கிரசில் இருந்த வர்கள். பின்பு காங்கிரசுடன் தமாகா இணைந்து விட்டமையால் அந்த இணைப்பை எதிர்த்து தனியாக ஓர் புதிய கட்சியைத் தொடங்கினார்கள். அதிமுகவுக்கு ஆதரவாக இயங்கி வந்தார்கள்.

தற்போது குமாரதாஸ் உள்ளிட்ட மூவரது இணைவால் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகம் : நிதியும் நீதியும்
துரைமடன்

© TamilOnline.com